செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

aacharyamana ahobilam - III

பாவன நரசிம்மர்  கோவிலுக்கு மட்டும் அரை நாளா? கொஞ்சம் பொறுத்திருங்கள்  காரணம் சொல்கிறேன் என்று கூறி உங்களை அதிக நாட்கள் காக்க வைத்து விட்டேன். சில நாட்கள் ஊரில் இல்லாததால் தாமதம் ஆகி விட்டது. மன்னித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.       

மதிய உணவை முடித்து விட்டு பாவன நரசிம்மர் கோவிலுக்கு கிளம்பினோம். இங்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும் என்பதால் அவரவர் காலையில் எந்த ஜீப்பில் சென்றீர்களோ அதே ஜீப்பில் ஏறிக்கொள்ளுங்கள்  என்றார்  கைடு  மற்றவர்கள்  அந்த அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டு  விட்டார்கள்  எங்கள்  ஜீப் டிரைவரை நாங்கள் கூப்பிட்ட பொழுது அவர் எங்களைப் பார்த்து மையமாக சிரித்தாரே ஒழிய   அடையாளம் தெரிந்து கொண்டதாக தெரியவில்லை... அந்த கைடு சொன்ன பிறகே எங்களை ஏற்றிக்கொண்டார் "என்ன இந்த ஆளு? கார்த்தால பார்த்தவரை  மதியும்  அடையாளம்  தெரியாதா?"  என்று  நினைத்துக்கொண்டோம், விஷயம்  வேறு என்பது பிறகு தெரிந்தது.  .

பறந்தது பாருங்கள் எங்கள் வண்டி..! தேசிங்கு ராஜன் குதிரை கெட்டது.. ! மற்ற வண்டிகளில் இருந்தவர்கள் எங்களை பார்த்து பொறாமைப் பட நாங்கள் விரைந்தோம்..! 15 நிமிடங்கள் நல்ல சாலை, அதன் பிறகு வனப்பகுதி துவங்குகிறது... எதுவாக இருந்தாலும் எங்களுக்கு என்ன? அதான் தேசிங்கு ராஜன் இருக்கிறாரே என்று சற்றே இறுமாந்து ஜாலியாக பேசிக்கொண்டு வனக்காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டு சென்றோம்... சுற்றிலும் மரங்கள், கீழே சரளைக் கற்கள் இடையே சல சலத்து ஓடும் சிற்றாறு... என்ன ஒரு அழகான இயற்கை காட்சி என்று மிகவும் ரசித்தபடி சென்று   கொண்டிருந்தோம்.. திடீரென்று வண்டி நின்று விட்டது..  டிரைவர் கீழே இறங்கி என்னவோ செய்தார்.. பிரச்சனை என்ன என்று விசாரிக்க எங்களில் யாருக்குமே தெலுங்கு போதவில்லை.. பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் குழுவினரின் வண்டி ஒன்று நின்றது அதிலிருந்த கைடு மற்றும் டிரைவர் இறங்கி வண்டியை பழுது பார்க்க உதவினர்... "சின்ன ப்ராப்லம்தாங்க சரி பண்ணிடலாம்.."என்றதோடு நிற்காமல் எங்கள் வண்டி ஓட்டுனரை காண்பித்து," இவருக்கு கண் கொஞ்சம் சரியா தெரியாதுங்க, பழக்கத்துல ஓட்டுறாரு" என்றரேப் பார்க்கலாம்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறதுன்னா இதுதானா என்று நினைத்துக்கொண்டோம்.. அதருக்கு பிறகு பேச்சாவது சிரிப்பாவது எங்களோடு வந்த ஒரு மாமி செல் போனில் விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை ஒலிக்கச் செய்ய கூடவே நாங்களும் ஸ்மரித்துக்கொண்டு   சென்றோம். சரளை கற்கள் முடிந்த  பிறகு  சகதியும்  நொடியுமான   பாதை  தொடங்கியது. ராமாபுரம், போரூர், மடிப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சேர், சகதி, நொடி, போன்ற பாதைகள் பழகியிருக்கும் ஆனால் அதைப் போல ஆறு மடங்கு சகதி.... பத்து மடங்கு நொடி..  அதில் எங்களோடு வந்த, ஒரு  வண்டி  மாட்டிக்கொண்டதும்  எங்களுக்கு இன்னும் அதிக பயம் பிடிதுக்கொன்டது. எப்படியோ பாவன நரசிம்மர் கோவிலை அடைந்தோம். 

