சுப திருஷ்டி!
"ரொம்ப பயமாயிருந்தது மாமா.. எப்படியோ நல்லபடியா ஒப்பேத்திட்டேன்.."
"ஒப்பேத்தறதா? தூள் கிளப்பிட்ட.. இதோட நிறுத்திடக் கூடாது, தொடர்ந்து பாடணும்..." என்று அவர் கூறியதும், வசு சிரித்துக் கொண்டே தலை ஆட்டினாள்.
ராஜாராமன் அவர் புதிதாக வீடு கட்டிக்க கொண்டு குடியேறிய புறநகர் பகுதியில் கல்சுரல் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பித்து அவ்வப்பொழுது
கச்சேரி, புராண பிரவசனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதற்கான செலவுகளுக்கு ஸ்பான்சர்கள் எப்படியோ பிடித்து விடுவார். இந்த மாதம் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அதற்கு ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வர முடியவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்து விட அவருக்கு மனம் இல்லை. அவருடைய நண்பரின் மகள் வசுமதி முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். நன்றாகப் பாடுவாள், ஆனால், இதுவரை எந்த மேடையிலும் ஏறி, கச்சேரி செய்ததில்லை. அவளை மேடை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்தார்.
"என்ன விளையாடறயா? இவ நன்னாத்தான் பாடுவா, அதுக்காக கச்சேரி பண்ண முடியுமா?" வசுவின் அப்பாவிற்கு நம்பிக்கை இல்லை.
"தாராளமா பண்ணலாம், எல்லோரும் ஏதோ ஒரு நாள் இப்படி ஆரம்பித்தவர்கள்தான். கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணினால் போதும்"
நான் வயலின் வாசிக்கப் போகும் பையனையும், மிருதங்கம் வாசிக்கப் போகும் பையனையும் வரச் சொல்றேன், ரெண்டு நாள் பிராக்டீஸ் பண்ணினால் போதும்".
ராஜாராமன் சொன்னதோடு நிற்காமல், அவர்களோடு உட்கார்ந்து என்னென்ன பாடல்கள் பாட வேண்டும், என்பதற்கு உதவி, சின்ன, சின்ன திருத்தங்கள் கூறி கச்சேரியை அமைத்து கொடுத்தார். அவளும் அதை சிக்கென பிடித்துக் கொள்ள கச்சேரி சிறப்பாக அமைந்து விட்டது.
வசுவின் கச்சேரியை கேட்ட ஒருவர், தன் மகளின் திருமண ரிசப்ஷனுக்கு உடனே புக் பண்ணினார். அதைத் தொடர்ந்து சில கோவில் கச்சேரிகள் கிடைத்தன. வெளியூருக்கு போய் பாடும் சந்தர்ப்பம் கூட வாய்த்தது. வசுமதிக்கும் சரி, அவள் பெற்றோர்களுக்கும் சரி அது சந்தோஷமளிப்பதாகவே இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது,"என்ன வசு, உன் கான்செர்ட்டெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?" என்றதற்கு, "ம்ம் ." என்று அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள்.
"ஆச்சு, ஆடி மாசம் வந்துண்டிருக்கு, உனக்கு நிறைய கச்சேரி கிடைக்கும்.." அவர் மேலே பேச, அவளோ, "பார்க்கலாம்.." என்றதும், "வொய் ஸோ டிஸ் இன்ட்ரஸ்டட்?"
"தொண்டை சரியில்ல.."
"நவராத்திரில பாடுன்னு சொன்னதும் பதில் சொல்ற மாதிரி சொல்றயே..?" சிரித்துக் கொண்டே கேட்க,
அவள் பேசாமல் இருந்தாள். அவளுடைய அம்மா தொடர்ந்தாள்,
"கச்சேரி பண்ண ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு மாத்தி மாத்தி உடம்புக்கு வந்துண்டே இருக்கு. அதுவும் தொண்டை ரொம்ப பாதிக்கிறது. போன வாரமெல்லாம் பேசவே முடியல.."
"இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்,இதுக்காக கச்சேரி செய்வதை ஏன் நிறுத்தணும்?"
"திருஷ்டியா இருக்குமோனு தோண்றது, அதனால இனமே கச்சேரி பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். கச்சேரி பண்ண ஆரம்பித்த - -திலிருந்துதான் இந்த பிரச்சனை..."
ராஜாராமன் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களை கூர்ந்து பார்த்தார். " கச்சேரி பண்றங்களே சௌமியா, சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, இவங்களுக்கெல்லாம் திருஷ்டி படாதா?
"அது......."
நீங்க மோசமான திருஷ்டி பத்தி மட்டும் யோசிக்கிறீங்க, மோசமான திருஷ்டினு ஒண்ணு இருந்தா, சுப திருஷ்டியும் இருக்கும் இல்லையா?" என்று அவர் கேட்க, வசுவும், அவள் தாயாரும் புரியாமல் முழித்தார்கள்.
ராஜாராமனே தொடர்ந்தார்," நம்ம ஊரில் கல்யாணம், காது குத்தல், கிரஹப்ரவேசம் போன்ற எல்லா விசேஷங்களுக்கும் சொந்தம், நட்பு என்று நிறைய பேரை அழைப்போம் ஏன் தெரியுமா? " ராஜாராமன் கேள்விக்கு பதில் வராததால் அவரே தொடர்ந்தார்.
சில பேர் பார்வைக்கு நல்ல சக்தி உண்டு, அப்படி பட்டவர்கள் பார்த்தால் நல்லது நடக்கும். சில பேர் சொன்னால் பலிக்கும், அப்படி பட்டவர்கள் வாழ்த்தினால் நல்லது. சில பேர் சங்கல்பத்திற்கு பலன் உண்டு. அப்படிப் பட்ட எல்லோருடைய ஆசிகளும் கிடைக்கணும்னுதான்.."
நீங்க சொல்றது புரியல.."
இப்போ உன் கச்சேரியை குறைவான பேர்கள்தான் கேட்கிறார்கள், அதில் இருக்கும் துர் திருஷ்டி உள்ளவர்களின் திருஷ்டியை காம்பன்சேட் பண்ணனும் என்றால் இன்னும் அதிகமானவர்கள் உன் கச்சேரியை கேட்கணும். அப்படி கேட்பவர்கள் அதிகமாக,அதிகமாக சுப திருஷ்டி அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அது இந்த துர் த்ரிஷ்டியின் பலனை குறைத்து விடும். ஸோ நீ இனிமேல் தான் நிறைய கச்சேரி பண்ணனும்".
வசுமதியும் அவள் அம்மாவும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பலாம்.