ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

வானப்ரஸ்தம்(சிறுகதை- தொடர்ச்சி)

                  வானப்ரஸ்தம்(சிறுகதை- தொடர்ச்சி) 

சங்கருக்கு கோபமாக வந்தது. என்ன பொறுப்பற்ற செயல்? தாமோதரன் எக்ஸ் சர்வீஸ் மேன். அவரே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது?

இந்த ஹோம் இருப்பதோ ஹைவேயில், ஏதாவது விபத்தில் மாட்டிக் கொண்டால் யார் பதில் சொல்வது?

நல்ல வேளை அவரை ரொம்பவும் தவிக்க விடாமல் தாமோதரன் வந்து விட்டார். 

"எங்கே சார் போய்ட்டிங்க? சொல்லம கொள்ளாம.."? 

"சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னு.."  

நல்லாப் போனீங்க? இனிமே எங்கேயாவது போறதுனா சொல்லிட்டு போங்க சார் 

இது என்ன பாய்ஸ் ஹாஸ்டலா? நாங்க வார்டன் கிட்ட பெர்மிஷன் வாங்கி கொண்டு போக?

"தப்பா புரிஞ்சுக்காதீங்க, இங்க இருக்கறவங்க எல்லோரும் சீனியர் சிட்டிசன்ஸ், வெளில போகும் போது மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறர்கள், அல்லது.."  

"எனக்கு அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. ஐ ஆம் பெர்பெக்ட்ல்லி  ஆல்ரைட்..

"ஒத்துக்கறேன், பட், இங்க ஒரு பார்மாலிட்டி இருக்கு, அதை அனுசரிக்கனும்" 

"ஓகே ஓகே, ஐ அண்டர்ஸ்டாண்ட்"

சற்று கோபமாக தாமோதரன் அந்த இடத்தை விட்டுச் சென்றார். 

சங்கர் ஐந்தாம் நம்பர் விஸ்வநாதனை பார்க்கச் சென்றார். டி.வி.பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதன்,இவரைக் கண்டதும் டி.வி.யை நிறுத்தினார்.

சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு, என்ன ரெண்டு நாளா சரியா சாப்பிடலையாமே? ஏன்?

ஏய்! அதெல்லாம் ஒண்ணுமில்லை.எங்கோ பார்த்தபடி பதில் சொன்னார். 

இல்ல, சாந்தி சொன்னாள் நீங்க ரெண்டு நாளா காய், கீரை இரண்டையும் தொடவே இல்லையென்று..

இன்னிக்கு என் வைஃப் திதி.. எனக்கு கீரை பிடிக்காது என்று கீரை மசியல் செய்யும் பொழுதெல்லாம் எனக்கு வேறு காய் செய்வாள், சில சமயம் அப்பளத்தை பொரித்து போடுவாள். அப்போதெல்லாம் வேண்டுமென்றே கீரை மசியலை போடச் சொல்லி அதை வழித்து எறிவேன். பாகற்காய் கறியும் அப்படித்தான். நேற்றும் இன்றும் எனக்கு அந்த நினைவுகள் வந்தன. பேசிக்கொண்டே வந்தவருக்கு தொண்டை அடைத்து, கண்களில் நீர் பெருகியது...

வருத்தப் படாதீங்க, என்று அவர் தோளில் காய் வைத்து ஆதரவாய் தடக் கொடுத்தபடியே இப்போ ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்  சொல்லட்டுமா?  

வேண்டாம் வேண்டாம். செஞ்ச பாவத்தை சொல்லி தீர்த்துக்கலாம் என்று உங்க கிட்ட சொன்னேன். 

அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஏதோ, சின்ன வயசு, ரத்தத் திமிரு, என்ன செய்யறோம்னு தெரியாம ஏதாவது செஞ்சுடறோம் , அவ்வளவுதான், உங்க பையன் எப்போ வரார்?

அடுத்த மாசம். என்னை அமெரிக்காவுக்கு கூப்படறான். தனியா போய் என்ன பண்ண போறேன்?

