கனவு பலித்தது.
ஸ்ரீ ராமின் கனவுகள் பற்றிய பதிவு, அதற்கு ஏஞ்சலின் அவர்களின் பின்னூட்டம்,கீதா அக்காவின் பதிவு, இவை எல்லாவற்றையும் படித்த பிறகு, என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது.
எனக்கு நிறைய கனவுகள் பலித்திருக்கின்றன. சில கனவுகள் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கும், சில கனவுகள் அப்படியே பலிக்கும்.
என்னுடைய அக்காக்கள் கருவுற்றிருக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பது என் கனவில் வந்து விடும். ஆனால் நான் கருவுற்றிருந்த பொழுது அப்படி எதுவும் வரவில்லை. என் மகனை சுமந்து கொண்டிருந்த பொழுது இறந்து போன என் பாட்டி ஜிலு ஜிலுவென்று ஜொலிக்கும் வைரத்தோடுகள் அணிந்து உட்கார்ந்து கொண்டிருப்பதை போல கனவு வந்தது. அதை என் அம்மாவிடம் சொன்ன பொழுது," கர்ப்பிணி பெண்களின் கனவில் வைரம் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் முத்து வந்தால் பெண் குழந்தை என்றும் கூறினார்.
நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதிய வருடம், பரீட்சைக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே நான் எவ்வளவு மார்க் வாங்குவேன் என்று கனவில் வந்து விட்டது. பெரும்பாலும் என் தேர்வு முடிவுகள் என் கனவில் வந்து விடும். என் மகன் சி.ஏ. இன்டெர் தேர்வு எழுதிய பொழுது அவன் தான் பாஸாகி விட்டதாக எனக்கு போன் செய்து தெரிவிப்பது போல கனவு வந்தது. சாதாரணமாக தேர்வு முடிவுகளை அவன் வீட்டில்தான் கணினியில் பார்ப்பான். அப்படி இருக்க தொலைபேசியில் தெரிவிக்கிறானா? எப்படி? என்று நான் குழம்பினேன். திருச்சியில் ஒரு நண்பரின் மகளின் திருமணத்திற்கு சென்று விட்டு பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அவனுக்கு ரிசல்ட் வந்திருக்கிறது. போனில் அழைப்பு, என் மகன், தான் இண்ட்டரில் தேறி விட்டதாக கூறினான்.
ஒரு முறை, மும்பையில் இருந்த என் நாத்தனார் குடும்பத்தினரோடு ஏதோ ஒரு கடற்கரைக்குச் செல்கிறோம், அங்கு கடலின் நடுவில் ஒரு கோட்டை உள்ளது. அதை காட்டி என் நாத்தனாரின் மருமகள், "என்னிடம் இது சிவாஜி கட்டிய கோட்டை. ஹை டைட் சமயத்தில் கடல் நீர் கரையில் அதிக தூரம் உள்ளே வரும், அப்பொழுது அங்கு செல்வது கடினம். ஹை டைட் ஓய்ந்ததும் கடல் நீர் உள்வாங்கி விடும் அப்பொழுது நடந்தே செல்லலாம். நாங்கள் அப்படி அந்த கோட்டைக்கு சென்றிருக்கிறோம்" என்று கூறுவது போல ஒரு கனவு வந்தது. நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் நாத்தனாரின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்த சமயம் என் நாத்தனாரின் கணவர், அலிபாக் செல்லலாம் என்று ஏற்பாடு செய்தார். அது ஒரு கடற்கரை கிராமம் என்பதே எனக்கு தெரியாது. அங்கு சென்றோம், கடலுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கோட்டையை பார்த்து, "நடு கடலில் போய் கோட்டை கட்டியிருக்கிறார்களே? அங்கு எப்படி செல்ல முடியும்"? என்று நான் கேட்க, நான் மேலே எழுதியிருக்கும் அதே வாசகங்களை என் நாத்தனாரின் மருமகள் கூறினாள்.
என் திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்தில் வசித்து வந்தோம். இப்பொழுது விக்னேஷ் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தில் அப்பொழுது குடிசைகள்தான் இருந்தன. அதில் ஒரு வீட்டில் நான்கு சகோதரிகள் இருப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எல்லோரும் பால் குடம் எடுத்து வருவது போல கனவு வந்தது. அப்படி கனவு வருவது நல்லதல்ல என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அந்த வீட்டின் மூத்த பெண்ணிற்கு ஏதோ கெடுதல் நிகழப் போகிறது என்று என் உள்ளுணர்வு கூறியதால் எனக்கு மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. கடவுளிடம் அவர்களுக்கு எந்த தீமையும் நிகழக் கூடாதே என்று வேண்டிக் கொண்டிருந்தேன். என் வேண்டுதலுக்கு பலன் இல்லை, அன்று மதியம் மூன்று மணி அளவில் அந்த குடும்பத்தின் மூத்த மருமகன் இறந்து விட்டார் என்று செய்தி வந்தது.
