கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 26, 2019

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

மூல ஸ்தான வடிவம் 
நாங்கள் தரிசித்த அலங்காரம் 

புனேயிலிருந்து கோலாப்பூருக்கு காலை 6:30 மணிக்கு பஸ். வால்வோ பஸ் என்றாலும், நம் ஊர் வால்வோ பஸ் போல் இடைஞ்சலாக இல்லாமல்  தாராள லெக் பேசோடு சௌகரியமாக இருந்தது. 11:30க்கு கோலாப்பூருக்கு சென்று விட்டோம். இங்கிருந்தே ஆன் லைனில் புக் செய்திருந்த பாலாஜி ரெசிடென்சி  கோலாப்பூரின் பிரதான மார்க்கெட்டான மஹாரான பிரதாப் ரோட்டுக்கு  அருகில் ஒரு சந்தில் இருந்தது. அமைந்திருந்த இடம் சுமாராக இருந்தாலும், ஹோட்டல் மிக வசதியாகவும், நவீனமாகவும் இருந்தது. அங்கிருந்து மஹாலக்ஷ்மி கோவில் ஆட்டோவில் சென்றால் இருபது ரூபாய் தொலைவுதான், ஆனால், முப்பது கேட்கிறார்கள். நடந்தும் செல்லலாம். 

மஹாலக்ஷ்மி கோவில் ரொம்பவும் பெரிது என்று கூற முடியாது. நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. புராதனமான கோவில் என்பது அதன் கட்டுமானத்தைப் பார்த்தால் தெரிகிறது.  


சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்று. கரவீரபுரமாக இருந்த இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாஸுரனை, தேவி மஹாலக்ஷ்மியாக வந்து அழித்த இடம். அவன் இறக்கும் தருவாயில் இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம்.   லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூரத்தக்கது. 

17ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பின் பொழுது இந்தக் கோவிலின் பூஜாரி ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட மூல விக்கிரகம் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். சிவாஜியின் மருமகள் ராணி தாராபாய் கோலாப்பூர் சமஸ்தானத்தை ஸ்தாபித்த பிறகு இந்த கோவிலை விரிவு படுத்தியிருக்கிறாராம்.

கோவில் பெரியது என்று கூற முடியாது. கோபுரத்தில் நிறைய அழகான சிலைகள். சில உடைக்கப்பட்டிருக்கின்றன. பிரதான மண்டபத்திற்குள் நுழையும் முன் இடது புற சுவற்றில் இருக்கும் விநாயகர் புடைப்புச் சிற்பத்தை சாட்சி கணபதி என்கிறார்கள்.  நுழைவு வாயில் கொஞ்சம் குறுகலாக, உயரம் குறைவாக இருக்கிறது. உள்ளே நுழைந்து சிறிது தூரத்தில் மஹா காளி சந்நிதி.

அங்கிருந்து மஹாலக்ஷ்மி குடியிருக்கும் பிரதான வாயிலுக்கு செல்லும் வழியில் சூரியநாராயண மூர்த்தியின் சிலையை காண முடிகிறது. கர்பக்ரஹத்தின் வாயிலில் பிருமாண்டமான ஜெய,விஜய துவாரபாலகர்கள். 

சூரிய நாராயண மூர்த்தி 

துவார  பாலகர்களில் விஜயன் 

சாட்சி கணபதி 


தீப ஸ்தம்பங்கள் 

உள்ளூர் மக்கள் தாயாரை அம்பா, அல்லது அம்பாபாய் என்று குறிப்பிடுகிறார்கள். நின்ற திருக்கோலம். நான்கு கரங்கள். ஒன்றில் மாதுளம் பழம், இன்னொன்றில் பூமியில் ஊன்றப்பட்ட கதை, மற்ற இரு கரங்களில் சக்கரம், மற்றும் அமிர்த கலசம் ஏந்தி, ஆதி சேஷன் குடை பிடிக்க காட்சி அளிக்கிறாள் என்று குறிப்பிடப் பட்டாலும், நாங்கள் சென்ற பொழுது செய்யப்பட்டிருந்த அலங்காரத்தால் ஆதிசேஷனை மட்டுமே காண முடிந்தது. இங்கிருக்கும் அம்மனின் விசேஷம் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பந்தங்களிலிருந்து விடுவித்து மோட்சத்தையும் அளிப்பவள் என்பதாகும்.கண்குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வருகிறோம். அங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் மஹாசரஸ்வதியை தரிசித்துக் கொண்டு வெளியே வருகிறோம். 