நோ,நோ, கண்டிப்பா போயிட்டு வாங்க.. ஒரு தடவ நிச்சயம் பார்க்கலாம்..

சினிமா ரெவியூ மாதிரி சொல்றீங்க..

அவசியம் போய்ட்டு வாங்கனு சொன்னேன்.. சரி, நான் கிளம்பறேன், நாளைக்கு உருளைக் கிழங்கு கறி பண்ணிடலாமா? 

விஸ்வநாதன் சிரித்துக் கொண்டே வழி அனுப்ப, சங்கர் அங்கிருந்து கிளம்பினார்.

அன்றைய விசாரிப்புகளும், வேலைகளும் முடிந்து விட்டன என்று தோன்றியது. சாப்பிட்டு விட்டு படுத்தவர் நன்றக உறங்கியிருக்க வேண்டும். யாரோ கதவை பலமாக இடிக்கும் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டார். 

வெளியே கண்ணன் நின்று கொண்டிருந்தான்.  என்ன சார் அசதியா? 

என்னவோ தெரியல..? மணி என்ன?

ஆறு பத்து 

ஓ? இவ்ளோ நேரமா தூங்கியிருக்கேன்?  மெடிடேஷன் ஹால் விளக்கு போட்டாச்சா?

தியாகு சாரும். அவர் வைஃப்உம் இருக்காங்கனு நினைக்கிறேன், அங்க லைட் எரியுது. வெளியே எட்டி பார்த்தபடியே சொன்னான். 

நீங்க கேட்ட சாமானெல்லாம் இதுல இருக்கு, தாமு சாருக்கு மாத்திரை வாங்கி கொடுத்து விட்டேன், நான் கிளம்பட்டுமா?

சரி. ஜாக்கிரதையா போ" என்று அவனை அனுப்பி வைத்தவர், முகம் கழுவி விபூதி இட்டுக் கொண்டு கேண்டீனில் அவருக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த காபியை குடித்து விட்டு, மெடிடேஷன் ஹாலுக்கு வந்தார். தியாகுவும் அவர் மனைவியும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தனர். 

சங்கர் அவர்களுக்கு பின்னல் அமர்ந்து கொண்டு கணைகளை மூடி அவர்கள் ஜெபிப்பதை கேட்டார். இந்த ஹோமில் கிட்டத்தட்ட ஐம்பது வீடுகள் உள்ளன. ஆனால் அதில் தினசரி மெடிடேஷன் ஹாலுக்கு தினசரி வருவது தியாகராஜன் தம்பதியினர்தான். வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் பெண்கள் சிலர் வருவார்கள். அறுபது,எழுவது பேர் சொகரியமாக உட்காரலாம் என்னும்படியான கூடம். அதில் கிழக்கே பார்த்து ஒரு மேடை அதில் பிள்ளையார், முருகன், வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், துர்கை படங்கள். இரண்டு பக்கங்களிலும் விளக்கு, அதை தவிர வலது பக்க சுவரில், ஓம் என்று சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட நீல நிற படம். 

தியாகராஜனின் மனைவி இங்கிருக்கும் நாட்களில் தினசரி கோலம் போட்டு, படங்களுக்கு இங்கு பூக்கும் மலர்களையே மாலையாக தொடுத்துப் போடுவார். கணவன், மனைவி இரெண்டு பெரும் இரண்டு வேளையும் ஸ்லோகங்களைச் சொல்வார்கள். மற்ற நாட்களில் சான்டிங் பாக்சின்  அலுப்பூட்டும் மந்திர உச்சாடனம். 

இங்கிருக்கும் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டவர் தியாகராஜன். புலம்பல், குற்றம் கண்டு பிடித்தல் என்று எதுவும் கிடையாது. அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர். இரண்டு மகள்கள், ஒரு மகன். மருமகன்களில் ஒருவர் டாக்டர், ஒருவர் ஆடிட்டர், மகன் வெற்றினேரி டாக்டர் என்று எல்லோரும் வசதியாக இருந்தாலும், இவர் யாரோடும் இருக்க விரும்பவில்லை. 