எனக்கு திருமணமான பொழுது என் கணவர் மஸ்கட்டில் இருந்தார். எனக்கு விசா கிடைக்காததால் நான் என் பிறந்த வீட்டில்தான் இருந்தேன். அப்பொழுது எனக்கு வேலை கிடைப்பது போலவும், அலுவலகம் செல்ல தயாராகி நான் வீட்டு வாசலில் நிற்க, என்னை அலுவலக கார் வந்து அழைத்துச் செல்வது போலவும் கனவு வந்தது.. செல்லும் சாலையோ சுத்தமாகவும், அழகாகவும் நடுவில் மரங்கள் இருக்க மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. நான் இந்த கனவை என் வீட்டில் இருந்தவர்களிடம் கூறினேன், அவர்களோ, அடடா! என்ன கனவு! வேலை கிடைப்பதே குதிரை கொம்பு(அப்போதெல்லாம் அப்படித்தானே இருந்தது) இதில் கார் வந்து உங்களை அழைத்துச் செல்லுகிறதாக்கம்..!! (அலுவலக வண்டியே பிக் அப். ட்ராப் போன்ற விஷயங்கள் அப்போதெல்லாம் நம் ஊரில் கிடையாதே) என்று கேலி செய்தனர். ஆனால் விரைவிலேயே எனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்து நான் எம்பிளாய்மென்ட் விசாவில்தான் அங்கு சென்றேன். அப்பொழுது அங்கு அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர்களை பிக் அப் செய்யவும், ட்ராப் செய்யவும் அலுவலக ஊர்திகள் உண்டு. பிற்பாடுதான் அதை நிறுத்தினார்கள். ஆகவே என்னை அழைத்துச் செல்ல அலுவலக கார் வந்தது. அது கார்னிஷ் என்னும் பகுதியில் சென்ற பொழுது என் கனவில் வந்த இடம் அதுதான் என்று புரிந்து கொண்டேன்.
மஸ்கட்டில் இருந்த பொழுது ஒரு முறை வளைகுடா நாடு ஏதோ ஒன்றில் இருக்கும் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக நாடு திரும்புவது போலவும், ஏர் இந்தியா அலுவலகத்தை டிக்கெட்டிற்க்காக முற்றுகை இடுவது போலவும், ஒரு ஏர் இந்தியா விமானத்தில் ஆசனங்களை நீக்கி விட்டு, கீழே பயணிகளை உட்கார வைத்து அழைத்து வருவது போலவும் கனவு வந்தது. என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான கனவு? இப்படி எல்லாம் நடக்குமா? என்று நானே அதை நம்பவில்லை. ஆனால் அந்த கனவு வந்து சில நாட்களுக்குள் சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமிக்க, கூட்டம் கூட்டமாக இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். என் கனவில் வந்தது போலவே ஒரு ஏர் இந்தியா விமானம் ஆசனங்களை எடுத்து விட்டு பயணிகளை கீழே உட்கார வைத்து அழைத்து வந்ததாக கலீஜ் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதிர்ந்து போனேன்!
எட்டு வருடங்களுக்கு முன்பு என் கணவருக்கு இதய வால்வில் அடைப்பு இருந்து ஸ்டென்ட் போட வேண்டி வந்தது. அந்த சமயத்தில் நானும் குழந்தைகளும் சென்னையில் செட்டிலாகி விட்டோம், அவர் மட்டும் மஸ்கட்டில் தனியாக இருந்தார். என் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் எங்களிடம் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாள் கனவில்," வெங்கிக்கு உடம்பு சரியில்லை" என்று ஒரு குரல் கேட்டது. அவரிடம் கேட்ட பொழுது, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி விட்டார். ஒரு வாரத்திற்குள் மீண்டும், வெங்கிக்கு உடம்பு சரியில்லை, அவன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறான்" என்று கனவில் குரல். இந்த கனவு வந்து சில நாட்கள் கழித்து, பகல் உணவு முடித்து, ஈஸி சேரில் சாய்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன். அப்போது வந்த கனவில் ஈஸி சேரில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் என் காலடியில் வலது புறம் ஒருவரும் இடது புறம் ஒருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். வலது புறம் இருப்பவர் டீசென்டாக உடை அணிந்து கொண்டிருக்கிறார். ஆனால் சற்று கவலையோடு ஏதோ யோசித்தபடி இருக்கிறார். இடது புறம் இருப்பவர் வயலில் வேலை செய்பவரைப் போல வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்க கொண்டு முண்டாசு அணிந்து கொண்டு குந்தியபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் என்னிடம்," வெங்கி அவ்வளவுதான், போயாச்சு.." என்கிறார், உடனே வலது புறம் இருப்பவர், "சீ! சீ! இவன் சொல்றதை நம்பாதே, நான் அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்" என்கிறார். உடனே இடது புறம் இருப்பவர், அப்படினா இதுக்கு பதிலா எனக்கு வேற உசிரை காட்டுங்க, நான் என்ன பண்ண முடியும்?" என்கிறார். நான் திடுக்கிட்டு முழித்துக் கொண்டேன். உண்மையில் எனக்கு அதன் பொருள் விளங்கவே இல்லை.
அடுத்த நாளே என் கணவரிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மாடிப்படி ஏறும் போது மார் வலிப்பதாகவும், அனீஸியாக இருப்பதால் அங்கிருக்கும் அப்போல்லோ மருத்துவமனையில் காண்பித்ததாகவும்,அங்கு ஈ.சி.ஜி. எடுத்து பார்த்து விட்டு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதால் உடனடியாக பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும், ஆகவே இங்கு(சென்னையில்) ஒரு நல்ல மருத்துவ மனையில் அப்பாயிண்ட்மென்ட் வாங்கு நான் நாளையே புறப்பட்டு வருகிறேன் என்றார். அதன்படி எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் காண்பித்ததில் ஸ்டென்ட் போடப்பட்டு என் கணவர் உடல் நலம் தேறினார். அவசரப் படாதீர்கள், கதை சாரி கனவு இங்கே முடியவில்லை..