கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 9, 2019

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

நான் சிறு வயதில் எங்கள்   கிராமத்தில் சந்தித்த சில சுவாரஸ்யமான மனிதர்களை என்னால் மறக்கவே முடியவில்லை.ஒவ்வொருவரையும் பற்றி ஒரு பதிவு எழுதலாம்.

அதில் முக்கியமானவர் பவானி அத்தை. அத்தை என்றால் நேரடியாக அத்தை கிடையாது. என் அப்பாவிற்கு அத்தை முறை, எந்த வகையில் என்று தெரியாது. ஏதோ தூரத்து சொந்தம்.
அதையெல்லாம் நாங்கள் கேட்டதில்லை. அப்பா, அம்மா, அத்தைகள் எல்லோரும் அத்தை என்று அழைப்பார்கள், அதனால் நாங்களும் அப்படியே அழைத்தோம். 

இளம் வயதில் விதவையானவர், என்பது பின்னாளில் தெரிந்தது. குழந்தைகளும் கிடையாது. தன் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார் . எப்பொழுதாவது அவருடைய நெருங்கிய சொந்தங்கள் வருவார்கள் என்று நினைவு. எங்கள் சின்ன தாத்தா, பெரிய அத்தை (அப்பாவின் அத்தை) இவர்களை பெயர் சொல்லி அழைப்பார், அவர்கள் கோபமாக இருக்கும் பொழுது, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சொல்ல நினைப்பதை அவர்கள் சார்பாக சொல்லுவார். அதே போல் வீட்டு பெரியவர்களின் கருத்தையும் சிறியவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார். அதை வைத்து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று புரிந்து கொண்டோம். 

நியூக்ளியர் ஃபாமிலியாக இருக்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உறவுகள் புரியுமோ என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் ஒரு வீடு என்றிருந்தால் அதில் தாத்தா, பாட்டி, அவர்தம் சகோதர, சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தான், அம்மாஞ்சி, மட்டுமல்ல, ஆதரவில்லாத தூரத்து சொந்தங்களும் புழங்கும் இடம்.  

அதனாலோ என்னவோ, பவானி அத்தை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். அவர் சாப்பிடுவது எங்களுக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். ஏனென்றால், "சாப்பிடவே பிடிக்கவில்லை, என்னது கத்தரிக்காய் சாம்பாரா? கத்தரிக்காய் எனக்கு பிடிக்காது கொஞ்சமா விடு.." தொட்டுக்க என்ன இருக்கு? புடலங்கா கறியா? ஐயோ வேண்டியே இருக்கவில்லை, கொஞ்சம் போடு, போறும்.." ஊறுகாய் என்ன இருக்கு? வடு மாங்காயா? வடு மாங்காய் எல்லாம் முன்ன  மாதிரி எங்க இருக்கு?" ரெண்டே ரெண்டு போடு, " என்ன சொல்லு, மோருஞ்சாதத்திற்கு ஈடு இல்ல, ஐயோ மோர் ஒரே புளிப்பு.. வேண்டாம் நார்த்தங்காய் இருந்தா போடு, சாப்பிடவே பிடிக்கல.." என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒரு  கை பார்ப்பார். நாங்கள் அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.

இப்போதும் பவானி அத்தை பல வீடுகளில் இருக்கிறார் ஆனால் வேறு வடிவில் என்றுதான் தோன்றுகிறது. என் மாமியாருக்கு காலை கண் விழிக்கும் பொழுதே தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தாக வேண்டும். " முன்ன விஜய் டி.வி.யில் நல்ல சத் விஷயங்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள்,  ஜெயாவுக்கு மாத்து,  இவர் நன்றாகத்தான் சொல்கிறார், ஆனால் ஏன் இந்த சைவ துவேஷம்?" " ஏழு மணியாகி விட்டதா? ஹரிகேச நல்லூர் ஜோசியம் போடு, இவர் எல்லாருக்கும் நாள் பிரமாதமா இருக்கும்பார், என்னவோ, கடக ராசிக்கு என்ன சொல்றர்னு பார்ப்போம்... என்னது திருமண ப்ராப்தியா?" (அது கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு என்று புரியாதா?) "எல்லாத்துலேயும் யோகா.."  (அதைப் பார்த்து கையை, காலை கொஞ்சம் அசைத்தால் நன்றாக இருக்கும்). 

