கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 24, 2020

மசாலா சாட் -15

மசாலா சாட் - 15
(மாறுதல் வரும்) 


சமீபத்தில் ஏதோ ஒரு சேனலில் குடும்பம் ஒரு கதம்பம் படம் போட்டார்கள். அதில் ஒரு காட்சியில் எஸ்.வி. சேகர்,"பொண்ண பெத்தவங்க என்ன இப்படி அலையறாங்க? பாஸ்கர் ஊரிலிருந்து வந்து முழுசா ஒரு வாரம் ஆகல, அதுக்குள்ள ரெண்டு ஜாதகம் வந்து விட்டது" என்பார். அதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டேன் சிரிப்பு வந்தது. பையனுக்கு பெண் தேடும் அம்மாக்கள் எல்லோரும் சொல்லுவது,"பெண் வீட்டிலிருந்து கூப்பிடவே மாட்டேன் என்கிறார்கள். நாம்தான் ஃபோன் பண்ண வேண்டியிருக்கு." என்பதாகும்.  இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று வேண்டி ஆண்கள் பாவை நோன்பு நோற்க நேரிடலாம் என்று  நான் முக நூலில் பகிர்ந்த பொழுது ஒரு நண்பர், அது 'காளை நோன்பு' ஆகும் என்று பின்னூட்டம் இட்டிருந்தார். 

இப்படி பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ மாற்றங்களை தவிர்க்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது.    

கல்யாண மாலை நிகழ்ச்சியில் பெண்கள், "என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் பையன் வேண்டும்" என்கிறார்கள். "பெண்ணுக்கு சமைக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் நன்றாக சமைப்பேன்" என்கிறார் ஒருவர்.  

சமையல் என்றதும் ஒரு விஷயம் தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது கௌரவக் குறைச்சல். ஹோட்டல்களும் குறைவுதான். மெஸ் என்பது பேச்சுலர்கள் சாப்பிடும் இடம். சமையல் புத்தகம் என்றால் அது மீனாட்சி அம்மாள் சமயல் புத்தகம் மட்டும்தான். புத்தகத்தை பார்த்து சமைப்பது கேலிக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. 

அரிசியை கழுவி,நீர் ஊற்றி, குக்கரில் வைத்து விட்டு 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சாதம் ஆகவே இல்லை. ஏனென்றால் அடுப்பை பத்த வைக்க வேண்டும் என்று அதில் போடாததால் என் மனைவி அதை செய்யவில்லை. 
போன்ற ஜோக்குகள் அப்போது பிரபலம். 

ஆனால் இப்போதோ ஏகப்பட்ட சமையல் புத்தகங்கள். டி.வி.யில் நாள் முழுக்க எந்த சானலை திருப்பினாலும் யாராவது சமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத்தவிர யூ டியூப், முக நூல், ஹலோ ஆப் என்ற எல்லாவற்றிலும் சமைத்துத் தள்ளுகிறார்கள்.  இருந்தாலும் பலர் வீட்டில் சமைப்பதாக தெரியவில்லை. 

ஹோட்டல்களுக்குச் சென்றால் பார்சல் வாங்கும் இடத்தில் ஸ்விகிகாரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதைத்தவிர சமைத்து கொண்டு வந்து வீட்டில் கொடுக்க  ஏகப்பட்ட கேட்டரிங்குகள்.  வீடு கட்டுபவர்கள், குறிப்பாக அப்பார்ட்மெண்டுகள் சமையலறையின் அளவை குறைத்து விடுகின்றன. காரணம் கேட்டால் இப்போதெல்லாம் யார் சமைக்கிறார்கள்? என்கிறார்கள்!!

எத்தனை விதமான உணவுகள் இருக்கின்றதோ அத்தனை விதமான டயட் முறைகளும் இருக்கின்றன. பேலியோ டயட், வேகன் டயட், ஃப்ரூட் டயட், என்று என்னென்னவோ சொல்கிறார்கள். அரிசி சாப்பிடக் கூடாது, எண்ணெய் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை ருஜூதா திவாகர் முற்றிலுமாய் மறுக்கிறார்.   இரவில் அரிசி சாப்பிடக் கூடாது என்பவர்கள் கரீனா (கபூர்) கானைப் பாருங்கள். அவர் இரவில் தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார். மேலும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளில் கொழுப்பு அதிகம் என்பதையும் இவர் ஏற்பதில்லை. நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், நம் நாட்டில் விளையும் காய்கறிகள், பழங்களையும் தவிர்க்கத் தேவையில்லை என்பது இவர் கருத்து. 


"நெய் சாப்பிடக் கூடாது என்று சொன்ன மேற்கத்தியர்கள் இப்போது நெய் உடலுக்கு அவசியம் என்பதால் அதை காபியில்(ப்ளாக் காபி)  கலந்து குடிக்கிறார்கள். சாதத்தோடு கலந்து கொண்டால் தீமை அளிக்கும் நெய், காபியில் கலந்து கொண்டு விட்டால் நன்மை செய்து விடுமா?  நம்முடைய பாரம்பரிய உணவுகளை  வெளி நாட்டவர் தவிர்க்கச் சொன்னால் அதை ஆராய வேண்டும்" என்று அரசியலும் பேசுகிறார். 

Rujutha Diwakar - celebrity dietician
பார்க்கலாம் இன்னும் என்னென்ன மாறுமோ? இப்போதெல்லாம் பிஸ்ஸாவில் டாப்பிங்காக கத்திரிக்காய் போட ஆரம்பித்து விட்டார்களாமே? கஞ்சியாக குடித்துக் கொண்டிருந்த ஓட்ஸில், இட்லி, தோசை, எல்லாம்  செய்கிறார்கள். நான் ஓட்ஸில் உப்புமா செய்தேன். 

ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.  எல்லா உப்புமாக்களுக்கும் தாளிப்பது போல் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து ஓட்ஸை அதோடு சேர்த்து, உப்பு போட்டு தண்ணீரை தெளித்து, தெளித்து கிளற வேண்டும். அரிசி மாவில் செய்யும் உப்புமா போல் சுவையாக இருக்கிறது. 


ஓட்ஸ் உப்புமாவோடு 'மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா..' என்னும் பாடலையும் சுவையுங்கள் சுட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. https://youtu.be/oE6zm6OAghg











Sunday, January 19, 2020

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்


கோவில் முகப்பு 
நேற்று தோழி ரமா ஶ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஐயன் வள்ளுவர் 


வாசுகி தாயாரின் சந்நிதி 
மயிலை விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது திருவள்ளுவர் கோவில். மிகப்பெரியதும் இல்லை. மிகச்சிறியதும் இல்லை.  சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, இரண்டு விநாயகர் சன்னதிகள், அதில் ஒரு விநாயகர் வித்தியாசமாக இருக்கிறார். நவகிரக சன்னதி, அதைத்தவிர திருவள்ளுவர் மற்றும் வாசுகிக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன. திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் இலுப்பை மரத்தினடியில் திருவள்ளுவரின் தாய் தந்தைக்கு சிலைகள் உள்ளன.  இந்த கோவில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படுகிறது.

வட இந்திய கோவில்களில் காணப்படுவதைப் போன்ற விநாயகர் 




வள்ளுவரின் தாயும்,தந்தையுமான ஆதி, பகவன்


ஆனால் எனக்கென்னவோ வள்ளுவரை இப்படி கோவிலில் வைத்து கும்பிடுவதை விட, நிறைய பேர்கள் திருக்குறளை அறியும் வண்ணம் செய்வதுதான் அவருக்கு செய்யும் நிஜமான மரியாதை என்று தோன்றுகிறது.