கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 10, 2024

லப்பர் பந்து (சினிமா விமர்சனம்)

பழைய எம்.ஜி.ஆர். படங்களில் நல்லவனும், ஏழையுமான கதாநாயகனை அந்த ஊரின் பணக்காரரான பெண் விரும்புவாள். அவளுடைய தந்தை தன் குடும்பத்தின் பரம வைரி என்பதை அறியும் கதாநாயகனின் தாய் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பாள். கதாநாயகனும், கதாநாயகியின் தந்தையும் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இறுதியில் இதெல்லாம் மாறி கதாநாயகனும், நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் முடிவாக இருக்கும்.

இதை அப்படியே வைத்துக்கொண்டு, கதை நடக்கும் களத்தை மட்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு சென்றால் அது 'லப்பர் பந்து'

பூமாலை(அட்டக்கத்தி தினேஷ்) ஒரு பெயிண்டர். ஆனால் அதை விட அவர் அதிகம் நேசிப்பது கிரிக்கெட்டை. வேலைக்கு மட்டம் போட்டு விட்டு மாட்ச் விளையாட போகிறார். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் பனைமரம் உயரத்திற்கு  பறக்கின்றன. அதனால் 'கெத்து' என்னும் பெயர்.

அவரைப்போலவே கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் அன்பு(ஹரீஷ் கல்யாண்) அவருடைய மகள் துர்காவை(சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) நேசிக்கிறார். ஒரு மாட்சிற்குப்பின் பூமாலை பேட்டிங்கை அன்பு குறைவாக பேசுவதை கேட்ட பூமாலையின் தோழர் அவரிடம் போட்டுக் கொடுத்துவிட, அவருக்கு அன்பு மீது வெறுப்பு வருகிறது.

அடுத்த மாட்சில் அன்புவின் பந்து வீச்சால் பூமாலையின் அணி தோற்கிறது. அதுவும் பூமாலையின் வீக் பாயிண்டை புரிந்து கொண்டு அன்பு பந்து வீச, பூமாலையால் வழக்கம்போல் சுழற்ற முடியவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரங்கங்கள் எதுவும் தெரியாத அன்புவின் தாய்(தேவ தர்ஷினி) பூமாலை வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறார், இரண்டு வீட்டார்களுக்கும் பரஸ்பரம் திருப்தியாக, திருமணத்தை நிச்சயிக்க முடிவெடுக்கிறார்கள்.

மறுநாள் காதலி வீட்டிற்கு வரும் அன்புவிற்கு தன் மாமனாராக வரப்போவது யார் என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பூமாலையின் மனைவி யசோதாவிற்கு(ஸ்வஸ்திகா) மாப்பிள்ளையும் தன் கணவனைப் போல கிரிக்கெட் பைத்தியம் என்று தெரிந்து விடுகிறது. இவனை மணந்து கொண்டால் தன்னைப் போலவே தன் மகளும் கஷ்டப்படுவாள் என்று பெண்ணைக் கொடுக்க மறுக்கிறாள். (எம்.ஜி.ஆர். படங்களில் எதிரியின் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கதாநாயகனின் அம்மா தடை போடுவார், இதில் பெண்ணின் அம்மா மறுக்கிறார்).

இன்னொரு மாட்சில் இருவருக்கும் கைகலப்பாக எதிர்கால மாமனாரும், மாப்பிள்ளையும் மைதானத்தில் கட்டிப் புரள்கிறார்கள். யசோதா  கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். பூமாலையும், அன்பும் திருந்தினார்களா? அன்பு காதலியை கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

படம் பார்ப்பது போல் இல்லாமல், நிஜமாக ஒரு கிராமத்தில்  நடப்பதை பார்ப்பது போல இருக்கிறது. படத்தில் வரும் அத்தனை கதை மாந்தர்களும் ரத்தமும், சதையுமாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அதிலும் தினேஷின் மனைவியாகவும், மகளாகவும் நடித்திருக்கும் பெண்கள் அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தினேஷ் மனைவியாக வரும் ஸ்வஸ்திகா இளம் வயதில் அம்மா ரோலில், அதுவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக பாத்திரம் ஏற்று மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

துர்காவாக நடித்திருக்கும் சஞ்சனா பார்க்கவும் அழகு, நடிப்பும் அழகு. இந்த இரு பெண்களையும் தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அட்டகத்தி தினேஷ் அப்பாவா? அதுவும் இத்தனை பெரிய பெண்ணுக்கு? என்று வியப்பாக இருக்கிறது. ஆனால் பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாணுக்கு 'பார்க்கிங்' படத்தை அடுத்து நடிக்க வாய்ப்புள்ள நல்ல ரோல். வாய்ப்பை தவற விடவில்லை ஹரீஷ். அவசரப்படாமல் நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பாராட்டுவோம். ஹரீஷின் தோழனாக வரும் பாலா சரவணன், காளி வெங்கட், அம்மாவாக வரும் தேவதர்ஷினி, தினேஷின் தாய் கீதா கைலாசம் எல்லோருமே ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாதாரணமாக திரைப்படங்களில்  கதாநாயகன் டீம் ஜெயிப்பது போலத்தான் முடியும், இந்த படத்தில் கதாநாயகர்கள் இருக்கும் டீம் தோற்கிறது. அதற்கு செல்லப்படும் காரணமும் சிறப்பு.

வசனங்கள் இயல்பாகவும், நன்றாகவும் இருக்கின்றன. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்ணனி இசை மிக நன்றாக இருக்கிறது. இயல்பான நகைச்சுவை.

கிரிக்கெட் மாட்ச் கொஞ்சம் அதிகம் என்றாலும், குடும்பத்தோடு  ரசிக்கக்கூடிய நல்ல படம்.

நீதி: எம்.ஜி.ஆர் பட ஃபார்முலா எவர்கிரீன்!