சனி, 11 ஆகஸ்ட், 2012

naan ee - film review

நான் ஈ (விமர்சனம்)மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் ஆட்டுக்கார அலமேலுவிர்க்குப்பிறகு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் நான் ஈயாகத்தான் இருக்கும்!

பணக்கார வெற்றிகரமான வர்த்தக பெரும்புள்ளி சுதீப். தன் மனைவியைத் தவிர தான் விரும்பும் அத்தனை பெண்களையும் தன்னால் வீழ்த்திவிட முடியும் என இருமாந்திருக்கும் அவர் நுண் கலைஞரான(micro artist) சமந்தாவை அடைய விரும்புகிறார். அவரோ நாணியைக் காதலிக்க, அப்பாவி நானி சுதீபால்  கொல்லப்படுகிறார். ஒரு ஈயாக மறு பிறவி எடுக்கும் நாணி சுதீபை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் கதை! சர்வ சாதரணமான இந்தக் கதையை வெகு சுவாரஸ்யமாக படமாக்கி
-யிருப்பதில் டைரக்டர் ராஜ மௌலியின் திறமை பளிச்சிடுகிறது.

சமந்தாவின் புறக்கணிப்பைக் கூட தனக்கு சாதகமாக மாற்றி கூறும் அப்பாவித்தனத்தை அழகாக செய்திருக்கிறார் நாணி. வில்லன்  சுதீபின் உருவம், நடிப்பு இரண்டிலுமே ரகுவரனின் லேசான சாயல்!
குரல் கொடுத்தவர் வேறு ரகுவரனை மிமிக் செய்திருக்கிறார்  என்றாலும் ஓகே! சமந்தாவை குறை சொல்ல முடியாதுதான்
என்றாலும் இன்னும்  கொஞ்சம்  நமக்கு  நெருங்கி  வந்திருக்கலாம். தேவ தர்ஷினி போன்ற நமக்கு பரிச்சயமான முகங்கள்
தலை  காட்டினாலும் தெலுங்கு படம் பார்பது போன்ற உணர்வை
தவிர்க்க முடியவில்லை! சந்தானம் கூட இரண்டு காட்சிகளில் வந்து கலகலப்பூட்டுகிறார்!

வசனம் க்ரேசி மோகன் என்று போடுகிறார்கள், அவரே மருத்துவராக
வரும் கடைசி காட்சியைத் தவிர மற்ற இடங்களில் க்ரேசியை காணவில்லை.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு மிகவும் உதவி செய்திருக்கின்றன. கிராபிக்ஸ் படம் என்பதால் காதை அதிரச் செய்யாத பின்னணி இசையை
சேர்த்திருக்கும் மரகதமணியை பாராட்டத்தான் வேண்டும். பாடல்கள்  இரண்டும் இன்பம்! நம் ஊரில் அம்மன் படம் எடுப்பவர்கள் ராஜ மௌலியிடம் க்ராபிகசை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று
கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் ஒரு நல்ல பொழுது போக்கு படம் எடுக்க மாஸ் ஹீரோக்கள்
தேவை இல்லை, நல்ல திரைக்கதை, சிறப்பான  தொழில்  நுட்பம்  இருந்தால்  போதும் என்பது  மீண்டும்  நிரூபணமாகி  இருக்கிறது.