சனி, 21 ஏப்ரல், 2018

சில தேடல்கள்


சில தேடல்கள் 

வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே? வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது.
என்னுடைய சமீபத்திய தேடல் உங்களுக்கு சிரிப்பூட்டலம். தமிழ் பத்திரிகை ஏதாவது கிடைக்காதா? என்று அலைகிறேன்.


பெங்களூரில் நாங்கள் முன்பு வசித்த திப்பசன்த்ராவில் தினசரி செய்திதாள் போட்டவரிடம் சொன்னதும் குமுதம் சினேகிதியும், ம.மலரும் தொடர்ந்து போட்டு விட்டார்.
வீடு மாற்றியதும் இங்கு(ஹொரமாவு) செய்திதாள் போடும் பையரிடம் எனக்குத் தேவையான பத்திரிகைகளை கூறியதும்,” சரி மேடம் என்று தமிழில் மாட்லாடியவுடன் எனக்கு அஷ்டு சந்தோஷா! ஆனால் அது நீடிக்கவில்லை. நானும் தினசரி பேப்பர் வரும் பொழுது, புத்தகங்கள் வந்திருக்கிரதா? என்று பார்த்து பார்த்து ஏமாந்தேன்.

குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுமே மாதம் இரு முறை வரும். ஓன்றாம் தேதி வர வேண்டிய ம.மலர் மூன்றாம் தேதி வரும். கு.சி. 28ம் தேதியே வந்து விடும். ஆனால், ஏழு தேதி ஆகியும் வராததால் என்ன ஆச்சு என்று பேப்பர் போடும் பொழுது மடக்கி கேட்க வேண்டும் என்று காத்திருந்தேன், எப்படியோ என் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஓடி விட்டான். ஒரு நாள் பிடித்து விட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை என்றும் மே மாதத்தில் இருந்து கண்டிப்பாக போடுவதாகவும் சொன்னான்.இத்தனை நாட்கள் கிடைக்காத புத்தகங்கள் அப்போது எப்படி கிடைக்கும் என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை.

அவனை நம்புவதற்கு பதிலாக நாமே புத்தக கடை இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து வாங்கிக் கொண்டு வந்து விடலாமே என்று இந்த ஏரியாவில் வெகு நாட்களாக வசிக்கும் உறவுக்கார பெண்ணிடம் விசாரித்த பொழுது ரெயில்வே கேட் தாண்டி ஹார்ட்வேர் கடைக்கு அருகில் ஒரு செய்திதாள் ஏஜென்சி இருப்பதாக கூறினாள். டூ வீலரில் சென்று பார்த்த பொழுது ஹார்ட்வேர் கடைகள்தான் கண்ணில் பட்டன.

மற்றொரு இடமாக அவள் குறிபிட்ட காந்தி சிலைக்கு அருகில் ஒரு ஹோட்டல் இருந்தது, அதன் அருகில் ஒரு சிறிய பெட்டி கடை இருந்தது அதில் சில தமிழ் செய்திதாள்களும் இருந்தன. ஆனால் ஒரு பொடி பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை.  அந்தக் குழந்தையிடம் முதலில்,”கடையில் யாரும் இல்லையா? என்றேன், அந்தக் குழந்தை தலை ஆட்டியது. சரி நான் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, நான் அறிந்த ஹிந்தியில்,”அந்தர் கோயி ஹை?” என்றேன். தூங்குகிறார்கள் என்று அபிநயம் பிடித்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி எனக்கு முதுகு காட்டியபடி ஒரு பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார்.
“தமிழ் புத்தகம் இருக்குங்களா”?
“இல்லீங்க..”
“வருமா?”
“வராது..”
அந்தப் பெண்ணிற்கு என்ன பிரச்சனையோ? திரும்பி கூட பார்க்காமல் படுத்தபடியே பதில் சொன்னார்.
என்னடா இது? ஹொரமாவுக்கு வந்த சோதனை? இப்படி ஒரு தமிழ் மறைவு ப்ரதேசமா?  மஸ்கட்டில் கூட எல்லா பதிரிகைகளும் கிடைத்ததே? அண்டை மாநிலம்.. ஹூம்ம்ம்ம்!