Indi Special Campaign - TVS Jupiter factory visit
சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம். எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் சமீபத்தில் வாய்த்தது.
'இண்டி ஸ்பெஷல் டிவிஎஸ் ஜூபிடர் காம்பைன்' இல் கலந்து கொள்ள விரும்பினால், பதிவு செய்து கொள்ளுங்கள் என்னும் அறிவிப்பை பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாளன்றுதான் பார்த்தேன். எனவே கடைசி தேதியின் கடைசி ஐந்தாவது நிமிடம் பதிவு செய்தேன்.
அவர்கள் என்னை தொடர்பு கொள்ள ஒரு முறை அழைத்த பொழுது, வேலையாக இருந்த நான் வருவதற்குள் அழைப்பு நின்று விட்டது. புதிய எண்ணாக இருந்ததால், நான் மீண்டும் அழைக்கவில்லை. அன்று மாலை மீண்டும் அழைத்து, இண்டி ஸ்பெஷல் டி.வி.எஸ். ஜூபிடர் காம்பியென்இல் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், ஓசூரில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஏதுவாக செய்யப் பட்டிருக்கும் பயண ஏற்பாடுகள் குறித்தும் மெயில் அனுப்பியிருப்பதாக கூறினார்கள்.
ஜூலை பத்தாம் தேதி காலை 9:30க்கு ஓசூரில் இருக்கும் டி.வி.எஸ் தொழிற்சாலையில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்பது ஏற்பாடு. ஆனால், விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த வெளியூர் ப்ளாகர்களை அழைத்துக் கொண்டு வந்த வண்டி ஹொரமாவு சிக்னல் வருவதற்கே 8:30 ஆகி விட்டது. பெங்களூரின் மோசமான போக்குவரத்து நெரிசலால் நாங்கள் குறித்த நேரத்திற்கு ஓசூரை அடைய முடியவில்லை.
தாமதமாக சென்றாலும் அதை பொருட்படுத்தாமல் எங்களை வரவேற்று, உபசரித்து டி.வி.எஸ். தொழிற்சாலையில் முதல் பிளாண்ட்டை சுற்றி காண்பித்தார்கள். அங்கு ஸ்கூட்டர், மொபெட், பைக் ஆகிய மூன்றும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஒரு நாளைக்கு 4500 வண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 6000 வண்டிகள் வரை தயாரிக்கும் வசதி உண்டு.
முதல் கட்ட அசெம்பிளி முழுக்க முழுக்க ரோபோக்களால் இயக்கப் படுகிறது. நான்கு வண்டிகளுக்கு ஒரு ரோபோ என்னும் விகிதாசாரத்தில் இயங்கும் இங்கு மேற்பார்வையாளர் யாரும் தேவை இல்லையாம்.
எஞ்சின் அசெம்பிளியில் இரண்டடுக்கு பாதுகாப்பு. அங்கு இரண்டு கண்ணாடி கதவுகள் உள்ளன. முதல் பகுதியில் அஸெம்பிள் செய்யப்பட்ட இன்ஜின் பரிசோதிக்கப்படுகிறது. அதைத் தாண்டி உள்ள பகுதியில் ஒரு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்கு இணையான சுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு பணிபுரிபவர்கள் காலணிக்கு மேல் ஒரு உறை அணிந்து கொண்டுதான் பணியாற்றுகிறார்கள். சிறிதளவு தூசி கூட எஞ்ஜினின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு. இங்கு இன்னொரு சிறப்பு, இங்கு பணியாற்றுபவர்களில் 90% பெண்கள். தங்கள் தொழிலாளர்களில் 33% பெண்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் நிர்வாகம், இங்கிருந்து ஆரம்பித்து மெல்ல மெல்ல கடினமான வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த எண்ணியுள்ளது.
