தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்
மகாராஷ்டிரத்தில் 'அஷ்ட விநாயக் மந்திர்' என்று விநாயகருக்கான புகழ் பெற்ற எட்டு கோவில்கள் உண்டு. அதைப் போல நம் தமிழகத்தில் உள்ள எட்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார்
கோவில்களைப் பற்றி பார்ப்போமா..?
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்:
திருச்சி என்றால் உச்சி பிள்ளையார் கோவில், உச்சி பிள்ளையார்
கோவில் என்றால் திருச்சி என்று பிரிக்க முடியாதபடி
திருச்சியோடு பின்னி பிணைந்தது இங்கிருக்கும் உச்சி பிள்ளையார் கோவில்.
நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவில் இரு கோவில்களை அடக்கியது மேலே தாயுமானவ சுவாமி மற்றும் உச்சி பிள்ளையார்
கோவில், கீழே மாணிக்க விநாயகர் ஆலயம்.
சரித்திரப் பின்னணி :
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் குன்று உலகிலேயே மிகவும் பழமையான பாறை அதாவது சுமார்
30 லட்சம் வருடங்களுக்கு முந்தைய பாறை ஆகும்.
புராதனமானதை கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
என்பார்கள் அப்படி முதல் முதலாக கல் தோன்றிய பொழுதே தோன்றியது இந்த கோவில் அமைந்திருக்கும் குன்று.
85 மீடர் உயரமுள்ள இந்த குன்று கோவில் பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது என்று கூறப்பட்டாலும் முழுமையாக
கட்டி முடிக்கப்பட்டது மதுரையை ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான்.
புராண கதை:
ராவண வதம் முடிந்து ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு விட்டு இலங்கை திரும்பும் முன் ராமனின் நினைவாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று விபீஷணன் கேட்க, ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி அவர்களின் குல தெய்வமான ஆதி ரெங்கநாதரின் விக்ரஹத்தை விபிஷணனிடம் அந்த விக்ரஹத்தை எங்கேயும் கீழே வைத்துவிடக்
கூடாது எனும் நிபந்தனையோடு தருகிறார். புஷ்பக விமானத்தில் திருச்சி வழியே இலங்கை செல்லும் பொழுது ஸ்ரீரங்கத்தின் இயற்கை அழகில் மனதை பறி கொடுத்த ரெங்கநாதர் அங்கேயே தங்கி விட முடிவெடுத்து விபீஷணனுக்கு
இயற்கை உபாதையை உண்டு பண்ணுகிறார். அந்த நேரத்தில்
அரங்கனின் விக்ரஹத்தை என்ன செய்வது என்று யோசித்த விபீஷணன் முன் ஒரு சிறுவன் வடிவில் விநாயகர் தோன்றி
தான் அந்த விக்ரஹத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி பெற்றுக் கொண்டு, பின் விபீஷணன் வரும் முன்
கீழே வைத்து விடுகிறார், இதனால் கோபம் கொண்ட
விபீஷணன் அந்தச் சிறுவனை தலையில் குட்டுவதற்காக
வரும் பொழுது அவரிடமிருந்து தப்பித்து ஓடி இந்த மலையில்
வந்து அமர்ந்து கொண்டதாக புராண வழி செய்தி.
நகரின் மத்தியில் இப்படி ஒரு அழகான கோவிலை வேறு எந்த
ஊரிலும் பார்க்க முடியாது. உச்சி பிள்ளையார் சுற்றுலா
பயணிகளுக்கும் மாணிக்க விநாயகர் சின்ன கடை வீதியில்
இருக்கும் வியாபாரிகளுக்கும் விருப்பமான கடவுளர்.
கணபதி அக்ரஹாரம் மஹா கணபதி:
திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள சிறிய கிராமம்
கணபதி அக்ரஹாரம். இங்கிருக்கும் விநாயகரை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை
செய்ததாகவும் கௌதம ரிஷியால் வணங்கப்பட்டவராகவும் கருதப்படும் புராதன
![]() |
Maha ganapathy of Ganapathy Agraharam |
பெருமை வாய்ந்த கோவில் என்றாலும் அளவில் சிறியதாகவே இருக்கிறது. நன்றாக
பராமரிக்கப்படுகிறது.
இந்த ஊரில் விநாயக சதுர்த்தி வெகு பிரசித்தமான விழா! மற்ற ஊர்களைப் போல விநாயக சதுர்த்தி அன்று மண் பிள்ளையாரை வாங்கி பூஜிக்கும் பழக்கம்
இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோருமே
கோவிலில்தான் அர்ச்சனை செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் எல்லார்
வீட்டிலிருந்தும் வரும் பிரசாந்தங்களை ஒன்றாக கலந்து பொதுவாக பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து பிறகு அதனை விநியோகம் செய்வது இந்த ஊருக்கே உடைய சிறப்பு. முன்பெல்லாம் சொத்து வழுக்குகள், மற்றும் குடும்ப தகராறுகள் போன்றவை பிள்ளையார் சதுர்த்தி அன்று தீர்த்து வைக்கப் படும் அதன் பிறகே பூஜை, பிரசாத விநியோகம் எல்லாம்
என்று என் பாட்டனார் கூற கேட்டிருக்கிறேன்... இப்பொழுதும் அந்த பழக்கம்
தொடர்கிறதா என்று தெரியவில்லை.
