அழகே உன்னை ஆராதிக்கிறேன்
மனிதர்கள், விலங்குகள் பறவைகள், தாவரங்கள் எல்லாவற்றிர்க்கும் அழகு இருப்பது போல் ஊர்களுக்கும் அழகு உண்டு.
ஒரு இடம் இயற்கையாக அமைந்த விதத்தால் உண்டாகும் அழகு, நிர்மாணிக்கப்பட்ட விதத்தில் உண்டாகும் அழகு என இரண்டு வகை அழகுகள் உண்டு.
மலை வாசஸ்தலங்கள் இயற்கை அழகில் மிளிரும். அப்படி பல மலைகள் இருந்தாலும் ஊட்டியைத்தானொ 'மலைகளின் ராணி' என்கிறோம். அதன் அழகு அப்படிப்பட்டது.
நான் பார்த்தவரை அழகான ஊர்கள் என்றால் திருச்சி, மதுரை, புனே, மைசூர், டில்லி, மஸ்கட் இவைகளைச் சொல்வேன்.
இப்போது திருச்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த திருச்சி இதுவல்ல என்று தோன்றும். என் சிறு வயதில் நகரத்தின் நடுவிலேயே வயல்கள் இருக்கும். இப்போது கரூர் டர்னிங்கிலிருந்து பிரிந்து ஒரு ரோடு தில்லை நகருக்கு முன்னால் வந்து சேருகிறதே அவையெல்லாமே வயல்கள்தான். காவேரிப்பாலம் தாண்டி விட்டால் வயல்களும், தோப்பும் துரவுமாக ஒரே பசுமை!
கோட்டை ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் நரிக்குறவர்களின் கூடாரம் இருக்கும். அங்கு இரவில் வெட்டவெளியில் அடுப்பு மூட்டி அவர்கள் சமைக்கும் நெருப்பு, மரத்தில் கட்டப்பட்ட தூளிகளில் ஆடும் குழந்தைகள்... ஒரு ஓவியம் போல இன்னும் என் மனதில் இருக்கிறது.
ஒரு நகரத்தின் சௌகரியம், கிராமத்தின் அமைதி, அழகு இதுதான் திருச்சியாக இருந்தது. நவீனமயமாக்குதலில் இவை எல்லாம் மாறி விட்டன.
பின்கொசவம் வைத்த புடவை கட்டிக்கொண்டு, தலையை பிச்சோடா போட்டு, பூவைத்துக் கொண்டிருக்கும் மாத்வ பெண்மணியைப் போன்ற அழகு மதுரைக்கு என்று லா.ச.ரா. எழுதியிருப்பார். எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். கோவிலை மையமாகக் கொண்டு வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட எதினிக் சிட்டியான மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆவதற்காக இப்போது நிறைய மாறி விட்டது என்கிறார்கள். மைசூர் மாறியிருக்காது என்று நினைக்கிறேன்.
பெங்களூர், புனே, டில்லி எல்லாமே பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகன நெரிசல் இவைகளை சமாளிக்க மேம்பாலங்கள் கட்டவும், மெட்ரோ ரயிலுக்காகவும் பல மரங்களை இழந்து புது கோலத்தை ஏற்றிருப்பது காலத்தின் கட்டாயம். எப்படி இருந்தாலும் அழகான ஊர்கள்தான்.
வெளிநாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ பழைய அழகை இழக்காமல் வளர்வது சாத்தியமாகிறது. அங்கெல்லாம் சில இடங்களில் நகரம் நியூ சிட்டி, ஓல்ட் சிட்டி என்று இரண்டு பகுதிகளாக இருக்கும். ஓல்ட் சிட்டி பழமையை அப்படியே மெயின்டெய்ன் பண்ண, நியூ சிட்டி அடுக்கு மாடி குடியிருப்புகளோடு நவீனமாக இருக்கும்.
பாலைவனமான மஸ்கட், துபாய் போன்றவை பார்த்து பார்த்து அழகூட்டப்பட்டிருப்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். ஓமானில் மன்னராக இருந்த சுல்தான் காபூஸ் அவர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். பால்கனியில்
கொடியில் தொங்கும் துணிகள் பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதால் அங்கு கலர்கலராக துணிகளை பால்கனியில் உலர்த்த முடியாது. அதே போல் ஏ.சி.யிலிருந்து வெளியேறும் தண்ணீர் சுவற்றில் வழிந்து கறை உண்டாக்கு -வதையும் அனுமதிக்க மாட்டார்கள். அங்கிருக்கும் கடற்கரைகளையும் மிக அழகாக்கி விட்டார்கள்.
சமீபத்தில் தன் அழகால் என்னைக் கவர்ந்த ஊர் மாண்ட்ரியால். அங்கிருக்கும் கலைநயமிக்க பிரும்மாண்டமான கட்டிடங்களும், வயலும், ஆறும் மனதை கொள்ளை கொண்டன.
முகநூலில் பெண் சக்தி என்னும் குழுவில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற தலைப்பில் கட்டுரை கேட்டிருந்தார்கள், அதற்கு நான் எழுதிய கட்டுரை இது.