Thursday, July 18, 2019

மசாலா சாட் - 10

மசாலா சாட் - 10


புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் தற்சமயம் ஆஷாட ஏகாதசி யை ஒட்டி வருவதால் பண்டரிபுரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றார்கள். எனவே கோலாப்பூர், சதாராவில் இருக்கும் உத்திர சிதம்பரம் நடராஜர் கோவில் சென்று வரலாம் என்று முடிவெடுத்தேன். நாங்கள் லோகமான்யதிலக் விரைவு வண்டியில்  கிளம்பினோம்.

மெஜஸ்டிக் ரயில் நிலயத்தை சரியான நேரத்திற்கு வந்த வண்டி அங்கிருந்து தாமதமாக கிளம்பியது. நீண்ட தூர ரயில் பயணங்களில் என்னை மிரட்டும் விஷயம் இந்த தாமதமும், சக பிரயாணிகளும். சினேக ஸ்வபாவம் கொண்ட சக பிரயாணிகள் வாய்க்க வேண்டுமே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த முறை தாமதமாக கிளம்பினாலும் சரியான நேரத்தில் புனேயை அடைந்து விட்டது. அதைப்போலவே சக பிரயாணிகளும் நட்புணர்வு கொண்டவர்களாகவே இருந்தார்கள். 

மும்பையிலிருந்து பாண்டிச்சேரி, 
ஏற்காடு போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு வந்த இரு சகோதரிகள் இருவருக்கும் (இருவரும் சீனியர் சிட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது) எப்போது சப்பாத்தி சாப்பிடுவோம் என்றாகி விட்டதாம். ஒரு வாரம் தமிழ் நாட்டில் இருந்தாலும் ஒரே ஒரு நாள்தான் பொங்கல் சாப்பிட முடிந்தது என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

எங்கள் ஊரில் பொங்கல் ப்ரேக் ஃபாஸ்ட் என்றோம்.  அவியல் கிடைக்கவில்லை என்றார்கள். அடிப்படையில் அவியல்  கேரள ஸ்பெஷல். தமிழகத்தில் எல்லா நாட்களும் போட மாட்டார்கள் என்றது அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

சத்தியசாய் பிரசாந்தி நிலயத்தில் ஏறிய திவாகர் என்பவர் ஒரு தகவல் களஞ்சியமாக இருந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த பொழுது நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சாயி பக்தரான அவர் வங்கிப்பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் சத்திய சாயி பாபா சேவா நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு விட்டாராம். இப்போது கூட ஆஷாட ஏகாதசி சேவைக்காக புட்டபர்த்தி சென்று மும்பைக்கு திரும்பி கொண்டிருப்பதாக கூறினார். அவரோடு வந்த அவர் மனைவி குரு பூர்ணிமா வரை அங்கு தங்கி விட்டு விமானத்தில் மும்பை திரும்புவாராம்.

"இப்போதெல்லாம் விமான டிக்கெட்டுகள் மிகவும் சல்லிசாக கிடைக்கின்றன. இருந்தாலும் எனக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் அப்பா ரயில்வேயில் பணிபுரிந்ததால் அதன் மீது ஒரு பாசம்" என்றார்.  அது மட்டுமல்ல இந்தியன் ரயில்வேயைப் பற்றி மிகவும் உயர்வாக பேசினார். "இவ்வளவு பரந்த நெட் வொர்க், இத்தனை வசதிகளோடு உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. எனக்கு முன்னால் ஒரு கதை புத்தகம், மற்றும் ரயில்வே கைடு இருந்தால், நான் ரயில்வே கைடைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதிலிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யமூட்டின.

மும்பையிலிருந்து கிளம்பும் ஒரு ரயில் வண்டி (மன்னிக்கவும், பெயர் மறந்து விட்டது)ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எக்ஸ்பிரஸ்ஸாகவும், பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரம் பாசன்ஜர் வண்டியாகவும், பின்னர் மெயிலாகவும் ஓடுகிறதாம்.

கரக்பூர் ரயில் நிலைய நடை மேடைதான் இந்தியாவிலேயே மிக நீண்ட நடை மேடையாம். உலகின் மூன்றாவது நீண்ட நடை மேடையாம் (1.72 கி.மீ. என்கிறார் கூகுள் ஆன்டி)ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேய உயரதிகாரிகள் வாக்கிங் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம்

ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் பயணித்தால் நமக்கு ராஜோபசாரம் கிடைக்குமாம். பயணிகளை ஒரு ரோஜாவோடு வரவேற்பார்களாம். சாப்பிட டைனிங் டேபிள் கொண்டு வந்து வைப்பதோடு, மெனு கார்டில் இருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம். ம்ம்ம்.. இதையும் ஒரு முறை பார்க்கலாம்.

ரயில்வே உயரதிகாரிகள் அலுவலக வேலைக்காக பயணிப்பதற்காக சலூன் என்றழைக்கப்படும் அலுவலகம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு கோச்சுகள் உண்டாம். அவை கடைசியில் கார்ட் வேனுக்கு முன்பாக இணைக்கப்படுமாம்.


அரசு நிறுவனங்கள் என்றாலே அவை பற்றி குற்றங்களையும், குறைகளையும் மட்டுமே கேட்டிருந்ததற்கு மாற்றாக எத்தனை சிறப்புகள் என்று கேட்டது நன்றாக இருந்தது. இருந்தாலும் புனே ஜங்ஷனில் இறங்கியதும் இவ்வளவு முக்கியமான ஜங்ஷனில் எஸ்கலேட்டரோ, லிஃப்டோ இல்லையே என்று நினைப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை.


Thursday, July 11, 2019

மன்னிப்பு

மன்னிப்பு 

அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். 

வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 

கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 

மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 

"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,

" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 

"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 

''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை 
கொண்டாடுவீ ர்கள்?''

"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."

"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்... அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.

சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா? அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா? நான் இழி குலத்தை சேர்ந்தவளா? பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 

"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 

காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான். திரும்பி படுத்துக்க கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 

மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 

அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 

"இது என்ன புது கதை? நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 

"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."

"அதையா காணவில்லை? ஐயோ! அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார், நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..? காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 

"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"

"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?" பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 

"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.

சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.."கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.

"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..! நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி. நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட

இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.

பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 

இந்த கதை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும்படி சிறுகதை எழுத வேண்டும் 
என்று 'எங்கள் பிளாகில்' கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் எழுதிய சிறுகதை. எங்கள் பிளாகில் படிக்காதவர்கள் இதில் படிக்கலாம்.   

Saturday, July 6, 2019

எண்ணச்சிதறல்

எண்ணச்சிதறல்

கல்வி சிறந்த தமிழ் நாடு என்பது பாரதியின் வாக்கு. பங்களூர் வந்த பிறகு அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. இங்கே புத்தகங்கள் தொங்கும் பொட்டி கடைகள் கண்களில் படவே இல்லை. இந்த ஊர்காரர்கள் புத்தகமே படிக்க மாட்டார்களா? பஸ் ஸ்டாண்டில் கூட புத்தகக் கடை இல்லை. 


நம் ஊரில் இப்படியா இருக்கும்? எத்தனை பொட்டி கடைகள்? அவற்றில் எத்தனை புத்தகங்கள்? ஒரு திருமண ரிசப்ஷனில் பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்


 இவைகளோடு பொட்டி கடையும் வைத்திருந்தார்கள். அதில் கூட பேப்பர், நக்கீரன், ஜுனியர் விகடன் போன்றவைகளை தொங்க விட்டிருந்தார்கள்.

