கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, February 26, 2019

எல்.கே.ஜி. (விமர்சனம்)

எல்.கே.ஜி. (விமர்சனம்)நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அரசியல் நையாண்டி படம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்க மறுக்கும் சாமியார் தொடங்கி, வைகையில் தெர்மோகோலை மிதக்கிவிட்ட செல்லூர் ராஜா, சி.எம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் பொழுது நடக்கும் அவலங்கள், தனியார் பள்ளிகளின் அடர்சிடீஸ், யூ டியூபில் திரைப்படங்களை விமர்சிக்கும் நீலச்சட்டை வரை சமீப கால அரசியல், சமூக விஷயங்களை கலாய்த்திருக்கும் படம். 

அரசியலில் பெரிதாக பணமோ, புகழோ சம்பாதிக்க முடியாத தன்  அப்பா போல், தான் இருந்து விடக் கூடாது, எப்படியாவது தலைவரிடம் நல்ல பெயர் வாங்கி, தேர்தலில் ஜெயித்து, சி.எம். ஆகி விட வேண்டும் என்று நினைக்கும் லால்குடி கருப்பையா காந்தி(LKG)  செய்யும் தகிடுதத்தங்கள்தான் அல்லது அரசியல் சாணக்கியத்தனங்கள்தான்  படம்.  

இதுவரை காமெடியனாக நாம் பார்த்த ஆர்.ஜே.பாலாஜி, கதை,திரைக்கதை,வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய களமாக இருப்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார். அவருடைய தந்தையாக நிஜ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத். கட்சித் தலைவராக ராம்குமார்(சிவாஜி கணேசனின் மூத்த மகர்). அப்பாவின் சாயலில், அப்பாவின் குரலில் இதுவரை நடித்த படங்களில் ஏற்படுத்தாத பாதிப்பை இதில் ஏற்படுத்தியிருக்கிறார்.  பிரியா ஆனந்த் ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார், ஆனால் கதாநாயகனுக்கு அவர் ஜோடி கிடையாது. இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருப்பது ஜே.கே. ரித்தீஷ். இவர் தயவால் பின்பாதி நல்ல கலகலப்பு. நாஞ்சில் சம்பத்தை கொல்வதற்காக எதிரிகள் துரத்தி வரும் பொழுது கையில் ஒரு ஆயுதத்துடன் எதிரிகள் முன் பாலாஜி தோன்றும் பொழுது போச்சுடா, பறந்து பறந்து அடிக்கப் போகிறார் என்று நினைக்கிறோம், ஆனால் அந்த மாதிரி விபரீதம் எதுவும் நடக்கவில்லை. 

"உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் கொடுக்கிற டீ.வி. வேணும், கிரைண்டர் வேணும், ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல் வேண்டாம்."
நீங்க கார்ப்பரேட், யார் கொடுத்தாலும் வாங்குவீங்க, எவ்வளவு கொடுத்தாலும் வாங்குவீங்க, எப்போ கொடுத்தாலும் வாங்குவீங்க " என்று வசனங்கள் படு ஷார்ப்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை.  ஒரு வேளை கேட்க கேட்க பிடிக்குமோ? படத்தை ரசித்தாலும் கொஞ்சம் வெட்கமும், வேதனையும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் பிரபுவிற்கு இது முதல் படம். இன்னொரு திறமையான இயக்குனர். வெல்கம்! வெல்கம்!