வியாழன், 24 மே, 2018

திருவையாறு அசோகா

திருவையாறு அசோகா

 
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு   ---  1 கப்
சர்க்கரை         ---  2½ கப்
இனிப்பில்லாத கோவா – 50கிராம்
நெய்            - ¼ கப்
கேசரி பவுடர்    - 1 சிட்டிகை
முந்திரி         - 5 பருப்பு

செய்முறை:

பயத்தம் பருப்பைலேசாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுத்து விட்டால் சரியாக வேகாது.  

பின்னர் தண்ணீரில் கழுவி விட்டு இரண்டு  மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வெந்த பயத்தம் பருப்பை கீரை மசிக்கும் மத்தால் அல்லது கரண்டியால் நன்கு மசிக்கவும். 
அதோடு சர்க்கரை, கோவா கேசரி பவுடர் இவைகளையும் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து அவ்வப்பொழுது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். பின்னர் அதில் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, நெய்யில் வருக்கப்பட்ட முந்திரியை சேர்த்தால் சுவையான அசோகா ரெடி!


ஒரிஜினல் திருவையாரு அசோகாவில் முந்திரி பருப்பு போட மாட்டார்கள். அதே போல பால் கோவா சேர்ப்பதற்கு பதிலாக வறுத்த பயத்தம் பருப்பை பாலில் ஊற வைத்து, பால் ஊற்றி அரைப்பார்கள்.
நான் மசித்த பருப்போடு சர்க்கரையை அப்படியே சேர்த்து விட்டேன். சர்க்கரை வெளுப்பாக இல்லாமல், பழுப்பாக இருந்தால் அழுக்காக இருக்கிறது என்று பொருள். அப்பொழுது, சர்க்கரையில் அது மூழ்கும் அளவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கரண்டி பால் சேர்த்தால் அழுக்கு தனியாக நுரைத்துக் கொண்டு வரும். அதை எடுத்து விட்டு பின்னர் அதில் மசித்த பருப்பு மற்றும் கோவாவை சேர்த்து கிளரலாம்.
சுவையான, செய்ய சுலபமான இனிப்பு இது.