பெங்களூர் வந்த புதிதில் புத்தகங்களை தேடி நான் அலைந்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன்.  பிறகு புத்தக கடையை கண்டு பிடித்தேன் அதற்குள் வீட்டிலேயே ம.மலரும், குமுதம் சினேகிதியும் கொண்டு வந்து போட ஆள் கிடைத்தார். புது வீட்டில் பேப்பர் போடுகிறவர் தமிழ் புத்தகங்கள் கிடையாது என்று கூறி விட்டார். மீண்டும் தேடல். சப்ஸ்கிரிப்ஷன் கட்டி விடலாம் என்று தோன்றுகிறது.

புது வீடு வந்து ஒரு மாதமாகி விட்டது. சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள். இப்போதுதான் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தன. அதனாலோ என்னவோ, எதையும் கோர்வையாக சிந்திக்கக்கூட இயலவில்லை.  எண்ணங்கள் சிதறுகின்றன(அப்பாடா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணி விட்டேன்).

சென்ற வெள்ளியன்று இரவு அமசான் பிரைமில் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மான்ஸ்டர்'  படம் பார்த்தேன். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கும், வள்ளலாரின் தீவிர பக்தரான,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும், திருமணத்திற்கு பெண் தேடி எதுவும் தகையாத எஸ்.ஜெ.சூர்யா வாடகை வீட்டில் தண்ணீர் கஷ்டத்திலும் தவிக்கிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட்டால் வீட்டு ஓனரின் தொந்தரவிலிருந்தும் தப்பிக்கலாம், பெண் கிடைத்தாலும் கிடைக்கும் என்று நண்பன் கருணாகரன் ஆலோசனை கூற ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி, கொஞ்ச காலம் சந்தோஷமாக இருக்கிறார். அழையா விருந்தாளியாக அங்கு குடியேறும் ஒரு எலி அவரை ஆட்டி வைப்பதுதான் கதை. 


சும்மா சொல்லக்கூடாது எஸ்.ஜே. சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர் நண்பனாக வரும் கருணாகரன், கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். பிரியா பவானி சங்கரை சீரியலிலும், ஒரு சில விளம்பரங்களிலும் பார்த்திருக்கலாம். அழகான, திறமையான நடிகை. ஆனால் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிப்பாரா என்று தெரியவில்லை. படம் முழுவதும் புடவையும், சூடிதாரும் மட்டுமே அணிந்து வருகிறார். நோ கவர்ச்சி. எஸ்.ஜே.சூர்யாவோடு நடித்தும், கடைசி காட்சியில் கையை கோர்த்துக் கொள்வதைத் தவிர தொடாமல் நடித்திருக்கிறார்!!. இவையெல்லாம் போணி ஆகுமா?  இப்போதைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக கதைகளை யோசிப்பதும் அதை திறம்பட எடுப்பதும் சந்தோஷமான விஷயம். 

சாய் சங்கரா மேட்ரிமோனியல் சர்வீஸுக்கான விளம்பரத்தில் ரிஜிஸ்டர் செய்யும் மணமகனின் குறைந்த பட்ச வருமானம் ரூ.30000/-  என்று குறிப்பிடுகிறார்கள்.  

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் தன் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வீராவேசமான பட்ஜெட் உரையை கேட்டதில்லை. பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை நிபுணர்கள் அலசட்டும். நான் விடை பெறுகிறேன். பிறகு சந்திக்கலாம். 


Friday, June 21, 2019

இலை அடை

இலை அடை 

தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி   -  1 1/2 ஆழாக்கு 
தேங்காய் துருவல் - மீடியம் சைஸ் தேங்காய் ஒன்றை 
                                       துருவியது 
வெல்லம்     -  தேங்காய் துருவல் அளவு 
ஏலக்காய் பொடி - சிறிதளவு 
நெய்                     - 1 டேபிள் ஸ்பூன் 
வாழை இலைகள்(must)

செய்முறை:

இதில் இரண்டு ப்ரிபரேஷன்கள் இருக்கின்றன. ஒன்று பேஸ் மாவு, இரண்டாவது பூரணம். பேஸ் மாவிற்கு அரிசியை ஊற வைத்து அரைக்க வேண்டும். எனவே பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரங்கள் ஊற வையுங்கள். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் பூரணத்தை ரெடி பண்ணி விடலாம்.

தேங்காய் பூரணம் இரண்டு விதமாக செய்யலாம். சிலர் வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்த பின் பின்னர் அதில் தேங்காயை சேர்த்து பூரணமாக கிளறுவார்கள். சிலர் தேங்காய், வெல்லம் இரண்டையும்  ஒன்றாக போட்டு கிளறி விடுவார்கள். நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறவள்.  பூரணம் ரெடியானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் ஏலப்பொடி சேர்த்து கிளறி ஆற விடவும்.அரிசி நன்றாக ஊறியதும், அதை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் கெட்டியாகவும்,நைஸாகவும் அரைத்துக் கொள்ளவும். இப்போது இங்கிரிடையேன்ட்ஸ் தயார். இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


வாழை இலையை தண்ணீர் விட்டு துடைத்து, பின் அதில் அரைத்த அரிசி மாவை ஒரு சிறிய கரண்டி அல்லது பெரிய ஸ்பூனால் ஊற்றி, தோசை வார்ப்பது போல *வட்டமாக தேய்த்து, அதில் ஒரு ஓரத்தில் பூரணத்தை வைத்து, மறு பக்க இலையோடு சேர்த்து மடித்து மூடவும், மூடிய பக்கம் கீழே இருக்கும் வண்ணம் இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு தட்டில் மூன்று அல்லது நான்கு இலை அடைகள் வைக்கலாம். நன்றாக வேக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். சற்று சூடு ஆறியதும் இலையை உரித்தால், அழகான, சுவையான இலை அடைகள் தயார்.

* மாவை தேய்ப்பதில் கவனம் தேவை, மிகவும் மெலிதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். 

பின் குறிப்பு: இதில் தேங்காய் பூரணம்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சக்கை விழுது என்னும் பலாப்பழ விழுதோடு தேங்காய் சேர்த்து அதையும் பூரணமாக வைத்து மூடலாம். ஊற வைத்த அவல், தேங்காய், வெல்லம், இவற்றோடு பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து  பூரணமாக செய்து, வைத்து மூடலாம். 

Monday, June 17, 2019

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

பிரபலமான மனிதர்கள் சிலரை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் மிகவும் ஏமாற்றமாக இருக்கும். ஏனென்றால் தன் எழுந்தாலும், பேச்சாலும் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இமேஜுக்கும் நேரில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் சம்பந்தமே இருக்காது. க்ரேஸி மோகனோ தன் நாடகங்களில் எப்படி எளிமையாக, நகைச்சுவை உணர்ச்சி மிக்கவராக வந்தாரோ அதே எளிமையோடும், நகைச்சுவை உணர்ச்சியோடும் நிஜத்திலும் இருந்தார்.

நான் மஸ்கட்டில் இருந்த பொழுது மஸ்கட் தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த சங்க நாதம் என்னும் கையெழுத்து பத்திரிகையின் எடிட்டோரியல் போர்டில் இருந்தேன். அதற்காக  மகளிர் மட்டும் படப்பிடிப்பில் இருந்த கிரேஸி மோகன் அவர்களை சந்தமாமா பில்டிங்கில் சந்தித்து பேட்டி கண்டேன். சகஜமாக உரையாடினார். அந்த பேட்டியின் காபி தற்சமயம் என்னிடம் இல்லை. நினைவில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.


கிரேசி மோகன், சீனு மோகன் மற்றும் அவர் உதவியாளர்
நான்: ஏன் உங்களின் எல்லா நாடக பாத்திரங்களுக்கும் மாது, சீனு, மைதிலி, ஜானகி என்றே பெயர் கொடுக்கிறீர்கள்? 

மோகன்: அது எனக்கு சௌகரியமாக இருக்கிறது. மாது இப்படித்தான், சீனு இப்படித்தான் என்று தெரிந்து விடுவதால் கேரக்டரைசேஷனுக்காக மெனக்கெட வேண்டாம். கணேஷ், வசந்த், அப்புசாமி, சீதா பாட்டியெல்லாம் இல்லையா?

