சனி, 9 மே, 2015

சில முரண்பாடுகள்

சில முரண்பாடுகள்

வாழ்க்கை என்பதே மாறிக் கொண்டே இருப்பதுதான். மாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை, என்றாலும் சில மாறுதல்கள் வியப்பாகத்தான் இருக்கின்றன. 

நாங்கள் குழந்தைகளாக இருந்த பொழுது ஒரு வீட்டில் குறைந்த பட்சம் எட்டு நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு வீட்டிற்கு ஒரு குளியல் அறை ஒரு கழிப்பறைதான் இருக்கும். 

இன்றோ ஒரு வீட்டில் நான்கு பேர் என்பது கூட குறைந்து மூன்றாகி விட்டது.  ஆனாலும் அந்த மூன்று பேருக்கு மூன்று படுக்கை அறைகள், மூன்று அட்டாச்ட் பாத் ரூம்!!!

இப்போது போல 2BHK/3BHK என்றில்லாமல் திண்ணை, கூடம், தாழ்வாரம், முற்றம், ரேழி(இதில் வாசல் ரேழி, கொல்லை  ரேழி என்று இரண்டு உண்டு. எ ழுத்தாளர்  சுஜாதா'"நீளமான, குறுகலான, கோமணம் போன்ற இந்த பகுதியைத்தான் நாங்கள் ரேழி என்போம் என்று ஒரு கதையில் எழுதியிருப்பார்). ரேழி உள்,  என்ற அந்த செட் அப்பில்  ரேழி உள் என்பது தான் படுக்கை அறையாக கருதப் படும். அப்போதைய வீடுகளின் திண்ணை எல்லாவற்றையும் கொள்ளும் மகாராஜன் கப்பல்! வீட்டிற்கு வரும் விருந்தாளிகளில் ஆண்களுக்கு அடைக்கலம் தருவது இந்த திண்ணைதான். 

வளைகாப்பு, சீமந்தம், பூணூல், ஆண்டு நிறைவு போன்ற சிறிய விசேஷங்கள் வீட்டில்தான் நடக்கும். அதற்கே குறைந்தது 100 உறவினர்கள் வருவார்கள். விசேஷங்கள் நடக்கும் வீட்டில் இடமில்லை என்றால் அக்கம் பக்கம் வீடுகளில் படுத்துக் கொள்வார்கள்( என்ன இப்போ? ஒரு ராத்திரிதானே..?.)  

ஏன் திருமணங்கள் கூட இரண்டு வீட்டிர்கிடையே பந்தல் போடப் பட்டு, ஒரு வீட்டில் மாப்பிள்ளை வீட்டு காரர்களை தங்க வைத்து, மற்றொரு வீட்டில் பெண் வீட்டு காரர்கள் தங்கிக் கொண்டு நடத்தி இருக்கிறார்கள்.  இன்றோ எல்லா விசேஷங்களும் மண்டபங்களில்தான் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு திருமண மண்டபமும் அதற்க்கு அருகிலேயே ஒரு மினி ஹாலை குட்டி போட்டு விடுகிறது. உறவினர்கள் எண்ணிக்கை மிகவும் அருகிப் போய் விட்டாலும், வரும் விருந்தாளிகள் தங்க தனியாக ரூம் போட வேண்டி இருக்கிறது. 

அதைப் போல எங்களின் பள்ளி நாட்களில் டியூஷன் வைத்துக் கொள்வது மிகவும் அவமானகரமான விஷயம். மக்கு பிள்ளைகள்தான் டியூஷன் வைத்து கொள்வார்கள் என்று ஒரு அபிப்ராயம் உண்டு.  இன்று மிக நன்றாக படிப்பவர்களும் டியூஷன் வைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமில்லை, எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், யாரிடம் டியூஷன் படிக்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்களின் திறன் மதிப்பிடப் படுகிறது.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை விளையாட்டு, பொழுது போக்கு, போன்ற பல விஷயங்கள் மறுக்கப்பட்டு மிகக் கடுமையாக பிழியப்படுகிறார்கள். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அந்த மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் கூட, ரிசல்ட் வரும் முன்பே நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள். 
நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியும் என்ற எண்ணம்... !

வேலைக்கு சேர்ந்தாகி விட்டால் போதுமா? வெளி நாட்டிற்க்கு சென்றாக வேண்டுமே.. விசா ஆஞ்சநேயருக்கோ, விசா வினாயகருக்கோ வேண்டிக் கொண்டு, தேங்காயோ, மாங்காயோ கட்டி மகனை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறோம். மகளாக இருந்தால் அமெரிக்க மாப்பிள்ளைக்குத்தான் முதலிடம். 

அமெரிக்காவில் குப்பை கொட்டி விட்டவர்களால் இங்கே திரும்பி வர முடியுமா? இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தனியாக இருக்க வேண்டாம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால்,"இவர்களுக்காக நாங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறோம்? எங்களை கொண்டு முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டார்களே.."? என்று புலம்புகிறார்கள். வேடிக்கை மனிதர்கள்.