வெள்ளி, 21 அக்டோபர், 2016

குங்கும பொட்டின் மங்கலம்!

குங்கும பொட்டின் மங்கலம்!


ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கும் கணவரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த பிரபா குளித்து விட்டு, உடை அணிந்து கொண்டு, கண்ணாடியை பார்த்து ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டாள்.
"இப்போ வெச்சுக்கறேன், இன்னும் எத்தனை மணி நேரம் இது என் நெற்றியில் இருக்குமோ"? என்று தோன்றியது.

பிரிட்ஜை திறந்து இட்லி மாவை எடுத்து வெளியே வைத்தாள். ஸ்வாமி விளக்கேற்றி நமஸ்கரித்து எழுந்த பொழுது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

மகள்தான்... " ஆட்டோவுக்கு சில்லறை கொடுத்து விட்டு, கையில் குழந்தையோடு உள்ளே நுழைந்தவள் பரபரப்பாக," என்னமா ஆச்சு அப்பாவுக்கு? இப்போ எப்படி இருக்கா"?

"பயப்படும்படியா ஒண்ணும் இல்ல.."

"அப்படீன்னா ஏன் ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் பண்ணனும்"?

"விழுந்த அதிர்ச்சியில் பி.பி. கொஞ்சம் ஷூட் அப் ஆயிடுத்து.. அதனால்தான் அப்செர்வேஷனில் இருக்கட்டும்னு அங்க வெச்சுருக்கா."

"எப்படி நடந்தது இது? அப்பா ரொம்ப ஜாக்கிரதை ஆச்சே.."?

"ஜாக்ரதைதான்.. இன்னிக்கு என்னவோ டைம் சரியில்ல.. தெரு முனை திரும்பும் பொழுது அப்பா கவனிக்கலையா? அல்லது எதிர்த்தார்போல் வந்தவன் ஓவர் ஸ்பீடா தெரியலை, மோதிட்டான். நல்லவேளை அப்பா ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடி படவில்லை.
விழுந்த வேகத்தில் மயக்கம் போட்டு விட்டார். பக்கத்தில் இருக்கும் ஆட்டோமொபைல் ஷாப்காரர் ஓடி வந்து எனக்கு தகவல் சொன்னார். அப்புறம் ஹாஸ்பிடல் கூட்டிண்டு போனேன்..."

"அவர்தான் எனக்கும் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆய்ருச்சுனு மெசேஜ் அனுப்பினார். எனக்கு ஒண்ணுமே புரியலை. உனக்கு போன் பண்ணினா ஆஸ் யூசுவல் நீ போன் எடுக்கல... எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. எந்த ஹாஸ்பிடல்னும் தெரியல.. ராகவ் வேற ஊருல இல்ல, சரி முதலில் வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு வந்தேன்.... அப்பாடா"! சோஃபாவில் சரிந்து உட்கார்ந்தவள், குழந்தையை கீழே இறக்கி விட்டாள். 

அவள் கையிலிருந்து இறங்கிய குழந்தை, தளிர் நடை போட்டு வந்து பிரபாவின் காலை கட்டிக்கொண்டது. பிரபா குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டதும், அவள் முகத்தை உற்றுப் பார்த்த குழந்தை, அவளுடைய ஸ்டிக்கர் பொட்டை பிய்க்க முயற்சி செய்ய ஆரம்பித்தது.

" டேய்! பொட்டை ஏண்டா எடுக்கற"? மகள் தன் மகனை விரட்டினாள்
 
"விடுடி, குழந்தைனா அப்படித்தான் செய்யும். பொட்டு வெச்சுக்கும் போதே நான் நினைத்தேன், இப்போ வெச்சுக்கறோம், இந்த குட்டிப் பயல் வரும் வரைதான் அது இருக்கும்னு.. பிரபா பேரனுக்கு பரிந்து பேசினாள்.

"சரி,ஜாக்ரதைமா, அவன் கைல ஸ்டிக்கர் போட்டு ஒட்டிண்டு இருக்கு, வாயில் போட்டுக் கொண்டு விடப் போகிறான்..".!