நம்மளுடைய சாஸ்த்ரமே வாழ்க்கையை நாலா பிரிச்சிருக்கு. பிரம்மச்சர்யம். கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சன்யாசம்னு. ப்ரம்மச்சர்யத்தில் படிக்கிறோம், அப்புறம் கல்யாணம் பண்ணிண்டு குழந்தை, குட்டி, அவர்களை முன்னுக்கு கொண்டு வருவது என்று கிரஹஸ்தாச்ரம வாழ்க்கை செல்கிறது. குழந்தைகள் செட்டில் ஆயாச்சுனா நாம அங்கிருந்து நகர்ந்துடனும், அங்கேயே இருந்தோம்னா நம்ம ஐடியாக்களை அவர்கள் மீது திணித்து, அவர்கள் வாழ்க்கையை வாழ விட மாட்டோம். அந்த காலத்தில் காட்டில் போய் தபஸ் செய்வது என்று காலத்தை கழித்தார்கள். இப்போ காட்டிற்கு போக முடியாது. இம்மாதிரி சீனியர் சிடிஸின் ஹோம்களை வானப்ரஸ்த வாழ்க்கையாக  நினைத்து கழிக்க வேண்டும். கடைசி கட்டம் சன்யாசம். வழக்கை எடுத்ததன் நோக்கம் என்ன என்பதை ஆன்ம விசாரம் செய்ய வேண்டும். அதற்க்கு வானப்ரஸ்த வாழ்க்கையைத்தான் பயன் படுத்திக்க கொள்ள வேண்டும். 

இப்படி வெறும் பேச்சோடு நிற்காமல் அதை நடை முறைப் படுத்தவும் செய்வார். காலையில் யோகா, பிறகு வாக்கிங். குளியலுக்குப் பின்னர் பூஜை, அதன் பிறகுதான் காலை சிற்றுண்டி சாப்பிடுவார். பின்னர் புத்தகங்கள் வாசிப்பது, எப்போதாவது டி.வி.பார்ப்பது, மாலையில் மீண்டும் பாராயணம், மெடிடேஷன் என்று பொழுது ஓடும். பெரும்பாலும் மௌனமாகத்தான் இருப்பார். ஆனால் சிடுமூஞ்சி அல்ல. முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். முகத்தின் அந்த சிரிப்பும், கணங்களின் ஒளியும் நிஜமாகவே வானப்ரஸ்த வாழ்க்கையை கடைபிடிக்கிறாரோ என்றுதான் தோன்றும். 

இங்கிருக்கும் பெரும்பான்மையோர் சாப்பாட்டை பற்றி குறை பட்டுக் கொள்ளும் பொழுது குறை சொல்லாத ஒரே ஆள் இவர்தான். அவரே கொஞ்ச நாட்களுக்கு முன்னால், "எல்லோரும் பணம் கட்டி இங்கு வசிக்கிறார்கள், சாப்பாடு நன்றாக இருக்க வேண்டாமா"? என்றார்.

"நாங்க சமையல் சாமான்கள் வாங்கித்தான் தர முடியும், ராஜூகிட்ட சொல்றேன்.."

சமையலுக்கு ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த ஹோம் ஆரம்பித்ததிலிருந்து சமைத்து கொண்டிருந்த ராவ் மிக நன்றாக சமைப்பார். அவர் சென்ற பிறகு இரண்டு வருடங்களில் நான்கு சமையல்காரர்கள் மாறி விட்டார்கள். சமைக்க வருபவர்கள் மிகவும் குறைவு, வந்தவர்கள் நிலைத்து நிற்பது அதை விட கடினம். 

இப்போது இருக்கும் ராஜுவுக்கு மூட் நன்றாக இருந்தால் சமையல் நன்றாக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் மூட் நன்றாக இருக்காது.

