கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, November 9, 2017

மாதா பிதா குற்றம்...

மாதா பிதா குற்றம்...

என் இலக்கிய பணியாற்றுவதற்காக கணினியை திறந்ததும் அது, "என்ன எழுதப் போகிறாய்?" என்றது.

"கதை" 

"ஏற்கனவே க.க க.விற்காக ஒரு கதையும், சீ.ரா.ம வுக்காக ஒரு கதையும் பாதி எழுதி வைத்திருக்கிறாய், இப்போது இன்னொன்றா?"

"அதை பற்றியெல்லாம் நீ ஏன் கவலைப் படுகிறாய்?" 

"ம்ம்.. சரி, சரி, என்னவோ செய்..? இது என்ன சமூகக்  கதையா?"

"சரித்திரக்  கதை என்று கூட சொல்லலாம்." 

"அடி சக்கை! அப்போ புரவிகளின் குளம்பொலி கேட்கும், வாட்கள் டணால் டணால் என்று மோதிக் கொள்ளும்,கச்சை அணிந்த பெண்கள்..."

"நிறுத்து.. சரித்திர கதை என்றால் புரவிகளின் குளம்பொலிக்க வேண்டுமா? இது அவ்வளவு பழைய சரித்திரம் அல்ல, ஒரு எழுபது வருட பழசு.. எழுபது வருடங்களுக்கு முன்னாள் நடந்ததை சொல்வது சரித்திரம் ஆகாதா?"

"ஓ.. ஒ .. ஓ.கே. ஓ.கே. அப்போ பெண்களெல்லாம் நிறைய நகைகள் அணிந்து கொண்டு, அதிரசம், முறுக்கு எல்லாம் செய்வார்கள் அப்படித்தானே?"

"பெண்கள், பெண்கள், ஏன் இப்படி இருக்க?"

"இல்ல, அந்தக் கால பெண்களின் பிரச்னைகளை பேசப் போகிறாயோ? என்று நினைத்தேன்..."

"ஒரு பெரிய மனிதர், ஊரும் உலகமும் கொண்டாடியவர், தெய்வ பக்தி கொண்டவர், அவர் செய்த ஒரு தவறு இன்றளவும் அவர் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்று சொல்லப் போகிறேன்."

"அட! பீரியட் ஸ்டோரி..! இண்ட்ரஸ்டிங்..! ம், சொல்லு சொல்லு.." 

"நீ கொஞ்சம் தொண தொணன்னு பேசாமல் இருந்தால்தான் என்னால் எழுத முடியும்..."

"சரி, சரி பேசல.. ஏதாவது சந்தேகம் வந்தால் கேக்கிறேன்.. கதை எங்கே ஆரம்பிக்கிறது?"

எண்பது, தொண்ணூறு வருடங்களுக்கு முன்னாடி, தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்தை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்த   மிராசுதார் மகாதேவ ஐயரை அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் அறியாதவர் கிடையாது. மூதாதையர் வைத்து விட்டு போன சொத்தை பெருக்கும் சாமர்த்தியம், அழகான மனைவி, அவள் மூலம் ஐந்து பெண்கள், ஐந்து பிள்ளைகள் என்று குறைவில்லாத பிள்ளை செல்வம், ஆள், படை, ஊரில் மரியாதை இவற்றோடு அந்த கால தஞ்சை மிராசுகளுக்கு இருந்த கெட்ட பழக்கங்களான சீட்டுகட்டு விளையாட்டு, சின்ன வீடு போன்றவை இல்லாதது, திரிகால சந்தியா வந்தனம், பஞ்சாயதன பூஜை போன்றவைகளும் அவர் மரியாதையை அதிகப் படுத்தின. இது மட்டுமல்லாமல் அவருடைய குருவின் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டவர். 
நல்ல உயரத்தில் ஆஜானுபாகுவாய், பஞ்சகச்சம், உத்தரீயம்,  நெற்றியில் எப்போதும் பளிச்சென்று விபூதி, குடுமி, காதுகளில் வைர கடுக்கன்களோடு அவர் தெருவில் வந்தால் எல்லோருக்கும் எழுந்து நிற்கத் தோன்றும். 