வெளியே வந்ததும் புகைப்படங்கள் 

வெளிசுற்றில் சித்தி விநாயகருக்கென்று ஒரு தனி சந்நிதியும், தத்தாத்ரேயருக்கு தனி சந்நிதியும் இருக்கின்றன.  நுழைவு வாயிலுக்கு எதிராக மகாவிஷ்ணுவுக்கு தனி சந்நிதி இருக்கிறது. 

அம்மன் சந்நிதிக்கு மேற்கே உள்ள ஜன்னல் வழியே ரத சப்தமியை ஒட்டி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 2 ஆகிய  வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கிரணங்கள் அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் விழுவது இங்கு கிரனோத்ஸவ் என்று சிறப்பாக கொண்டாடப்படுமாம். அதைத்தவிர நவராத்திரியும் சிறப்பு. 

சென்ற வெள்ளியன்று கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை தரிசிக்கும் பாக்கியம் வாய்த்தது. கோவிலில் கும்பல் இருந்தாலும் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டாவது ஆடி வெள்ளியான இன்று, லக்ஷ்மி தேவியின் அருளால், எல்லோர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் நிறைய அம்பா பாயை வேண்டுகிறேன். 

கோலாப்பூரின் மற்ற பகுதிகளை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Wednesday, July 24, 2019

புதன் புதிர்

புதன் புதிர்  


நாங்கள் புனே ரயில் நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் என் கணவர் ஏதாவது ஒரு ஏ.டி.எம்.ல் நிறுத்தச் சொன்னார். வழியில் ஒரு ஏ டி.எம். கண்ணில் பட்டது. மரக்கிளைகள் மறைத்துக் கொண்டிருந்ததால் எந்த வங்கியின் ஏ.டி.எம். என்று தெரியவில்லை. பெயர்ப் பலகை நீல நிற பின்னணியில் இருந்ததால் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். என்று நினைத்து விட்டோம். அருகில் சென்றதும்தான் வேறு வங்கியின் ஏ.டி.எம். என்று தெரிந்தது. அப்போதுதான் நிறைய வங்கிகளின் பெயர்ப்பு பலகை நீல நிறப் பின்னணியில் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். அதிலிருந்து தோன்றியதுதான் இந்த புதிர். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதன் கிழமை ஒரு புதிர்.  

1. உங்களுக்கு தெரிந்து எத்தனை வங்கிகளின் பெயர் பலகைகள் நீல நிற பின்னணியில் இருக்கின்றன என்று கூற முடியுமா? கூகிள் ஆன்டியிடம் கேட்காமல், விளம்பரங்களை பார்க்காமல், உங்கள் நினைலிருந்து சொல்லுங்கள்.

2. இந்தியாவின் பழமையான பொதுவுடைமை வங்கி எது?

3. மகாத்மா காந்தி தொடங்கி வைத்த வங்கி எது?

4. இந்தியாவில் முதல் முதலாக ஏ.டி.எம். சேவையைத் தொடங்கிய வங்கி எது? 

5. எத்தனை இந்திய வங்கிகளின் பெயர்கள் 'S' என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குகின்றன?  

Monday, July 22, 2019

குரு பூர்ணிமா @ புனே

குரு பூர்ணிமா @ புனே


தகடு சேட் கணபதி கோவில்
புனே ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.  நம்மை ஏற்றிக்கொண்டு விட்டு, இறங்கும் பொழுது மேலே போட்டு கொடுக்கச் சொல்லி தகராறு செய்கிறார்கள்.

