Tuesday, October 17, 2017

ஜோசியம் பார்கலையோ..? ஜோசியம்

ஜோசியம் பார்கலையோ..? ஜோசியம் "நீ ஐந்தாம் தேதி பிறந்தவளா?" என்று என்னை அதிகம் அறியாத, ஒரு பெண் கேட்ட அந்த கேள்விதான் எனக்கு நியூமராலஜியில் ஆர்வத்தை தூண்டியது. 

ஒரு மனிதரை பார்த்து சில நாட்களிலேயே அவருடைய பிறந்த தேதியை கணிக்க முடியுமென்றால்...? அது எப்படி சாத்தியம் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.அந்த சமயத்தில் ராமண்ணா என்று ஒரு ஜோசியர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.அவரை நாங்கள் ஜோசியர் மாமா என்போம்.  பரம்பரை ஜோதிடரான அவரின் கணிப்புகள் மிகவும் துல்யமாக இருக்கும். அவரிடம் நான் அதிகம் விவாதித்திருக்கிறேன். ஒருமுறை சாரதா தேவியின் ஜாதகத்தை யாரென்று சொல்லாமல் அவரிடம் காண்பித்து என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று அதிகப்ரசங்கித் தனமாக பரீட்சை கூட செய்தேன். ஆனால் அவர் மிகச் சரியாக கூறி என் வாலை நறுக்கினார். அப்போது பால ஜோதிடம் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அதை படித்து விட்டு ஜோசியர் மாமாவிடம் சந்தேகங்கள் கேட்பேன்.

எனவே ஜாதகத்தில் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது. என் மூத்த சகோதரி கை ரேகை ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் வைத்திருந்தார். அவைகளை படித்து விட்டு நானும் அவரும் கருத்து பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை என் தோழி ஒருத்தியின் கைய முதலில் நான் பார்த்தேன், பிறகு என் அக்கா பார்த்துவிட்டு,"உங்க வீட்டில் உங்கள் முன்னோர்கள் யாராவது கோவில் கட்டியிருக்கிறார்களா?" என்று கேட்டார். உடனே என் தோழி,"ஆமாம் என் அம்மா சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று கட்டி அதை பராமரிக்கவும் செய்கிறார்" என்றாள்.

எனக்கு என்னை குறித்து அதாவது என் ஜோதிட அறிவைக் குறித்து மிகவும் வெட்கமாக போய் விட்டது. நாம் இருவரும் ஒன்றாகத்தானே படித்தோம், பிறகு ஏன் அவரால் கணிக்க முடிந்த ஒரு விஷயத்தை என்னால் கணிக்க முடியவில்லை? இதிலிருந்து வெறும் ஏட்டறிவு மட்டும் குறி சொல்வதற்கு போதாது. இன்ட்யூஷன் வேண்டும் என்னும் விஷயம் தெளிவானது. இன்ட்யூஷனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் பூஜைகள்,மந்திர ஜெபங்கள் போன்றவை அவசியம் என்பதால் அதை அதோடு முடித்துக் கொண்டேன். ஆனாலும் ஜாதகம், நியூமராலஜி,நேமாலஜி போன்றவற்றில் ஆர்வம் குறையவில்லை. அது சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிப்பதும், அதை பற்றிய ஞானம் உள்ளவர்களோடு உரையாடுவதும் மிகவும் பிடிக்கும்.

இப்படி ஜாதகம், கை ரேகை ஜோதிடம், நியூமராலஜி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஞானம் உண்டு. நம்பிக்கை நிறைய உண்டு. என்றாலும் தொலைகாட்சியில் வரும் ராசி பலன் நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் வரும் ராசி பலன்கள் போன்றவற்றை அவ்வளவாக நம்புவதில்லை. இருந்தாலும் பார்ப்பேன். காரணம், ஜோசியர்கள் "எதிர்பார்த்த நன்மை நடக்கும், வழக்குகளில் வெற்றி, உத்தியோக உயர்வு, வீடு மனை வாங்கும் யோகம்" என்று அடுக்குவதற்கு இடையே விருச்சிக ராசிக்காரர்களையும், மகர ராசியில் ராகு இருப்பவர்களையும் ராகு காலம் பாதிக்காது, சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமி, நவமி நன்மையையே செய்யும். போன்ற சின்ன சின்ன ஜோதிட டிப்ஸ் கொடுப்பார்கள். அதை கேட்பதற்காகவே ராசி பலன் நிகழ்ச்சியை கேட்பேன்.

தொன்னூறுகளில் மங்கையர் மலரில் ஜெயலட்சுமி கிருஷ்ணன் என்பவர் எழுதி வந்த ராசி பலன்கள் எனக்கு பலிக்கும். ஒரு முறை அனுபவித்து கழிக்க வேண்டிய மாதம் என்று எழுதியிருந்தார். என்னடா இது? இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். அந்த மாதம் என் கணவர் கீழே விழுந்து, வலது கை பந்து கிண்ண மூட்டு உடைந்து பெரிதும் அவதிக்கு உள்ளானோம். இப்போது பாமா கோபாலன் எழுதும் ராசி பலன்களும் ஓரளவிற்கு பலிக்கின்றன.  மிக சமீபத்தில் ஒன்று பலித்தது.

குடும்பத்தில் ஒரு திருமணம்,அதற்காக புடவை, வேஷ்டிகள் வாங்க வேண்டும். தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால், காலையில் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று நினைத்தோம். சனிக் கிழமை ராகு காலம் காலை ஒன்பதிலிருந்து பத்தரை வரை, எனவே அதற்கு முன்பே கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்தோம். 