அதற்கடுத்து நாங்கள் பார்த்தது வெஹிகிள் அசெம்பிளி. அதாவது ஒரு வண்டி முழுமையாக உருக் கொள்வது இங்குதான். ஒரு கன்வேயர் பெல்ட்டில் ML1, ML2 தனித்தனி பிரிவுகள். ஒவ்வொன்றிலும் இரண்டு தொழிலாளர்கள். தாங்கள் பொருத்த வேண்டிய வண்டியின் பாகங்களை எடுத்துக் கொண்டு அதை 24 வினாடிகளுக்குள் பொருத்தி விட வேண்டும். அதை மற்றொருவர் சரி பார்த்து அடுத்த பகுதிக்கு அனுப்பி விட வேண்டும். மிக மிக விரைவாக செயல்பட வேண்டிய முக்கியமான பகுதியாக இது விளங்குவதால் இங்கு பணிபுரிபவர்களுக்கு இதன் எல்லா பகுதிகளிலும் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு நிமிடத்தில் இரண்டு வண்டிகள் பொருத்தப்பட்டு விடுகின்றன.
வண்டிகளுக்கு வர்ணம் பூசும் பகுதியில் பெரும்பான்மை வர்ணப்பூச்சை ரோபோ செய்து விடுகிறது. விடுபட்டு போன பகுதிகளை மட்டும் தொழிலாளர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு பெயிண்ட் வாசனையால் உடல் நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாதம் ஒரு முறை உடல் நல பரிசோதனை செய்யப்படுகிறது.
இப்போதெல்லாம் இரு சக்கர வாகனங்களில் மெட்டல், ஃ பாய்பர் ஆகிய இரண்டும் பயன்படுத்துகிறார்கள். வர்ணம் பூசப்பட்ட வண்டியின் பாகங்களை பேக்(bake) பண்ண வேண்டுமாம். மற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மெட்டல் பகுதிகளை தனியாகவும், ஃ பாய்பர் பகுதிகளை தனியாகவும் பேக் செய்வார்களாம். ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு வெப்ப நிலையில் பேக் பண்ண வேண்டும். ஆனால் இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் பேக் பண்ணும் வசதி இருக்கிறதாம்.
ஒவ்வொன்றையும் அவர்கள் விளக்கிய பொழுது பிரமிப்பாக இருந்தது. ஒரு அரசாங்கம் நடத்துவது போல ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து செயல்படுத்தும் நிர்வாகத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 425 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அந்த வளாகம் பசுமையாகவும், அழகாகவும், மிக மிக சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது. வளாகத்திற்குள்ளேயே தொழிலாளர்களுக்காக சலுகை விலையில் உணவு வழங்கும் காண்டீன் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. அங்கு வீட்டில் தயாரித்ததைப் போன்ற உணவு. அதைத் தவிர ஒரு சிறு மருத்துவமனையும் இருக்கிறது. மற்றொரு அழகிய விஷயம் இதன் உள்ளே இருக்கும் பறவைகள் சரணாலயம்!
இதற்குப் பிறகு எங்களை டி.வி.எஸ். ஜூபிடரை அவர்களுடைய பயணப் பாதையில் ஓட்டிப்பார்க்க அனுமதித்தார்கள். வாவ்! அது ஒரு சூப்பர் அனுபவம். என் வீட்டில் இருப்பது டி.வி.எஸ். ஜூபிடர்தான் என்றாலும், மேடு பள்ளமான சாலைகளில் ஓட்டுவதற்கும் நன்கு பராமரிக்கப்படும் சாலையில் ஓட்டுவதற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களை கூறலாம்.
![]() |
ஓட்டிப்பார்க்க தயார் |
![]() |
ஓட்டப் பாதையில் |
மொபெட், ஸ்கூட்டி போன்ற சிறிய வண்டிகளை தயாரித்துக் கொண்டிருந்த டி.வி.எஸ். நிறுவனம் மத்தியதர வர்க்கத்தினருக்காக, ஒரு குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்த பொழுது நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டு, 2013 ஆண்டு முதல் டி.வி.எஸ்.ஜூபிட்டரை தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். முதலாம் ஆண்டு அவர்கள் தயாரித்தது 340 ஸ்கூட்டர்கள் மட்டுமே. இன்றோ 2.5மில்லியன் பேர்கள் இதை உபயோகப்படுத்துகிறார்கள்.