கேரளாவுக்கும், பெங்களூருக்கும் பிறந்த குழந்தை போல இருக்கிறது புனே. சாலையின் இரு ஒரங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டது யார் என்று தெரியவில்லை. அவற்றில் ஆலமரம் உட்பட பெரும்பான்மையை அப்படியே பராமரிக்கிறார்கள்.  நிறைய ஆலமரங்களை பார்க்க முடிந்தது. புதிய இடம் என்றாலும் புனே மீது ஒரு பாந்தவ்யம் உண்டாயிற்று.

நாங்கள் குளித்து, உடை மாற்றி, திருமண மண்டபத்திற்கு வந்த பொழுது, திருமண முதல் நாள் காலை நிகழ்ச்சிகளான விரதம், நிச்சயதார்த்தம் போன்றவை முடிந்து விட்டன.

மாலையில் சங்கீத். நம் சம்பிரதாயத்தில் இல்லாத மெஹந்தி, சங்கீத் போன்றவை இப்போது எல்லா திருமணங்களிலும் இடம் பெற தொடங்கி விட்டன. ஜானவாசம் விடை பெற்று விட்டது. விருந்தில் பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் அயிட்டங்களையும் சேர்த்து 21 அயிட்டங்கள். இளம் பெண்களின் தட்டில் வெள்ளரிக்காய், கேரட்,  வெங்காயம் இவைகளைதான் பார்க்க முடிந்தது. ரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரைக்கும் மாத்திரை சாப்பிடும் முதியவர்கள் இரண்டு குலாப் ஜாமூன்கள், கப் நிறைய ரஸமலாய், ஐஸ்கிரீம் என்று ஒரு கட்டு கட்டினார்கள்.

மறுநாள் திருமணத்தன்று காலை ஒரு சிறு தட்டில் மூணு ஸ்பூன் பைனாப்பிள் கேசரி, (இப்போது பைனாப்பிள் சீஸனோ? நேற்று பைனாப்பிள் ரசம், இன்று கேசரி)அரை தோசை, ஒரு ரவா இட்லி, சரவணபவன் மினி டிபனில் வழங்கப்படும் வடையை விட சற்றே பெரிய வடை என்று திட்டமாக டிஃபன்(செகண்ட் சர்விங் இருந்தது). மதியம் பால் பாயசம், வெள்ளரிக்காய் பச்சடி, பீன்ஸ் பருப்பு உசிலி, உ.கி.கார கறி(இதை யாரவது நன்றாக செய்வார்களா?), அவியல் என்று அதே சலிப்பூட்டும் மெனு. இந்த மெனுவை மாற்றுகிறவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகத்தில் ஒரு மாதத்திற்கு உணவு டோக்கன் வாங்கித்தரலாம்.

மாலை எங்கள் உறவினர் ஒருவரைப்பார்ப்பதற்காக சென்றோம். அவர்கள் இருப்பது வளர்ந்து வரும் கான்கிரீட் காடான புனே. அவர்களிடம் புனேயில் பார்க்க வேண்டிய இடங்கள் எவையெவை? என்று கேட்டதற்கு டாகுதாஷ் சேட் கணபதி கோவில், சனிவார் வாடா, பாலாஜி டெம்பிள் என்று அடுக்கினார்கள். என்னைப் பொருத்தவரை பாலாஜி என்றால் அவர் திருப்பதியில் இருப்பவர்தான். கீதா அக்கா பார்வதி ஹில்லுக்கு சென்று விட்டு வாருங்கள் என்றார். ஆனால் அங்கு 800 படிகள் ஏற வேண்டுமாமே...?

ஷாப்பிங் சென்று பூனா காட்டன் சாரி வாங்கலாம் என்று நினைத்தேன். நண்பரின் மனைவியோ,"பூனா காட்டன் சாரியெல்லாம் சென்னை யிலேயே கிடைக்கும், இங்கெல்லாம் ஷாப்பிங் எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறி விட அதுவும் கேன்சல்ட்.