காலை நேர நிகழ்ச்சிகளுக்கு இப்படி என்றால்,சீரியல் தொடங்கி விட்டால் வேறு விதம். " எல்லா சீரியலிலும் மாமியாரை கெட்டவளாகவே காட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரே நெகட்டிவிடி மணி பதினொன்னு ஆயிடுத்தா? ... ஆரம்பித்திருக்குமே? போடு போடு. நேத்திக்கு அந்த மாமியார் கடன்காரி மாட்டுப் பெண்ணை கொல்ல ஏற்பாடு பண்ணப் போறாள். நன்னா இருப்பாளா?" என்ற ரீதியில் கமெண்டுகள் கொடுத்துக் கொண்டே பார்ப்பார்.  
இதனால் அவர் வெறும் சீரியல்கள் மட்டும்தான் பார்ப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். நியூஸ் சேனல்களையும் விட்டு வைக்க மாட்டார். "இவன் ஏன் இப்படி கத்தறான்? எங்கேயாவது ஹார்ட் அட்டாக் வந்துவிட போகிறது. இவாளெல்லாம் இப்படி கத்துவதால் என்ன மாறி விடப் போகிறது?" என்பாரே தவிர,பார்க்காமல் இருக்க மாட்டார். 

எனக்கு சின்ன வயதில் பார்த்த பவானி அத்தைதான் நினைவுக்கு வருவார்.  

Sunday, February 3, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 

சாதாரணமாக நமக்கு நம் நாட்டையும், அரசையும் குறை சொல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தியன் ரயில்வே போன்ற அரசு அமைப்புகள் எவ்வளவுதான் முன்னேறினாலும், நமக்கு நல்ல சேவையை தர முன்வந்தாலும் நாம் பாராட்ட மாட்டோம். ஆனால் சமீபத்திய இந்திய ரயில்வேயின் சேவையை கேட்டால் பாராட்டாமல் இருக்க முடியாது. 

நடு இரவில் ஓடும் ரயிலில் எதிர்பாராமல் மாத விலக்கான ஒரு பெண்ணுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கி உதவியிருக்கிறது ரயில்வே நிர்வாகம். 

பெங்களூர்-பெல்லாரி-ஹோஸ்பெட் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த ஆர்க்கிடெக்ட் மாணவி ஒருவருக்கு அந்த ரயில் பெங்களூரை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் பீரியட்ஸ் வந்து விட்டது. அப்போது மணி இரவு 11. அதற்கான முன்னேற் பாடுகளோடு வராத அவர், அதே வண்டியில் பயணித்த தன் நண்பருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ட்ரைனி இன்ஜினீயரான அந்த நண்பர் இந்தியன் ரயில்வே சேவாவுக்கு உதவி கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். 11.06க்கு சம்பந்தப்பட்ட அதிகாரி அந்தப் பெண்ணோடு பேசி அவரின் தேவையை கேட்டறிந்து,இரவு 2 மணிக்கு அரசிகெரெ என்னும் இடத்தை வண்டி அடைந்த பொழுது, அந்தப் பெண்ணிற்கு தேவையான சானிட்டரி பேட், மற்றும் மாத்திரைகளை ரயில்வே நிர்வாகம் வழங்கியிருக்கிறது. வாழ்க!


சரி, இப்போது கொஞ்சம் புதிர்:

1.ஒரு ஒற்றை இலக்க எண்ணை   இரண்டு  முறை மட்டுமே பயன்படுத்தி  
அதிக பட்ச மதிப்புள்ள எண்ணை பெற வேண்டுமென்றால் அந்த எண்ணை எப்படி பயன் படுத்துவீர்கள்?அவைகளுக்கு இடையில் எந்த குறியீடுகளையும் பயன்படுத்த கூடாது.  

2. Though having 85 keys, cannot open any lock, who am I?

   
கீழ் கண்ட நடிகர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது, அது என்ன?

Image result for jeevaImage result for vishnu vishal



Image result for rajinikanth
Image result for sivaji ganesan
Image result for vikram  Related image



ஒரு ஜோக்கோடு முடிக்கலாம்:

ஆபரேஷன் டேபிளில் படுத்துக்கொண்டிருக்கும் நோயாளி, டாக்டரிடம், "டாக்டர், இந்த ஆபரேஷனுக்குப் பிறகு, நான் எல்லா செயல்களும் செய்ய முடியுமா?"
டாக்டர்: அதில் என்ன சந்தேகம்? நீங்கள் விரும்பும் எல்லா செயல்களும் செய்ய முடியும்.
நோயாளி: வயலின் வாசிக்க முடியுமா?
டாக்டர்: தாராளமா வாசிக்கலாமே..
நோயாளி: அப்படியா? ஆச்சர்யமா இருக்கே?
டாக்டர்: இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு?
நோயாளி: எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே..

Image result for bouquet of flowers