சமையல் சரி இல்லை என்பதை காரணம் காட்டியே நாராயணன் என்பவர் ஹோமை விட்டு சென்று விட்டார்.

நாராயணன் பாலக்காட்டுக்காரர் . மிளகூட்டல், புளிப் பச்சிடி, அவியல், எரிசேரி, துவரன், காளன்,ஓலன்,மெழுக்கு வரட்டி, என்று வித விதமாக சாப்பிட்டு பழகிய நாக்கு.  

பொங்கல் என்றால், குறுமிளகு இருக்கணும், முந்திரி பருப்பு இருக்கணும், நெய் நிறைய விடணும், அவியலுக்கு என்ன இப்படி காய் நறுக்கி இருக்கிறீர்கள்? நீளமாக நறுக்க வேண்டாமா? என்றெல்லாம் வக்கணை பேசுவார்.

அதிகம் சாப்பிடுதல், அதிகம் பேசுதல் என்னும் இருவகையான பாவங்களை நாக்கு செய்கிறது என்று ஒரு மகான் கூறியிருக்கிறார். சாப்பிடுவதைப் பற்றி அதிகம் பேசுதல் மூன்றாவது பாவம். ஆனால் என்ன செய்வது ருசிக்கு அடிமையான நாக்கு பேசத்தான் செய்கிறது.

இன்றைய செய்திதாளில் தலையங்கம் படிக்கவில்லை, படித்து விடலாம் என்று பேப்பரை பிரித்து வைத்துக் கொண்ட பொழுது, தியாகராஜன் செல்லில் அழைத்தார். பதட்டமான குரலில், சார் கொஞ்சம் சீக்கிரம் ஏதாவது வண்டி அரேன்ஜ் பண்ண முடியுமா?
ஏன்? என்னாச்சு?
என் மிஸ்ஸஸ் என்னவோ மாதிரி இருக்கா. உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிண்டு போகணும்....
அவர் இருப்பிடத்திற்கு விரைந்து சென்ற பொழுது, குத்திட்ட பார்வையோடு நாற்காலியில் சரிந்து உட்காந்திருப்பதை காண முடிந்தது. சங்கருக்கு உண்மை புரிந்தாலும் அதை சொல்ல விருப்பமின்றி கால் டாக்சி புக் செய்தார். அதற்குள் தியாகராஜன் தன் மாப்பிளைக்கு போன் செய்திருந்தார். ஆனால் அவர் வருவதற்குள் மாமியார் முடிவு தெரிந்து விட்டது. 

இங்கே ஹோமில் பலருக்கும் தியாகுவின் மனைவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை தந்தது. இவருக்காவது ஹெல்த் இஷ்யூஸ் உண்டு, அவங்க நல்லாத்தானே இருந்தாங்க.. அவங்க ரெண்டு பெரும் ராமர் சீதை மாதிரி இருப்பாங்க, இவர் எப்படி இந்த அதிர்ச்சியை தாங்கிக்க போறாரோ?

தியாகராஜன் அந்த அதிர்ச்சியை நன்றாகவே தாங்கிக் கொண்டார். மனைவின் காரியங்கள் முடிந்த பிறகு மகள்களும், மகனும் வற்புறுத்திய பொழுதும் அவர்களோடு தங்காமல் ஹோமிற்கே திரும்பி வந்தார். 

இப்பொழுது அவருடைய வானப்ரஸ்த வாழ்க்கை முறை மிகவும் தீவிரமடைந்தது. உணவிலும் கட்டுப்பாடுகள் அதிகமாயிற்று. இதய நோயாளியான அவர் சாப்பிட வேண்டிய மருந்துகளை சாப்பிடுகிறாரா? என்ற சந்தேகம் வந்தது. 

"மாத்திரைகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிடுகிறீர்களா"? என்று சங்கர் கேட்டதற்க்கு 

மாத்திரை டப்பாவை தூக்கி அவர் முன் போட்டு, "இவ்ளோ மாத்திரை சாப்பிட்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் கடமைகளை எல்லாம் முடிச்சாச்சு.. இனிமே எதுக்காக நான் மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு என் லைஃப்ஐ நீட்டித்துக் கொள்ளணும்?போதும் .."
என்றார். 

