கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 11, 2018

மாமி சொன்ன கதைகள் - 2

மாமி சொன்ன கதைகள் - 2


ஒரு ஊரில் இருந்த ஒரு பெற்றோர்களுக்கு ஒரே ஒரு மகன். கொஞ்சம் தாமதமாக பிறந்த அந்த பையன் மேல் அவன் பெற்றோர்களுக்கு மிகுந்த பாசம். அவனும் தன் பெற்றோர்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தான். வயதான தன்  பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது தன்  கடமை என்று நினைத்தான். 

அவனுடைய மனைவியோ கணவன் இருக்கும் பொழுது மாமனார், மாமியார் மீது பக்தி கொண்டவள் போல, அவர்களுக்கு பணிவிடைகள் செய்வது போல நடிப்பாள். கணவன் அலுவலகம் சென்றதும் தான் எந்த வேலையும் செய்யாமல், கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு எல்லா வேலைகளையும் அவர்களையே ஏவுவாள். 

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ஏதோ காரணத்தினால் சீக்கிரம் வீடு திரும்பி விட்ட மகன் தன்  பெற்றோர்கள் தன் மனைவியிடம் படும் பாட்டை பார்த்து விடுகிறான். தன் மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்த அவன் தன்  மனைவியின் பெற்றோர்களுக்கு,"உங்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லை, உயிருக்கே ஆபத்து. ஜோதிடர்களிடம் கேட்டதில் அவளுடைய பெற்றோர்களாகிய நீங்கள், வேப்பிலையை மட்டும் ஆடையாக உடுத்திக் கொண்டு, தாரை, தப்பட்டை எல்லாம் முழங்க தெருவில் நடனமாடிக்கொண்டே வரவேண்டும்" என்று கடிதம் போடுகிறான்.

அடுத்த வாரத்தில் தெருவில் தாரை, தப்பட்டை ஒலி கேட்டு என்ன விசேஷம் என்று வாயிலுக்கு வந்து பார்த்த அந்த கொடுமைக்கார மருமகள் திடுக்கிடுகிறாள். ஏனென்றால் தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்க்க, வேப்பிலை ஆடையில் நடனமாடிக் கொண்டு வருவது அவளுடைய பெற்றோர்கள் அல்லவா? இது என்ன கூத்து? என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்க,  உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்ட தங்கள் மகள் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து அவளுடைய பெற்றோர்களுக்கும் அதிர்ச்சிதான்.

"என்னடி? உனக்கு உடம்பு சரியில்லை என்றார்களே?" என்று கேட்கிறார்கள்.
"உடம்பா ? எனக்கா? நான் நன்றாகத்தானே இருக்கிறேன், நீங்கள் ஏன் இப்படி ஒரு கோலத்தில் நடனமாடிக் கொண்டு வருகிறீர்கள்?" என்று எதிர் கேள்வி கேட்க, அவள் கணவன், "நீ என் பெற்றோர்களை என்னவெல்லாம் இழிவு படுத்தினாய்? அதனால்தான் உன் பெற்றோர்களை அவமானப் படுத்தவே நான்தான் அவர்களுக்கு உனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, இப்படி வரச்  சொன்னேன்" என்று கூறுவான். (கதை இங்கே முடிந்து விடும். இதைக் கேட்டு அவன் மனைவி தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினாள் என்றெல்லாம் கிடையாது)

இந்த கதையை வெகு சுவாரஸ்யமாக சொல்லுவார் என் மாமி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. கதையை பாவத்தோடு நேரில் பார்ப்பது போல சொல்லுவார். நான் நிறைய தடவை இந்தக் கதையை சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறேன்.    

அதே போல மஹாபாரத கதைகளும் சொல்லுவார். பீஷ்ம சபதம், பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த விதம், திரௌபதி சுயம்வரம், திரௌபதியை சூதில் பாண்டவர்கள் தோற்பது, கண்ணன் கருணையால் அவளுக்கு புடவை வளர்வது போன்ற காட்சிகளை மோனோ ஆக்டிங் போல கூறுவார். அதனால்தானே இன்றுவரை எனக்கு அந்த கதைகள் நினைவில் இருக்கின்றன.