கணபதி அக்ரஹாரத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு (என்பிறந்த வீட்டைப் போல) பிள்ளையார் என்றால் அங்கிருக்கும் மகாகணபதிதான், வேறு விநாயக மூர்தங்களைக் கூட வணங்க மாட்டோம் என்னும் தீவிர பக்தி உடையவர்கள் ஆதலால், வீட்டில் பிள்ளையார் படம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:
ப்ராசீனமான கோவிலாக இருந்தாலும் சமீபத்தில் பிரபலமடைந்த கோவில்களில்
பிள்ளையார்பட்டியும் ஒன்று. தமிழகத்தின் பழமையான குடைவரை கோவில்களில்
ஒன்றான இது பல்லவர்கள் காலத்தையது. புதுகோட்டைக்கும் காரைகுடிக்கும் இடையே திருகோஷ்டியூறைத் தாண்டி அமைந்துள்ளது இவ்வூர். அழகான கோவில். சிறியகோவில் என்று கூற முடியாது. நகரத்தார்களால் நன்கு பராமரிக்கப்படுகிறது.
ஆறு அடி உயரமுள்ள குடைவரை சிற்பம். இங்கிருக்கும் பிள்ளையாருக்கு எல்லா விநாயகர் மூர்த்தங்களைப் போல நான்கு கரங்கள் இல்லாமல் இரண்டு கரங்கள்மட்டுமே உள்ளன. அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து இடது கையை இடுப்பில் ஊன்றி லிங்கத்தை ஏந்தியிருக்கும் அபூர்வ திருக் கோலம். பகதர்களின் கோரிக்கைகள் அணைத்தையும் நிவேற்றுவதால் கற்பக விநாயகர் என்று வழங்கப்படும் இவருக்கு தேசி விநாயகர் என்றும்
ஒரு பெயர் உண்டு.
வலது கையில் சிவ சிவ லிங்கத்தை தாங்கி இருப்பதால் இங்கு யாரோ ஒரு சித்தர் ஜீவ சமாதி அடைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வலது பக்கம் சுழித்த தும்பிக்கை மற்றும் ஒரு விசேஷம்! கற்பக விநாயகர் தேசி விநாயகர் தேசி விநாயகர் என்றும்
அழைக்கப்படுகிறார்!
பிள்ளையார் பட்டியில் இருக்கும் கற்பக விநாயகருக்கே சிறப்பு என்றாலும்
இங்கிருக்கும் மற்றொரு சிறப்பு வாடா மலர் மங்கை அம்மன் உடனுறை திருவீசர்,சிவகாமி அம்மன் உடனுறை மருதீசர், சௌந்தர நாயக அம்மன் உடனுறை செஞ்சடேஸ்வரர் எனும் அனைவரும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும்.
இங்கிருக்கும் மருதீஸ்வரரை பசு ஒன்று பூஜித்ததாகவும், செல்வத்திற்கு
அதிபதியான குபேரன் பூஜித்ததாகவும் வரலாறு.
புதுச்சேரி மணக்குள விநாயகர் :
புதுவை நகரில் அரவிந்தர் அன்னை ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் இக்கோவில் முந்நூறு வருடங்களுக்கு முந்தையது. புதுவை கடற்கரைக்கு அருகே குளம் போல மணல் தேங்கி இருந்த பகுதியில் அமைந்திருந்ததால் மணக்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த பொழுது இவ்வாலயத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்த அவர்கள் பல முறை விநாயகர் விக்ரஹத்தை கடலில் வீசி எறிந்த பிறகும் மறு நாளே அந்த விக்ரகம் மீண்டும் கோவிலில்
காட்சி அளிக்க, விநாயகரின் மகத்துவத்தை புரிந்து கொண்ட அவர்கள் கோவில் இதே இடத்திலேயே இருக்க உதவி புரிந்தனர்.
சிறிய ஆலயம் என்றாலும் நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலின் உள்
சுவற்றில் விநாயகரின் வெவ்வேறு வடிவங்கள் அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. பிரகாரத்தில் சுப்ரமணிருக்கும் தனி சந்நிதி உள்ளது. நீண்ட நாட்கள் உற்சவர் விக்ரகம் இல்லாமல் இருந்து 1964 ம் ஆண்டுதான்
காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசியோடு உற்சவர் சிலையும் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.
புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு இங்கே பூஜை போடுவது சிறப்பாக
கருதப்படுகிறது.