நான்: நாடகம் போடுவதற்கு உங்களுக்கு யார் முன்னோடி?

மோகன்: மௌலிதான். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் கல்லூரியில் நாடக போட்டிக்காக போட்ட ட்ராமா வை பார்த்து விட்டுதான் எனக்கும் ட்ராமா எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. ஹி இஸ் எ க்ரேட் ரைட்டர்.

நான்: உங்கள் நாடகங்களில் பிராமண பாஷைதானே பேசுகிறார்கள்?

மோகன்: அது ஆரம்பத்தில்.  நான் ஒரு பிராமினாக இருப்பதால் அந்த பாஷையில் எழுதுவது எனக்கு சுலபமாக இருந்தது. இப்போது குறைத்து விட்டோம்.

நான்: நகைச்சுவை நாடகங்களில் நடிப்பவர்களுக்கு நகைச்சவை உணர்வு இருக்க வேண்டியது அவசியமா?

மோகன்: இருந்தால் நன்றாக இருக்கும். நடிக்க நடிக்க அது வந்து விடும்.

நான்: உங்கள் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா?

மோகன்: நிச்சயமாக இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது என் பையன்களை ஸ்கூலில் கொண்டு விடுவது, அழைத்துக் கொண்டு வருவது போன்றவற்றை செய்வேன். குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன்.

நான்: மக்கள் சோகத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு  நகைச்சுவையை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்று ஒரு பெண் எழுத்தாளர் கூறியிருக்கிறாரே?

மோகன்: அது அவரது தனிப்பட்ட கருத்து. நாம் இன்று வரை காதலிக்க நேரமில்லையை ஞாபகம் வைத்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

உண்மைதானே, கிரேஸி மோகனின் ஹியூமர் மறக்கக்கூடியதா என்ன? பல திரைப்படங்களில் அவருடைய நகைச்சுவை வசனங்களை ரசித்திருந்தாலும் நான் மிகவும் ரசித்தது தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'ஹியர் இஸ் கிரேஸி' என்னும் சீரியலைத்தான்.

அதில் இரண்டு மாது இரண்டு சீனு வருவார்கள். ஒரு சீனு மொட்டைத் தலையோடு இருப்பார். ஒரு காட்சியில் மாதுவிற்கும், மொட்டை சீனுவிற்கும் கிரேஸி மோகன் தியரி ஆஃப் ப்ராபபிலிடி பாடம் நடத்துவார்.

கிரேசி மோகன்: ப்ராபபிலிட்டி என்பதற்கு தமிழில் சான்ஸ், ஐயையோ, சந்தர்ப்பம். உதாரணமா, என்கிட்ட இருக்கும் இந்த எட்டணாவை சுண்டி விட்டால், பூவும் விழும், தலையும் விழும், சோ ப்ராபபிலிட்டி ரெண்டு

மொட்டை சீனு:  சார் ஒரு சந்தேகம்,

கிரேசி: சந்தேகமா, அடடா! அதுக்குள்ளயா? என்ன? கேளு

மொட்டை சீனு: இந்த ப்ராபபிலிட்டி உங்களோட அந்த எட்டணாவில்  மட்டும்தானா? எல்லா எட்டணா, நாலணா, பத்து பைசா, அஞ்சு பைசாவுக்கும் உண்டா?

கிரேசி: டேய் மொட்ட, உனக்கு போய் சந்தர்ப்பத்தை பற்றி பாடம் நடத்த வந்தேனே, என்னோட அசந்தர்ப்பம்டா.

இதைப்போன்ற வார்த்தை விளையாட்டு அவருக்கு கை வந்த கலை. பஞ்ச தந்திரத்தில் வரும் முன்னாடி பின்னாடி காமெடியை மறக்க முடியுமா?

அவர் நாடக எழுத்தாளர், நடிகர் மட்டுமல்ல. ஓவியம், வெண்பா எழுதுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார். பாண்டிச்சேரி அன்னையிடமும் , சாய்பாபாவிடமும், பெருமாளிடமும் பக்தி பூண்டவர்.

ஹியர் இஸ் கிரேசி நாடகத்தில் இரண்டு மாது, இரண்டு சீனு என்று இரண்டிரண்டு கதா பாத்திரங்கள் வருவார்கள். அதை எழுதிக் கொண்டே போனவர் கடைசியில் அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பி விட்டாராம். எப்படி முடிப்பது என்று தெரியாமல் சுந்தரம் பஜனுக்கு சென்று விட்டு எழுத உட்கார்ந்தாராம். அந்த முடிவை நான் எழுதவே இல்லை, சாய் பாபாதான் எழுதினார் என்று அவர் கூறியதாக அவருடைய நண்பர் சீனு மோகன் கூறினார்.

திறமை வாய்ந்த ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.
    .    

Saturday, June 15, 2019

கொலைகாரன்(விமர்சனம்)

கொலைகாரன்
(விமர்சனம்)படம் துவங்கும் பொழுதே ஒரு கொலை. அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி போலீஸ் ஸ்டேஷனில் "தான் ஒரு கொலை செய்து விட்டதாக கூறி சரணடைகிறார்.  விஜய் ஆண்டனி யார்?அந்த கொலையை அவர் ஏன் செய்தார்? என்பது ஸ்வாரஸ்யமாக சொல்லப்படுகிறது.
இண்டர்வெல்லுக்குப் பிறகு யூகிக்க கூடிய, யூகிக்க முடியாத ஏகப்பட்ட திருப்பங்கள். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி சைக்கோ கொலைகாரரோ என்று கூட தோன்றுகிறது.

படம் முழுவதும் இருக்கமான முகத்தோடு வருகிறார் விஜய் ஆண்டனி. ஒரு பாடல் காட்சியில் ஒரே ஒரு மி.மீட்டர் சிரித்து அட! விஜய் ஆண்டனி கூட சிரிக்கிறாரே என்று ஆச்சர்யப்படுத்துகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜீன் டெய்லர் மேட் ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார். நாஸர், சீதா போன்றவர்கள் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.  கதாநாயகிதான் இன்னும் கொஞ்சம் இளமையாக, இன்னும் கொஞ்சம் நடிக்க கூடியவராக போட்டிருக்கலாம்.

ஒளிப்பதிவு துல்லியம். க்ரைம் திரில்லர் கதைக்கேற்ற பின்ணனி இசை. ஆனால் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்பதோடு ஸ்பீட் ப்ரேக்கர்களாக இருக்கின்றன. போலீஸ் கான்ஸ்டபிள்களை வைத்துக்கொண்டு அசட்டு பிசட்டென்று காமெடி பண்ணாதது ஒரு ஆறுதல்.

மசாலா படம்தான் ஆனாலும் மசாலாக்கள் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதால் சுவையாக இருக்கிறது.

Saturday, June 8, 2019

மசாலா சாட்

மசாலா சாட்

மாறுதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

மாறாமல் இருப்பது கழுதைக்குதான் சாத்தியம்.

இவையெல்லாம் மாறுதலைப்பற்றிய சில பிரபலமான சொலவடைகள். மாறிக்கொண்டே இருப்பதுதான் உலக இயல்பு. ஆனால் அளவிற்கதிகமான மாற்றங்கள் குறிப்பாக வேலையிலும், இருக்குமிடத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஒன்றரை வருடத்திற்கு மூன்று வீடுகள் மாற்றுவது சுலபமா என்ன? நாங்கள் மாற்றியிருக்கிறோம் என்று கர்வமாக முஷ்டியை மடக்க முடியவில்லை, வலி பின்னுகிறது.

