சனி, 15 செப்டம்பர், 2018

இரண்டு தீர்ப்புகள்

இரண்டு தீர்ப்புகள்

ஓரினச் சேர்கையை ஆதரித்து சென்ற வாரம் வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி எல்லோரும் விவாதித்து முடித்து விட்டார்கள். அதைப் பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லாததால் விட்டு விடுகிறேன்.

நேற்று, தொழு நோயை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைப் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பொழுது அவர்கள் வாழ்க்கை துணையால் பரிவை கொடுக்க முடிந்தால்தான் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இருக்கும். அப்படி கொடுப்பதற்கு தயாராக இல்லாததால்தான் விவாகரத்து கோருகிறார்கள், அவர்களைப் போய் வற்புறுத்தி சேர்ந்து வாழச் சொல்வது சரியா?

நோயின் வேதனை, பிடிக்காத வாழ்க்கைத் துணையால் வரும் மன உளைச்சல் எல்லாம் அவர்கள் நிலையை இன்னும் மோசமாக்கி விடாதா? தீர்ப்பு அளித்தவர்கள் படித்தவர்கள், உலக அனுபவம் நிறைய இருக்கும், எனவே அவர்கள் தீர்ப்பு சரியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா?
…………………..
ஸ்வட்ச் பாரத் சாத்தியமா?

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உருவாகி வருகிறது. அதில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் அதன் அருகிலேயே கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடியிருப்புக்கும், எங்கள் குடியிருப்புக்கும் இடையே நிறைய புதர்கள் மண்டிக் கிடக்கும். கட்டிட தொழிலாளர்களுக்கு கழிப்பறையாக பயன்படுவது இந்த புதர்கள்தான். தினமும் எங்கள் வீட்டு ஜன்னல் திரைச்சீலையை நீக்கும் பொழுது நான் கண்களை மூடிக் கொண்டு விடுவேன்.

எத்தனையோ கோடிகள் லாபம் பார்க்கப் போகும் கட்டிட நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் தொழிலாளிகலின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற முனைவதில்லை. இப்போதெல்லாம் மொபைல் டாய்லெட்டுகள் வந்து விட்டன. அவைகளை நிறுவினால் போதும். இந்த மாதிரி விஷயங்களை திருத்தாத வரை ஸ்வட்ச் பாரத் சாத்தியமில்லை.   

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும் நவ கைலாசமும் - 2

பரவசம் தந்த நவ திருப்பதியும் 
நவ கைலாசமும் - 2

விஜயாசன பெருமாள் கோவில் - வரகுணமங்கை 
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அடுத்த திருப்பதியான வரகுணமங்கையை நோக்கிச் சென்றோம். வரகுணமங்கை என்று குறிப்பிடப்பட்டாலும் நத்தம் என்றே அறியப்படுகிறது. நவகிரஹங்களில் சந்திரனுக்கு உரிய ஷேத்திரம். 
மூலவர் விஜயாசன பெருமாள் விஜயம்(வெற்றி) என்னும் பெயருக்கேற்றாற்போல இடது கை நம்மை வா என்று அழைக்க, வலது கை அபய ஹஸ்தமாக  வெகு கம்பீரமாக ஆதிசேஷன் குடை பிடிக்க, அதன் மீது அமர்ந்திருக்கிறார். மனதை கொள்ளை கொள்ளும் அழகு! தாயாருக்கு தனி சன்னிதி இல்லை. உற்சவர் எம் இடர் கடிவான் இரண்டு தாயார்களோடு சேவை சாதிக்கிறார். சிறிய கோவில்தான். 

தல சிறப்பு: ரேவா நதிக்கரையில், புண்ணியகோஸம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த வேதவித் என்னும் அந்தணர் தன லௌகீக கடமைகளை முடித்த பிறகு, மஹாவிஷ்ணுவின் திருவடியை அடையும் பொருட்டு தவம் செய்து வந்தார். அவருக்கு ஸ்ரீமன் நாராயணனே ஒரு அந்தணராக வந்து வரகுணமங்கைகுச் சென்று தன் தவத்தை தொடரச் சொல்ல, வேதவித்தும் அவ்விதமே வரகுணமங்கையை அடைந்து ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததாக வரலாறு. ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததால் இங்கு பெருமாள் விஜயாசனத்தில் வீற்றிருக்கிறார். 

ரோமச மஹரிஷி, அக்னி பகவான், சத்யவான் மனைவியான சாவித்திரி ஆகியோருக்கு பெருமாள் இங்கு காட்சி அளித்திருக்கிறார். இங்கே இருப்பவர்களுக்கு முக்தி என்பது ஒரு நம்பிக்கை. 

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்துவை குந்தத்துள் நின்று
தெளிந்தவெண் சிந்தை அகங்கழி யாதே 
என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப 
நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய் 
சிவப்பநீ காணவா ராயே. 
  
என்ற ஒரே ஒரு  பாசுரத்தால் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  தலம்.