கிளம்பிக்கொண்டே இருக்கும் பொழுது ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் புதல்வர் சொன்ன 
ராசி பலனை செவி மடுத்தேன். என்னுடைய ராசிக்கு, "இன்றைக்கு உங்கள் செயல்பாட்டில் ஒரு பெரிய மற்றம் இருக்கும். நீங்கள் செய்யப்போவதை கேள்விப்படும் எல்லோரும் நம்ப முடியாமல் வாயைப் பிளப்பார்கள்" என்றார். அப்படி என்ன வித்தியாசமாக செய்து விடப்போகிறேன் என்று நினைத்தேன். 

தீபாவளி சமயமாச்சே, கடைகள் எல்லாம் சீக்கிரம் திறந்து விடுவார்கள் என்று நினைத்து, வீட்டிலிருந்து 8:30க்கு கிளம்பி, 8:45க்கு கடையை அடைந்து விட்டோம். என்ன ஆச்சர்யம்! கடையே திறக்கவில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களே வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். என் கணவரோ, இப்போதுதான் கடையே திறக்கிறார்கள், வா, நாம் போய் சிற்றுண்டியை முடித்து விட்டு வந்து விடலாம். என்றார். சரி, என்று உட்லண்ட்ஸ் சென்று சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திரும்பினோம். சாதாரணமாக நாங்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டு உட்லண்ட்ஸில் சாப்பிட்டு விட்டு வருவோம். இந்த முறை வித்தியாசமாக நேர்மாறாக செய்தோம். கும்பலே இல்லை(தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் இரண்டாவது சனிக்கிழமை)!!. நிதானமாக பார்த்து வாங்க முடிந்தது. நாங்கள்தான் முதல் போணியாம். நம்ப முடிகிறதா? இதைக் கேட்ட எல்லோரும் ஜீ தமிழ் ஜோதிடர் சொன்னதையே செய்தார்கள். நீங்கள்...?

Sunday, October 15, 2017

R.K. Laxman, The uncommon man!

R.K. Laxman, The uncommon man!

வீட்டை ஒழித்த பொழுது, என் மகனுக்கு திருமண பரிசாக வந்த, 'R.K. Laxman, The uncommon man' என்னும் புத்தகம் கண்ணில் பட்டது. புரட்டினேன், அடடா! என்ன ஒரு கலைஞன்! அவருடைய கார்ட்டூன்கள் பலதும் இன்றைக்கும் அப்படியே பொருந்துவது சோகம்தான். அவற்றில் நான் ரசித்த எள்ளல், கிண்டல், வருத்தம்,கோபம் என எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
50 Glorious years என்பதற்கு பதிலாக 70 glorious years என்று மாற்றிக் கொள்ளலாம் இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு 

மோடிக்கு மோதிரக் கையால் குட்டு 


Indian in Europe & European in India
அவருடைய கேரிகேட்ச்சர்களை(cariacture) பார்க்கலாமா?
இவர் யார் தெரிகிறதா?
இவர்? 
இதில் இருவரைத் தவிர மற்றவர்களை கண்டு பிடித்து விடலாம். 

அக்டோபர் 24, R.K. லக்ஷ்மண் அவர்களின் பிறந்த நாள் என்பது இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் வரை எனக்குத் தெரியாது. சந்தோஷ ஆச்சர்யம்!

Wednesday, October 11, 2017

ஷாஜஹானும், நந்தனாரும்

ஷாஜஹானும், நந்தனாரும் 

என்னடா இவள் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போட பார்க்கிறாளே என்று நினைக்காதீர்கள். வரலாற்றில் எப்படியோ தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருப்பவர்களில் இந்த இரண்டு  பேரும் உண்டு. 

நேற்று நந்தனார் குரு பூஜை என்று என் மூத்த சகோதரி குறும் செய்தி அனுப்பி  இருந்தார்.  அதைப் பார்த்ததும் அவர் வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டிருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. அதைப் போலவே பெரிதாக திரிக்கப்பட்டிருக்கும் இன்னொரு வரலாற்று செய்தி தாஜ்மஹால் காதல் சின்னம் என்பதும். எனவே இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று தோன்றியது.முதலில் நந்தனாரை எடுத்துக் கொள்வோமா? உண்மையில் பெரிய புராணத்தில் அவர் திருநாளைப் போவார் என்றுதான் குறிப்பிடப் படுகிறார். காரணம் அவர் எப்போதும் நான் "நாளைக்கு தில்லை செல்வேன்" என்று கூறிக் கொண்டிருப்பாராம். அவருக்கு கொடுமைக்காரராக ஒரு அந்தண எஜமானர் இருந்தார் என்பதற்கும், அவர் நந்தனாரை தில்லை செல்ல விடாமல் தடுத்தார் என்பதற்கும்  பெரிய புராணத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது. 

நந்தன் சரித்திரத்தை இசை நாடகமாக எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அந்த காலத்தில் நிலவிய ஜாதிக் கொடுமைக்கு எதிராக நந்தன் சரித்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சேர்த்து விட்ட விஷயம்தான் அந்தண ஆண்டை. 

தான் எழுதிய நந்தன் சரிதத்திற்கு மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை முன்னுரை எழுதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய கோபாலகிருஷ்ண பாரதி அவரை அணுகி கேட்ட பொழுது, நந்தன் சரித நாடகம் மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டிருப்பதால் மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அதற்கு மறுத்து விட்டாராம். மேலும் நந்தன் சரித பாடல்களில் 'வருகலாமோ ஐயா..' என்று ஒரு பாடல்  உண்டு. வருகலாமோ என்பது இலக்கண பிழையான சொல் என்பதால் அதுவும் பிள்ளையவர்களை கோபப் படுத்தி முன்னுரை எழுதவொட்டாமல் தடுத்ததாம். 

இருந்தாலும் எப்படியாவது மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் முன்னுரை எழுதி வாங்கிவிடுவது என்று முடிவு கட்டிய கோ.கி.பாரதியார், சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிள்ளையவர்கள் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுக்கும் நேரம். அவர் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்திருந்த பாரதியார் தன் நாடகத்திலிருந்து சில பாடல்களை மனமுருகி பாடிக்கொண்டிருந்தாராம், அதை உள்ளிருந்து செவி மடுத்த பிள்ளையவர்கள் அந்த பாடல்கள் பாடப்பட்ட விதத்தில் உருகி, வெளி வந்து, அவருடைய நந்தன் சரிதத்திற்கு முன்னுரை எழுதி கொடுத்தாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரிதம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஜாதிக்கொடுமையில் முன்னணியில் இருப்பது பிராமணர்கள்தான் என்ற எண்ணம் வலுப்பட்டு விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் நந்தன் சரிதத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி ஒரு பிராமணர்.அடுத்தபடியாக இப்போது பெரிதும் செய்திகளிலும், வலைப்பூக்களிலும் பேசப் படும் தாஜ் மஹால் விவகாரம். தாஜ் மஹாலை யாராவது காதல் சின்னம் என்றால் எனக்கு கோபம்தான்  வரும். ஏனென்றால் மும்தாஜ் மீது ஷாஜஹானுக்கு இருந்தது காதல் கிடையாது, காம வெறி. 

ஷாஜஹானின் அமைச்சர்கள் ஒருவரின் மனைவியான அர்ஜுமான்ட் பானு பேகம் என்பவளின் அழகால் வசீகரிக்கப்பட்டதால், அந்த அமைச்சரை கொன்று விட்டு அவளை தன்  மனைவியாக்கிக் கொள்கிறான் ஷாஜஹான். அவளோடு வாழ்ந்த பதிமூன்று வருடங்களில் பன்னிரெண்டு குழந்தைகள். வாழ வேண்டிய  இளம் வயதில் அநியாயமாக ரத்த சோகையில் இறந்து போன பரிதாபத்திற்குரிய பெண் மும்தாஜ். மனைவியை நேசிக்கும் யாராவது  இப்படி செய்வார்களா? அவனுக்கு மும்தாஜிற்கு முன்னாலேயே ஆறு மனைவிகள். மும்தாஜ் இறந்த பிறகும் அவன் திருமணம் செய்து கொள்வதையும், ஆசை நாயகிகள் வைத்துக் கொள்வதையும் நிறுத்தி விடவில்லை.  வயோதிகத்தில் கூட இதற்காக ஏதோ பச்சிலைகளையும், லேகியங்களையும் சாப்பிட போக அதனால் அவன் சிறுநீரகம் பாதிக்கப்பட, அரண்மனை மருத்துவர்கள் எச்சரித்ததால் கொஞ்சம் குறைத்துக் கொண்டானாம். இப்படிப்பட்டவன் மனைவி மீது கொண்ட காதலை போற்றும் விதமாக தாஜ் மஹாலை கட்டினான் என்றால் அதை விட அபத்தம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

தாஜ் மஹாலை வேறு ஒரு விதத்தில் காதல் சின்னம் என்று சொல்லலாம். கட்டிட கலையின் மீது ஷாஜஹானுக்கு இருந்த காதல்.! அந்த காதல்தான் அவனை தாஜ் மஹாலை கட்ட வைத்தது. அந்த சமயத்தில் நாடெங்கிலும் கடும் பஞ்சம் நிலவிய பொழுதும் அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்  படாமல் மக்களுக்கு அதிக வரி விதித்து வசூலான பணத்தை எல்லாம் தாஜ் மஹால் கட்ட பயன்  படுத்திக்க கொண்டான். இது முடிந்த பிறகு டில்லியில் தாஜ் மஹாலைப் போலவே கருப்பு மார்பிளில் மற்றுமொரு கட்டிடத்தை கட்ட தீர்மானித்திருந்தான். இவனை இப்படியே விட்டால் கஜானா காலியாகி விடும் என்ற அச்சத்தில்தான் அவ்ரங்கசீப் அவனை பதவியில் இருந்து இறக்கி விட்டு தான் முடி சூட்டிக் கொண்டான் என்பதுதான் நிஜமான வரலாறு.

பி.கு.
நான் இப்படி எழுதி இருப்பதால் தாஜ் மஹாலின் அழகை மறுக்கிறேன் என்று பொருள் கிடையாது. தாஜ் மஹால் ஒரு கட்டிட கலை அற்புதம் என்பதில் இரண்டாவது கருத்து  இருக்க முடியாது. ஆனால் அதை காதல் சின்னம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. Thursday, October 5, 2017

மகளிர் மட்டும் (விமர்சனம்)

மகளிர் மட்டும்
(விமர்சனம்) 
ஊடகத்தில் பணி புரியும், எதிர்கால மாமியாரோடு தங்கி இருக்கும் ஒரு பெண், தனக்கு மாமியாராக வரப்போகும் பெண்மணியின் கடந்த கால வாழ்க்கையை கேட்டு, அவளின் கல்லூரி தோழிகளை சந்திக்க வைத்து, அந்த மூவரையும் மூன்று நாட்கள் தங்க வைக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், கல்லூரி காலத்தில் டாம் பாயாக விளங்கிய அந்த பெண்களின் வாழ்வை திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதும்தான் கதை. மாறத் தேவை இல்லை என்கிறார்கள்.   

பெண்களின் துயரங்களை  காண்பிக்க வேண்டும் அதே சமயத்தில் ஆண்களை கொடுமைகாரர்களாக சித்தரிக்க கூடாது.  ஒரு சீரியஸ் விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். ஜோதிகா பப்லியாக தெரிய வேண்டும், கவர்ச்சி கூடாது. என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு படத்தை எடுத்திருப்பதாலோ என்னவோ ஆழமும், அழுத்தமும் இல்லை. 

படம் முழுவதும் ஜோதிகா ஆக்கிரமிக்கிறார். உடல் இளைத்து சிக்கென்று இருக்கிறார். 36 வயதினிலே போல புடவையில் வராமல் படம் முழுவதும் ஜீன்ஸில்தான் வருகிறார். என்றாலும் அந்த படத்தில்  இயல்பான நடுத்தர வயது பெண்மணியை பார்த்த திருப்தி இதில் வரவில்லை. 36 வயதினிலே பட ப்ரமோவில், "இனிமேல் என்னை கதாநாயகியாக பார்க்க முடியாது, கேரக்டர் ரோல்களில் பார்க்கலாம்" என்றார். ஆனால், உள்ளுக்குள் வாய்ப்பு கிடைத்தால் "மேகம் கருக்குது டங்கு சிக்கு, டங்கு சிக்கு" என்று ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது போல தோன்றுகிறது. 

தோழிகளாக வரும் ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா மூவரில் கடைசி பெண்மணி நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். ஊர்வசி தன் வழக்கமான நடிப்பால் கிச்சு கிச்சு மூட்டுகிறார், பானுப்ரியாவை பானுப்ரியா என்று அடையாளம் காண்பதே கடினமாக இருக்கிறது. தினசரி குடித்து விட்டு வரும் கணவன் மீது வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதாகட்டும், திட்டிக் கொண்டே இருக்கும் மாமியாருக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வதாகட்டும், சரண்யா சிறப்பாக செய்திருக்கிறார். சரண்யாவின் தொப்பியில் மற்றுமொரு சிறகு!

படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது கார்த்தியாம்!! நல்ல திறமை.  பின்பாதியில் காட்டப்படும் காடும்,அருவியும் கண்களுக்கு விருந்து. 

நாசர், மாதவன் போன்றவர்கள் வந்து போகிறார்கள். ஜோதிகாவால், ஜோதிகாவுக்காக, ஜோதிகாவின் படம். ஜோ மட்டும்.

Wednesday, October 4, 2017

உக்காரை அல்லது ஒக்காரை

உக்காரை  அல்லது ஒக்காரை 

நவராத்திரியின் பொழுது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமை செய்யும் இனிப்பு. சில வீடுகளில் தீபாவளி அன்று காலை இதை செய்வார்கள்.

தேவையான பொருள்கள் 
கடலை பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
வெல்லம்(துருவியது)  -  2 அல்லது 2 1/2 கப் 
தேங்காய் துருவல் 1 மூடி 
ஏலக்காய் - 5
முந்திரி - 10
நெய்  -  4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

முதலில் கடலை பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து நீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகளை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இட்லி தட்டில் வேக வைக்கவும். *பருப்பு கலவை வெந்ததும் அதை கொஞ்சம் ஆற விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.  


அது வெந்து கொண்டிருக்கும் பொழுது அடி கனமான ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் மூழ்கும் வரை நீர் விட்டு பாகு தயாரிக்கத் தொடங்குங்கள். நல்ல முற்றிய பாகாக இருக்க வேண்டும். முற்றிய பாகு என்பதை அறிய ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் விட்டு, அதில் இந்த பாகை விட்டு கையால் உருட்டினால் உருட்ட வரும். பாகு தயாராகும் வேளையில் துருவிய தேங்காயை வறுத்துக் கொள்ளவும். 

பாகு ரெடியானதும் உதிர்த்த பருப்பு கலவை, வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் பாகோடு சேர்த்து கிளறவும்.  அடுப்பை நிறுத்தி விட்டு, பொடி பண்ணிய ஏலக்காய், வறுத்த முந்திரி இவைகளையும் சேர்த்து கிளறினால், உக்காரை ரெடி.

சிலர் உக்காரையில் கொஞ்சம் நல்லெண்ணெய் விடுவார்கள். நான் நெய் மட்டுமே சேர்ப்பேன்.

பருப்புகளோடு புழுங்கல் அரிசியும் சேர்த்து செய்வதுண்டு.

* வெந்த பருப்பு கலவையை கைகளாலும் உதிர்க்கலாம், அல்லது மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றினால் பூவாக உதிர்ந்து விடும். 

Friday, September 8, 2017

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள் 

என்னுடைய பால்ய காலம் முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன. பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான். ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன? சிந்தாமணி,அமராவதி, டி.யூ.சி.எஸ்., போன்றவை தவிர சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள். அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள். நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.    

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள். விதம் விதமான குரல்களிலும், தொனி-  களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள். 

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் "ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ" (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை  "குத்தலையோ?" என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு   ஒருவர் கூவிக் கொண்டே செல்வார். 

ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார். கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, "பார் எத்தனை அழுக்கு" என்று நம்மிடம் காட்டுவார். "ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லை" என்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார். அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, "பூ...ட்... ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார். மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள். 

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்," உப்பு, வெள்ள வெள்ள (வெள்ளை, வெள்ளை) உப்பு.." என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள். வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?     

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள்  தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று. அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.கேஸுக்கு  புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும். சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும். 

மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும்  எல்லார் வீடுகளிலும் இருக்கும். 1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார். 
எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்.