சிறிய  கோவில், சிறிய மூர்த்தம். செஞ்சுலட்சுமி என்னும் வேடுவப்பெண் நரசிம்மரை மணந்து கொள்ள வேண்டும் என்று தவமிருந்து அவரை மனது கொண்டதாக ஐதீகம். எனவே இங்கிருக்கும் வேடுவ, மற்றும் மலைஜாதி மக்களுக்கு இவரே குல தெய்வமாக  விளங்குகிறார்.  பிரார்த்தனை தலமாக விளங்குவதால் முடி கொடுப்பது, ஆடு, கோழி போன்றவைகளை பலி கொடுப்பது போன்றவை பழக்கத்தில் உள்ளன. இங்கும் நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது.

அன்று  இரவு சாப்பாடு  முடிந்ததுமே மறு நாளுக்கான  நிகழ்ச்சி  நிரல்  தெரிவிக்கப்பட்டது. மறு நாள் மேல் அஹோபிலம், வராஹா நரசிம்மர், உக்ர(ஜ்வாலநரசிம்மர்) நரசிம்மர், மாலோல நரசிம்மர் இவர்களை  தரிசிப்பதாக ஏற்பாடு.  ஜ்வாலா நரசிம்மர் மற்றும் மாலோல நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் பாதை முழுக்க முழுக்க மலை பாங்கானது என்பதால் லைட்டாக சாப்பிட்டு விட்டு செல்வதே நலம் என்றும், கையிலும் அதிக கணம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார்கள். அதன்படியே காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மேல் அஹோபிலம் சென்றோம்.

மேல்  அஹோபிலம் பெயருக்கு ஏற்றாப்போல நிஜமாகவே  ஆச்சர்யமான தலம்தான்.  ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு ஆவேசம் அடங்காமல் ஜ்வாலை வடிவமாக விளங்கிய நரசிம்மரை கண்டு பயந்த பிரகலாதன் ஓடி வந்து அமர்ந்து தவம் செய்த குஹை இது, அங்கு தன் உக்ர ரூபத்தை மாற்றிக்கொண்டு பிரகலாதனுக்கு பெருமாள் காட்சி அளித்த இடம். இவ்விடத்தில் சிவ பெருமானும் நரசிம்மரை பூஜித்திருக்கிறார். அதர்க்கு சாட்சியாக சிறிய சிவலிங்கத்தையும் கருவறைக்குள் நுழையும் முன் தரிசிக்கலாம். மூலவர்  சுயம்பு மூர்த்தம், அருகிலேயே லக்ஷ்மி நரசிம்மராக உற்சவர், மூலவருக்கு எதிரே மண்டபத்தில் பிரகலாதன். அத்தனை பேரையும் ஒருங்கே தரிசித்துக்கொள்கிறோம்! 