அங்கு பெருமாளை சேவித்து விட்டு அடுத்து திருப்புளியன்குடி என்னும் புதன் ஷேத்திரத்திற்கு வந்தோம். இங்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமாளின் திரு உந்தியிலிருந்து(தொப்புளிலிருந்து) பிரம்மா காட்சி அளிக்கிறார். மூலவர் பூமிபாலன். தாயார் லட்சுமி தேவி என்னும் மலர் மகள். உற்சவ தாயாருக்கு புளிங்குடிவல்லி என்னும் திருநாமம். 
இங்கு கர்ப்பகிரஹத்தில் பெருமாளின் திருமுகமண்டலத்தை சேவித்து, திருவடியை பிரகாரம் வலம் வந்து ஒரு ஜன்னல் வழியாக சேவிக்க வேண்டும். திருவடிக்கருகில் லட்சுமி தேவியும், பூமா தேவியும் அமர்ந்து பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கல்கண்டு, உலர்ந்த திராட்சை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். குழந்தை பேற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்குமாம்.  இதுவும் சற்று சிறிய கோவில்தான். 

ராஜ கோபுரம் அப்படி சொல்ல முடியாமல் மொட்டை கோபுரமாக நிற்கிறது.
தல வரலாறு:

ஒரு முறை லட்சுமி தேவியுடன் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி தனித்திருந்த  பொழுது, பூமிக்கு வந்தும் தன்னை உதாசீனப் படுத்துகின்றாரே என்று பூமிதேவி மனம் வருந்தி, கோபித்து பாதாள லோகத்திற்கு சென்று விடுகிறார். அதனால் பூலோகம் இருண்டு விடுகிறது. உடனே, திருமால் லட்சுமி தேவியுடன் பாதாள உலகம் சென்று, தனக்கு இருவருமே சமம்தான் என்று சமாதானப்படுத்தி, இருவருக்கும் நட்பு உண்டாக்கி இரெண்டு பேருடனும் இங்கே எழுந்தருளுகிறார். பூமி தேவியை சமாதானம் செய்ததால் இங்கு அவர் பூம் பாலன் என்று வழங்கப்படுகிறார். 

தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். தன் சாப விமோசனத்தால் மகிழ்ந்து தேவேந்திரன் பெரிய யாகம் ஒன்றை செய்ய, அதற்கு வருகை தந்த வசிஷ்டரின் மகளையும், அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் தவறான கடும் சொற்களை பேசிய யக்ஞசர்மா என்னும் அந்தணன் அரக்கனாக சபிக்கப்பட்டான். அவன் தன தவறை உணர்ந்து வருந்தியதால் அவனுக்கு பாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம் இதுதான்.  

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

அடுத்தது நாங்கள் சென்றது நம்மாழ்வாரின் அவதார தலமாகிய ஆழவார் திருநகரி. மிகவும் விசேஷமான தலமாகிய இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் எனவே ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் சந்திக்கலாம். 

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 1

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 1


செப்டம்பர் முதல் வாரத்தில் ஏதாவது கோவில்களுக்குச் செல்லலாம் என்று தோன்றியது. பல வருடங்களாக தரிசிக்க ஆசைப்பட்ட, திருநெல்வேலியை சுற்றி இருக்கும் நவதிருப்பதி 
தலங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். வெகு சமீபத்தில் அங்கு சென்றுவிட்டு வந்திருக்கும் நெல்லை தமிழனிடமும், கீதா சாம்பசிவம் அக்காவிடமும் சில ஆலோசனைகள் பெற்றுக் கொண்டேன். கீதா அக்கா அங்கே நவ கைலாசம் எனப்படும் விசேஷமான சிவ ஸ்தலங்களும் இருப்பதாக கூறினார். எனவே அவைகளையும் தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து பெங்களூரிலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸில்  கோகுலாஷ்டமி அன்று கிளம்பினோம். மாலை 5:15க்கு புகை வண்டி கிளம்பும் என்பதால் காலையிலேயே எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணனை வரவழைத்து விட்டோம். அவருக்கு பாயசம், பால், வெண்ணை, பழங்கள், அவல் மற்றும் ஏலக்காய் பொடி செய்து போட்ட சுத்தமான நீர் இவைகளை நிவேதித்து  விட்டு  பழங்களையும் குடி நீரையும் எடுத்துக் கொண்டோம். மறுநாள் காலை 6:30க்கு நெல்லையை அடைந்தோம். ஹோட்டலுக்குச் சென்று, குளித்து, சிற்றுண்டி அருந்தி கிளம்ப 8:30 ஆகி விட்டது.