அந்த வருடம் சாதுர்மாஸ்ய பூஜையை கும்பகோணத்தில் வைத்துக் கொண்டார் பெரியவர். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மஹாதேவனே எடுத்துக் கொண்டார். உதவிக்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்தும் சிலரை சேர்த்துக் கொண்டார். அப்படி அவருக்கு அறிமுகமானவர் சீதாராமன். 

மகாதேவன் அளவிற்கு சொத்து இல்லாவிட்டாலும் சீதாராமனும் ஓரளவு வசதி படைத்த நிலச்சுவான்தார்தான். மற்ற விஷயங்களில் மகாதேவனுக்கு நிகரானவர். 

சாதுர்மாஸ்யம் முடிந்து பெரியவர் ஊரை விட்டு கிளம்பும் முன் மஹாதேவன், சீதாராமன் ஆகிய இரண்டு பேருக்கும் தனியாக பிரசாதங்கள் கொடுத்தார். பிறகு மஹாதேவனைப் பார்த்து,

"உன் பெரிய புள்ள என்ன பண்ரான்?" என்று வினவ,

"பட்டணத்துல பி.ஏ. படிச்சுண்டிருக்கான்"

கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாயா ?

இன்னும் இல்ல.. என்றவருக்கு ஏதோ பொறி தட்டியது.. கல்யாணத்துக்கு பாக்கச் சொல்றேளா? என்று கேட்க..
அவர் சிரித்துக் கொண்டே தலை ஆட்டி, அவருக்கு முன் இருந்த பழத்தட்டிலிருந்து ஒரு பழத்தை எடுத்து மஹாதேவன் கையில் போட்டார். பிறகு, சீதாராமன் பக்கம் திரும்பி," உன்னோட பெரிய பொண்ணுக்கு என்ன வயசாறது..? என்றார் 

"பதிமூணு.."

"ஜாதகம் எடுத்துட்டியா?"

"இனிமேதான் எடுக்கணும்.."

குருன்சிரிப்போடு அவருக்கும் ஒரு பழத்தோடு கொஞ்சம் பூவும் சேர்த்துக் கொடுக்க, அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட சீதாராமன் மகாதேவனை பார்க்க, இருவருக்குமே பெரியவர் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார் என்று தோன்றியது. 

அதன் பிறகு அவர்கள் ஜாதகம் பரிவர்த்தனை செய்து கொண்டு, பொருத்தமாக இருப்பது தெரிய வந்து, ஒரு நல்ல நாளில், பெண் பார்த்து, சம்மதம் தெரிவித்தார்கள். பிறகு உடனே வந்த ஒரு நல்ல நாளில், சீதாராமன், மஹாதேவ ஐயர் வீட்டிற்கு சீர் வரிசைகள் பற்றி பேசுவதற்காக சென்றார்.

பெரும்பாலான அந்தக் கால வீடுகளைப்  போல மூன்று கட்டு வீடு. செல்வ செழிப்பு வழிந்தோடியது. ரெட் ஆக்சைடால் பவழம் போல பளபளத்த திண்ணை, நடுவில் முற்றம், கூடத்தில் ஊஞ்சல், கூட சுவற்றில் மறைந்த குடும்ப பெரியவர்களின் பெரிய படங்கள். பின்னால்  மாட்டு கொட்டிலில் பசு, எருமை, மற்றும் காளை மாடுகள். 

விசாலம் அதிர்ஷ்டம் செய்தவள்தான் என்று சீதாராமன் மனசுக்குள் நினைத்துக் கொண்டார். தெய்வ பக்தியும், குரு பக்தியும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சீர், செனத்தி என்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் நினைப்பை பொய்யாக்கியது மஹாதேவ அய்யரின் சித்தப்பா பேசிய பேச்சு.