இனிமேல் செல்ல வேண்டிய க்ரோட நரசிம்மர்,  ஜ்வாலா நரசிம்மர், மாலோல நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், மற்றும் பிரகலாதன் பயின்ற பாட சாலை, போன்றஅத்தனை இடங்களும்  மலை  பாங்கானவை  என்பதால்  நடப்பதற்கு சுலபமாக இருக்க ஊன்றி செல்ல தோதாக  கம்புகள்  மேல் அஹோபிலம் கோவில் வாசலிலேயே   வாடகைக்கு கிடைக்கின்றன. ஒரு கம்பிற்கு ரூ.10 கொடுக்க வேண்டும். கம்பு தேவை இல்லை என்று தன்னை மட்டும் நம்பி நடந்தவர்களும் உண்டு. 
மலை ஏறத் தயாராக நானும் பிரேமா மாமியும் நவீன ஒவையார் வேடத்தில்   

க்ரோட நரசிம்மர் சந்நிதி வரை பாதை சுலபமாகவே இருக்கிறது. அங்கேயே, "இதற்குப் பிறகு பாதை கடினமாகத்தான்  இருக்கும்  எனவே  வயது  முதிர்ந்தவர்களும், நடக்க முடியாதவர்களும் இங்கேயே இருந்து விடுங்கள், பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்பவர்கள் டோலியில் செல்லலாம் ஒரு டோலிக்கு ரூ.1800/- அளிக்க வேண்டும்" என்று அறிவித்தார்கள். அதன்படி சிலர் தங்கினார்கள், வெகு சிலர் டோலியில் செல்ல விரும்பினர், நாங்கள் மலை ஏற ஆரம்பித்தோம்.... 

அசல் காடு, அசல் மலை, முழுக்க முழுக்க இயற்கைச் சூழல்.... இந்த மலை ஏற்ற அனுபவங்களை விவரித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நான் சொல்லலாம், சுவையாக இருக்குமா என்று தெரியாது.. நீங்களே சென்று அனுபவிதுப்பருங்கள் . ... 

ஜ்வாலா நரசிம்மர் சிறிய மூர்த்தி, உக்ர வடிவினராக இருப்பாரோ என்று நாம் நினைத்தற்கு மாறாக மிகவும் சாந்தமாக காட்சி அளிக்கிறார். இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டுக்கொண்டு,  மடிமீது ஹிரண்யனை கிடத்தி எட்டு கரங்களுள் இரண்டு மடிமீது கிடைக்கும் ஹிரண்யனை அசையாமல் பிடித்திருக்க, இரண்டு கரங்கள் அவன் வயிற்றைக்கிழிக்க, இன்னும் இரண்டு கரங்கள் குடலை   மாலையாக போட்டுக்கொள்ள மற்ற இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் அற்புத கோலம்! தரிசித்துக்கொண்டு மாலோல நரசிம்மரை தரிசிக்க கீழே இறங்கினோம்.
ஜ்வாலா நரசிம்மர் கோவில் வாயிலில் சக யாத்ரிகர்களோடு  

மா  என்பது மகாலக்ஷ்மியை குறிக்கும். ஹிரண்யனை அழித்த கோபம் தீர்ந்த பிறகு மகாலட்சுமி தாயாரை  தன் மடியில் இருத்தி நரசிம்மர் காட்சி அருளும் இடம். இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டு, இடது மடியில் தாயார் இருக்க, தன் ஒரு திருக்கரத்தால் தாயாரை அணைத்துக்கொண்டு, மற்ற கரங்களில்  சங்கு,சக்கர, அபய  ஹஸ்தங்கலோடு காட்சி அளிக்கும்  சௌமிய   ரூபம்.     

புராண காலத்தில்  இந்த  இடத்தில்தான்  ஹிரண்யகசிபுவின்  அரண்மனை  இருந்ததென்றும் , இங்கிருந்த ஒரு தூணிளிருந்துதான் நரசிம்மர் வெளிப்பட்டார் என்றும் காலப் போக்கில் அரண்மனை அழிந்துவிட, அவர் ஆவிர்பவித தூணின் எச்சம் இன்னும் உக்ர ஸ்தம்பம் என்னும் பெயரோடு இருக்கிறது. அதன் அருகே சென்று தரிசிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட தவழ்ந்தபடியேதான் செல்ல வேண்டும் என்பதாலும், நாங்கள் சென்ற வாரத்திற்கு முதல் வாரம்தான் ஒரு விபத்து நிகழ்ந்திருந்தது என்பதாலும் எங்களுக்கு உக்ர ஸ்தம்பம் அருகே செல்ல அனுமதி  வழங்கப்படவில்லை. தொலைவில் இருந்தபடியே தரிசித்துக்கொண்டோம்.
உக்ர ஸ்தம்பம்

