வியாழன், 19 செப்டம்பர், 2019

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..


"நாளை அவருக்கு பிறந்த நாள் என்கிறீர்கள், ஒரு சின்ன கேக் வாங்கிக் கொண்டு வாருங்கள், உங்கள் நாலு பேரை ஐ.சி.யூ. உள்ளே அனுமதிக்கிறேன், செடேஷனை குறைக்கச் சொல்கிறேன், அவர் கட்டிலருகே நின்று 'ஹாப்பி பர்த் டே சாங் பாடுங்கள், அவரால் கேட்க முடியும். தன் பிறந்த நாளை  நீங்கள் கொண்டாடுகிறீர்கள்(??) என்று அவரால் உணர முடியும்." மருத்துவர் கூறியதற்கு இணங்க, அரை கிலோ சாக்லேட் கேக்கிற்கு ஆர்டர் கொடுத்து, அதை எடுத்துக் கொண்டு சென்றோம்.

"நம் வீட்டில் கேக் கட் பண்ணும் பழக்கம் கிடையாதே அம்மா? நாம் ஐயப்பன் கோவிலுக்குத்தானே செல்வோம், ஐயப்பன் கோவில் சந்தனம் இருக்கிறதா?" என்று கேட்டாள் என் மகள். இருந்தது. அதையும்  அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 31அன்று  எடுத்துச் சென்று அவருடைய நெற்றியில் இட்டு விட்டு, அவருக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து கூறினோம். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் நர்ஸின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 31 அன்று துடிக்க ஆரம்பித்த அவருடைய இதயம், அதே ஆகஸ்ட் 31 அன்று துடிப்பதை நிறுத்திக் கொண்டது.

எங்களையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விட்டு, எனக்கு தனிமைத் துயரையும் தந்து விட்டு இறைவனடி அடைந்து விட்டார். வீட்டில் உறவினர்கள் இருந்த வரை பெரிதாக எதுவும் தெரியவில்லை. குறிப்பாக பேத்தி இருந்த வரை தனிமையை உணரவில்லை. அவர்களும் ஊருக்குச் சென்றதும்தான் தனிமை தகிக்கிறது.

"எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்து விட்டோம், மெடிசன் இஸ் எ சப்போர்ட் ஒன்லி, பாடி ஷுட் ஹீல், டெத் இஸ் இன் எவிடேபில், பீ ப்ரீபெர்ட் பார் யுவர் லாஸ்"  தலைமை மருத்துவர் எங்கள் தலையில் இறக்கிய இடியை தாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது, அவரது அலுவலக வாசலில் இருந்த பெண், "திருப்பதி லட்டு" என்று பெருமாள் பிரசாதத்தை கொடுத்தாள்  "என்ன சொல்கிறார் இந்த வெங்கி?(திருப்பதி பெருமாளை நான் வெங்கி என்றுதான் குறிப்பிடுவேன்)"  எது நடந்தாலும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு என்கிறாரோ என்று தோன்றியது.

சுற்றமும், நட்பும் என்னை எழுதச் சொல்கிறார்கள். இதுவரை மூன்று முறைகளுக்கு மேல் எழுதத் தொடங்கி, தொடர முடியாமல் நிறுத்தி விட்டேன்.  அலமாரியில் இருக்கும் புடவைகளை எடுத்து மீண்டும் அடுக்க முயல்கிறேன். ஒவ்வொரு புடவையையும் மடிக்கும் பொழுதும், அவற்றை வாங்கிய தருணங்கள் மனதில் வருகிறது. பாடல் கேட்கலாம் என்றால் என் கணவருக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் வந்து விடுகிறது. ஸ்லோகம் சொல்லவோ பூஜை செய்யவோ  இயலவில்லை.

என்னை வலையுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி எங்கள் பிளாக் உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்திருந்த அதிராவின் பதிவையும், கீதா அக்காவின் பதிவையும் ஸ்ரீராம் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்திருந்தார். இத்தனை கருணைக்கும், அன்பிற்கும் நெகிழ்ச்சியோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

என் சோகம் என்னோடு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது உற்சாகமான பதிவுகளோடுதான் சந்திக்க விருப்பம். சந்திப்போம்.