சென்னையிலிருந்து பெங்களூர் வந்த பொழுது எங்கள் மகன் வசித்து வந்த இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு போதாது என்பதால் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டிற்கு மாறினோம். அப்போதிலிருந்தே தீவிரமாக சொந்த வீடு பார்த்துக் கொண்டிருந்ததால் சென்னையிலிருந்து கொண்டு வந்த பெட்டிகளை பிரிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு விட்டோம். இப்போது சொந்த வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் பிரித்து எடுத்து அடுக்குவதற்குள் உஸ்...அப்பா!

நேற்றுதான் டி.வி.இணைப்பு கிடைத்தது. இன்னும் ப்ராட்பேண்ட் இணைப்பு கிடைக்கவில்லை. கைபேசி வழியாக எல்லா பதிவுகளையும் படித்து கருத்திடுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.
*****************************************
காடுகளை அழித்துக்கொண்டே வருகிறோம் என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்து. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது உலகம் அதிக பசுமை நிரம்பிய இடமாக மாறியிருப்பதாக நாஸா அறிவித்திருக்கிறதாம். இதில் பெரும் பங்கு வகிப்பது சீனாவும், இந்தியாவுமாம்.  இந்த இரு நாடுகளுமே கடந்த இருபது வருடங்களாக மரம் நடும் இயக்கத்தை பேரியக்கமாக செயல் படுத்தி வருவதோடு விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வருகின்றனவாம்.  அதோடு மட்டுமல்ல நம் நாடு மரம் நடுவதில் உலக சாதனையை முறியடித்திருக்கிறதாம். இருபத்திநான்கு மணி நேரத்தில் எட்டு லட்சம் இந்தியர்கள் ஐந்து கோடி மரங்களை நட்டிருக்கிறார்களாம். இதுவும் நாஸா கொடுத்திருக்கும் தகவல்தான். சந்தோஷமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
 நமக்கு நாமே வழங்கிக் கொள்ளலாம் ஒரு பூங்கொத்து
இதே உத்வேகத்தோடே நீர் நிலைகளை பாதுகாப்போம்
(News courtesy: Mangayar malar)
Tuesday, May 28, 2019

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்


ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த பெண்,மாப்பிள்ளை,பேத்தி ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களோடு நாங்களும் சென்னை, திருப்பதி, பெங்களூர், சென்னை என்று சுற்றினோம். 

பெங்களூர்-சென்னை, சென்னை-பெங்களூர் சதாப்தியில் எக்சிகியூடிவ் கிளாசில் பயணித்தோம். ஈ.சியில் இருக்கை சௌகரியமாகவும், உயரமானவர்கள் கூட காலை நீட்டி வசதியாக அமரும்படி தாராளமாகவும் இருக்கிறது.  காலை சதாப்தியில் வண்டி கிளம்பியதும், வெல்கம் ட்ரிங்க்(காபி அல்லது டீ, மஃபின், வறுத்த பாதாம்) வந்தது. அதை முடித்த சிறிது நேரத்தில் கார்ன் பிளக்ஸ், ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை பிரேக்ஃபாஸ்ட் வந்து விட்டது. இதற்கு நேர்மாறக மாலை சதாப்தியில் வண்டி கிளம்பி சிறிது நேரத்திற்குப் பிறகுதான் காபி, மஃபின், விவகாரங்கள் வந்தன. பிறகு திரும்பியே பார்க்கவில்லை. எட்டு மணியை நெருங்கும் பொழுது ரொம்ப சுமாரான சூப் வந்தது. அதன் பிறகு சற்று நேரம் கழிந்து, சப்பாத்தியும், ரசம் போல ஒரு குருமாவும் தயிருடன் வந்தன. சாதாரணமாக சாப்பாடு முடிந்தவுடனேயே ஐஸ் க்ரீம் வந்து விடும். ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது.  கண்டோன்மென்டில் இறங்க வேண்டிய சிலர் அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு படிக்கு அருகில் சென்று விட்டார்கள். 

பயணத்தின்பொழுது படிப்பதற்காக ஆனந்த விகடன், கல்கி, குங்குமம் மூன்றும் வாங்கினேன். பல வருடங்களுக்குப் பிறகு வாங்கியதாலோ என்னவோ குங்குமம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் போஸ்ட்மார்ட்டம் என்று ஒரு பகுதி. ஆதித்த கரிகாலன் கொலையில் அருண்மொழித் தேவரான ராஜ ராஜ சோழனுக்கும், அவர் சகோதரி குந்தவைக்கும் சம்பந்தம் உண்டோ? என்று கேள்வி எழுப்பி, அதற்கான காரணங்களை அலசியிருந்தது.


உத்தம சோழர் பதவி ஏற்ற பொழுது அவருக்கு ஒரு மகன் இருந்தான். தந்தைக்குப் பின் மகன்தான் பட்டம் ஏற்க வேண்டும், ஆனால், ஏன் அருண்மொழித் தேவர் அரசரானார்?

தன் ஆட்சியில் நடை பெற்ற எல்லா செயல்களையும் கல் வெட்டில் பொறிக்கும் வழக்கமுடைய ராஜராஜன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான காரணத்தை எந்த கல் வெட்டிலும் பொறிக்கவில்லை. எப்படி கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பாக கூட சொல்லப்படவில்லை.

ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் நிர்வாகங்களை கவனித்து வந்த உத்தமசோழரின் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொல்லப்பட்டாராம். தன் மகன் ராஜேந்திரன் பதவி ஏற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று ராஜராஜசோழன் செய்த செயல் இது என்கிறாரகள். 

உத்தம சோழர் பட்டத்திற்கு வந்து மூன்றாண்டுகளில் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் ராஜராஜன் பட்டத்திற்கு வந்ததும் முதல் வேலையாக பன்னிரெண்டாண்டுகள் சிறையில் இருந்த வந்தியத்தேவனை விடுவித்தாராம். அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? அவருக்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்ததா? போன்ற விஷயங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனவாம்.

அதே போல ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர் கடிகையை அழித்தது உள்நோக்கம் கொண்டது என்கிறார். காந்தளூர் கடிகையை நடத்தியவர் ஆதித்த கரிகாலனின் கொலையில் முக்கிய குற்றவாளியான ரவிதாசனின் குருவாம். அவருக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்பதாலேயே அந்த கடிகை அழிக்கப்பட்டது என்கிறார். 

இந்த ரவிதாசன் பிற்கால சோழ பரம்பரையை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்ய கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத்தேவரின் வம்சத்தை சேர்ந்தவனாம். கன்னரத் தேவருக்கு பட்டம் மறுக்கப்பட்டு அவருக்கு இளையவரான பராந்தகர் அரியணை ஏறினாராம். கன்னரத் தேவருக்கு ஏன் அரியணை மறுக்கப்பட்டது? என்பதற்கான காரணம் தெரியவில்லை.  அதே போல குந்தவை, மூத்தவன் ஆதித்த கரிகாலன் இருக்கும் பொழுது, அருண்மொழித் தேவராகிய ராஜராஜன்தான் அரியணை ஏற வேண்டும் என்று விரும்ப காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். அரசியலும், அவிழ்க்கப்படாத புதிர்களும் இரட்டைப் பிறவிகள் போலிருக்கிறது.  

ஒரு நல்ல விஷயத்தோடு பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.


சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தை சேர்ந்த 45 வயதாகும் திருஞானம் என்பவர் மதுரை பணிமணியிலிருந்து திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரச பேருந்தில் நடத்துனராக பணி புரிகிறார். 12 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கும் இவர் மதுரை, தஞ்சை வழித்தடத்தில் மூன்றாண்டுகளாக பணியாற்றுகின்றாராம். இவரின் வேலை நேரம் முதல்நாள் மதியம் இரண்டு மணி முதல் மறு நாள் மதியம் இரண்டு மணி வரை. தினசரி இருபதுக்கும் மேற்பட்ட பாட்டில்களில் சுத்தமான குடி நீரை நிரப்பிக் கொள்ளும் இவர், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முடித்ததும் தண்ணீர் விநியோகம் செய்வாராம். தினசரி 60 லிட்டர் தண்ணீர் வரை வழங்குகிறாராம். கோடை நாளில், கடும் கோடை நேரத்தில் இவர் செய்யும் இந்த சேவை நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான். 

