கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 6, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


தமிழ் சினிமாவுக்கு இப்போது பரிசோதனை காலம்.  புதுப்புது இளைஞர்கள் புத்தம் புது ஐடியாக்களோடு
தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்து விடுவது என்று பரிக்ஷார்த்த
முயற்சிகளில் இறங்குகிறார்கள். பரிக்ஷார்தம் என்றதும் பயந்து
விட வேண்டாம், உலகத்து சோகத்தையே சுமக்கும் கதாநாயகி,
இருட்டு, அதீத வன்முறை போன்றவைகள் கிடையாது. யதார்த்தமான
கதை, சுவாரஸ்யமான சம்பவங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான கதா
பாத்திரங்கள் என்று நம்முடைய உலகத்தையே ஒரு தூரப்பார்வையாக
நம்மை பார்க்க வைக்கும் முயற்சி! அப்படி ஒரு நல்ல முயற்சிதான் அறிமுக
இயக்குனர் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' படம்.

கதை என்று  சொல்ல  பெரிதாக   எதுவும்  இல்லை, பொறி இயல் கல்லூரியில் படிக்கும் அன்பான குடும்ப சூழலை கொண்ட சித்தார்த்துக்கும்,   அதே கல்லூரியில் படிக்கும் எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் விவகாரத்தை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் பெற்றோரை  
உடைய அமலா பாலுக்கும்  இடையே துளிர்க்கும் காதல், அது சந்திக்கும் நெருக்கடிகள்தான் தீம். கதையை நகர்த்திச் செல்வதற்காக பிரியப் பார்க்கும் அமலா பாலின் பெற்றோர்களின் ஊடலும், சித்தார்த்தின் நண்பர்களின் காதல் சொதப்பல்களும் ஊறுகாயாக உதவுகின்றன. ஆனால்
சைட் டிஷ்ஷின் அளவு மெயின் உணவின் அளவை விட அதிகமாக இருப்பது கொஞ்சம் தமாஷ்தான். இட்லியை சாம்பாரில் தோய்த்து சாப்பிடுபவர்களும் உண்டு, சாம்பாரில் மூழ்க வைத்து குடிப்பவர்களும் உண்டு. பாலாஜி மோகன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகளை அமைத்திருப்பதில் தவறில்லை
அதற்காக அமலா பாலின் பெற்றோர்கள் மீண்டும் சேரும் காட்சியை கூட அப்படி காமெடி
ஆகியிருக்க வேண்டுமா என்ன?

பாத்திரங்களுக்கான  நடிகர்கள் தேர்வு கச்சிதம்! டைலர் மேட் ரோலில் சிக்கென
பொருந்துகிறார் சித்தார்த். ஒரு முழுமையான கத நாயகி ஆகிவிட்டார் அமலா பால்.
தன்னுடைய குரலால் அவருடைய நடிப்புக்கு உயிரூட்டியுள்ள தீப வெங்கட்டிற்கு
ஸ்பெஷல் சபாஷ்! ஒருவருக்கு மற்றவர் காம்ப்ளிமேன்றியாக ஒரு ஜோடியை
திரையில் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது?

படத்தின் ஆரம்ப காட்சிகள் நாளைய இயக்குனரை பெரிய திரையில் பார்ப்பது போல
அமெச்சூர் தனமாக இருந்தாலும் பின் பாதியில் நல்ல முதிர்ச்சி  வந்து விடுகிறது. இயக்குனர்
பாசாகி விடுகிறார், ஆனால் போக வேண்டிய தூரம் அதிகம். 

 பால்,சக்கரை, டிகாஷன் எல்லாம் சரியான விகிதத்தில்  கலந்த  இன்ஸ்டன்ட்  காபி!  இளைஞர்களுக்கு ருசிக்கும்.