கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 26, 2018

வழிந்ததே அசடு வழிந்ததே


வழிந்ததே அசடு வழிந்ததே

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய நேரம், என்னை ஜலதோஷ புயல் தாக்கியது. மூக்கிலிருந்து விடாமல் ஜலதாரை, உடம்பு வலி, தலை வலி, லேசான ஜுரம். dola 650 போட்டுக்கொண்டு, கார்த்திகைக்கான நெய் அப்பம்,பொரி,அடை வகையறாக்களை செய்து விட்டேன். கோலம் போடுவது, விளக்குகளுக்கு திரி போட்டு, எண்ணெய் விட்டு, சந்தன ம், குங்குமம் இடுவது போன்ற சில்லறை வேலைகளை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது.

கார்த்திகை அன்று இரவு என் மகனோடு  என் சினேகிதியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு செல்வதாக இருந்தது. உடல் நிலை காரணமாக என் பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஊருக்குச் செல்லும் முன் என் மகன் ஆவி பிடிக்கச் சொல்லி, அதற்கான கருவியையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான். 

அதை எப்படி பயன் படுத்துவது என்று  அட்டைப் பெட்டியில் போட்டிருந்தது. அந்த கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு தண்ணீர் ஊற்றவும் என்றிருந்தது. பெரிய குவளை போன்றதில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. எனவே நான் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிஷினை ஆன் செய்தேன். தண்ணீர் கொதிப்பது போல ஓசை வந்ததேயொழிய, ஆவி வரவில்லை. பக்கவாட்டிலிருந்து நீர் வழிந்தது. தண்ணீர் அதிகம் விட்டு விட்டோம் போலிருக்கிறது என்று கொஞ்சம் தண்ணீரை குறைத்தேன். அப்படியும் ஆவி வரவேயில்லை. சரிதான் நாம் அடுப்பிலேயே வெந்நீர் போட்டுக் க்கொள்ளலாம் என்று அதை ஓரம் கட்டிவிட்டு, அடுப்பில் வெந்நீர் போட்டு ஆவி பிடித்தேன். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்த என் மருமகள்," நேற்று தண்ணீரை எங்கு ஊற்றினீர்கள்? என்றாள், நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே, "அங்கு ஊற்றக் கூடாது, அந்த பெரிய கப்பை கழற்றி அடியில் ஊற்ற வேண்டும், அதில் அளவு குறிப்பிட பட்டிருக்கிறது பாருங்கள்" என்றாள். 

இருமுவது போல பாவலா காட்டி, முகத்தை துடைத்துக் கொண்டேன். வேறு வழி.

இருமலால் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்ட இரவு, யூ ட்யூபில் பார்த்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பேட்டியை இணைத்திருக்கிறேன். சாருநிவேதிதாவின் கதைகளை நான் படித்ததில்லை. கட்டுரைகளை படித்திருக்கிறேன். தன்னுடைய நூல் வெளியீடுகளை ஒரு விழா போல செய்பவர்.  துணிச்சலான எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கேட்டு விட்டு சொல்லுங்கள். 

அதற்கு முன் ஒரு கேள்வி. சம கால எழுத்தாளர்களின் எழுத்துக்களை எத்தனை பேர் படிக்கிறோம்?  சுஜாதா, பாலகுமாரனுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில் எத்தனை பேரின் படைப்புகளை படித்திருக்கின்றீர்கள்?  ஆம் என்றால் நீங்கள் படித்தவற்றில் சிறப்பானதை எனக்கு சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன்? தயவு செய்து தேவி பாலா, இந்திரா சௌந்திரராஜன் என்றெல்லாம் கூறி விடாதீர்கள்.