முதலில் நாங்கள் சென்றது ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஷேத்திரம். இங்கு பெருமாள் சூரியனின் அம்சமாக இருக்கிறார். நின்ற திருக்கோலம். மூலவர் வைகுண்டநாதன், ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலம். உற்சவர் கள்ளர்பிரான். வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி(பூ தேவி)என்று இரண்டு தாயார்கள். நவ திருப்பதியில் முதலாவது ஷேத்திரம்.  நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

பிரும்மா வசிக்கும் சத்யலோகத்தில் ஒரு முறை பிரளயம் ஏற்பட்ட பொழுது,சோமுகாசுரன் என்னும் அரக்கன் பிரும்மாவின்  படைத்த தொழில் பற்றிய ரகசிய ஏடுகளை கவர்ந்து சென்று விடுகிறான். அதை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு தன பிரம்ம தண்டத்தை ஒரு பெண்ணாக்கி தான் பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை  அறிந்து வரச் சொல்ல, அந்தப் பெண் தாமிரபரணி நதிக்கரையில் சோலைகள் சூழ்ந்த இந்த இடத்தை தேர்வு செய்து அவரிடம் தெரிவிக்கிறாள். பிரம்மா இங்கு வந்து மஹாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்ய, அவருக்கு வைகுண்டநாதனாக காட்சி அளித்த மஹாவிஷ்ணு சோமுகாசுரனிடமிருந்து ஸ்ருஷ்டி ரகசிய ஏடுகளை மீட்டுத் தருகிறார். தனக்கு காட்சி கொடுத்த கோலத்திலேயே பெருமாள் இங்கு எழுந்தருள வேண்டும் என்று பிரம்மா வேண்ட, பெருமாளும் அதற்கு சம்மதித்து அருளிய கோலம். மூலவர் விக்கிரஹத்தை பிரம்மாவே பிரதிஷ்டை செய்து, தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்த தீர்த்தம் கலச தீர்த்தம் எனப்படுகிறது. 

கால தூஷகன் என்னும் பெருமாளின் பக்தனான திருடன் ஒருவன் தான் கொள்ளையடிக்கும் செல்வங்களில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக தருவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு முறை அரசனின் கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்ற பொழுது பிடிபடுகிறான். தன்னை காப்பாற்றும்படி  வைகுண்டநாதனிடம் வேண்டுகிறான். அவனுக்காக திருடன் உருவில் பெருமாளே செல்கிறார். அரசன்   வரும் பொழுது, தன்னுடைய சுய ரூபத்தை காட்டியருளுகிறார்.  தன்னுடைய செல்வத்தை கொள்ளையடிக்க ஏன் பெருமாள் வர வேண்டும் என்று கேட்க, தரும வழியில் செல்லாத அவனை தர்மத்தில் ஈடுபட செய்யவே தான் வந்ததாக கூறுகிறார். தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று  மன்னன், கள்ளர்பிரான் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளச் செய்கிறான். அழகான அந்த சிலா ரூபத்தை நாமும் வணங்குகிறோம்.

கோவில் ஓரளவிற்கு பெரியது. நிறைய பெரிய அழகான சிற்பங்கள். நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். மூலவரை தரிசித்து விட்டு பிரகாரத்தை வலம் வரும் பொழுது இடது புறம் வைகுண்ட நாயகி சந்நிதியும்,  வலது புறம் சோரநாத நாயகி சந்நிதியும் இருக்கின்றன.  அதைத்தாண்டி  மண்டபம் உள்ளது. பல சிற்பங்களில் வானரங்கள் பிரதான இடம் பிடித்திருக்கின்றன.


தசாவதாரங்களில் மச்ச,கூர்ம அவதாரங்கள் மீன் போலவும், ஆமை போலவும் இருப்பதை பாருங்கள் 


யுத்த காட்சி 
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)

பரவசம் தந்த  நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)


சென்ற வாரம் ஸ்ரீ ஜெயந்தி அன்று நவ திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. செல்வதற்கு முன்பு கீதா அக்கா, நெல்லை தமிழன், ஸ்ரீராம் இவர்களிடம் சில ஆலோசனைகள் கேட்டுக் கொண்டேன். எல்லாமே மிகவும் உதவியாக இருந்தன.

நாங்கள் முதலில் நவ திருப்பதிக்கு மட்டுமே செல்வதாக இருந்தோம். கீதா அக்கா சொல்லித்தான் அங்கு நவ கைலாசம் என்று அழைக்கப் படும் ஒன்பது முக்கியமான சிவ ஸ்தலங்களும் இருப்பது தெரிய வந்தது. எனவே அவைகளையும் தரிசித்துக் கொண்டோம்.

பின்னர் மதுரைக்கு  வந்து திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருமலை நாயக்கர் மஹால் காந்தி மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பெங்களூர் திரும்பினோம். பயணத் தொடர் வரும் பின்னே, சில புகைப்படங்கள் முன்னே..
சில கோபுரங்கள் 
சிற்ப அழகுகள் 

வழியில் கண்ணைக் கவர்ந்த இயற்கை காட்சிகள் 
எங்கள் சாரதியும் நாங்களும் 
  தற்சமயம் இதை ரசியுங்கள், பின்னர் விரிவாக பார்க்கலாம்.