கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 11, 2017

ஷாஜஹானும், நந்தனாரும்

ஷாஜஹானும், நந்தனாரும் 

என்னடா இவள் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போட பார்க்கிறாளே என்று நினைக்காதீர்கள். வரலாற்றில் எப்படியோ தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருப்பவர்களில் இந்த இரண்டு  பேரும் உண்டு. 

நேற்று நந்தனார் குரு பூஜை என்று என் மூத்த சகோதரி குறும் செய்தி அனுப்பி  இருந்தார்.  அதைப் பார்த்ததும் அவர் வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டிருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. அதைப் போலவே பெரிதாக திரிக்கப்பட்டிருக்கும் இன்னொரு வரலாற்று செய்தி தாஜ்மஹால் காதல் சின்னம் என்பதும். எனவே இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று தோன்றியது.



முதலில் நந்தனாரை எடுத்துக் கொள்வோமா? உண்மையில் பெரிய புராணத்தில் அவர் திருநாளைப் போவார் என்றுதான் குறிப்பிடப் படுகிறார். காரணம் அவர் எப்போதும் நான் "நாளைக்கு தில்லை செல்வேன்" என்று கூறிக் கொண்டிருப்பாராம். அவருக்கு கொடுமைக்காரராக ஒரு அந்தண எஜமானர் இருந்தார் என்பதற்கும், அவர் நந்தனாரை தில்லை செல்ல விடாமல் தடுத்தார் என்பதற்கும்  பெரிய புராணத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது. 

நந்தன் சரித்திரத்தை இசை நாடகமாக எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அந்த காலத்தில் நிலவிய ஜாதிக் கொடுமைக்கு எதிராக நந்தன் சரித்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சேர்த்து விட்ட விஷயம்தான் அந்தண ஆண்டை. 

தான் எழுதிய நந்தன் சரிதத்திற்கு மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை முன்னுரை எழுதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய கோபாலகிருஷ்ண பாரதி அவரை அணுகி கேட்ட பொழுது, நந்தன் சரித நாடகம் மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டிருப்பதால் மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அதற்கு மறுத்து விட்டாராம். மேலும் நந்தன் சரித பாடல்களில் 'வருகலாமோ ஐயா..' என்று ஒரு பாடல்  உண்டு. வருகலாமோ என்பது இலக்கண பிழையான சொல் என்பதால் அதுவும் பிள்ளையவர்களை கோபப் படுத்தி முன்னுரை எழுதவொட்டாமல் தடுத்ததாம். 

இருந்தாலும் எப்படியாவது மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் முன்னுரை எழுதி வாங்கிவிடுவது என்று முடிவு கட்டிய கோ.கி.பாரதியார், சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிள்ளையவர்கள் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுக்கும் நேரம். அவர் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்திருந்த பாரதியார் தன் நாடகத்திலிருந்து சில பாடல்களை மனமுருகி பாடிக்கொண்டிருந்தாராம், அதை உள்ளிருந்து செவி மடுத்த பிள்ளையவர்கள் அந்த பாடல்கள் பாடப்பட்ட விதத்தில் உருகி, வெளி வந்து, அவருடைய நந்தன் சரிதத்திற்கு முன்னுரை எழுதி கொடுத்தாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரிதம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஜாதிக்கொடுமையில் முன்னணியில் இருப்பது பிராமணர்கள்தான் என்ற எண்ணம் வலுப்பட்டு விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் நந்தன் சரிதத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி ஒரு பிராமணர்.



அடுத்தபடியாக இப்போது பெரிதும் செய்திகளிலும், வலைப்பூக்களிலும் பேசப் படும் தாஜ் மஹால் விவகாரம். தாஜ் மஹாலை யாராவது காதல் சின்னம் என்றால் எனக்கு கோபம்தான்  வரும். ஏனென்றால் மும்தாஜ் மீது ஷாஜஹானுக்கு இருந்தது காதல் கிடையாது, காம வெறி. 

ஷாஜஹானின் அமைச்சர்கள் ஒருவரின் மனைவியான அர்ஜுமான்ட் பானு பேகம் என்பவளின் அழகால் வசீகரிக்கப்பட்டதால், அந்த அமைச்சரை கொன்று விட்டு அவளை தன்  மனைவியாக்கிக் கொள்கிறான் ஷாஜஹான். அவளோடு வாழ்ந்த பதிமூன்று வருடங்களில் பன்னிரெண்டு குழந்தைகள். வாழ வேண்டிய  இளம் வயதில் அநியாயமாக ரத்த சோகையில் இறந்து போன பரிதாபத்திற்குரிய பெண் மும்தாஜ். மனைவியை நேசிக்கும் யாராவது  இப்படி செய்வார்களா? அவனுக்கு மும்தாஜிற்கு முன்னாலேயே ஆறு மனைவிகள். மும்தாஜ் இறந்த பிறகும் அவன் திருமணம் செய்து கொள்வதையும், ஆசை நாயகிகள் வைத்துக் கொள்வதையும் நிறுத்தி விடவில்லை.  வயோதிகத்தில் கூட இதற்காக ஏதோ பச்சிலைகளையும், லேகியங்களையும் சாப்பிட போக அதனால் அவன் சிறுநீரகம் பாதிக்கப்பட, அரண்மனை மருத்துவர்கள் எச்சரித்ததால் கொஞ்சம் குறைத்துக் கொண்டானாம். இப்படிப்பட்டவன் மனைவி மீது கொண்ட காதலை போற்றும் விதமாக தாஜ் மஹாலை கட்டினான் என்றால் அதை விட அபத்தம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

தாஜ் மஹாலை வேறு ஒரு விதத்தில் காதல் சின்னம் என்று சொல்லலாம். கட்டிட கலையின் மீது ஷாஜஹானுக்கு இருந்த காதல்.! அந்த காதல்தான் அவனை தாஜ் மஹாலை கட்ட வைத்தது. அந்த சமயத்தில் நாடெங்கிலும் கடும் பஞ்சம் நிலவிய பொழுதும் அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்  படாமல் மக்களுக்கு அதிக வரி விதித்து வசூலான பணத்தை எல்லாம் தாஜ் மஹால் கட்ட பயன்  படுத்திக்க கொண்டான். இது முடிந்த பிறகு டில்லியில் தாஜ் மஹாலைப் போலவே கருப்பு மார்பிளில் மற்றுமொரு கட்டிடத்தை கட்ட தீர்மானித்திருந்தான். இவனை இப்படியே விட்டால் கஜானா காலியாகி விடும் என்ற அச்சத்தில்தான் அவ்ரங்கசீப் அவனை பதவியில் இருந்து இறக்கி விட்டு தான் முடி சூட்டிக் கொண்டான் என்பதுதான் நிஜமான வரலாறு.

பி.கு.
நான் இப்படி எழுதி இருப்பதால் தாஜ் மஹாலின் அழகை மறுக்கிறேன் என்று பொருள் கிடையாது. தாஜ் மஹால் ஒரு கட்டிட கலை அற்புதம் என்பதில் இரண்டாவது கருத்து  இருக்க முடியாது. ஆனால் அதை காதல் சின்னம் என்று ஒப்புக் கொள்ள முடியாது.