"ஐயோ அதெல்லாம் தப்பு. இருக்கிற வரைக்கும் நன்னா இருக்கணும். மாத்திரை சாப்பிடாம ஸ்ட்ரோக் வந்து டோட்டலி டிபெண்டெண்ட் ஆகி விட்டோம் என்றால் மற்றவர்களுக்கு பாரமாகி விடுவோம். இந்த ஹோமிலேயே நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம். அப்புறம் நீங்கள் வேறு இடம்தான் பார்க்கணும்.."

"வேற எந்த வீட்டிற்கு போவது? இனிமேல் போக வேண்டிய வீடு அதுதான்" என்று மேலே கை காட்டினார். 

"அதெல்லாம் நம்ம கைல இல்ல", 

"நம்ம கைலதான் இருக்கு. இந்த மாத்திரைகளை நிறுத்தி விட்டால் சீக்கிரம் போய் விடலாம். அந்தக் காலத்தில் வடக்கிருத்தல் என்று ஒரு விஷயம் உண்டு. ராஜாக்கள் தாங்கள் உயிர் வாழ்ந்தது போதும் என்று நினைத்தால், அரச பதவியைத் துறந்து, ஊர் எல்லையில் வடக்கு நோக்கி அமர்ந்து சோறு, தண்ணீர் எல்லாவற்றையும் படிப்படியாக குறைத்து உயிரை விடுவார்களாம். இப்போது சோறு, தண்ணீர் எதையும் விட வேண்டாம், இந்த மாத்திரைகளை நிறுத்தினால் போதும்... கோப்பெருஞ்சோழன்..."

 "வாட் இஸ் திஸ்? கம் ஆன்! பக்கத்து கோவிலில் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு, தினமும் சாயந்திரம் கச்சேரி எல்லாம் இருக்கு. இன்னிக்கு ராஜேஷ் வைத்யா வீணை..போலாமா"? 

சங்கர் பேச்சை மாற்றினார்.  அதன் பிறகு தியாகு அவரிடம் மரணம் பற்றி பேசுவதில்லை.

இடையில் சில முறைகள் மகன், மகள்கள் வீடுகளுக்குச் சென்று வந்தார். 

மனைவியின் முதல் திவசம் முடிந்து வந்த பொழுது கொஞ்சம் தெளிவாகவே இருந்தார். சோகத்திலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் தோன்றியது. 

ஒரு நாள் மாலை, "சங்கர், எனக்கு சாப்பாடு ரூமுக்கு கொடுத்தனுப்ப முடியுமா"? என்று கேட்டார் 

"ஓ எஸ்! தாராளமா? உடம்புக்கு முடியலையா"?

"கொஞ்சம் டயர்டா இருக்கு.."

அனுப்பறேன். என்றவர், கேண்டீன் பையனிடம், "தியாகராஜன் சாப்பாடு கேக்கறார், கொடுத்துட்டு வந்துரு" என்றார்.

சாப்பாடு கொண்டு போன பையன், "சார், சார், இங்க வாங்க.." என்று உரக்க குரல் கொடுத்தான்.

சங்கர் அங்கே சென்ற பொழுது, தியாகு கீழே விழுந்து கிடப்பதை பார்க்க முடிந்தது. 

"சாப்பாட்டை வாங்க எழுந்தார், அப்படியே விழுந்துட்டார்.."
குரலும், கைகளும் பதற பையன் விவரித்தான். 

தியாகராஜன் ஆசைப்பட்டபடியே அவருக்கு முடிவு வந்து விட்டது. அவருடைய மகன் வந்து கணக்கை செட்டில் செய்து, அறையை ஒழித்த பொழுதுதான் அவர் மாத்திரைகள் எதையும் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அவர் பாஷையில் வடக்கிருந்து உயிர் விட்டு விட்டாரா? கடவுளே!