வியாழன், 18 ஜூலை, 2019

மசாலா சாட் - 10

மசாலா சாட் - 10


புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் தற்சமயம் ஆஷாட ஏகாதசி யை ஒட்டி வருவதால் பண்டரிபுரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றார்கள். எனவே கோலாப்பூர், சதாராவில் இருக்கும் உத்திர சிதம்பரம் நடராஜர் கோவில் சென்று வரலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் லோகமான்யதிலக் விரைவு வண்டியில்  கிளம்பினோம்.

மெஜஸ்டிக் ரயில் நிலயத்தை சரியான நேரத்திற்கு வந்த வண்டி அங்கிருந்து தாமதமாக கிளம்பியது. நீண்ட தூர ரயில் பயணங்களில் என்னை மிரட்டும் விஷயம் இந்த தாமதமும், சக பிரயாணிகளும். சினேக ஸ்வபாவம் கொண்ட சக பிரயாணிகள் வாய்க்க வேண்டுமே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த முறை தாமதமாக கிளம்பினாலும் சரியான நேரத்தில் புனேயை அடைந்து விட்டது. அதைப்போலவே சக பிரயாணிகளும் நட்புணர்வு கொண்டவர்களாகவே இருந்தார்கள். 

மும்பையிலிருந்து பாண்டிச்சேரி, 
ஏற்காடு போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு வந்த இரு சகோதரிகள் இருவருக்கும் (இருவரும் சீனியர் சிட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது) எப்போது சப்பாத்தி சாப்பிடுவோம் என்றாகி விட்டதாம். ஒரு வாரம் தமிழ் நாட்டில் இருந்தாலும் ஒரே ஒரு நாள்தான் பொங்கல் சாப்பிட முடிந்தது என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

எங்கள் ஊரில் பொங்கல் ப்ரேக் ஃபாஸ்ட் என்றோம்.  அவியல் கிடைக்கவில்லை என்றார்கள். அடிப்படையில் அவியல்  கேரள ஸ்பெஷல். தமிழகத்தில் எல்லா நாட்களும் போட மாட்டார்கள் என்றது அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

சத்தியசாய் பிரசாந்தி நிலயத்தில் ஏறிய திவாகர் என்பவர் ஒரு தகவல் களஞ்சியமாக இருந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த பொழுது நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சாயி பக்தரான அவர் வங்கிப்பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் சத்திய சாயி பாபா சேவா நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு விட்டாராம். இப்போது கூட ஆஷாட ஏகாதசி சேவைக்காக புட்டபர்த்தி சென்று மும்பைக்கு திரும்பி கொண்டிருப்பதாக கூறினார். அவரோடு வந்த அவர் மனைவி குரு பூர்ணிமா வரை அங்கு தங்கி விட்டு விமானத்தில் மும்பை திரும்புவாராம்.

"இப்போதெல்லாம் விமான டிக்கெட்டுகள் மிகவும் சல்லிசாக கிடைக்கின்றன. இருந்தாலும் எனக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் அப்பா ரயில்வேயில் பணிபுரிந்ததால் அதன் மீது ஒரு பாசம்" என்றார்.  அது மட்டுமல்ல இந்தியன் ரயில்வேயைப் பற்றி மிகவும் உயர்வாக பேசினார். "இவ்வளவு பரந்த நெட் வொர்க், இத்தனை வசதிகளோடு உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. எனக்கு முன்னால் ஒரு கதை புத்தகம், மற்றும் ரயில்வே கைடு இருந்தால், நான் ரயில்வே கைடைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதிலிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யமூட்டின.

மும்பையிலிருந்து கிளம்பும் ஒரு ரயில் வண்டி (மன்னிக்கவும், பெயர் மறந்து விட்டது)ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எக்ஸ்பிரஸ்ஸாகவும், பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரம் பாசன்ஜர் வண்டியாகவும், பின்னர் மெயிலாகவும் ஓடுகிறதாம்.

கரக்பூர் ரயில் நிலைய நடை மேடைதான் இந்தியாவிலேயே மிக நீண்ட நடை மேடையாம். உலகின் மூன்றாவது நீண்ட நடை மேடையாம் (1.72 கி.மீ. என்கிறார் கூகுள் ஆன்டி)ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேய உயரதிகாரிகள் வாக்கிங் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம்

ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் பயணித்தால் நமக்கு ராஜோபசாரம் கிடைக்குமாம். பயணிகளை ஒரு ரோஜாவோடு வரவேற்பார்களாம். சாப்பிட டைனிங் டேபிள் கொண்டு வந்து வைப்பதோடு, மெனு கார்டில் இருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம். ம்ம்ம்.. இதையும் ஒரு முறை பார்க்கலாம்.

ரயில்வே உயரதிகாரிகள் அலுவலக வேலைக்காக பயணிப்பதற்காக சலூன் என்றழைக்கப்படும் அலுவலகம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு கோச்சுகள் உண்டாம். அவை கடைசியில் கார்ட் வேனுக்கு முன்பாக இணைக்கப்படுமாம்.


அரசு நிறுவனங்கள் என்றாலே அவை பற்றி குற்றங்களையும், குறைகளையும் மட்டுமே கேட்டிருந்ததற்கு மாற்றாக எத்தனை சிறப்புகள் என்று கேட்டது நன்றாக இருந்தது. இருந்தாலும் புனே ஜங்ஷனில் இறங்கியதும் இவ்வளவு முக்கியமான ஜங்ஷனில் எஸ்கலேட்டரோ, லிஃப்டோ இல்லையே என்று நினைப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை.