புத்தம் புது காலை(விமர்சனம்)
தமிழின் முதல் அந்தாலஜி(anthology) படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் ப்ரைமில் பார்த்தேன். இது அமேசான் பிரைம்ல்தான் வெளியிடப் பட்டது. அந்தாலஜி என்பது ஒரே கருவை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகள் . இதில் லாக் டவுன் நாட்களில் நடப்பதை அடிப்படையாக கொண்ட கதைகள் படமாக்கப்பட்டுள்ன.
இந்த ஐந்து படங்களில் 'இளமை இதோ இதோ' படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவும்,
இரண்டாவது படமான அவளும் நானும்/அவரும் நானும் படத்தை கௌதம் வாசுதேவன் மேனனும்
மூன்றாவது படமான எனி ஒன் காஃபி படத்தை சுஹாசினி மணிரத்னமும்,
நாகவது படமான ரீ யூனியன் ஐ ராஜீவ் மேனனும்,
ஐந்தாவது படமான மிராக்கிள் படத்தை கார்த்திக் சுப்புராஜும் இயக்கி உள்ளனர்.
இளமை இதோ இதோ: முன்னாள் காதலரான, மனைவியை இழந்து, தனியாக வாழும் ஜெயராமை காண அவரது முன்னாள் காதலியான கணவனை இழந்த ஊர்வசி யோகா ரிட்ரீட்டுக்கு பாண்டிச்சேரி செல்வதாக மகனிடம் சொல்லிவிட்டு வருகிறார். அவர் வந்ததும் 21 நாட்களுக்கு லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது.
21 நாட்கள் சேர்ந்து வசிக்கும் அவர்கள் எடுக்கும் முடிவு என்ன?
ஊர்வசியும், ஜெயராமும் ஊதித் தள்ளிவிட்டார்கள். காதல் வசப்படும் பொழுது வயது குறைந்து போகிறது என்பதை உணர்த்த இளமையான ஜெயராம், ஊர்வசி பாத்திரங்களில் காளிதாஸ் ஜெயராம்(ஜெயராமின் மகன்), கல்யாணி பிரியதர்சனை நடிக்க வைத்திருப்பதையும் காளிதாஸ் அப்பாவை காப்பி அடிக்காமல் தனி பாணியை பின்பற்றியிருப்பதையும் பாராட்டலாம். இருவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். சகஜமாக, சவுகர்யமாக feel good உணர்வு தரும் படம்.
லாக் அவுட் சமயத்தில் தனியாக வசிக்கும் ரிட்டையர்டு சயிண்டிஸ்டான தாத்தாவோடு சேர்ந்து இருக்க வரும் பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே வலுப்படும் உறவைப் பேசுகிறது கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அவரும் நானும்/அவளும் நானும் படம்.
நகைச்சுவை நடிகராக அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகன் என்று இதற்கு முன் சில படங்களில் நிரூபித்திருந்தாலும் இதில் ஒரு தனி பரிமாணம் காட்டுகிறார். பேத்தியாக வரும் ரிது வர்மா பார்க்கவும் அழகு, நடிப்பும் அப்படியே. நிஜமான தாத்தா,பேத்தியை பார்ப்பது போல்தான் இருக்கிறது. இந்த தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த படம் இது.
சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருக்கும் எனி ஒன் காஃபி? படத்தை ஒரு குடும்பப் படம் எனலாம். சுஹாசினி, அனு ஹாசன், சுருதி ஹாசன், சாருஹாசன் மனைவி கோமளா என்று குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். இவர்களோடு காத்தாடி ராமமூர்த்தி.
கோமாவில் இருக்கும் தாயாரை பார்க்க லண்டனிலிருந்தும் துபாயிலிருந்தும், மூத்த சகோதரிகள் வருகை தர, மும்பையில் இருக்கும் கடைசி பெண் மட்டும் அம்மா மீது கோபித்துக் கொண்டு அக்காக்கள் அழைத்தும் வர மறுக்கிறார். திடீரென்று மனம் மாறி (மன மாற்றத்திற்கு காரணம் சொல்லப் படவில்லை) அம்மாவிடம் வீடியோ காலில் மன்னிப்பு கேட்டு, அவருக்காக ஒரு பாடலும் பாட, அம்மாவிற்கு நினைவு திரும்பி விடுகிறது.
மூத்த சகோதரிக்கு டிஸ்லெக்சிக்காக ஒரு குழந்தை, இரண்டாவது சகோதரிக்கு நீண்ட நாட்கள் கழிந்து கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது போன்றவை கதையின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை.
அனு ஹாசன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டிருந்தாலும் இயல்பான நடிப்பு. சுஹாசினி வழக்கம் போல். சுருதி ஹாசன் ஓகே! படம் ஸோ ஸோ!
ரீ யூனியனில், தன் ஸ்கூட்டி பஞ்சரானதால் மருத்துவராக இருக்கும் தன்னுடைய பள்ளித் தோழன் வீட்டிற்கு வருகிறார் ஆண்ட்ரியா. பள்ளித் தோழனாக கர்னாடக இசைப் பாடகரான குருசரண். ஜி.என்.பி.,பாலமுரளி, சேஷ கோபாலனைத் தொடர்ந்து சிக்கில் குருசரணா? நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லீலா சாம்சன். காஸ்டிங், செட்டிங், ஆக்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை??
ஆண்ட்ரியா டிரக் அடிக்ட்டாம், அவரை மீட்க ஹீரோவும், அவன் அம்மாவும் முயல்கிறார்களாம். எதிலும் ஒரு ஆழமோ, அழுத்தமோ இல்லை. அளவிற்கு அதிகமாக ஆங்கில வசனங்கள்.
இந்த படத்தில் என்னைக் கவர்ந்தது குருசரண் வீடுதான். இந்த தொகுப்பிலேயே மொக்கையான படம் என்றால் இதுதான்.
அடுத்ததாக வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்! இது வரை எல்லா படங்களுமே மேல் மட்டத்தை மட்டுமே குறி வைத்தன. கார்த்தி சுப்புராஜின் மிராக்கிள் மட்டுமே கீழ் மட்டத்தை லாக் டவுன் எப்படி பாதித்திருக்கிறது என்று கொஞ்சம் நெகட்டிவாக தொட்டு பார்த்திருக்கிறது .
மிராக்கிள் நடக்கும் என்று நம்புங்கள் என்று ஒரு ஸ்வாமிஜி டி வி.யில் பேசுவதோடு படம் தொடங்குகிறது. லாக் டவுனில் வேலை இல்லாத இரண்டு திருடர்கள் காரை திருட முயற்சிப்பது கடைசியில் மிராக்கிள் நடக்கிறது, யாருக்கு? என்பது கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்பெஷல். ஆனால் படம் பெரும்பான்மை இருட்டில் நடப்பதாக காண்பித்திருப்பதை செல்போனில் பார்க்கும் பொழுது முழுமையாக ரசிக்க முடியவில்லை.
இந்த தொகுப்பில் ஒரு குறை எல்லா கதைகளுமே லாக் டவுனில் நடப்பதை காட்டினாலும், எந்த படமும் லாக் டவுனால் வேலை இழந்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் அவர்களின் ஈமச் சடங்கிற்கு கூட வர முடியாதது போன்ற விஷயங்களை தொடவே இல்லை என்பதுதான். ஐந்து
குறும் படங்களை சேர்த்து பார்த்தது போல் இருக்கிறது.