"எங்காத்து மூத்த பையன் மஹாதேவன், அவனோட பெரிய புள்ள கணேசன். எங்களோடது ஊருல ரொம்ப கௌரவப்பட்ட குடும்பம். அதுனால, அந்த கௌரவத்துக்கு ஒரு குறைச்சலும் வந்துடக் கூடாது."என்றவர் பெண்ணுக்கு போட வேண்டிய நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பையனுக்கு செய்ய வேண்டியவை, அதைத் தவிர பையனுக்கு ட்ரெஸ்ஸுக்கு என்று ரொக்கம் இத்தனை, எதிர் ஜாமின் இவ்வளவு, என்று ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார். 

"எதிர் ஜாமீன்...? அப்படின்னா?

"வரதக்ஷணையைத்தான் எதிர் ஜாமீன் என்பார்கள். குறுக்கே பேசாதே என்று சொன்னேனா இல்லையா?"

"சாரி, கோவித்துக் கொள்ளாதே" 

சீதாராமனுக்கு எல்லாவற்றையும் சமாளித்து விடலாமென்று தோன்றினாலும், அவர்கள் கேட்ட வைர தோடு கொஞ்சம் அதிகம் என்று பட்டது. அதை சொன்ன பொழுது, 

"எங்காத்துல எல்லாரும் வைரத்தோடுதான் போட்டுண்டிருக்கா, நாங்க ரென்று பெண்களுக்கு வைரத்தோடு போட்டுதான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம், ஆத்துக்கு வர மூத்த மாட்டுப்பெண் வைரத்தோடு போட்டுக்காம இருந்தா நன்னாயிருக்குமா? ஒரு வைர தோட்டுக்கு கூட வழியில்லாத இடத்திலிருந்தா பெண் எடுத்திருக்கான்னு எங்க சம்பந்திகள் நினைச்சுக்க மாட்டாளா?.."

ஒரு நல்ல சம்பந்தம் வைர தோட்டினால் நிற்க வேண்டாம் என்று தோன்ற சீதாராமன் அதற்கும் ஒப்புக்கொண்டார். 

ஆனால் அவர் ஒரு தவறு செய்தார். வீட்டிற்கு வந்து  எல்லா- வற்றையும் சொன்ன அவர் தான் மகளுக்கு வைரத்தோடு போடுவதற்கு ஒப்பு கொண்டதை சொல்லாமல் விட்டு விட்டார். 

அவர் வீட்டில் பணம் வரவு செலவெல்லாம் பார்ப்பது அவருடைய அம்மாதான். கணவர் மறைவுக்குப் பிறகு நிலத்திலிருந்து வந்த வருமானத்தையெல்லாம் சிக்கனமாக செலவு செய்து மிஞ்சியதை வட்டிக்கு விட்டு, கறாராக பணத்தை வசூல் செய்து அதை வங்கியில் வேறு போட்டு வைத்திருப்பாள். அதில் சேரும் பணத்தை எடுத்து அவ்வப்பொழுது நகைகளும் பேத்திகளுக்காக செய்து வைத்திருந்தாள். ஆனால் வைரத்தோடு என்பது தங்கள் சக்திக்கு மீறியது என்று நினைத்தால் இந்த வரனே வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லி விடுவாள். ஒரு நல்ல வரனை ஏன் இழக்க வேண்டும்? என்று நினைத்த சீதாராமன் அம்மாவிடம் சொல்லாமல் இருந்தது தவறு கிடையாது, வைரத்தோடு எப்படி போடுவது என்று யோசித்திருக்கலாம். குறைந்த பட்சம் உத்யோகத்தில் இருந்த தன்  தம்பியிடமாவது சொல்லியிருக்கலாம்.  தனக்கு குழந்தைகள் இல்லாததாலோ என்னவோ, அண்ணா குழந்தைகளிடம் அளவற்ற பாசம் வைத்திருந்த அவர் தம்பி வைரத்தோடு வாங்கி கொடுத்திருப்பார். சீதாராமன் அதையும் செய்யாமல் விட்டுவிட்டு மற்ற கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.   

கல்யாணத்திற்கு முதல் நாள், ஒரு மோட்டார் கார், ரெண்டு வில் வண்டி, சில கூண்டு வண்டிகளில் வந்து இறங்கிய மாப்பிளை வீட்டாரை தனது உறவினர் வீட்டில் இறக்கினார்கள். வந்து காபி குடித்த கையோடு ஆண்கள் திண்ணை திண்ணையாக சீட்டு விளையாட உட்கார்ந்தனர். சாப்பாடு ஆன பிறகு பெண்கள் ஒரு கூட்டமாக மணப்பெண்ணை பார்ப்பதற்கு வந்தனர். 

பெண்ணின் கை, கழுத்து,காது,மூக்கு இவைகளில் தாங்கள் கேட்டிருந்த நகைகளை அந்தப் பெண் அணிந்து கொண்டிருக்கிறாளா என்று நாசூக்காக சோதித்தார்கள். மாப்பிள்ளையின் அத்தை, "தோடு எங்க பண்ணினேள்? கோபால்தாசா? எத்தனை காரட்?" என்று கேட்க, அதன் உள் வர்த்தமானம் தெரியாத பெண்ணின் தாயார், இது வைரத்தோடு இல்லையே, புஷ்பராகம்தான் என்றதும், அவர்கள் முகம் சட்டென்று மாறியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், உடனே கிளம்பி சென்று விட்டார்கள்.

மதியம் சம்பந்திக்கு காபி கொண்டு சென்ற சீதாராமனின் தம்பி, அண்ணாவிடம் வந்து," அண்ணா அங்கே என்னவோ சரியில்ல.. மஹாதேவ ஐயர் உன்னை பார்க்கணும்னு சொல்றார்.." எங்க, சீதாராமனுக்கு வயிறு கலங்கியது. 

தன் மைத்துனன் ராமுவையும் அழைத்துக் கொண்டு மஹாதேவ ஐயரை பார்க்கச் சென்றார். 

சம்பந்திகள் தங்கி இருந்த வீட்டின் ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஹாதேவன், இவர்களை பார்த்ததும்," என்ன சீதாராமன், நீங்க பெரிய மனுஷன்னு நினைச்சேன், இப்படி மோசம் பண்ணுவேள்னு எதிர்பார்கலையே.."என்று சற்று காட்டமாக கூற, விதிர்த்துப் போன சீதாராமனும், ராமுவையரும், "நீங்க, எ ..ன்..ன .. சொல்றேள்..தெரியலையே ?"

தெரியலையா..? பேஷ்! இதுதான் உங்க ஊர் பழக்கமா? சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு.."

ஒத்துண்டது எல்லாம் பண்ணியிருக்கோமே.. எது பண்ணலை?

ராமுவையர் கேட்க, இதை ஏன் எங்கிட்ட கேக்கற? உங்க அத்திம்பேர் கிட்ட கேளு? பொண்ணுக்கு வைரத்தோடு போடறேனு ஒத்துண்டாரா இல்லையானு?

வைரத்தோடா..? திடுக்கிட்ட ராமுவையர் சகோதரியின் கணவரைப் பார்க்க அவர் பதில் சொல்லாமல் தலை குனிந்து கொண்டதும் சட்டென்று சுதாரித்தார்.

அது வேறொண்ணுமில்லை, இந்த முறை விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லை. பாதிக்கு மேல சாவியாயிடுத்து, அதனாலதான்... வைரத்தோடு வாங்க முடியல., இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்கோ, எப்படியாவது வைரத்தோடு போட்டுடறோம்.."

அப்போ, ஒரு மாசம் கழிச்சு கல்யாணத்த வைச்சுக்கலாம்.. மஹாதேவன் நிர்தாட்சஷண்யமாக கூறினார்.

நீங்க பெரியவா.. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. என்ற சீதாராமன், மொதல்ல காப்பிய குடிங்கோ.. என்று கூஜாவிலிருந்து காபியை டம்பளரில் ஊற்றி, அவரிடம் நீட்ட 

என்னய்யா..? காபிக்கு வீங்கிப் போய் உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்னு நினைச்சீரா? என்று டம்பளரை தட்டி விட, கூடத்தில் காபி சிதறியது. 

வைரத்தோடு போட்டால் என் பிள்ளை ஜானவாசத்துக்கு வருவான், இல்லைனா நாங்க, கிளம்பறோம்..

ஐயையோ..! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, நாங்க ஏற்பாடு பண்றோம்.. கை கூப்பி வணங்கி இருவரும் வெளியே வந்தார்கள். 

இந்த விஷயங்கள் வெளியே தெரியாததால் திண்ணைகளில் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள், " என்னங்கனும் ? காபி சூடே இல்லை? சூடா வேற நல்ல காபி கொண்டு வரச் சொல்லுங்கோ" என்று தாங்கள் வந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் ஓடிக் கொண்டிருந்தார்கள். 

அம்புலு உன்னை தலை பின்னிக்க கூப்பிடறா? காமு உன் நாத்தனாருக்கு கல்யாணமாச்சே.. அவளை நன்னா வெச்சிண்டிருக்களா? போன்ற சப்தங்களுக்கிடையியே சீதாராமனும், ராமுவும் தங்கள் வீட்டை அடைந்தனர்.  சீதாராமன் செய்வதறியாமல் வாசல் திண்ணையில் உட்கார்ந்து விட்டார். ராமு வீட்டின் முக்கியஸ்தர்களான தன் சகோதரி, அவளின் மாமியார், மைத்துனர் இவர்களை அழைத்து நடந்த விவரங்களைச் சொன்னார். 

"என்னடா சீதாராமா இப்படி பண்ணிட்ட? முன்னாலேயே சொல்லியிருக்க மாட்டாயா?" என்று அவர் அம்மாவும்,
"என்னண்ணா எங்கிட்ட சொல்லியிருக்க மாட்டேளா?" அன்று அவர் தம்பியும் புலம்பத் தொடங்கினார்கள். 

நடந்தது நடந்து போயாச்சு, இனிமே என்ன பண்ணனும்னு யோசிக்கணும். என்ற ராமுவையர், தன் அக்காவிடம், "மீனா, உன் காதுல இருக்கற வைரத்தோட்டை அவிழ்த்து உன் பெண் காதில் போடு, கல்யாணம் நடந்தாகணும்" என்றார். 

என் தோட்டை அவளுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணுவேன்? என்று விஷயத்தின் தீவிரத்தை உணராமல் அவள் கேட்டதோடு நிற்காமல், இது என் அம்மா எனக்கு கொடுத்தது, என் பொண்ணு கல்யாணத்தில் நான் மூளி காதோடு நிற்பேனா? என்றும்,  இதையும் அவிழ்த்து கொடுத்து விட்டால், எனக்கு இவர்கள் தோடு வாங்கித் தரவே மாட்டார்கள் என்றெல்லாம் சுய நலமாக பேசி பெரிதாக அழவும் தொடங்க, இந்த விஷயம் வெளியில் யாருக்கும் குறிப்பாக விசாலத்திற்கு தெரியக் கூடாது என்று அவர்கள் நினைத்ததற்கு மாறாக மெல்ல மெல்ல வெளியே கசியத் தொடங்கியது.

என்ன மாமா? என்ன சித்தப்பா? என்று மணப்பெண்ணான விசாலம் அழத் தொடங்கினாள்.

