முன்குறிப்பு: இது கோவில் பற்றிய பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவு செய்து நகர்ந்து விடவும். நன்றி.
தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்
தாயுமானவர் சன்னிதியில் அபிஷேக நேரம். அதற்குள் அம்பாள் சுகந்த கூந்தலாம்பாளை தரிசித்து விட்டு வந்தோம். தாயுமானவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழும். ரத்னாவதிக்கு பிரசவம் பாரப்பதற்காக தாயாக வந்தவர் அல்லவா? என் மகளின் இரண்டாவது பிரசவம் கொரோனா காலத்தில் நிகழ்ந்ததால், என்னால் உதவிக்கு போக முடியவில்லை. அவளிடம், “தாயுமானவரை நினைத்துக்கொள்”என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தேன். பேத்திக்கும் அந்த கதையைக் கூறினேன். தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தாரை வைத்து,அர்ச்சனை செய்து, வழிபட்டுவிட்டு, உச்சி பிளையாரை தரிசிக்கச் சென்றோம். வழியில் குளிர் பானங்கள், சிப்ஸ் போன்றவை விற்கும் சிறிய கடை வைத்திருப்பவர் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது என்று கூறி ஆச்சரியமூட்டினார். பே.டி.எம். வைத்திருந்தாலும், “சில்லறை இல்லை என்று கூறினால், வியாபாரம் பண்ண முடியாது, தினசரி இரவு பெட்ரோல் பங்கில் சில்லறை மாற்றிக் கொண்டுவிடுவேன்” என்றார். உச்சிப் பிள்ளையாரை வணங்கி, கீழே இறங்கினோம்.
![]() |
ஊர்த்துவ தாண்டவ சிற்பம் |
![]() |
இந்த சங்கிலி இரும்பினால் ஆன தில்லை, கருங்கல் சங்கிலி! |
கீழே இறங்கும் பொழுது, என் பள்ளி பருவத்தில் தோழிகளொடு பெட் வைத்து கீழே இறங்கியபொழுது கால் தடுக்கி விழுந்து, சுளுக்கிக் கொண்டு, கால் புசுபுவென்று வீங்கிக் கொண்டு, பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட நேர்ந்ததை சொன்னதைக் கேட்டு, பயந்து விட்டாள். “யூ ஆர் டெல்லிங் ஸ்கேரி ஸ்டோரி” என்று மெதுவாக இறங்கினாள். சாரதாஸில் கொஞ்சம் பர்சேஸ் செய்து கொண்டு(திருச்சிக்கு போய் விட்டு சாரதாஸ் போகாமல் வர முடியுமா?), அவளுக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமும், நான் ஜிகிர் தண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம். ஜிகிர் தண்டா சென்னையில் ஒரு மாதிரியாகவும் திருச்சியில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. மதுரையில் எப்படி இருக்கிறது என்று சுவைத்து பார்க்க வேண்டும்.
தல புராணம்:
இப்போது தாயுமானவர் என்று அறியப்பட்டாலும், ஆதி காலத்தில் இவருக்கு ஜவந்தி நாதர், அல்லது ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம். ஜவந்தி பூக்கள் நிறைந்த காடாக இருந்ததால் அந்தப் பெயர். அம்பாள் மட்டுவார் குழலம்மை அல்லது, சுகந்தி கூந்தலாம்பாள். இந்த ஜவந்தீஸ்வரரிடம் பக்தி பூண்ட ரத்னாவதி என்னும் செட்டிப் பெண் தினசரி அவரை வந்து தரிசனம் செய்வாள். அவள் கருவுற்றபொழுது அவளுடைய தாயார் பிரசவ நேரத்தில் உதவி செய்வதற்காக புறப்பட்டு வருகிறாள். ஆனால், அந்த சமயம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்துவிட, அவளால் வர முடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவ வலி எடுத்து விடுகிறது. அவள் தினசரி சென்று வணங்கிய ஜவந்தீஸ்வரர் தானே ரத்னாவதியின் தாயாரைப் போல வந்து, பிரசவம் பார்த்து, அதற்குப் பிறகு அவளுக்கு பத்தியம் வடித்து போடுவது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்றவைகளை செய்கிறார்.
வெள்ளம் வடிந்த பிறகு, மகள் வீட்டிற்கு வருகிறாள் தாய். தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ வேலையாக இருந்த மகள் வீட்டிர்க்குள் நுழையும் அம்மாவிற்கு முகமன் கூறி வரவேற்கவில்லை. தன்னை மகள் வரவேற்காததை விட, மகளின் வடிந்த வயிரும், தூளியில் தூங்கும் குழந்தையும் அதிர்ச்சி அளிக்கின்றது. “ என்னடி இது? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை? எப்போது பிறந்தது?” என்று தாயார் கேட்டது மகளுக்கு ஆச்ச்ரயமாக இருந்தது. “ என்னம்மா? நீதானே பிரசவம் பார்த்தாய்? இப்போது புதுசா, எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறாய்?” “நான் வந்தேனா? ஆற்றில் வெள்ளம் வந்ததால், என்னால் வர முடியவில்லை, வெள்ளம் வடிந்த பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று அம்மா சொன்னதும் அதிர்ச்சியடைந்த ரத்னாவதிக்கு தனக்கு தாயாக வந்து உதவியது அந்த ஜவந்தீஸ்வரர்தான் என்பது புரிய, “எனக்காக இறங்கி வந்தீர்களா?” என்று புளகாங்கிதம் அடைந்து கேட்கிறாள். சிவ பெருமானோ, நீ தினசரி என்னைப் பார்க்க மேலே ஏறி வந்தாயே? அதனால்தான் நான் உனக்காக இறங்கி வந்தேன்” என்றாராம். அது முதற்கொண்டே பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொண்டு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.
திருச்சி மலைக்கோட்டை இமயமலையை விட மூத்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து..’என்பார்களே அப்படி உலகில் முதலில் தோன்றிய கல் மலை இது. இதன் மேலிருக்கும் கோவில் மகேந்திரவர்மன் காலத்து குடைவரை கோவில். இங்கிருக்கும் லிங்கத் திருமேனி திருவுடைமருதூர் மஹாலிங்கத்திற்கு இணையாக பெரிதானது. பின்னாளில்தான் இவைகளை விட பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. மூன்று முழமும் ஒரு சுத்து,முப்பது முழமும் ஒரு சுத்து என்னும் சொலவடைக்கு காரணமான கோவில்கள் இவை. அதாவது இறைவனுக்கு சாற்றும் ஆடை மூன்று முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும், முப்பது முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும் என்பது பொருள்.
தாயுமானவர் மீது அதீத பக்தி பூண்டவர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள். தாயுமானவரை தரிசிக்கும் பலர் தங்கள் தாயை நினைவு கூர்ந்து கண் பனிப்பதுண்டு.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே