கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 16, 2015

புது வருட குழப்பங்கள்!

புது வருட குழப்பங்கள்!  


  









இந்த புது வருடத்தின் பெயர் மன்மத வருடம். என்ன ஒரு வசீகரமான பெயர்!

எத்தனை புத்தாண்டுகள்? பாரம்பரியமான தமிழ் புத்தாண்டு. ஆங்கிலேயர்களின் உபயம் ஆங்கில புத்தாண்டு. தைப் பொங்கல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று திடீரென்று கலைஞர் விட்ட கரடி!


இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளதோ அத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன், ஒன்றிரண்டு குறையலாம்..! 

எனக்கு தெரிந்து பஞ்சாப், சண்டிகர், உ.பி., குஜராத் மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். மராட்டியர்கள்  குடி படுவாவையும், கன்னடர்களும், தெலுங்கர்களும் யுகாதியையும்  புது வருடமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்களாகிய நாமும், கேரளர்களும் சித்திரை மாத பிறப்பை புது வருடமாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலத்தவர் சந்திரமானச பஞ்சாங்கத்தையும்(Lunar calendar),தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் சௌரமானச பஞ்சாங்கத்தையும்(solar calendar) பின்பற்றுவதால் இந்த வழக்கம். அதில் கூட நாம் இருவரும் ஒரே நாளில் புது வருடத்தை கொண்டாடுவதில்லை ஒரு நாள் முன்னே பின்னே வருகிறது. 



இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி நாம் விடுமுறை எடுத்துக் கொண்டு, விருந்து சாப்பாடு சாப்பிட்டு,தொலை காட்சியில் சிறப்பு நிகழ்சிகளைப் பார்த்து, கோவில்களில் நெரிபட்டொம். ஆனால் மலையாளிகள் ஏப்ரல் 15 தான் விஷுக் கனி கண்டு, புத்தாடை அணிந்து கொண்டு, சத்யா சாப்பிட்டார்கள். நேற்று மதியம் 12 மணிக்குத்தான் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். சூர்யா உதயத்தின் பொழுது அவர் மீன ராசியில்தானே இருக்கிறார், அப்போது எப்படி புது வருடம் பிறந்து விட்டது என்று சொல்ல முடியும்? என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம்.



இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கேரள, தமிழக இரு மாநிலத்தவருமே சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அதைக் கொண்டுதான் மாதங்களை அனுசரித்தாலும் அவர்கள் அந்தந்த ராசியின் பெயரைத்தான் மாதங்களுக்கும் வழங்கி மேஷ மாசம், ரிஷப மாசம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் சொதப்புகிறோம். மாதங்களை அனுசரிப்பது சூரியனை வைத்து, ஆனால் அதற்கான பெயர்களோ சந்திரனை வைத்து. அதாவது அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயர்தான் மாதங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சித்திரை மாதத்தில் சித்ரா நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும், வைகாசி மாதத்தில் விசாக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.  கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.. அதைக் கொண்டே தமிழ் மாதத்தின் பெயர்கள்...

மீனமோ,மேஷமோ, பாலக்காட்டில் பிறந்து, தஞ்சாவூர் பெண்ணை மணந்து கொண்டிருக்கும் இனிப்பு விரும்பியான என் கணவரை போன்றவர்களுக்கு முதல் நாள் போளி வடையும், மறு நாள்  பலா பழ பாயசமும், அடை பிரதமனும் கிடைக்கும் பட்சத்தில் எந்த நாளில் சித்திரை பிறந்தால் என்ன? எல்லாவற்றையும் கொண்டாடி விட்டு போகலாம்.     

கூடி களிக்கவும், கொண்டாடி மகிழவும் 
சின்ன திரை முன் சிறை பட்டு கிடக்கவும் 
சித்திரையோ, தையோ,
ஆங்கிலமோ, தமிழோ 
அனைத்தயும் வரவேற்போம்.