Saturday, May 11, 2019

எங்கெங்கு காணினும் ஆப்படா..!!

எங்கெங்கு காணினும் ஆப்படா..!

எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் பால் வினியோகம் செய்யப் போவதாகவும், அதையும் டெய்லி நிஞ்சா என்னும் ஆப் மூலம் செய்வதாகவும் கூறி, அந்த ஆப்பை(செயலி) என் கணவரின் செல் ஃபோனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டினார். அதன் வழியே எப்படி ஆர்டர் கொடுப்பது என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இனிமேல் பால் டோக்கன் போட
வேண்டிய வேலை இல்லை. நம் தேவைக்கேற்ப ஆர்டரின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். வேண்டாத நாட்களுக்கு பாஸ் போட்டு விடலாம். ஆனால் முதல் நாளே செய்து விட வேண்டும்.

பால் மட்டும் அல்ல, பழங்கள், காய்கறிகளையும் இதன் வழியே ஆர்டர் பண்ணலாமாம். என்ன..? "உனக்கு பிடிக்குமேனு மிதி பாவக்கா எடுத்து வெச்சிருக்கேன், வாழத்தண்டு இளசா இருக்கு, எடுத்துக்கோ.." என்றெல்லாம் நம்மை பிரத்யேகமாக கவனிக்கும் பெண்ணின் கரிசனம் கிடைக்காது.
இன்னும் சில காலத்தில் நம் விருப்பங்களை நாம் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து விட்டால், அந்த செயலி தெரிவிக்குமோ என்னமோ?
*********************************************************************************

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் மகள், மாப்பிள்ளை, பேத்தியோடு திருப்பதி சென்றிருந்தோம். பேத்திக்கு அங்கு மொட்டை போடும் பிரார்த்தனை.  மே மாதம், கும்பல் அதிகம் இருக்குமே எனறு ஒரு கவலை. போதும் போதாததற்கு மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என்று எச்சரிக்கப்பட்டவன் கதையாக, திருப்பதி சென்றும் பெருமாளை தரிசிக்காமல் வந்த ஶ்ரீராமின் அனுபவம் வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து மிரட்டியது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, அத்தனை கும்பல் இல்லை. நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.  அவரிடம் எப்போதும் எதிர்பாராததைத்தான் எதிர்பார்க்க வேண்டும். பெருமாளை தரிசித்து விட்டு வரும் பொழுது புளியோதரை பிரசாதம் கிடைக்கும் என்று நினைத்தேன். லட்டுதான் கிடைத்தது.

திருமலையில் நிறைய மாறுதல்கள். மாறிக்கொண்டேதான் இருக்கிறது. யாத்ரீகர்களுக்கு நிறைய வசதிகள். 300ம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே நுழையும் ஹாலில் இலவசமாக காபி,டீ,பால் முதலியவைகள் வழங்குகிறார்கள். எங்களுக்குத்தான் பருக நேரம் இல்லை. எல்லாம் சரி தரிசனம் முடித்து வெளியில் வந்து கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நல்ல வேளையாக சென்ற மாதம் திருப்பதி சென்று வந்த என் அக்கா, "காலுக்கு போட்டுக்கொள்ள சாக்ஸ் எடுத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் வெயிலில் நடப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கூறியிருந்ததை கடைபிடித்தோம், தப்பித்தோம். பாட்டரி கார்  வசதிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாம்.

மலை மீது ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் ஏ.சி. போட முடியாததால் வீசிய அனல் காற்றால் தலைவலி. பீமாஸ் உணவகத்தில் கா...ர...மா..ன.. உணவு.  திருவள்ளூரில் மழை, சென்னையில் எப்போதும் போல் புழுக்கம். அதிலிருந்து விடுதலை தருவது மேற்கத்திய உச்சரிப்பில் பேத்தி பாடும் சாயி பஜன், "ரௌடி பேபி..", மற்றும் "மரணம் மாஸு மரணம்.." பாடல்களை கேட்பது. அவளை தமிழில் பேசு, தமிழில் பேசு என்று கூறி அது நடக்காமல் நாங்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டோம். என்.ஆர்.ஐ. குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கவே தனி ஆப் இருக்கிறதாமே..??!!


கத்தரியில்  வெய்யில்
கொளுத்துமாம்
கதைக்கிறார்கள் எல்லோரும்
தென்றலல்லவோ என்னைத்
தழுவிக் கொண்டிருக்கிறது!


Thursday, May 9, 2019

வாசிப்பு அனுபவம் (வேத வித்து)

வாசிப்புஅனுபவம் 
(வேத வித்து)

எதற்காகவோ புத்தக அலமாரியை குடைந்த பொழுது சாவி அவர்களின் படைப்பான 'வேத வித்து' கண்ணில் பட்டது. முன்னர் படித்த ஞாபகம் இல்லை. எனவே படிக்கலாம் என்று எடுத்தேன்.எப்போது எழுதிய கதை என்று தெரியவில்லை. 1990ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. கவிஞர் வைரமுத்து முன்னுரை எழுதியிருக்கிறார்.

விதவா விவாகம், வேதம் படிக்கும் பிராமண பையனுக்கும், கழை கூத்தாடி பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் நட்பு இரண்டையும் டீல் செய்திருக்கும் கதை.

ஆரவாரமில்லாத சரளமான நடை.
'நாதஸ்வரக்காரர் நாயனத்தை வீசி வாசிக்க முடியாதபடி குறுகலான சந்து', "பிரம்மச்சாரிகள் வெற்றிலை போட்டுக்கலாமா மாமா?" " ஏன் கூடாது?பிரம்மச்சாரிகள் கல்யாணமே பண்ணிக் கொள்கிறார்கள்"
என்று ஆங்காங்கே வெளிப்படும் சாவிக்கே உரிய நகைச்சுவை. சுவையான வாசிப்பு அனுபவம்.

அவருடைய விசிறி வாழை படிக்க வேண்டும்.


Tuesday, April 30, 2019

மசாலா சாட் - 8

மசாலா சாட் - 8 

Image result for Ki.Va.Ja.தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் அவர்கள், சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்பது தெரிந்த விஷயம்தான். நான் அதிகம் கேள்விப் படாத அவருடைய ஸ்லேடைகள் சில:

 மாதுளம் பழமான விளாம்பழம்:


ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்த பொழுது நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா? நான் தந்தது விளாம்பழம் அல்லவோ?” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது, உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்” என்றாராம் கி.வா.ஜ.

கடை சிப்பந்தியும், கடைசிப் பந்தியும்:

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. அதில் கி.வா.ஜ.வும் கலந்து கொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்து கொள்வான்” என்றார் முதலாளி. உடனே, கி.வா.ஜ.”ஓஹோ! கடை சிப்பந்திக்கு கடைசிப் பந்தியா?” என்றாராம்.

பிரகாசிக்கும் கம்மல்: 

இப்படி சிலேடையில் கலக்கும் அவரையே ஒரு பெண்மணி அசத்தினாராம். ஒரு விழாவில் கலந்து கொண்ட அவரை உரையாற்ற அழைத்த பொழுது, "இப்பொழுது வேண்டாம் குரல் கம்மியியிருக்கிறது" என்று அவர் கூறியதும், அந்தப் பெண், “பரவாயில்லை, கம்மல் ப்ரகாசிக்கும்” என்று கூறி அசத்தினாராம்.

வாட்சாப்பில் வந்ததில் ரசித்தது:

மெட்ராஸ்காரனை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? என்று ஒரு கற்பனை: 

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா, பேமானி!

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி குட்து பேசுடா, இல்லைன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடிவுடுவாண்டா சவாரி, அட, எங் கேப்மாரி.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்டகெட்ட வார்ததையா பேசிக்கினு கீற? காது கொயிய்ன்னுதுடா, கொய்யால!