மறுநாள் தகடு சேட் கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  ஊரின் மத்தியில், பிரதான சாலையில் இருக்கிறது அந்த கோவில். குரு பூர்ணிமாவோடு கூடிய செவ்வாய் கிழமை என்பதாலோ என்னவோ கூட்டம் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவில் வாசலிலேயே கடைகளில் விதம் விதமான மோதகங்கள் விற்கப்படுகின்றன. கோவில் சிறியதுதான், ஆனால் தங்க மயமாக ஜொலிக்கிறார் விநாயகர்.  வெளியே பெரிய மூஞ்சூறு வாகனம். நம் ஊரில் சிவனுக்கு எதிரே இருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதல்களை சொல்வதைப்போல இங்கு மூஞ்சூரின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை சொல்லி வேண்டுகிறார்கள்.

நீட் தேர்வில் தேற வேண்டுமா? காதலிப்பவனை கைப்பிடிக்க வேண்டுமா?
என்ன வேண்டுதலோ?

என் கணவருக்கு ஏனோ மகாத்மா காந்தியை வீட்டுச் சிறையில் வைத்திருந்த, கஸ்தூரிபா இறந்த ஆகாகான் அரண்மனைக்குச் செல்வதில் அத்தனை விருப்பம் இல்லை. நாங்கள் அதை முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறோம்.  அங்கு கஸ்தூரிபாவுக்கு சமாதி உண்டு.சனிவார் வாடா நுழை வாயில் 
மாலை சனிவார் வாடாவுக்குச் சென்றோம். நாங்கள் அந்த இடத்தை அடையும் பொழுது 5:35. 5:30 வரைதான் உள்ளே அனுமதிப்பார்களாம். வெளியே இருந்து புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டோம். வாடா என்னும் மராட்டிய வார்த்தைக்கு புராதனமான கட்டிடம் என்று பொருளாம்.  "உள்ளே என்ன இருக்கிறது?" என்று எங்கள் உறவினர் பையனை கேட்ட பொழுது, " ஒரு பெரிய கதவு இருக்கும், அதன் உள்ளே சென்றால் அரண்மனையின் இடிபாடுகள்" என்று அவன் கூறியது நினைவுக்கு வர சரி பெரிதாக எதையும் மிஸ் பண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டேன். "இந்த இடத்திற்கு ஏன் சனிவார் வாடா என்று பெயர்?" என்று ஆட்டோ ஓட்டுனரை கேட்டேன். "இங்கு கிழமைகளின் பெயர்களில் சோம் வார் பேட், புத்வார் பேட் என்றெல்லாம் இடங்கள் உண்டு. அது போல இந்த இடம் சனிவார் பேட், இங்கிருக்கும் வாடா சனிவார் வாடா" என்றார்.

பின்னர் ஜங்கிலி மஹராஜ் சாலையில் இருக்கும் பாதாளீஸ்வரர் சிவன் கோவிலுக்கும், அதற்கு அருகில் இருந்த ஜங்கிலி மஹராஜ் என்னும் மஹானின் அதிஷ்டானத்திற்கும் சென்றோம்.

பாதாளீஸ்வரர் ஆலயம் மிகவும் புராதனமானதாம் 1500 வருடங்களுக்கு முந்தையது என்று அங்கு அமர்ந்திருந்த ஒருவர் கூறினார். அந்த கட்டிடம் தொல்பொருள் இலாகாவுக்கு சொந்தமானது என்ற அறிவிப்பினை பார்க்க முடிந்தது.

சிறிய சிவலிங்கத்தை நாம் தொட்டு வணங்கலாம். எதிரே ஒரு வட்ட வடிவ மண்டபத்தில் நந்தி இருக்கிறது.


அந்த பூங்காவில் இருக்கும் 92 வயதான ஆலமரம்
அருகில் இருக்கும் ஜங்கிலி மஹராஜ் அதிஷ்டானத்தில் குரு பூர்ணிமா என்பதால் சிறப்பு பூஜைகள் இருந்தன. குரு பூர்ணிமா அன்று ஒரு மஹானின் அதிஷ்டானத்திற்கு செல்ல முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியிலே. அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள்.