அந்த சமயத்தில் ரா.கி.ரெங்கராஜன் அவர்கள் குமுதத்தில் 'ஷ்ணாயில் ' என்று எழுதிய கதையை படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அண்ணா கெரசின் ஆயில் விற்பவர். நன்றாக படிக்கும் அந்த மாணவன், எப்போதாவது அண்ணாவோடு உதவிக்கு செல்லும் போதெல்லாம் அண்ணாவிடம் அதை 'ஷ்ணாயில்' என்று சொல்வது தவறு, கெரசின் ஆயில் என்றுதான் கூறவேண்டும் என்பான். தம்பி கூறுவதை கேட்டுக் கொண்டாலும் அண்ணா ஷ்ணாயில் என்று கூவுவதை மாற்றிக் கொள்ள மாட்டார். பள்ளி இறுதி தேர்வு விடுமுறையில் அண்ணாவுக்கு ஒரு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விடும். எனவே அவன் மண்ணெண்ணெய் விற்கச் செல்வான். அவனோடு படித்த பெண் வந்து கெரசின் வாங்குவாள், இவனைத் தெரிந்தது போல காண்பித்துக் கொள்ள மாட்டாள். அவன் முதலில் கெரசின் ஆயில் என்று கூவுவான், அது அவனுக்கே வித்தியாசமாக ஒலிக்க, 'ஷ்ணாயில்' என்றே அவனும் குரல் கொடுக்கத்  தொடங்குவான். என்று முடியும் கதை. 

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும். மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள். மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.   

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள். சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள். ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும். காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது. நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.  

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில்  தட்டி 'டங் டங்' என்று ஒலி எழுப்புவார். பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும். அதற்கு பிறகு எங்கள் வீட்டிற்கு சனிக்கிழமைதோறும் வெண்ணை கொண்டு வருபவர் அரை கிலோ வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார். 

பெரும்பாலும் மதியத்தில்தான் "பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்" என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள்   வருவார்கள். 

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் 'பாம் பாம்'  என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள். 

ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப்  பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம். என் மகளுக்கு அரப்புத்தூள் என்றால் என்னவென்றே தெரியாது. 

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி 'பதநி , பதநி' என்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள். ஒரு அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் சூடான சேமியா பாயசத்தை,'சே..மி..யா.. பா..ய..ஸ்.." என்று விற்றுச் சென்றவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் இவை இரண்டையும் ருசித்ததில்லை. சேமியா பாயசம் பிரமாதமாக இருக்கும் என்பார் என் அண்ணா. 

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு. ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,களாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.  எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள். நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள். சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா? 

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது. மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின. தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன 
பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன. கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை  சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன. 

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன. மாறுதல்தானே வாழ்க்கை! 

Sunday, September 3, 2017

என் பின்னூட்டங்கள்

என் பின்னூட்டங்கள்

பெரும்பாலும் என் பின்னூட்டங்கள் கடைசியில்தான் வரும். காரணம் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பதிவுகளை படித்து முடிக்கவே நேரம் சரியாக போய் விடும். பிறகு தனியாக பின்னூட்டம் இடுவேன். சில சமயம் ரொம்ப நாளாகி விட்டது, இனிமேல் பின்னூட்டம் அளித்தாலும், அதை எழுதியவரே படிப்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எழுத விடாது. சில சமயங்களில் போன் வழியாக அனுப்பும் பின்னூட்டங்கள் போய் சேரவே சேராது  :(( 

எதற்கு இவ்வளவு வியாக்கியானம்? கீதா அக்காவின் யார் யாரை மன்னிப்பது என்னும் பதிவிற்கு பின்னூட்டம் எழுத நினைத்தேன், ஆனால் நாட்கள் மிக அதிகமாகி விட்டதால் தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது. நீங்களும் என் பதிவை படிக்கும் முன் கீதா அக்காவின் மேற்படி பதிவை ஒரு முறை படித்து விட்டால், தொடருவது சுலபமாக இருக்கும்.

கீதா அக்கா தன்னுடைய பதிவில் ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். மேலும், தனக்கு கம்ப ராமாயணத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது என்றும், வான்மீகி ராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமா சரித மாநஸ் படித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் துளசி தாசரும், கம்பரும் ராமனை தெய்வமாகவே சித்தரித்திருக்க, வான்மீகி  மட்டுமே ராமனை ஒரு மனிதனாக கண்டுள்ளார் என்றும் கூறியிருக்கிறார். 

இதிலெல்லாம் எனக்கும் உடன்பாடுதான். என்னுடைய ஒரே சந்தேகம் சீதை அக்னி பிரவேசம் செய்தாள் என்றால் நிஜமாகவே நெருப்பில் புகுந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளிப்பட்டாளா? என்பதுதான். ராமனையும், சீதையையும் அவதாரங்களாக கருதினால் இதை மறு பேச்சில்லாமல் ஒப்புக் கொள்ளலாம்,அப்படி இல்லாமல் சாதாரண மனிதர்கள் என்னும் பொழுது இது சாத்தியமா? என்று சந்தேகம் வருகிறது. 


எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர்,"புராணங்களை படிக்கும் பொழுது சில விஷயங்களை ஓவர் லுக் செய்ய வேண்டும், சில விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும், சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பார். லக்ஷ்மணன் பதினான்கு வருட வனவாசத்தில் தூங்கவே இல்லை என்பதை ஓவர் லுக் செய்ய வேண்டும், அவன் அப்படி கண்ணும் கருத்துமாக ராமனை கவனித்துக் கொண்டான் என்பதுதான் அதற்குப் பொருள் என்பார்.  இந்த அக்னி பிரவேச விஷயமும் அப்படிப்பட்ட ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சொற்கள், அல்லது  pharseகள் புழக்கத்தில் இருக்கின்றன. இப்போது, "அவனை செஞ்சுடணும்", "வெச்சு செய்யணும்" என்றெல்லாம் கூறினால், அது நல்லவிதமானது அல்ல. அதைப் போல, ''கேக் வாக்" என்றால் மிகவும் சுலபமானது என்றுதானே பொருள் கொள்வோம். நிஜமாகவே கேக்கின் மீது நடப்பது கிடையாதே. அதைப் போல அந்த கால கட்டத்தில் எதிர் கொள்ள மிகவும் கடினமாக இருப்பதை அக்னி பிரவேசம் என்று குறிப்பிட்டிருக்கலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி கூறும் பொழுது, "நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன்" என்றதை எப்படி புரிந்து கொண்டோம்?இப்படி abstract ஆக பல விஷயங்கள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உண்டு.  ஒரு முறை  திரு.ஜெய ராமா சர்மா அவர்கள் ராமாயண பிரவசனம் ஒன்றில் அகலிகையின் சாபத்தை பற்றி கூறும் பொழுது, "அகலிகையை கல்லாக போகும்படி கௌதமர் சபித்தார் என்றால், நாம் எல்லோரும் நினைக்கும்படி அவள் உணர்ச்சிகள் அற்ற வெறும் பாறையாக சமைந்து விடவில்லை. அவளுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனால், அனுபவிக்க முடியாது. பசிக்கும், சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும், தண்ணீர் அருந்த முடியாது, நகர வேண்டும் போலிருக்கும் ஆனால் இயலாது(அப்பா எத்தனை கொடுமை?) என்றார். காரணம், தன்னோடு இருப்பது தன் கணவர் அல்ல என்று அகலிகைக்கு தெரிந்து விடுகிறது, ஆனாலும், சரீர சுகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அவள் இருந்ததால் சரீர சுகம் எதையும் அனுபவிக்க முடியாமல் கல் போல கிடக்க வேண்டும் என்று சபித்தாராம் கௌதமர். 

மஹா பாரதத்தில் குந்தியும், மாதுரியும் surrogate motherகளாக இருந்து பாண்டவர்களை ஈன்றிருக்கிறார்கள் என்பது விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு புரிகிறது. துரோணரின் பிறப்பு பரிசோதனை குழாய் குழந்தையின் பிறப்பை ஒத்து இருக்கிறது. அதே சமயத்தில் திரௌபதி ஐவரை மணந்து கொண்டதை அப்படியேதான் ஏற்றுக் கொள்கிறோம்.

மஹாபாரத யுத்தத்தின் பொழுது துரோணரை கொல்வதற்காக அவரிடம் தர்மபுத்திரர்,"அஸ்வத்தாமா அதஹா:குஞ்சரஹ:(இறந்தது அஸ்வத்தாமா என்னும் யானை) என்று கூறியவுடன் அதுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த அவருடைய தேர் தரையில் இறங்கியது. என்கிறார் வியாசர். இதன் உட் பொருள் என்ன? அவருடைய தேர் அத்தனை நாட்கள் பரந்து கொண்டா இருந்தது? இல்லை, அதுவரை நடை முறை உலகில் இல்லாமல் ஒரு லட்சிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தர்மபுத்திரர் நடை முறை உலகிற்கு இறங்கி வருகிறார் என்பதுதானே.  இப்போதும் நாம் லட்சியவாதிகளை பார்த்து "பூமியில் கால் ஊன்றி நில்" என்றுதானே சொல்கிறோம்? இந்துமதி, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்று ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார்.

ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை நோக்கி வருவோம். பெரும்பாலோனோர் கிருஷ்ணனை பற்றி கூறும் ஒரு குற்றச்சாட்டு அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதாகும். கோபிகைகளோடு ராஸக்ரீடை புரிந்ததவன், அவர்கள் குளிக்கும் பொழுது அவர்கள் ஆடைகளை கவர்ந்து சென்றவன் என்றெல்லாம் கிருஷ்ணனை பழி கூறுகிறார்கள். உண்மையில் கிருஷ்ணன் ஒரு வாலிபனாக இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் இந்த லீலைகளை செய்திருக்கிறான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் எல்லா குழந்தைகளும் செய்வதுதான் இது போன்ற விஷமங்கள் என்பது. மகா பெரியவரே இதைப் பற்றி, " இப்போதெல்லாம் கிருஷ்ணனை ஒரு வாலிபனாக சித்தரித்து,அவன் கோபியரோடு ராசக்ரீடை செய்வது போல காலண்டர் போடு-  கிறார்கள், அது தவறு" என்று கூறியிருக்கிறார். 

மேலும் ஸ்ரீ கிருஷ்ணன் பிரமச்சாரி என்பதற்கு பாகவதத்தில் உள்ள சாட்சி பரீக்ஷித்தின் பிறப்பு. மகாபாரத யுத்த சமயத்தில் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட, பிறக்கும் பொழுதே இறந்துதான் பிறக்கிறது. அந்த குழந்தைதான் பாண்டவர்களின் ஒரே வாரிசு.அதுவும் இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் துக்கத்தில் இருக்க, அங்கு வரும் வியாசர் நைஷ்டிக பிரமச்சாரி ஒருவர் இந்த குழந்தையை தொட்டால் அது உயிர் பெரும் என்கிறார். நாரதர் உட்பட யாருக்கும் அந்த பிண்டத்தை தொடும் தைரியம் வரவில்லை. அப்போது குழந்தையை பார்க்க வரும் கிருஷ்ணர் உயிரில்லாத அந்த பிண்டத்தை தீண்ட அது உயிர் பெற்று விடுகிறது. அப்போதுதான் குந்தி, கிருஷ்ணரிடம்,"எங்களுக்கு எப்போதும் துன்பத்தையே தா, அப்போதுதான் நாங்கள் உன்னை மறக்காமல் இருப்போம் என்று வேண்டுகிறாள். நிறைய பெண்களை மணந்து கொண்ட கிருஷ்ணன் எப்படி பிரும்மச்சாரியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு,"அந்த பெண்களை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பி அவர்களை மணக்கவில்லை. அந்த பெண்கள் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று விரும்பி அவனை அடைந்தார்கள். எனவே மனதால் அவன் ப்ரம்மச்சாரிதான். என்று கூறப் படுகிறது. ஒரு விஷயத்தை செய்வதை விட எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்ச்சி கூறப் பட்டிருக்கலாம். 

இப்படி பல விஷயங்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக விநாயகரில் ஆரம்பிப்பதுதான் நம் மரபு. நாம் விநாயகரோடு முடிக்கிறேன். ஜி.எம்.பி. அவர்கள் விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதியிருந்தார். அதில் வரும் "மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் என்னும் கதை.  பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. இவை எல்லாமே குறியீடுகள்தான்.   இதன் பொருளை பின்னர் கூறுகிறேன். இந்த பதிவு மிகவும் நீண்டு விட்டது.

படங்கள் நன்றி Google

Wednesday, August 30, 2017

விளாம்பழ பச்சிடி

விளாம்பழ பச்சிடி 
தேவையான பொருள்கள்: 

விளாம்பழம் - 2(விநாயகர் சதுர்த்திக்கு வாங்கியது இருக்குமே)
வெல்லம்(பொடித்தது) - விளாம்பழ விழுது அளவு. இனிப்பு பிடித்தவர்கள் கொஞ்சம் அதிகம் போட்டுக் கொள்ளலாம்.
உப்பு - 1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க - கடுகு - 1/4 டி ஸ்பூன், மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் 
செய் முறை:

விளாம்பழம் பழுத்ததும்(முகர்ந்து பார்த்தால் வாசம் வரும்) அதை தரையில் கொஞ்சம் வேகமாக தட்டினால் உடைந்து விடும். உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை ஊற்றி ஊற வையுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து ஊறவைத்த விளாம்பழத்தை சாம்பாருக்கு புளி கரைப்பது போல பிசைந்தால், பழத்தின் கோது (நார் போன்ற பகுதி) கையில் தட்டுப்படும். அவற்றை தனியே வைத்து விட்டு, உப்பு, வெல்லம் இவைகளை சேர்த்து, அடுப்பில் சின்ன தீயில் வைத்து வெல்லம் நன்றாக கரையும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். பின்னர் இறக்கி வைத்து, கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து இறக்கினால் சுவையான, சத்தான விளாம்பழ பச்சிடி தயார். இதை சாம்பார் சாதம், புளி சேர்க்காமல் செய்யும் பொறித்த குழம்பு, மிளகூட்டல் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.    


விளாம்பழத்தின் பயன்கள்:

வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பல வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்து. சர்க்கரை நோயை குணப்படுத்துவதிலும், புற்று நோய் வராமல் தடுப்பதிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது. ஆடி, ஆவணி, புரட்டாசியில்தான் அதிகம் கிடைக்கும். தவற விடாமல் வாங்கி சாப்பிடுங்கள். 

Friday, August 25, 2017

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள்

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள் 


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தனின் இன்னொரு கதை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தந்த வெற்றியில்   இந்த கதையையும் படமாக்கினார்கள் போலிருக்கிறது, ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் பலம் , வசனம்(இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதிலாக, எல்.பி. ரெகார்டாக வந்தால் போட்டுக் கேட்கலாம் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்)நடிப்பு, மற்றும் பாத்திரப் படைப்பு. இந்த படத்தில் வரும் கல்யாணியைப் போன்ற பெண் பாத்திரப் படைப்பை அதற்கு முன்னும் தமிழ் சினிமாவில் கண்டதில்லை, அதற்கு பின்னும் இது வரை காணவில்லை.

கல்யாணியை காதலித்து மணந்து கொள்ளும் பத்திரிகையாளன் ரெங்கா, அவளோடு ஏற்படும் கருத்து  வேற்றுமை காரணமாக," ஒரு நல்ல நட்பை நாம் அவசரப் பட்டு கெடுத்து விட்டோம், பிரிந்து விடலாம்" என்பான். அதற்கு அவள், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், இப்போது பிரிந்து விடலாம் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதில் எனக்கு எதுவும் இல்லை" என்பாள்.

என்னைப் பிரிந்தால் நீ வருத்தப் படுவாயா? என்று கணவன் கேட்க, "இல்லை வருத்தப்பட மாட்டேன், உங்களோடு இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்" என்று அவள் கூறியதும், "உன்னுடைய இந்த பதில் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுதான் ஆம்பள புத்தி" என்பான்.

விவகாரத்துக்காக அவர்கள் சந்திக்கும் ரங்காவின் நண்பரான வக்கீல்," நீங்கள் சொல்வதெல்லாம் விவாகரத்துக்கு போதுமான காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும்" என்று கூறி விடுகிறார். அந்த கால கட்டத்தில் கல்யாணிக்கு இடுப்புக்கு கீழே பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  அந்த செய்தியை கேள்விப் பட்டு அவளுக்கு உதவுவதர்க்காக வந்து அவளோடு சேரும் ரங்காவிடம் வழக்கறிஞர், "நீ கேட்ட விவாகரத்து கிடைப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும்" என்றதும், "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" என்று சீறுவார்.  

படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் எல்லா பாத்திர படைப்புகளுமே சிறப்பு. சொற்ப நேரமே வரும் தேங்காய் சீனிவாசன்,காந்திமதி போன்ற எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் நடித்திருந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. லட்சுமியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா?  கதையை படிக்கும் பொழுது கல்யாணி, ரங்கா பாத்திரங்களைப் பற்றி நம் மனதில் வரும் பிம்பங்களை முழுமையாக லட்சுமியும் ஓரளவுக்கு ஸ்ரீகாந்தும்  திரையில் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் படிக்கும் பொழுது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வக்கீல் கதா பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு  நாகேஷ் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.