"சீ! சீ! அசடு! ஒண்ணும் இல்லை, நீ இப்போ எதுக்கு அழற? நாங்கள்ளலாம் எதுக்கு இருக்கோம்? கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்துவோம். நீ அழாதே.." என்று அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு, அவளைத் தனியே விட வேண்டாம் என்று தன் இளைய சகோதரியிடம் கூறி விட்டு, தன் மனைவியை தனியே அழைத்து," இங்க பாரு விஜயம், இப்போ விசாலத்தோட கல்யாணம் முக்கியம். மீனாக்கு அது புரியல, புரிய வைக்க இப்போ நேரம் இல்ல, மணி ஆயிண்டிருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல ஜானவாசத்துக்கு மாப்பிளையாத்துக்காரா  வரலைனா, ஊர் முழுக்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப அவமானமாயிடும். அதனால நீ உன்னோட வைரத்தோட அவிழ்த்து விசாலம் காதுல போடு, அடுத்த மாசம் கைலாசம் தோடு வாங்கி கொடுத்துடுவான்.." என்று கூற, நிலைமையை உணர்ந்து கொண்ட விஜயம் தன்னுடைய வைரத் தோட்டை நாத்தனார் மகளின் காதில் போட்டு விட்டாள். அது வைரத் தோடுதான் என்பதை உறுதி செய்து  கொண்ட மஹாதேவ ஐயர் குடும்பம் ஜானவாசத்துக்கு கிளம்பியது. 

அடப்  பாவிகளா! மனசாட்சி கிடையாதா? எனக்கு என்னவோ அந்த கணேசன் மீதுதான் கோபம் வருகிறது. விவரம் அறிந்தவன்தானே.. அப்பாவிடம் சொல்ல மாட்டானா? 

அப்போதெல்லாம் பெரியவர்கள் ஒரு கோடு போட்டு விட்டால் அதை யாரும் தாண்ட மாட்டார்கள்.

அப்புறம்..?

அப்புறம் என்ன? கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. விசாலமும் ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி பொறுமையாகவும், அனுசரித்தும் நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்கினாள். அது மட்டுமல்ல, அவளும், கணேசனும் கருத்து ஒருமித்தவர்களாக வாழ்ந்தனர். இரண்டு பெண்கள், மூன்று பிள்ளைகள். குழந்தைகளும் தங்கம். ஆனால் அவர்கள் செய்த வினை, நிச்சயம் செய்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பெண் வீட்டாருக்கு அவர்கள் கொடுத்த டென்ஷன், கணேசன் விசாலம் குழந்தைகளின் திருமணத்தில் பழி வாங்கியது. 

என்ன நடந்தது?

அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம் எல்லாம் நன்றாகவே அமைந்தது. தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட்டுதான் தங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் பிறந்த ஆண் குழந்தைகள் சொல்லி விட்டு, தங்கைக்கு திருமணத்துக்கு வரன் பார்த்தார்கள், பார்த்தார்கள், பார்த்தார்கள்... என்னென்னவோ காரணம், திருமணம் கூடி வரவே இல்லை. 

கணேசனின் தம்பிகள் கொஞ்ச நாள் பொறுத்தார்கள், பிறகு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார்கள். குடும்பத்தில் கணேசனின் குழந்தைகளுக்குத்தான் கடைசியில் திருமணம் ஆனது. மூத்த பெண்ணுக்கு முப்பத்திரண்டு வயதில்தான் திருமணம் ஆனது.  அதற்குப் பிறகு பையன்களுக்கு திருமணம் ஆகும் பொழுது கிட்டத்தட்ட நாற்பது வயது ஆகிவிட்டது. கடைசி பெண்ணுக்கும் நாற்பது வயதுக்கு மேல்தான் திருமணம் ஆனது. அது மட்டுமில்லை, அவர்களுடைய குழந்தைகளுக்கும் திருமணம் ஆகுமா என்று கவலைப்பட்டு மிகவும் தாமதமாகத்தான் திருமணம்.

சரி, இதிலிருந்து நீ எதை நிலை நாட்ட விரும்புகிறாய்?

நான் என்ன ரெண்டாம் கிளாஸ் குழந்தைக்கா கதை சொல்கிறேன்? 'மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்' என்று சொல்லி முடிக்க? இதிலிருந்து நீ என்ன புரிந்து கொண்டாய் என்று சொல்..

மாதா பிதா குற்றம் மக்கள் தலையில்... அதுதானே?

வெரி குட்! கரெக்டாக பாயிண்டை பிடித்து விட்டாய்.

ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்?

போச்சுடா..! வரவில்லயே என்று நினைத்தேன்.. என்ன சந்தேகம்?

மஹாதேவன், சீதாராமனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்குமா என்னும் பரிதவிப்பை  கொடுத்தார். அதே பரிதவிப்பு அவருடைய மகனுக்கு வந்தது. ஓ,கே. ஆனால் அந்தப் பெண் விசாலம் என்ன தவறு செய்தாள்? முதலில் தன திருமணம் எங்கேயாவது நின்று விடுமோ என்னும் அச்சம். இப்போது வேண்டுமானால் நிச்சயித்த திருமணங்கள் நின்று போவது சகஜமாக இருக்கிறது, எழுபது வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய அவமானம். அது அவளுக்கு எத்தனை மன உளைச்சலை கொடுத்திருக்கும்? பின்னாளிலும் தன் குழந்தைகளுக்கு திருமணம் தள்ளிப்போவது ஒரு தாயாக அவளை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்குமே? அவளுக்கு ஏன் இது நேர்ந்தது? அவள் பெற்றோரோ, அவளோ எதுவும் தவறு செய்ததாக தெரியவில்லையே? 

ஒண்ணு  புரிஞ்சுக்கோ.. வாழ்க்கையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடையாது. நான் படுத்துக்க கொள்ள வேண்டும்.. மணி ஆகி விட்டது. 

சரி சரி அதற்காக விண்டோஸ்களை க்ளோஸ் பண்ணாமல் ஷட் டௌன்... .பண்ணா...

ம்ம்ஹும் .. இருள் சூழ்ந்து விட்டதே..! 

Tuesday, November 7, 2017

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு

மழைக்கு உணக்கையாய் மிளகு குழம்பு 


மழை பெய்து கொண்டே இருப்பதால் காற்றில் ஒரு ஜிலீர்தனம். இப்போது மிளகு குழம்பு செய்து சாப்பிட்டுப் பாருங்கள், வாய்க்கு ருசி, உடம்புக்கும் நல்லது. 

தேவையான பொருள்கள்:



புளி(பழைய புளியாக இருந்தால் நன்று) - ஒரு பெரிய எலுமிச்சம் பழம்  அளவு. புதுப் புளியாக  இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் ஊற வைக்கவும்.

வறுத்து அரைக்க:

துவரம் பருப்பு  -  1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விரை(தனியா)  -  3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1 1/2  டீ ஸ்பூன்
சீரகம்  - 1 டி ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
உப்பு - 2 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - இரண்டு கரண்டி 
பெருங்காயம் -  1 சிறு துண்டு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை  
கடுகு(தாளிக்க) - 1/2 டி ஸ்பூன் 





செய்முறை: 

 ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அது கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாணலியில் மிகக் குறைவாக எண்ணை ஊற்றி முதலில் துவரம் பருப்பு, பெருங்காயம்,  இவைகளைப் போட்டு வறுக்கவும். து.பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் பொழுது தனியாவையும், மிளகு வற்றலையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். இறுதியாக சீரகத்தையும், கொஞ்சம்  கறி- வேப்பிலையையும் போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.  இவைகள் ஆறியதும் மிக்சியில் அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலோடு சேர்த்து கொதிக்க விடவும்.  நல்லெண்ணையை அவ்வப்பொழுது சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விடவும். எண்ணெய் தனியே பிரிய துவங்கும் பொழுது நிறுத்தி விடலாம். கடைசியில் கடுகோடு கறிவேப்பிலையும் தாளித்து இறக்கினால் மிளகு குழம்பு ரெடி.

சூடான சாதத்தோடு கொஞ்சம் நெய் சேர்த்துக் கொண்டு, மிளகு குழம்பை பிசைந்து கொண்டு, உளுந்து அப்பளம் அல்லது டாங்கர் பச்சிடி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ஆஹா.!