கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 2, 2024

கர்நாடகா யாத்திரை

 கர்நாடகா யாத்திரை

கர்னாடகாவில் இருக்கும் சில முக்கியமான,பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்க வேண்டும் என்பது பல நாட்கள் ஆசை. ஃபேஸ்புக்கை மேய்ந்த பொழுது, கர்நாடகா யாத்திரை அழைத்துச் செல்வதாக விளம்பரப் படுத்தியிருந்த சில ட்ராவல்ஸ்களில் திருவடி தரிசனம் என்னும் டிராவல்ஸின் அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. அதில் புக் பண்ணிக் கொண்டேன்.


டிசம்பர் 19 புறப்படுவதாக இருந்தது. டிசம்பரில் சென்னையில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் அங்கிருந்து வந்தவர்கள்(என்னைத்தவிர எல்லோரும் சென்னைவாசிகள்தான்) பயணத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்ததால், பிரயாணம் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற எல்லோரும் சென்னையிருந்து 4ஆம் தேதி மதியம் கிளம்ப, நான் பெங்களூரிலிருந்து பெலகாவி செல்லும் வேறு ஒரு ரயிலில் இரவு புறப்பட்டேன்.  எல்லோரும் ஹூப்ளியில் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் பெங்களூர் வழியாகத்தான் ஹூப்லியை அடையும். அதே ரயிலில் எனக்கும் புக் பண்ணியிருக்கலாம். அவர்கள் ரயிலும் லேட், என்னுடையது அதைவிட லேட். காலை 6:05க்கு ஹூப்ளி செல்லவேண்டிய ரயில் 7:00 மணிக்குத்தான் ஹூப்லியை அடைந்தது. அதற்குள் முன்னால் அங்கு சென்று விட்ட குழுத்தலைவர் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எனக்கு ஃபோன் செய்து, நான் வந்து விட்டேனா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் போய் சேர்ந்ததும், அவருடைய உதவியாளர், என்னிடமிருந்து பெட்டியை பிடுங்கிக் கொண்டு, ஐம்பதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். இங்கு ஒரு சிறு தகவல். ஹூப்ளி ஸ்டேஷனின் நடை மேடைதான் இந்தியாவிலேயே நீளமான நடை மேடை(1505மீட்டர்). இதற்கு முன் இந்தப் பெருமையை கோரக்பூர் ரயில் நிலைய நடை மேடை பெற்றிருந்தது.


ஹூப்லியில் ஒரு ஹோட்டலில் குளித்து, உடை மாற்றி, சிற்றுண்டி(பூரி மசால், வடை, ஊத்தப்பம் சற்று காரமான சட்னி, காபி/டீ) சாப்பிட்டு விட்டு, கர்னாடகா யாத்திரையின் முதல் தலமான கோகர்ணத்தை அடைந்தோம். வழியில் மதிய உணவிற்காக நிறுத்தினார்கள். அதிலும் சாம்பார் சற்று காரமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கு செல்லும்பொழுது மணி பகல் 2:30 இருக்கும். அந்த நேரத்தில் கோவிலின் நடை சாத்தியிருந்தது, மாலை 4:00 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம்.


சக பயணி திருமதி வசந்தா




உத்தர(வடக்கு) கர்னாடகாவில் அரபிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இடம் கோகர்ணம். மிகவும் புராதனமான கோவில். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். பாடல் பெற்ற தலங்களில் கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் இது மட்டுமே. அப்பரும்,சம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.


கோவில் இருக்கும் வீதியிலும், கடற்கரைக்குச் செல்லும் வழியிலும் வரிசை கட்டி நிற்கும் கடைகளில் மசாலா பொருள்களும், கலர் கலராக சாம்பிராணியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மஹாபலேஷ்வர் கோவிலுக்குச் செல்வத்ர்கு முன்பாக ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அதிலிருக்கும் விநாயகர் நாம் சாதாரணமாக பார்க்கும் விநாயகரைப் போல் இல்லாமல் வித்தியாசமாக, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் தல புராணத்தை அறிய வேண்டும்.


நாலு மணிக்குத்தான் நடை திறக்கும் என்றாலும், அதற்கு முன்பே கோவில் திறக்கப்பட்டு விட்டதால், உள்ளே சென்று, வரிசையில் நின்றோம். கேரள பாணியில் அமைந்திருந்த சிறிய கோவில். கேரள கோவில்களைப் போலவே மரத்தில் ஓடுகள் வேயப்பட்ட தாழ்ந்த விதானம். சன்னிதிக்கு எதிரே இரு பக்கங்களிலும் திண்ணைகள். கருவறைக்குள் நாம் சென்றதும் ஆவுடையாருக்கு கீழே புதைந்திருக்கும் மஹாபலேஷ்வர் என்னும் ஆத்மலிங்கத்தை நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் இந்த கோவிலின் சிறப்பு. மற்ற கோவில்களில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்களை பூஜாரியைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. ஆனால் இங்கு எல்லோரும் பூஜிக்கலாம், தொடலாம், தொடுவதற்கு அனுமதிக்கக் காரணம், ஆத்மலிங்கம் அளவில் மிகச்சிறியது. அதை தரிசிப்பது கடினம், தொட்டுதான் உணர வேண்டும்.

ஆதி மஹாபலேஷ்வர் சன்னதி

மஹாபலேஷ்வரை தரிசனம் செய்து விட்டு, கோவிலை வலம் வரும் பொழுது, அருகிலேயே ஆதி மஹாபலேஷ்வர் என்று ஒரு சன்னிதியில் இருக்கும் சிவபெருமானை வணங்கி, நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தாமிரகௌரி என்றழைக்கப்படும் அம்பாளையும் வணங்கி, அங்கிருந்த ஒரு குளத்தை பார்தோம். அந்த குளத்தின் சிறப்பு, அங்கு இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கலாமாம். மேலும் இங்கிருக்கும் கடற்கரையில் இரவில் பைசாச ஸ்ரார்தம் என்று ஒன்றும் தேவஸ்தானதால் நடத்தப்படுமாம்.

இதற்குப் பிறகு, அருகில் இருந்த மஹாகணபதி கோவிலுக்குச் சென்று தலையில் கிரீடம் எதுவும் இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தரும் விநாயகரை வணங்கினோம். முறைப்படி வழிபடுவதாக இருந்தால் முதலில் இந்த விநாயகரைததான் முதலில் வணங்க வேண்டும்.


தல புராணம்:


சிவ பக்தையாகிய ராவணனின் தாயார், தன் மகனுக்காக பிரார்த்தித்து ஒரு சிவ லிங்கத்தை வழிபட்டு வந்தார். அவளுடைய கடுமையான பூஜைக்கு இரங்கி, சிவ பெருமான் வரம் தந்து விட்டால் தனக்கு ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சிய இந்திரன், அவள் பூஜித்த சிவ லிங்கத்தை கடலில் வீசி விடுகிறான். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான தன் தாயாரிடம், தான் கைலாயத்திலிருந்தே சிவலிங்கத்தை பெற்று வருவதாக கூறி கைலாயம் செல்கிறான். கைலாச மலையை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று விட அவன் முயலும் பொழுது சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டு நசுங்கி விடுகிறான். ஆனால் அந்த நேரத்திலும் வீணை வித்தகனான அவன் தன் நரம்புகளையே வீணையின் கம்பிகளாக்கி சாம வேதத்தை வாசிக்க, அதில் மயங்கிய சிவ பெருமான் அவன் முன் காட்சி அளித்து, அவன் வேண்டும் வரம் என்ன? என்று கேட்க, தனக்கும், தான் ஆளும் இலங்கைக்கும் அழிவு வரக்கூடாது என்றும், தன் தாயாருக்காக, சிவலிங்கமும் வேண்டுகிறான். சிவபெருமான் தன் பிராணசக்தியையே மிகச் சிறிய வடிவில் ஒரு லிங்கமாக்கி(ஆத்மலிங்கம்), அதை தலையில்தான் சுமந்து செல்ல வேண்டும் என்றும், கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலிருந்து எடுக்க முடியாது என்னும் இரண்டு நிபந்தனைகளோடு அவனிடம் தருகிறார்.


அவன் அந்த லிங்கத்தை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்த தேவர்கள் கவலை கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கைக்குச் செல்வதை தடுக்க வேண்டுகிறார்கள். ராவணன் திரிகால சந்தியாவந்தனத்தை தவறாமல் செய்பவன் என்பதால், தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தால் சூரியனை மறைத்து, அதே நேரத்தில் விநாயகரை ஒரு சிறுவன் வடிவில் ராவணன் இருக்கும் இடத்திற்கு செல்லுமாறு பணிக்கிறார். மாலை நேர சந்தியாவந்தனம் செய்ய நேரம் வந்து விட்டது ஆனால் லிங்கத்தை கீழே வைத்து விட்டால் எடுக்க முடியாது, அருகில் யாராவது இருந்தால் அவர்களிடம் கொடுத்து விட்டு, சந்தியாவந்தனம் செய்யலாமே என்று யோசிக்கும் அவன் கண்களில் சிறுவனாக வந்த விநாயகர் படுகிறார். லிங்கத்தை வாங்கிக்கொண்ட விநாயகர், “நான் மூன்று எண்ணுவதற்குள் நீ வந்து விட வேண்டும்,வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்கிறார். ராவணனும் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படுகிறான். ஆனால் விநாயகர் அவசர அவசரமாக எண்ணிவிட்டு, ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். பூமியில் பதிந்து விட்ட லிங்கத்தை ராவணன் எத்தனை பலத்தை பிரயோகித்து முயன்றும் எடுக்க இயலவில்லை. அவனுடைய முயற்சியில் அந்த இடமே பசுவின் காது வடிவிற்கு மாறியதாம். அதனால்தான் அவ்விடம் ‘கோகர்ணம்’ என்னும் பெயர் பெற்றது. கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. மிகப்பெரிய பலம் பொருந்திய லிங்கம் என்பதால் அந்த லிங்கம் மஹாபலேஷ்வர் என்னும் பெயர் பெற்றது.


தன்னை ஏமாற்றிய அந்தச் சிறுவனை துரத்திச் சென்று அவன் தலையில் ஒரு குட்டு வைக்கிறான். விநாயகர் தன் உண்மை ஸ்வரூபத்தை காட்ட, திடுக்கிட்டு அவரை குட்டிய தவறுக்கு பிராயசித்தம் செய்யும் விதமாக தன் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு குட்டிக் கொள்கிறான். அதனால்தான் இன்று வரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொள்கிறோம்.


கோகர்ணத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் மஹாகணபதி கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு தலையில் கிரீடம் இல்லை. யானகளுக்கு இருப்பது போல நெற்றியில் இரண்டு முண்டுகளுக்கு இடையில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது ராவணன் குட்டியதால் ஏற்பட்டதாம்.


அம்மனின் பெயர் தாமிரகௌரி. பிரும்மாவின் கையிலிருக்கும் தாமரை மலரிலிருந்து தோன்றிய பெண் சிவபெருமானை மணந்து கொள்ள விரும்பினாள், அதற்காக தவம் செய்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.