புறம்கூறி பொய்த்த்யிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து பொயகறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி,..த்தா சொன்னா மாரி செஞ்சி பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற ம்ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க.

எப்படியோ பொருளை சரியாக உணர்ந்து கொண்டால் சரி.


Friday, April 26, 2019

விளக்கெண்ணெய் வைபவம்


விளக்கெண்ணெய் வைபவம்


எங்கள் காலத்தில், கோடை விடுமுறை என்றால் ஒரு விஷயத்திற்கு யாரும் தப்ப முடியாது. அது எண்ணெய் குடித்தல். விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றாலும் சரி, இருக்கும் இடத்திலேயே இருந்தாலும் சரி, ஒரு நாள் விளக்கெண்ணெய் கொடுக்காமல் விட மாட்டார்கள்.

ஒரு நல்ல நாள் பார்த்து(நிஜமாகத்தான்) அன்று எண்ணெய் கொடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். மாமா திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதற்கான சாமான்கள் வாங்கி வரச்செல்வார். நாங்கள் சாமான்கள் விற்கும் கடை திறந்திருக்க கூடாது, என்று சாமியிடம் வேண்டிக் கொள்வோம். ஏனோ சாமி ஒரு முறை கூட எங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததில்லை.

எண்ணெய் கொடுப்பதற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மறு நாள் எங்களை எழுப்பி, பல் தேய்த்து விட்டு வரச் சொல்வார்கள். நோ காபி. எண்ணையில் சேர்க்க வேண்டிய கஷாயம் அதற்குள் ரெடியாகியிருக்கும். அதில் சதகுப்பை என்று ஒன்று சேர்ப்பார்கள் என்று தெரியும். அதன் நாற்றம் சகிக்காது. அதைத் தவிர வேறு சில பொருள்களும் சேர்ப்பார்கள். கஷாயம், எண்ணெய் இவைகளை ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டு, பின் முற்றத்திற்கு கொண்டு வருவாள் அம்மா. உடன் மாமா, மாமிகளும் நார்த்தங்காய் சகிதம் வருவார்கள். எங்களோடு, மாமா குழந்தைகள், அத்தை குழந்தைகள் எல்லோரும் உண்டு.

முதல் போணியை மாமா பையன் ராமகிருஷ்ணன் செய்வான், அடுத்தது நான், பிறகு எங்கள் மூன்றாவது அக்கா. பிறகு மாமாக்கள் மகள்கள். நாங்களெல்லாம் சமர்த்து குழந்தைகள். அதிகம் படுத்தாமல் குடித்து விடுவோம். கொஞ்சம் உவ்வே என்றால் உடனே, "ஊம்ம், நார்த்தங்காயை சாப்பிடு" என்பார்கள்.  எண்ணெய்  குடித்து விட்டு, படுத்துக் கொள்ளக் கூடாது. குதிக்கச் சொல்வார்கள். நாலைந்து முறை வடவண்டை தாழ்வார திண்ணையில் ஏறி கீழே குதிப்போம்,மாமாவின் பெரிய பையன் சம்பத், எங்கள் பெரிய அக்கா போன்றவர்கள் கடகடவென்று குடித்து விட்டு,வாந்தி எடுப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.  

அடுத்த லாட் படுத்தல் லாட். வாந்தி எடுப்பது, முற்றத்தை சுற்றி ஓடுவது, அழுவது, போன்ற அலப்பறைகள் அரங்கேறும். எங்கள் அத்தை குழந்தைகளுக்கு எங்கள் அம்மாவிடம் பயம் உண்டு என்றாலும், ரகளை பண்ணுவார்கள். அதிகம் படுத்துவது அத்தை பையன் கிருஷ்ணன், மற்றும் எங்கள் அண்ணா. பயங்கரமாக அலறி, குடிக்க முடியாது என்று ஓடுவார்கள், மாமாவும், அம்மாவும் விசிறி கட்டை சகிதம் துரத்துவார்கள்.

இரண்டாவது அக்கா, கடைசி அக்கா போன்றவர்கள் ஓட மாட்டார்கள், அழுவார்கள், ஒவ்வொரு மடக்கு முழுங்கிய பிறகும் வாந்தியெடுக்க முயலுவார்கள், யாராவது ஒருவர் அவர்களின் முதுகை தடவி, சரி செய்வார்கள்.

ஒரு வழியாக குடித்து முடித்ததும் சிறுவர்கள் எதிரே இருக்கும் தென்னந் தோப்பிற்கு விரட்டப் படுவார்கள்.  ஒன்பது மணிக்கு சூடாக காபி. பதினோரு மணிக்கு பருப்புத் துவையலோடு ஜீரக ரசம் சாதம். நோ மோர் சாதம்.  இதனாலேயே ஜீரக ரசம், பருப்புத் துவையல் என்றால் அப்போதெல்லாம் பிடிக்காது. எத்தனை முறை வயிற்றை காலி செய்தோம் என்று கணக்கு வேறு சொல்ல வேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் எட்டு முறை ஆகி விட்டது  என்றால் குளிக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது, குளித்த பிறகு நிஜமாகவே உடல் லேசானது போல் ஒரு உணர்வு வரும்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை எங்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். "வீட்டிற்கு விலக்கான சமயத்தில் எண்ணெய் குடிக்க கூடாது" என்று நான் என் அத்தைப் பெண்ணிடம் கூற, அவள்,"அப்படியா? நான் வீட்டில் இல்லை", என்று ஒதுங்க,அத்தை அவளை,"இந்தா உனக்கு எப்போ நாள் என்று எனக்கு தெரியும், யார் கிட்ட பொய் சொல்ற?' என்று உள்ளே இழுத்தது ஒரு கிளை கதை.

 Saturday, April 20, 2019

ஜனநாயக கடமை

ஜனநாயக கடமை


ஏப்ரல் 17ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வரவேண்டியிருந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே ஓட்டும் போட்டு விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் கிளம்பினோம்.

பெங்களூரிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணிக்கு பேருந்து. காலை பத்து மணியிலிருந்து ஓலா புக் பண்ண முயற்சித்து கொண்டேயிருந்தோம். மைக்ரோ, மினி, ப்ரைம், ஆட்டோ எதுவுமே இல்லை. எங்கள் நாத்தனார் பெண் மூலம் ஊபர் முயற்சித்தால் அதிலும் பலன் இல்லை. கடைசியில் அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஏற்பாடு செய்து கொடுத்தாள்.  வீட்டிலிருந்து 10:30க்கு கிளம்பினோம், 11:50க்கு மடிவாலாவை அடைந்தோம். அதற்குள் என் கணவர் ஏகத்திற்கு டென்ஷனாகி விட்டார்.

பஸ்ஸில் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகள் போட்டார்கள். பின்னர் சாமி 2 வில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் விக்ரம் தான் போலீஸ் இல்லை பொறுக்கி என்றார். திரிஷா ஏற்ற ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் டான்ஸெல்லாம் ஆடினாலும், கவர்ச்சி கோஷண்ட் கம்மி என்பதால் ரசிக்க முடியவில்லை.  சாமி(1)ல் இருந்த பாடல், நகைச்சுவை, விறுவிறுப்பான திரைக்கதை எதுவுமே இதில் இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை. நம் ரசிகர்கள் தெளிவுதான்.

அக்கா மாமியாரை ஓட்டு போட அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாமியால் நடக்க முடியாது என்பதால் காரில் சென்றோம்.  வாகனங்களை பள்ளி அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்றாலும் மாமியின் உடல் நிலையை கருதி பள்ளி வாசலில் இறங்கிக் கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் என்னை  உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று ஒரு காவலர் தடுத்தார் இன்னொருவர் அனுமதித்தார். எனவே உள்ளே சென்று மாமியை பூத்திற்குள் செல்லும் வரிசையில் சேர்த்து விட்டு அருகில் காத்திருந்தேன்.

பள்ளி வளாகம் சுத்தமாக இருந்தது. நோ பிளாஸ்டிக் ஏரியாவாம். எல்லா சுவர்களிலும் பொன் மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் என்னைக் கவர்ந்த வாசகம் அப்துல் கலாமுடையது. பெண்கள் பள்ளியில் பெண்களுக்காக ஒரு வாசகம்அந்த பள்ளியில் மொத்தம் எட்டு பூத்துகள் இருந்தன. எந்த ஏரியாவுக்கு எந்த பூத் என்று தெரியாமல் வந்தவர்கள் கொஞ்சம் குழம்பினர். ஒரு காவலர்," ஒரு சாக் பீஸ் கொண்டாப்பா, எழுதிடலாம். இல்லன்னா நமக்கு தான் சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் கஷ்டம்" என்று எப்படியோ ஒரு சாக்பீஸை வரவழைத்து, எந்தெந்த தெரு எந்த பூத்தில் என்று எழுதிப்  போட்டார்.

எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று தெரியவில்லை, காமிராவை தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒருவர் காவலரிடம் வந்து, ஓட்டு போட்டு விட்டு வருகிறவர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று புகார் கூறினார். "வெளியிலிருந்து எடுங்கள்" என்று அவர் கூறியதற்கு, "கையில் மை வைப்பதை எல்லாம் எப்படி சார் வெளியிலிருந்து எடுக்க முடியும்? பூத்திற்குள் வரக்கூடாது என்கிறார், அஜீத்தையெல்லாம் எடுக்கிறோம்.." என்றதும், அந்த காவலர், இந்த பூத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தார். "உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடப்போகிறது" என்றேன், " ஓட்டு போடுவதைத்தான் எடுக்கக்கூடாது, மை வைப்பதை எல்லாம் எடுக்கலாம் என்றார்.

"ரொம்ப நேரமா இங்கேயே நிக்குறீங்களேமா?" என்று என்னிடம் ஒரு காவலர் வினவினார். நான் துணைக்கு வந்திருக்கிறேன் என்றதும்,"இங்கு நிற்க கூடாதுமா, வெளியே போய்டுங்க" எனறார். சரி என்று வெளியே வந்து காத்திருந்தேன்.

அங்கு தன் தாயோடு துணைக்கு வந்திருந்த ஒரு பையனிடம், காவலுக்கு நின்ற ஆந்திர ராணுவ வீரர் ஹிந்தியில் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.
"ஐ.பி.எல்.லில் ஏன் சி.எஸ்.கே.யை பிடிக்கும்?"
"உங்கள் ஊரில் ஆங்கிலம் பேசுகிறீர்கள், ஹிந்தி பேசுகிறீர்கள், தமிழ் பேச
மாட்டீர்களா?" போன்ற கேள்விகள். தமிழ் தெரியாத அவரோடு அந்தப் பையன் எப்படி தமிழில் பேச முடியும்?நடிகை தேவயானியும், அவர் கணவரும் ஓட்டு போட்டு விட்டு சென்றார்கள். ஓட்டு போட்டு விட்டு வந்த ஒரு பெரியவர் செல் ஃபோன் வைத்திருந்தார். "செல்ஃபோனை அனுமதிக்கிறார்களா?" என்று கேட்டேன், "யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றார். பெரும்பான்மையோர் செல்போன் வைத்துக் கொண்டிருந்தனர். அசோக் நகரில் ஓட்டு போட வந்தவர்களில் பெரும்பான்மையினர் முதியவர்களாக இருந்தனர். ராமாபுரத்தில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் இளைஞர்களாக இருந்தார்கள்.

எங்கள் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அங்கிருந்த தேர்தல் அதிகாரி பொறுமையாக அறுபத்தேழு பக்கங்களிலும் தேடிக் கொண்டிருந்த பொழுது  வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இன்னொரு பெண் நடுவில் புகுந்து விட்டதாக குற்றம் சாட்ட, அந்தப் பெண் மறுக்க, இருவருக்கும் குழாயடி போல சண்டை வந்தது. ஒரு பெண் காவலர் வந்து விலக்கி விட்டார். எங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால்   ஓட்டு போடாமல் தான் வந்தோம்.  காத்திருந்த நேரத்தில் பழைய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.

 மற்றுமொரு இளம் பெண்ணும் எங்களைப் போலவே அவர் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இல்லை என்று தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டார். அவர் ஓட்டர்ஸ் ஐ.டிக்காக மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்ததாகவும், ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்து விடும் என்று சொன்னார்கள், ஆனால் இதுவரை வரவில்லை என்றும் ஆதார் கார்டை வைத்துக் கொண்டு வாக்களிக்க முடியுமா? என்றும் வினவினார். அதற்கு அந்த அதிகாரி வேறு யாருடனோ டெலிபோனில் பேசிவிட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்று கூறி விட திரும்பிச்சென்று விட்டார். எங்களுக்கும் அதே பதில்தான் கூறப்பட்டது.

இதேபோல் பெயர் விடுபட்டிருந்தாலும் நடிகர்கள் ரமேஷ் கண்ணாவும், ஶ்ரீகாந்தும் மற்ற ஆதாரங்களை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர் என்று தொலைக்காட்சி செய்தியில் காண்பித்தார்கள். நாமெல்லாம் சாமானியர்கள்தானே? எனவே ஜனநாயக கடமை ஆற்ற முடியவில்லை

Friday, April 12, 2019

மசாலா சாட் - 7

மசாலா சாட் - 7

இந்த முறை சென்னை விஜயம் கொஞ்சம் சோர்வூட்டக்கூடியதாக  இருந்தது. மைசூரிலிருந்து சென்னை செல்லும் சதாப்தி பெங்களூரிலிருந்து கிளம்பும் பொழுதே பத்து நிமிடம் தாமதம் என்றாலும் காட்பாடி வரை சரியான நேரத்தை கடைபிடித்த வண்டி, அதற்குப்பிறகு அரக்கோணம் வரை நத்தை வேகம், ஆமை வேகம். இரண்டு இடங்களில் வேறு எதற்காகவோ நின்று, 23:30க்கு சென்னை சென்ட்ரலை மன்னிக்கவும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தை அடைத்தது. 21:30க்கு அடைந்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் தாமதம். அதன் பிறகு ஓலா கிடைப்பதில் தாமதம், மைலாப்பூரில் இருக்கும் சகோதரி வீட்டை அடையும் பொழுது, 0:30 மணி.

மறுநாள் காலை 4:30க்கு(டெக்நிக்கலாக அன்றே) ஒரு பூஜைக்கு கிளம்ப வேண்டும், அதற்கு விடியர்காலை 3:30க்கு எழுந்திருந்தால்தான் சரியாக இருக்கும். எனவே இரண்டு மணி நேரம்தான் தூக்கம்.

மறுநாள் மீண்டும் சதாப்தியில் பெங்களூர் பயணம், மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதமாக பெங்களூர் வந்து சேர்ந்தது. வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த பொழுது மணி 1:30.  காலையில் ஏழே காலுக்கு முன்னால் கண் விழிக்க முடியவில்லை. சென்னையில் கற்பகாம்பாள் தரிசனமும், நீண்ட நாள் நண்பரை சந்தித்ததும் மகிழ்ச்சி.

கற்பகாம்பாள் கோவிலும், கொடி மரமும் 
அக்காவின் வீட்டில் என்னைக்  கவர்ந்த ஒரு விஷயம், வீட்டை அழகாக பெருக்கி, துடைத்த எலெக்ட்ரானிக் மாப். அமெரிக்காவிலிருந்து மகன் வாங்கி வந்ததாக அக்கா கூறினாள். நீங்களும் பாருங்களேன்.

