கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, November 27, 2011

oru kurun chutrula -II

ஒரு குறுஞ் சுற்றுலா - II

குடந்தையிலிருந்து காலை நாங்கள் புறப்படும் முன் வருண பகவான் கிளம்பி விட்டார்.
அதென்னவோ நாங்கள் எங்காவது கிளம்பினால் வருண பகவானும் எங்களுக்கு முன் ரெடி
ஆகி விடுவார்! முதலில் நாச்சியார் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்! நாச்சியார் கோவிலுக்கு முன் காசி விஸ்வநாதர் ஆலயம் என்று புராதனமான ஒரு கோவில் இருப்பதாகவும் அங்கு சனி பகவான் தன் இரு மனைவிகளோடும்
இரு மகன்களோடும்
எழுந்தருளி இருக்கிறார் என்றும் ஆகவே அவர் குடும்ப சனி என்று வழங்கப் படுகிறார் என்றும் எங்கள் காரோட்டி கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.

 பர்வதவர்தனி சமேத ராமநாத சுவாமி குடிகொண்டிருக்கும் சிறிய ஆலயம். தசரத சக்ரவர்த்திக்கு ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி தரிசனம் அளித்த தலம்! எனவேதான் அதே
பேரோடு விளங்குகிறார்! ராமேஸ்வரத்திற்கு இணையான தலம்.

பிரகாரத்தில் சனி பகவானுக்கு தனி சந்நிதி! அங்கு தன் இரு  மனைவியரோடும் இரு மகன்களான மாந்தி மற்றும் குளிகனோடும் காட்சி
அளிக்கும் அபூர்வ கோலம்!
இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் குடும்ப சகிதமாக காட்சி அளிக்கும் சனி பகவானை தரிசனம் செய்ய முடியும். ஏழரை சனி மற்றும் அஷ்டமத்து சனி நடக்கும் காலங்களில் இவரை வழிபடுவது நன்மையை அளிக்கும்.
Kudumba Sani Bhagavan Sannidhi

இதற்குப் பிறகு நாச்சியார் கோவிலுக்குச் சென்றோம். வஞ்சுளவல்லி தாயாரை பெருமாள் மணந்து கொண்ட இடம். பெருமாளை அடைய வேண்டி தாயார் தவம் புரிந்து கொண்டிருக்க,தாயாரைத் தேடி வரும் பெருமாளுக்கு தாயார் இருக்கும் இடத்தை காட்டியது கருட பகவான்தான்! எனவே இத்தலத்தில் கருடனுக்கு சிறப்பு.


இங்குள்ள கருடனுக்கு பல் வேறு சிறப்புகள் உண்டு. மார்பில் இரண்டு, தோள்களி இரண்டு, கைகளில் இரண்டு,தலையில் ஒன்று,இடுப்பு கச்சையில் ஒன்று, கத்தியில் ஒன்று என்று ஒன்பது பாம்புகளை அணிந்துள்ளதால் நாக தோஷங்களை நீக்க வல்லது இவரது தரிசனம்! குறிப்பாக ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய தலம் இது. 108 வைணவ தலங்களுள் ஒன்று. மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூர்த்தியே புறப்பாட்டின் பொழுதும் வெளியே எழுந்தருளுவது ஒரு சிறப்பு என்றல் அந்த விக்ரகம் முதலில் நான்கு பேராலும், முன் மண்டபத்தில் எட்டு பேராலும், பிரகாரத்தில் பதினாறு பேராலும்,வெளியே முப்பத்திரண்டு பேராலும் சுமக்கப்பட்டு, திரும்பி வரும் பொழுது படிப்படியாக கணம் குறைவது இன்றளவும் நடக்கும் அதிசயம்!

-உலா தொடரும்