கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 4, 2019

Rangoli - Jamakalam


கோலம் போடுவது, ரங்கோலி வரைவது போன்றவைகளில் திறமையுள்ள என் சகோதரி ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் உங்கள் பார்வைக்கு. 

Monday, September 30, 2019

ஆனை ஆனை, அழகர் ஆனை!

ஆனை ஆனை, அழகர் ஆனை!


சில நாட்களுக்கு முன்பு சன் டி.வி.யின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரியாக  அதிலும் யானைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிவ கணேசன் கலந்து கொண்டார். அவர் யானைகளைப் பற்றி தெரிவித்த விஷயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் யானைகளிடமும்  உண்டாம். குட்டியை ஈன்ற தாய் யானை அதை பராமரிக்காதாம். அதன் அத்தைகளும் மூத்த சகோதர, சகோதரிகளும்தான் பராமரிக்குமாம். அதாவது நம்முடைய பழைய கூட்டு குடும்ப மரபு.

கூட்டத்தில் ஒரு யானை இறந்து விட்டால் அதன் உடல் டீகம்போஸ் ஆக இரண்டு அல்லது மூன்று மாதங்களாகுமாம். அப்படி இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.

தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்த யானையை இருபது வருடங்களுக்குப் பிறகும் அதன் லத்தியை பரிசோதித்து, தன்னுடைய குடும்பமா இல்லையா என்று கண்டறிந்து தங்கள் குடும்பமாக இருந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாம்.

குடும்பத் தலைமையை வகிப்பது பெண் யானைதான். அந்த குடும்பத்தின் மூத்த பெண் யானைதான் அந்த பொறுப்பை வகிக்கும். ஒரே வயதில் நான்கு பெண் யானைகள் இருந்தாலும் எல்லாம் தலைமைக்கு வந்து விட முடியாதாம்.  தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த மூத்த பெண் யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து  அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.

யானைக்கு பார்வைத்திறன் குறைவுதானாம். ஆனால் மோப்ப சக்தி மிக அதிகமாம். யானையை பழக்க நினைக்கும் பாகன் தன் உடல் வாசனை அதற்கு பழக வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் வரை கூட குளிக்காமல் இருப்பதுண்டாம். இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.

கோவில்களில் பெண் யானைகளைத்தான் வைத்துக் கொள்வார்களாம். அவைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று நியதி இருக்கிறதாம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது கோவில் யானைகள் வருடத்தில் ஒரு மாதம் முதுமலைக்கு ரிட்ரீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

ஒருமுறை சூலுற்ற ஒரு யானை அவரையும் அவரது உதவியாளரையும் துரத்தியதாம், அவரது உதவியாளர்,"உங்களால் வேகமாக மரம் ஏற முடியாது, நான் வேகமாக மரத்தில் ஏறி விடுவேன், எனவே, நான் மரத்தில் ஏறி விடுகிறேன், நீங்கள் பாலத்தின் அடியில் இருக்கும் கல்வெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு, மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டாராம். அதோடு மட்டுமல்ல,"சார், கல் வெட்டுக்கு பின்னல் ஒளிந்து கொள்ளும் முன் அங்கு கரடி எதுவும் இல்லையே என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்" என்றாராம், நல்ல உதவியாளர்! இது போல் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்(!!??) என்றார். சரிதான்!