இந்த மிஷினின் அடி பாகத்தில் துடைப்பதற்கான துணியை இணைக்க வேண்டும். அதன் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு துளையில், தரை துடைக்கும் திரவத்தை ஊற்றி, மூடி இயந்திரத்தை ஆன் செய்யலாம். இதனோடு இனைந்து ஒரு ஜி.பி.எஸ். உபகரணமும் இருக்கிறது. அது முதலில் வீட்டின் அமைப்பை
படித்துக் கொள்ளும். பின்னர் அதற்கேற்றபடி இந்த மாப்பிற்கு கட்டளை இடுகிறது.  அது பீரோவிற்கு அடியில் எல்லாம் சென்று துடைக்கும் அழகு..!!

இன்னுமொரு சிறப்பு, இதை அலெக்ஸ்சாவோடு  இணைத்துக் கொள்ளலாம். அலெக்ஸ்சாவை செல் போன் மூலம் இயக்கும் வசதி இருந்தால், நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கூட, வெளியிலிருந்தபடியே அலெக்ஸா மூலம் இயக்க முடியும் "அலெக்ஸா, ஆன் தி மாப், அலெக்ஸா ஸ்டாப் தி மாப்" என்று கட்டளையிட்டால் போதும். வேலை நடந்து விடும்.இது சார்ஜிங் யூனிட். சார்ஜெரை ப்ளக் பாயிண்டில் இணைத்து விட்டு, இதை நிலையாக ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். மாப் தன் வேலையை முடித்து விட்டு, அழகாக இதில் ஏறி அமர்ந்து சார்ஜ் ஆகி விடும்.

திரும்பி வரும்பொழுது சென்னை.பு.த.டா.எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் இரண்டு மூன்று இடங்களில் மாதிரி தேர்தல் பூத்துகள் அமைத்து எப்படி எலெட்ரானிக் மிஷினில் எப்படி வாக்களிப்பது என்று ஒத்திகை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜைக்கு போன இடத்தில் பாட்டில்களில் வாங்கப்பட்ட குடிநீரை பானையில் கவிழ்த்து வைத்திருந்தார்கள். ஜில்லென்று டிஸ்டில்லது வாட்டர். நல்ல ஐடியா! நம் வீட்டிலும் பின்பற்றலாம்.

எல்லாவற்றையும் இழந்த பின்னாலும் 
எதிர்காலம் மிச்சமிருக்கிறது என்கிறதோ 
இலைகளை உதிர்த்த இந்த மரம் ?Thursday, April 11, 2019

என்ன பொருத்தம்!?

என்ன பொருத்தம்!!


சுகுணாவிற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. இன்று அவள் மகள் காவ்யாவிற்கு பிளேஸ்மென்ட் துவங்குகிறது. நல்ல கம்பெனியில் பிளேஸ் ஆக வேண்டுமே என்று நகவலைபட்டுக் கொண்டே இருந்தாள். 
மாலை வீட்டிற்கு வந்த மகள் பிளேஸ்மென்ட் லெட்டரை நீட்டியவுடன் சந்தோஷமாக இருந்தது. அப்பாடா! நிம்மதி. நல்ல கம்பெனி.  

போஸ்டிங் எங்க? 

இங்கதான்.

அப்பாடா! ரொம்ப நிம்மதி. நான் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். எங்கேயாவது, பெங்களூர், பூனா என்று போட்டு விடக்கூடாதே? 

"அம்மா, எந்த காலத்துல இருக்க? என்று மகள் கேட்க, கணவர் நமுட்டு சிரிப்போடு ஆமோதிப்பாய் தலையசைத்தார். 

"அப்படி இல்லடி, இதே ஊர்னா கவலை இல்ல,வேற இடம்னா உன்னை தனியா எங்க, எப்படி தங்க வைக்கறதுனு யோசிக்கணும், இல்லனா நல்லதா பி.ஜி பார்க்கணும், இப்போ கவலை இல்ல, வரன் தேட ஆரம்பிச்சுடலாம்."

"அம்மா ப்ளீஸ், உடனே ஆரம்பிச்சுடாதே, என்னை கொஞ்சம் ஃப்ரியா விடு"

"அதுதானே, இப்போதான் படிச்சு முடிச்சிருக்கா, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம் விடேன்" அப்பாவும் துணைக்கு வந்து விட, சுகுணா வாயை மூடிக்கொண்டாள் . 

மகள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடியதும் மீண்டும் திருமண பேச்சை எடுத்தாள். 

"ரிஜிஸ்டர் பண்ணியவுடனே வரன் அமைந்துவிடுமா? இப்போதிலிருந்து பார்த்தால்தான் சரியாக இருக்கும்" என்று சுகுணாவின் வாதத்தை ஒப்புக்கொள்ள, மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் ரிஜிஸ்டர் செய்தார்கள்.

காவ்யாவின் ஃப்ரொபைல் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்து டெலிபோன் அழைப்புகள் வரத்தொடங்கின.  இதைத்தவிர இவர்களுக்கு பிடித்த ப்ரொபைல்கள். சுகுணா எல்லாவற்றையும்  ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டாள். 

அவளுக்கும், அவள் கணவருக்கும் பிடித்த பையன்களின் ஜாதகத்தை தெரிந்த ஜோசியரிடம் காண்பித்து, தன் மகள் ஜாதகத்துடன் பொருந்தும் வரங்களை தேர்வு செய்து, மகளிடம் காண்பித்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்தாள். 
"அம்மா, வயதை பார்த்தியா? என்னைவிட ஆறு வயது பெரியவன்..."

"அதனால என்னடி?"    

"என்னடியா?, ஜெனெரேஷனே மாறி விடும். மூன்று வயதிற்கு மேல் போகக்கூடாது."

"என்னமா இவன் தலையில் முடியே இல்லை."

"என்னைவிட ஒரு இஞ்சுதான் கூட, குறைந்தது 5'11ஆவது இருக்க வேண்டும்."

"சம்பளம் போதாது", "சரியான பழமா இருக்கான்", "மாமா மாதிரி இருக்கான்" ... இப்படி என்னென்னவோ காரணங்கள் சொல்லி, தட்டி கழித்தாள். 

பொறுக்க  முடியாமல் சுகுணா மகளிடம்," நீ யாரையாவது லவ் பண்றயா? சொல்லித் தொலை" என்க, 

"என்ன சின்ன காஞ்சீபுரம், ரொம்ப முன்னேறிட்டாயா?" என்றாள் அம்மாவை சீண்ட அம்மாவின் சொந்த ஊரை சொல்லி அழைப்பது மகளின் பழக்கம். 

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. மகளுக்கு திருமணம் தகையாத வருத்தத்தில் சுகுணாவிற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தது. கோவில், ஜோசியர் என்று  அலைந்தாள். 

காவ்யா மேலே படிக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று விட்டாள். உடனே சுகுணா பார்க்கும் வரன்களில்  அமெரிக்காவில் இருக்கும் வரன்களுக்கு முன்னுரிமை அளித்தாள். 

அதிலும் எதற்கும் மசியாத மகள் ஒரு நாள் தான் ஒருவனை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொன்னாள். 

அந்த ஆதித்தியாவிற்கு தற்சமயம் வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கிறான்(அதுதான் நான் சம்பாதிக்கிறேனே, படித்து முடித்ததும் அவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடும்.)
காவ்யாவைவிட ஏழு வயது மூத்தவன்(அதனால என்னம்மா? அவன் என்னை நன்னா புரிஞ்சுக்கறான். ரொம்ப பொறுமையா எல்லாத்தையும் புரிய வைப்பான்.). தலையில் ஒரு முடி கூட கிடையாது.(திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இப்போ பாதிப்பேர் பால்டுதான்).

சுகுணாவிற்கு சில கேள்விகள் மனதில் உதித்தன. ஆனால் என்ன கேட்டு என்ன? எல்லவற்றிற்கும் பதிலாக ஒரு மூன்றெழுத்து வார்த்தை இருக்கிறதே.