வியாழன், 7 ஜூன், 2018

Enga Veetu Pillai - Nagesh Comedy 3அடிக்கடி டங் ஸ்லிப் ஆகும் அதிராவுக்கு சமர்ப்பணம். 

புதன், 6 ஜூன், 2018

புரியாத புதிர்


புரியாத புதிர்

ஒரு சுபயோக சுப தினத்தில் ராகவனும்,சித்ராவும் தங்கள் பெண் கீர்த்தனாவிற்கு வரன் தேடலாம் என்று முடிவு செய்து, பெண்ணிடம் அதற்கு உத்தரவு கேட்க, அவளும் இயர் ஃபோன் மாட்டியிருந்த செவிகளோடு கூடிய தலையை மேலும் கீழுமாக ஆட்ட, குடும்ப ஜாதக நோட்டிலிருந்து கீர்த்தனாவின் ஜாதகத்தை காபி எடுத்து, நான்கு மூலைகளிலும் குங்குமம் தடவி, பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து, பிரபலமான மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்தர்கள்.

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடனேயே இரண்டு ஃபோன் கால்கள் வந்து விட்டன. பெண்களுக்கு இத்தனை டிமாண்டா என்று நினைத்துக் கொண்டார்கள். தினசரி நான்கு அழைப்புக்களாவது வரும். எல்லாவற்றையும் சித்ரா தனியாக ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டு, தன் வேலைகளை முடித்தவுடன் கணிணியில் தேடத் துவங்குவாள்.

“இந்த பையனை பார்க்கலாமா?”

“ஏழு வயசு வித்தியாசமா? போம்மா..”

“அதுனால என்னடி? வயசு வித்தியாசம் அதிகம் இருந்தால், பாவம் சின்ன பொண்ணுனு விட்டுவிடுவார்கள்..”

“உனக்கும், அப்பாவுக்கும் ஏழு வயசு வித்தியாசம்… அப்பா அப்படி விடறாளா?

“எஸ், நோ”

“அப்புறம் ஏன் பேசற? ஏழு வயதெல்லாம் ரொம்ப அதிகம். ஜெனரேஷனே மாறிப் போயிடும்.”

“அப்போ எவ்வளவு வயசு வித்தியாசம் பார்க்கலாம்?”

“மூணு, இல்லாட்டி, நாலு”

அதன்படி தேடத் தொடங்கினாள்.

“இந்த பையன் எப்படி?”

“என்னமா? மேல் மாடி மொட்டையா இருக்கு?”

“வெளியில்தான் மொட்டை, உள்ள நிறைய விஷயம் இருக்கு, தவிர, இப்போ மொட்டை ஃபேஷன்தானே..?”

“வெய்டிங் லிஸ்டில் போடு, தலையில் முடி இருக்கும் பையன் கிடைக்கவில்லலைனா பார்க்கலாம்..”

தலை நிரைய முடியோடு இருந்தவனுக்கு சம்பளம் போதாது என்றாள்.

“நேற்று ஒரு மாமி ஃபோன் பண்ணினார், அவா பையன் எம்.பி.ஏ. படிச்சுட்டு…”

“எம்.பி.ஏ. என்றால், எந்த பி.ஸ்கூல்னு கேளுமா.. ஐ.ஐ.எம்., ஒகே..! ஏதோ காமா சோமா காலேஜ் எல்லாம் வேண்டாம்.” என்றான் மகன்.

“சொந்த வீடு வேண்டாமா?” என்றார் மாமியார்.

ஒரு வரன் எல்லாம் பொருந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றர்கள். அம்பத்தூர் தாண்டி, ஒரு சிறிய அபார்ட்மெண்ட்.

“ரோட் அப்ரோச் சரியில்லை, மழை நாளில் ஒரே சேறும் சகதியுமாக இருக்கும். வீடு ரொம்ப சின்னது, இதில் நம்ம கீது போய் எப்படி இருக்கும்? வேறு இடம் பார்க்கலாம் மன்னி” என்றாள் நாத்தனார்.

இப்படி ஏகப்பட்டதை கழித்து கட்டினார்கள். சிலவற்றை ஜோதிடர் பொருந்தவில்லை என்று சேர்க்க மறுத்தார். இவர்களுக்கு பிடித்த சில இடங்களிலிருந்து பதில் ஏதும் வராமல் சோதித்தது.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது. கீர்த்தனாவுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கேயே இருக்கும் பையனாக பார்க்கலாம் என்று வெளிநாட்டு வரன்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.

ஒரு நாள் ஸ்கைப்பில் வந்த மகள், “அம்மா, ஒரு நிமிடம்” என்றாள் பின்னர், “ஹி இஸ் முரளி, என்னோட டீம் லீடர்” என்று காமிராவை திருப்ப, “ஹலோ ஆண்டி, என்று புன்னகைத்த இளைஞன் நிறம் குறைவா? அல்லது வெளிச்சம் அவன் மீது படவில்லையா? என்று தெரியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து கீர்த்தனா அந்த முரளியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பது தெரிந்து, முடிவானது. அவர்கள் வீடு மயிலாப்பூரில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு எதிரே ஒரு சந்தில், கம்பி கேட் போட்ட பழங்கால வீடு.

“முரளி ஓ.எம்.ஆரில் த்ரீ பெட் ரூம் அபார்ட்மெண்ட் புக் பண்ணியிருக்கிறான். செப்டம்பரில் பொசஷன் கிடைத்து விடும். அப்புறம் அங்கே போய் விடுவோம்.”

தலை பின்னோக்கி செல்ல துவங்கி விட்ட, வெறும் பி.டெக். மட்டுமே படித்த, தன்னை விட எட்டு வயது மூத்த பையனை மணந்து கொள்ள தன் மகள் எப்படி முடிவு செய்தாள் என்பதை மட்டும் சித்ராவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.    

ஞாயிறு, 3 ஜூன், 2018

எண்ணச் சங்கிலி

எண்ணச்  சங்கிலி  


பத்து நாட்கள் இடைவெளியில் சென்னைக்கு இரு முறை செல்ல வேண்டிய நிர்பந்தம். பயணத்தின் பொழுது சேத்தன் பகத்தின்,"ஒன் இந்தியன் கேர்ள்"(இலக்கணப்படி An Indian girl என்பதுதான் சரி இல்லையோ?) படிக்கலாம் என்று  நினைத்தேன்.

சதாப்தியில் எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த பெண்மணி என்னைப்  பார்த்து சினேகமாக புன்னகைத்தார்.  அவர் படித்துக் கொண்டிருந்த சாரி பாராயணம் செய்து கொண்டிருந்த சுந்தர காண்டத்தை முடித்து விட்டு, என்னோடு எடியூரப்பா பதவி ஏற்க முடியாமல் போனது, நடிகையர் திலகத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, சாவித்திரி, ஜெமினி, 
ந.தி. படம் பற்றி கமலா செல்வராஜ் தந்தி டி.வி.யில் பேசியது, ஐ.பி.எல். போட்டிகள், உஷ்ணமாகிக்கொண்டு வரும் பெங்களூர் என்று பேச்சு பல தளங்களில் பயணித்தது. 

இடையே சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு 
ஃபோன் செய்து, "நாளைக்கு அத்தையாத்து(அத்தை வீட்டு) விசேஷத்திற்கு வரும் பொழுது க்ஷேவ் செய்து கொண்டு வா, ப்ளீஸ், இந்த ஒரு நாள் அம்மா சொல்றத கேளு.." என்று கெஞ்சினார்.  

இப்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன்களே ஷேவ் செய்து கொள்வதில்லை. மணமகளுக்கு இணையாக  ஃபேஷியல் செய்து கொண்டாலும் திருமணத்தன்று மூன்று நாள் தாடியோடும், கலைந்த தலையோடும்தான் காட்சி அளிக்கிறார்கள். என்ன நாகரீகமோ? எதிர் காலத்தில் இவர்கள் குழந்தைகள் இவர்களின் திருமண ஆல்பத்தை பார்த்து விட்டு,"என்னப்பா, கல்யாணத்தன்று இவ்வளவு கேவலமா இருந்திருக்க?" என்று கேட்காமல் இருக்க வேண்டும்.  

திருமணம் என்றதும் தோன்றுகிறது. திருமணமாகி 25வருடங்கள் ஆவதை வெள்ளி விழா என்போம், ஐம்பதாவது வருடத்தை பொன் விழா என்போம்.   மர ஆண்டு, காகித ஆண்டுதகர ஆண்டுமுத்து ஆண்டு இவையெல்லாம் எந்த வருடங்களை குறிக்கிறது தெரியுமா?

சேத்தன் பகத்தின் புத்தகத்தை சென்னையிலேயே மறந்து வைத்து விட்டேன். அதற்குப் பதிலாக டவுன்லோட் செய்து வைத்திருந்த சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' படித்து முடித்தேன். இது குமுதத்தில் தொடராக வந்த பொழுது படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. அப்போதெல்லாம் 24 ரூபாய் தீவு படிப்பதற்கு முன்னால் சுஜாதா ஒரு மேம்போக்கான எழுத்தாளர் என்ற அபிராயம்தான் எனக்கு இருந்தது.
சுஜாதாவுக்கே உரிய திறமையான எழுத்து. இதிலும் கணேஷ்,வசந்த் வருகிறார்கள், ஆனால் மிகவும் சொற்பமாக என்பது ஆச்சர்யம்தான். இந்த கதையை படித்தவுடன் சுஜாதாவின் எல்லா பாதிக்கப்பட்ட பெண்களும் டைரி எழுதுவார்களோ? என்று தோன்றியது. 'ப்ரியா' ஆன் லைனில் கிடைக்கவில்லை. கிடைத்தால் படிக்கலாம்.