இந்த ஆண்டு மிகச் சிறந்த விருதான ஜே.டி. பவர் விருது டி.வி.எஸ். ஜூபிடருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது நம் நாட்டில் இரு சக்கர வாகனங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
ஸ்கூட்டர், அதுவும் மத்தியதர வர்க்கத்தினரை மனதில் வைத்துக் கொண்டு, அவர்களின் எல்லா தேவைகளுக்கும் ஈடு கொடுப்பதாய், அதாவது ஓர் சிறு நகரத்தில் வசிக்கும் ஒரு மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த குடும்பஸ்தன் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பான்? குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட வேண்டும், மனைவியை ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும், குடும்பத்தோடு சினிமாவுக்கும், கோவிலுக்கும் செல்ல வேண்டும். அதே நேரத்தில் இளைஞர்களை போல அடிக்கடி வாகனத்தை மாற்ற விரும்ப மாட்டான். தான் செலவழிக்கும் பணத்திற்கு தகுதியானதாக இருக்க வேண்டும்(Price worthy). இவை அத்தனையையும் விட, இந்த வண்டியை வைத்திருப்பது தனக்கு ஒரு அந்தஸ்தை அளிப்பதாக உணர வேண்டும்.
இந்த எதிர்பார்ப்புகளை STRONG, STURDY, STYLE, STATUS என்று வகை படுத்தி இந்த எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் டி.வி.எஸ். ஜூபிட்டர் வண்டி தயாரிக்கப் பட்டிருப்பதுதான் அதன் சிறப்பு. மேலும் ஆரம்பத்தில் ஆண்களை மட்டும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இப்போது பெண்களும் உபயோகிக்கலாம் என்னும் விதமாகவே இது தயாரிக்கப்படுகிறது.
தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வண்டிகளில் கிடைக்காத நலம், சுகம், திருப்தி இதில் அதிகமாக கிடைக்க வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டு 'அதிகத்தின் பயன்(ZYDA KA FAYDA)' என்று விளம்பரம் மட்டும் செய்யவில்லை, செயல் படுத்தியும் காட்டுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சிறிய மாற்றமாவது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.
சந்தையில் இருக்கும் மற்ற எல்லா இரு சக்கர வாகனங்களை விட அதிக மைலேஜ்(ஒரு லிட்டருக்கு 62 கிலோ மீட்டர்), அகலமான கால் வைக்கும் இடம். முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக். தாராளமான சீட். பின்னால் உட்காருபவருக்கு வசதியாக பேக் ரெஸ்ட். சீட்டுக்கு அடியில் விஸ்தாரமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ். பெட்ரோல் போடுவதற்காக வண்டியை விட்டு இறங்கத் தேவையில்லாமல் பின்னால் வழியில் பெட்ரோல் டேங்க் மூடி. எல்லாவற்றையும் விட பெண்களை கவரும் விதம் எட்டு வசீகர நிறங்களில். வருகிறது.
இவை எல்லாம் இருந்தால் போதுமா? போட்டிகள் மிகுந்த இந்த கால கட்டத்தில் சந்தை படுத்த ஒரு நல்ல பிராண்ட் அம்பாசிடரும் தேவை இல்லையா? 'பிக் பி' ஐ விட ஒரு சிறந்த பிராண்ட் அம்பாசிடர் இருக்க முடியுமா? ஆம் அமிதாப் பச்சந்தான் டி.வி.எஸ். ஜூபிடரின் பிராண்ட் அம்பாசிடர். பிறகு என்ன? ரும்மம்ம்!
இவை எல்லாம் இருந்தால் போதுமா? போட்டிகள் மிகுந்த இந்த கால கட்டத்தில் சந்தை படுத்த ஒரு நல்ல பிராண்ட் அம்பாசிடரும் தேவை இல்லையா? 'பிக் பி' ஐ விட ஒரு சிறந்த பிராண்ட் அம்பாசிடர் இருக்க முடியுமா? ஆம் அமிதாப் பச்சந்தான் டி.வி.எஸ். ஜூபிடரின் பிராண்ட் அம்பாசிடர். பிறகு என்ன? ரும்மம்ம்!