Thursday, May 10, 2018

மாமி சொன்ன கதைகள்

மாமி சொன்ன கதைகள் 

ஸ்ரீராம் எழுதியிருந்த 'அத்தரி மாக்கு கொழுக்கட்டை' கதையை படித்த பிறகு என் சிறு வயதில் என் மாமியிடம் நான் கேட்ட சில கதைகள் நினைவுக்கு வந்தன. இவைகளை நீங்களும் கேட்டிருக்கலாம், கேட்காமலும் இருக்கலாம். இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் என்றால் நிச்சயம் ரசிப்பீர்கள். முதல் வகையாக இருந்தாலும் ரசிக்க முடியும். 

இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் தீர வேண்டும். ஆனால் அந்த இறப்பு வருவதில் ஒரு ஆர்டர் இல்லை. அதாவது முதலில் பிறந்தவர்கள்தான் முதலில் இறப்பார்கள் என்று இல்லை. முதியவர்களும் இறக்கிறார்கள், நடு வயதினரும் இறக்கிறார்கள், இளம் வயதினர்களும் இறக்கிறார்கள், ஏன் குழந்தைகள் கூட இறக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

இந்த உலகம் படைக்கப்பட்டு அதில் ஜீவராசிகளும் உண்டாக்கப் பட்டதும், படைக்கப்பட்ட ஜீவன்கள் எதுவுமே இறக்கவில்லையாம். இதில் புதிது புதிதாக உயிர்கள் வந்துகொண்டே இருக்க, பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி திணறினாளாம். அவள் கடவுளிடம் சென்று முறையிட்டு தன் பாரத்தை குறைக்க வேண்டும் என்று வேண்ட, கடவுள் எம தர்ம ராஜனைப் படைத்து, உயிர்களை பறிக்க வேண்டிய வேலையை அவனிடம் ஒப்படைத்தாராம். 

அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட எமதர்மன், தன்னுடைய உதவியாளனை அழைத்து இன்று முதல் உலகில் வந்த உயிர்கள் நீடித்திருக்காது, பறிக்கப்படும். அது முதலில் முதியவர்கள், பின்னர் நடு வயதினர், பின்னர் இளம் வயதினர் இறுதியாக குழந்தைகள் என்ற வரிசையில் பறிக்கப் படும் என்று பொருள் படும்படி  பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர,இலை உதிர என்று தண்டோரா போடச் சொன்னாராம்.

அந்த பணியாள் அப்படியே செய்ய, முதியவர்களுக்கு கோபம் வந்து விட்டதாம். "ஏன் நாங்கள்தான் முதலில் இறக்க வேண்டுமா? ஒத்துக்க முடியாது" என்று அடாவடி செய்தார்களாம்(எதைச் சொன்னாலும் ஒத்துக்க முடியாது என்று சொல்வது எப்போதுமே உண்டு போலிருக்கிறது)

சரி, முதியவர்கள் மனதை நோகடிக்க வேண்டாம், முதலில் குழந்தைகள், பின்னர் இளம் வயதினர் என்று படிப்படியாக உயிரை பறிக்கலாம் என்று முன்னால் போட்ட தண்டோராவை அப்படியே திருப்பி,"இலை உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர" என்று போடச் சொன்னாராம்.   

இதை யாருமே ஒப்புக் கொள்ளவில்லையாம். "கிழம், கட்டைகள் இருக்கும் பொழுது, சிறு குழந்தைகள் சாவதாவது? இப்படி செய்தால், உலகில் முதியவர்கள்தான் இருப்பார்கள். மேலும் தங்களை விட இளையவர்கள் இறப்பதை பெரியவர்கள் பார்க்க நேருவதால் உலகமே சோகமாகி விடும்" என்றெல்லாம் கூறினார்களாம். எமன் பார்த்தானாம், தன்  உதவியாளரிடம், "உன் வாயில் எப்படி வருகிறதோ அப்படி தண்டோரா போட்டு விடு, நான் அதன்படி நடக்கிறேன்" என்று கூறி விட்டாராம்.

உடனே எமனுடைய உதவியாளர்,"காய் உதிர, பூ  உதிர, இலை உதிர, பழம் உதிர, பிஞ்சு உதிர "என்று கலந்து கட்டி தண்டோரா போட்டு  விட்டாராம், அதன்படியே யமதர்மராஜனும் நடந்து கொள்ள ஆரம்பித்தாராம். அதனால்தான் உலகில் இறப்பு எந்த வயதிலும் நேருகிறதாம்.

எப்படி கதை? ரசித்தீர்களா? கொஞ்சம் வேடிக்கையான இன்னொரு கதை அடுத்த பதிவில்.