நவ நரசிம்மர்களில் கடைசியாக நாங்கள் தரிசித்தது கரஞ்ச நரசிம்மர். நாம் வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒரு அதிசய கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிக்கிறார் நரசிம்மர். முன்பொரு காலத்தில் கரஞ்ச வனமாக விளங்கிய இங்கு, ராமனை காண வேண்டும் என்று தவம் இருந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்ம பெருமான் காட்சி அளிக்க, "நீங்கள் யார் நான் ராமனை காண வேண்டும் என்றல்ல்வா தவம் செய்தேன்"? என்று வினவிய ஹனுமனுக்கு,"நான்தான் ராமன்" என்று விடை அளித்தாராம் பெருமாள்,ஆனால் ஹனுமானோ," என் ராமன் அழகானவன், உம்மைப்போல சிங்க முகம் கொண்டவன் அல்லன்" என்று கூறிவிட, தான் வேறு,ராமன் வேறு  அல்ல என்று மெய்பிக்க, ராமனுக்கு உரிய வில்லையும் அம்பையும் தாங்கி காட்சி தந்தாராம் நரசிம்மர். தவிர நவ நரசிம்மர்களில் இவருக்கே நெற்றிக்கண் உள்ளது. தீபாராதனை சமயத்தில் நெற்றிக்கண்ணை திறந்து காட்டுகிறார்கள். மிக நல்ல அதிர்வுகளை  கொண்டுள்ள இவ்விடத்தில் த்யானம் செய்வது  நல்ல பலன்களை தரும் என்று கூறுகிறார்கள். உண்மை  என்றே  தோன்றுகிறது.                                         ,                                                                                   

வைணவ சம்ப்ரதாயத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரே பெரிய  பெருமாள்  என வழங்கப்படுவார் ஆனால் அஹோபிலம் நரசிம்மரோ பெரிய பெரிய பெருமாள் எனப்படுகிறார். அஹோபிலம் நரசிம்மரை  கருடன்  பூஜித்திருக்கிறார், சிவ பெருமான் பூஜித்திருகிறார், வன வாசத்தின் பொழுது ராம லக்ஷ்மனர்களும் இவரை வணங்கி இருக்கிறார்கள்,  இப்படி அவதார புருஷர்களும், தெய்வங்களுமே வழிபட்டதாலேயே இவர் பெரிய பெரிய பெருமளாகிறார்!   இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த பெருமாளின் அருளாலே அவரை நானும்  சேவித்தேன்! அதோடு மட்டுமல்லாமல் தன்னைப்பற்றி என்னை கொண்டு எழுத வைத்தான்.
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உந்தனோடு 
உற்றமே ஆவோம்;உமக்கே யாம் ஆட் செய்யோம் மற்றை நம் காமங்கள் மாற்று..
என்று   வேண்டி விடை பெரு முன்.....

எங்களை  மிக வசதியாக,  சௌகரியமான பேருந்து பயணம், திருப்தியான தங்குமிடங்கள், அருமையான உணவு, அவசரப்படுத்தாமல் சுற்றிகாட்டிய வழிகாட்டிகள் என்று  அழைத்துச்சென்ற ஜெயஸ்ரீ  டிராவேல்சுக்கு  மனமார்ந்த நன்றிகள்!  மேலும் இந்த தொடரை படித்து, பாராட்டி,
உற்சாகப்படுத்திய அத்தனை அன்பு  உள்ளங்களுக்கும்   நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும்! 
        

                                                 நாராயண! நாராயண! நாராயணா!