கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 12, 2019

மசாலா சாட்

மசாலா சாட்


கொஞ்ச நாட்களாக ஒரே அலைச்சல்! "பேசாமல் பெங்களூருக்கும், சென்னைக்கும் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு விடு" என்று சிலர் ஆலோசனை கூட சொன்னார்கள். 

இந்த மாதிரி  பயணங்களால் என் பூஜை புனஸ்காரங்கள்(பெரிதாக ஒன்றும் இல்லை), காலை ஆறு மணிக்கு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து எண்ணங்களை வேடிக்கை பார்ப்பது(இதை தியானம் எனலாமா?),  கை, கால்களை பவர் யோகா என்னும் பெயரால் அசைப்பது, சுதர்ஷன் க்ரியா, போன்றவை பாதிக்கப்படுகின்றன. இன்னொரு பாதிப்பு வலையுலகத்திற்கு வர முடியாமல் போவது. செல் போனில் பதிவுகளை படித்து, பின்னூட்டமிடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 

"ஏற்கனவே பேய்க்கோலம் அதில் இன்னும் கொஞ்சம் அக்கிலி  பிக்கிலி" என்று என் அம்மா ஒரு சொலவடை சொல்லுவாள். அதைப் போல சாதாரணமாகவே நான் பின்னூட்டமிடுவதில் கொஞ்சம் மோசம், எல்லா பதிவுகளிலும், கடைசி பின்னூட்டம் என்னுடையதாகத்தான் இருக்கும். பயணங்கள் என் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் தாமதித்து விடுகின்றன. போதும் போதாதற்கு கணினிக்கும் வைஃபாய்க்கும் ஊடல். எப்போது சரியாகுமா?  தவிர பன்னிரெண்டாம் தேதி வரை கொஞ்சம் வேலை அதிகம். 

சென்னையில் நான் கலந்துகொண்ட திருமணத்தில் எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் தாத்தாவும், பாட்டியும், தங்கள்  உடல் நிலையையும் பொருட்படுத்தாமல்,திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பது, ரிடர்ன் கிஃபிட் கொடுப்பது,என்று சுறுசுறுப்பாக இயங்கியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாத்தாவுக்கு தினசரி இரண்டுமுறை டயாலிசிஸ் செய்யப்பட வேண்டும். பாட்டி சில மாதங்களுக்கு முன் இதய பாதிப்பால் பெட் ரெஸ்டில் இருந்தார்.  இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் செயல்பட்ட விதம் மெச்சத்தகுந்ததுதான். அந்த திருமணத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஸ்மைலி உருவங்கள் வரையப்பட்டிருந்த ஆரஞ்சுகள். 



Image result for balasaraswathiImage result for madurai somu




இந்த வருடம் மதுரை சோமுவிற்கு மட்டுமல்ல, நாட்டியதாரகை பாலசரஸ்வதிக்கும் நூற்றாண்டு. 

இளையராஜா எழுபத்தைந்து நிகழ்ச்சியை என் கணவர் பார்த்ததால், நானும் பார்க்க நேர்ந்தது. இளையராஜா என்றாலே நம் நினைவுக்கு வரும் வைரமுத்து, எஸ்.பி.பி., ஜானகி போன்றவர்கள் எங்கே? வைரமுத்துவோடும், எஸ்.பி.பி.யோடும் லடாய், ஜானகி? நான் பார்த்தது முதல் எபிசோட்தான். ஒருவேளை அடுத்த எபிசோடுகளில் வரலாம்.

ஆடலும், பாடலும் நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதற்கு முக்கிய காரணம், கைகளை கொட்டி பாடுவதும், லஜ்ஜை விட்டு ஆடுவதும் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்(மனமிளக்கிகள் எனலாமா?). அதனால்தான் நம் கடவுளர்களையும் இசையோடும், நடனத்தோடும் சம்பந்தப்படுத்தியிருக்கிறோம் போலிருக்கிறது. 
"நீ உட்கார்ந்து பஜனை செய்தால், நான் அதை நின்று கொண்டு கேட்கிறேன், நீ நின்று கொண்டு பஜனை செய்தால் நான் அதை நடனமாடி ரசிக்கிறேன், நீ ஆடிக்கொண்டே பஜனை செய்தால்,அதை நான் உன் காலடியில் உட்கார்ந்து கேட்கிறேன் " என்பாது ஷீர்டி சாய்பாபாவின் வாக்கு. 

சம்பிரதாய ஹரி பஜன் என்பவற்றில் ஆண்கள்தான் முன்பெல்லாம் பாடுவார்கள். ராதா கல்யாணம், சீதா கல்யாணம் போன்றவை செய்யும் பொழுது அஷ்டபதிகளை பாடுவார்கள், அதில் நடனமும் பிரதான இடம் பிடிக்கும். ஆடுபவர்கள் எல்லோரும் ஆண்கள்தான். 

இப்போது, அப்படிப்பட்ட ராதா, சீதா கல்யாணங்களை வெகுவாக சுருக்கி விட்டார்கள். பெண்கள் மட்டும் நடத்தும் இவ்வகை பஜனைகளில் ஓரிரு ஆண்களும் பங்கேற்கிறார்கள். திருமணம், பூணூல் போன்ற நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இப்படி பெண்கள் நடத்தும் ஒரு ராதா கல்யாண நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சாமி பிள்ளையார், முருகன், மாரியம்மன், அய்யப்பன் ஹனுமான் போன்ற வேடங்களிட்டு அதற்கு சம்பந்தப்பட்ட பாடல்களை பாடிய வரை ஓ.கே. கிருஷ்ணனாக ஒரு ஆண்  குழந்தைக்கும், ராதையாக ஒரு பெண் குழந்தைக்கும் வேடமிட்டு, "மாலை மாற்றினாள், கோதை மலை மாற்றினாள் .." என்ற பாடலுக்கு ஆண் குழந்தை கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஒருவர் பெண் குழந்தையின் கழுத்தில் போட்டார். பெண் குழந்தையின்  கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஆண் குழந்தையின் கழுத்தில் போட்டார்.  எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது தவறல்லவா? 

வாட்ஸாப்பில் வந்த சில ஜோக்குகளோடு முடிக்கலாம்:

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது, கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்.

இண்டெர்வியூவில் சேல்ஸ் மேனஜர்: உங்களுக்கு ஏதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஓ! நிறைய, என் வீடு,கார்,மற்றும் என்னுடைய மனைவியின் அணைத்து நகைகளும் விற்றிருக்கிறேன். 

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் அடிக்கடி போறீங்க?
டாக்டர்தான் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

ஒரு காப்பி எவ்வளவு சார்? 
ஐந்து ரூபாய்
எதிர்த்த கடையில் ஐம்பது காசுன்னு எழுதியிருக்கே?
டேய்,சாவுகிராக்கி, அது xerox காபிடா! 
  

காதல் ஒரு மழை மாதிரி 
நனையும் பொழுது சந்தோஷம் 
நனைந்த பிறகு ஜலதோஷம்