என்னுடைய கல்லூரி காலத்தில் பார்த்த படம் இது. இப்போதும் ஜெயா டி.வி.யில்(அதில் மட்டும்தான் போடுகிறார்கள்) ஒளிபரப்பும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். அதில் கடைசியில் வரும் பாடல் இது.

Oru Nadigai Nadagam Parkiral Movie Songs | Nadigai Paarkum Natakam Video...

தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

எங்கள் வீட்டு விநாயகர்
என் வாழ்க்கையில் நானும் என் கணவரும் மட்டும் தனியாக கொண்டாடிய முதல் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம்தான். 
திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உறவினர்களோடு சேர்ந்துதான் கொண்டாடுவோம். 

திருச்சியிலேயே இருந்த எங்கள் மாமாக்களின் குடும்பத்தார்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீடு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். குறிப்பாக விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் எல்லோரும் சேர்ந்துதான் கொண்டாடுவோம்.

*நாங்கள் கணபதி அக்கிரஹாரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் வீட்டில் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கக்கூடாது. என் அப்பா பிள்ளையார் படம் ஏன் பிள்ளையார் படம் போட்ட காலண்டர் கூட வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். கோவிலுக்கு சென்றுதான் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்து விட்டு வர வேண்டும். அதனால் காலை எட்டரை மணிக்குள் பிரசாதம் ரெடியாகி விடும். அப்பா எங்களை அழகிரி குதிரை  வண்டியில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் மாணிக்க விநாயகருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பட்டர் ஒர்த் ரோடில் இருந்த அத்தை  வீட்டிற்கு சென்று பிரசாதம் கொடுத்து விட்டு வருவார். வண்டியிலிருந்து எங்களை இறங்க விட மாட்டார். நாங்களெல்லாம் இறங்கினால் நேரமாகி விடும் என்று பயம். அத்தை வீட்டில் பெரும்பாலும் பூஜை நடந்திருக்காது, சில சமயம் பூஜை முடிந்திருந்தால் அத்தை அவர்கள் வீட்டு பிரசாதம் கொடுப்பாள். எல்லா வருடமும், "வாசல் வரை வந்து விட்டு, உள்ளே வராமல் போகிறீர்களே" என்பாள். அப்பாவும் எல்லா வருடமும்," மணியாகி விட்டது, அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்கள்,போய் சாப்பிட வேண்டும்" என்பார்.

அம்மா, பாட்டி,மாமி என்று  நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொழுக்கட்டை செய்வோம். குழந்தைகளாகிய  நாங்கள் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்து கொடுப்போம், அம்மாவும், மாமியும் பூர்ணம் வைத்து மூடுவார்கள். மாமி கொழுக்கட்டையின் மூக்கு பெரிதாக இருந்தால், "உன் மூக்கு மாதிரி பெரிய மூக்கு, இது என் மூக்கு மாதிரி சின்ன மூக்கு, இது ஜப்பான்காரன் போல சப்பை மூக்கு" என்றெல்லாம் பேசிக் கொண்டே செய்வார். காலையில் எல்லோருக்கும் இலையில் போடுவதற்கு கொஞ்சம் செய்து விட்டு, மாலையில் மீண்டும் ஒரு செஷன் கொழுக்கட்டை செய்வோம். பூர்ண கொழுக்கட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் மாலை மற்றும் இரவு நேர மெனு. 

திருமணமாகி மஸ்கட்டில் இருந்த பொழுது நண்பர்கள் யாராவது வருவார்கள். பிறகு குழந்தைகள் இருந்தார்கள். இருவருக்கும் திருமணமாகி அவரவர் வீட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் எங்களாலும் மகன் வீட்டிற்கு செல்ல முடியவில்லை, அவர்களுக்கும் இங்கு வர இயலவில்லை. எனவே நாங்கள் மட்டும் தனியாக கொண்டாடுகிறோம். தனியாக பண்டிகை கொண்டாடுவதைப் போல் போர் வேறொன்றும் இல்லை. 

கணவருக்கு இனிப்பு சாப்பிட முடியாது, வெறும் பழங்களை மட்டும் வைத்து நைவேத்தியம் செய்து விடலாமா? என்று தோன்றியது. ஆனலும் பழக்கத்தை விட மனமில்லாமல் பாயசம், வடை, அப்பம், கொழுக்கட்டை(பூர்ணம்,எள்ளு பொடி) என்று எல்லாம் செய்து விட்டேன். யார் சாப்பிடுவது? சுண்டல் வேறு இருக்கிறது..

வலை உலக நண்பர்கள் யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்.ஏனோ கில்லர்ஜியின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. :)
-------------------------------------------------------------------------------------------------------------

* கணபதி அக்கிரகாரம் என்பது திருவையாருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள கிராமம். இங்கு வசிப்பவர்களுக்கு விநாயகரே எல்லாமும். பிள்ளையார் என்றால் கணபதி அக்கிரஹார பிள்ளையார்தான் என்பதால்தான் வீட்டில் வேறு பிள்ளையார் படங்கள் வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரில் விநாயக சதுர்த்தி அன்று எல்லா வீட்டிலிருந்தும் வரும் பிரசாதங்களை ஒன்றாக கலந்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிறகு எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அன்று வழக்குகள் தீர்த்து வைக்கப்படும், சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை கூட அன்றுதான் நடக்கும் என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன். 

நாங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் வந்து செட்டில் ஆகி விட்டாலும், விநாயக சார்த்தி அன்று எங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் சன்னிதியில் எங்கள் தாயாதிகள் எல்லோரும் ஒன்றாக அர்ச்சனை செய்து, எல்லார் வீடு ப்ரசாதங்களையும் கலந்து நைவேத்தியம் செய்து பின்னர் பகிந்து கொள்வார்கள்.