புதன், 21 ஜனவரி, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


கேரளாவில் நங்கள் சென்ற மற்றொரு முக்கியமான கோவில் சோட்டாணிக்கரை பகவதி கோவில். கோவில் கீழ் காவு, மேல் காவு என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இரண்டு அம்மன்களும் சகோதரிகள், கீழ் காவில் உள்ள பகவதி அக்கா என்றும் மேல் காவில் எழுந்தருளி இருப்பது தங்கை என்றும் ஒரு நம்பிக்கை. முதலில் கீழ் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்து கொண்டு பிறகு தான் மேல் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது முறை. இரண்டு இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள் வடிவாக காட்சி அளிக்கிறாள்.   

மேல் காவு பகவதி கோவில்  

மன நிலை பாதிக்கப் பட்டவர்களும், துர்சக்திகளால் பீடிக்கப் பட்டு துயருபவர்களும் இங்கே வந்து பஜனம் இருந்து, அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு, பிரசாதம் உட்கொண்டு வர, அந்த பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுபடுவது இன்றளவும் நடக்கும் ஒரு விஷயம். இரவு எட்டு மணிக்கு கீழ் காவில் அம்மனுக்கு நடக்கும் குருதி பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.  முன் காலங்களில் இந்த பூஜை இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்குமாம். அப்பொழுது விலங்குகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் அன்னத்தோடு கலந்து அம்மனுக்கு நைவேதியம் செய்யப்படுமாம். தற்போது மிருகங்களை பலியிடுவது தடை செய்யப் பட்டுவிட்டதால் மஞ்சள் பொடியைத் தான் குருதி பிரசாதம் என்று தருகிறார்கள்.    

குருதி பூஜையில் கலந்து கொள்ளும் நோயாளிகள் தங்கள் கைகளாலும், தலையாலும் பெரிய பெரிய ஆணிகளை கீழ் காவில் உள்ள மரத்தில் அறைவார்களாம் அப்பொழுது அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் மூலமாக அவர்கள் உடம்பில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறி விடும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல நிஜமும் கூட. அதற்கு சாட்சியாக கீழ் காவில் உள்ள  மரத்தில் அறையப்பட்டிருக்கும் ஆணிகளை இப்பொழுதும் காண முடிகிறது. அங்கு மட்டுமல்லாமல் மேல் காவில் உள்ள கருங்கல் தூண்களிலும் ஆணிகள் அறையப் பட்டிருக்கின்றன. 

கீழ் காவில் ஆணிகள் அறையப் பட்டிருக்கும் மரம்
  
அதைத் தவிர கேரள கோவில்களுக்கே உரிய வெடி வழிபாடும் இங்கு உண்டு. மேலும் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப கை, கால், கண், மற்றும் ஆண்.பெண் உருவங்களை கோவில் தேவ ஸ்தானம் வைத்திருக்கிறது. அவற்றை நாம் ஏதோ ஒரு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி எடுத்துக் கொண்டு கோடி மரத்திற்கு அருகே வைத்து குறிப்பிட அங்கங்களின் நோய் தீர பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

கீழ் காவில் கோவிலுக்கான பெரிய குளம் உள்ளது(தற்சமயம் அதை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள்). அங்கிருந்து படியேறி வந்தவுடன் இடது பக்கம் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி தனி சன்னதிகள். அங்கு தொழுது விட்டு, கொடிமரத்தை வணங்கி, கேரளாவுக்கே உரிய சிறிய வாயில் வழியே கோவிலின் உள்ளே செல்கிறோம். தக தகவென்று ஜொலிக்கும் கருணை பெருகும் அம்பிகையின் வடிவு நம்மை ஆகர்ஷிக்கிறது.  இங்கிருக்கும் அம்மன் காலையில் வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு ஆடை அணிந்து லக்ஷ்மியாகவும், மாலையில் நீல உடையில் துர்க்கையாகவும் காட்சி அளிக்கிறாள். சாதாரனமாக எல்லா தெய்வ உருவங்களும் வலது கையை அபய ஹஸ்தமாக வைத்திருப்பதுதான் வழக்கம் ஆனால் இங்கே வலது கையால் தீய சக்திகளை அடக்குவதால் இடது கையை அபய ஹஸ்தமாக காட்டியபடி எழுந்தருளி இருக்கிறாள். உள் சுற்றில் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனி சந்நிதி உள்ளது. சற்றே பெரிய வெளி பிரகாரத்தில் இடது புறம் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி இருக்கிறது.  

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோவிலுக்கு சென்ற பொழுது, கொஞ்சம் சிறியதாக, சற்றே அமானுஷ்யமாக இருந்த கோவில் இடைப் பட்ட காலத்தில் நன்கு வளர்ந்து பெரியதாகி விட்டது. 

கேரள யாத்திரை எப்போதுமே மனதிற்கு சந்தோஷம் தரக் கூடியதுதான். காரணம் அழகான இயற்கை காட்சிகள் மட்டுமல்ல(அது கொஞ்சம் மொனாடனஸ் க்ரீன்தான்). அந்த சுத்தம்!ரயில்வே ட்ராக்கை கூட பெருக்குகிறார்கள். கோவில்களில் நெரிசல் இருந்தாலும் கூச்சலும், இரைச்சலும் இல்லை. புதாறு போட் ரெஸ்டாரென்ட் ஐ  பார்த்த பொழுது, இது நம்மூராக இருந்தால் இந்த ரெஸ்டாரென்ட் ஐ சுற்றி பிளாஸ்டிக் குப்பிகளும், தட்டுகளும், மிதக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பிரயாணங்களில் குறைவாக சாப்பிடுகிறார்கள். அதனாலோ என்னவோ மலைப் பாங்கான பிரதேசமாக இருந்தாலும் பேருந்து பயணங்களில் யாரும் வாந்தி எடுப்பது இல்லை. புகை வண்டியில் கழிப்பறைகளில் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது. நம்மூரில் நாம் பேருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பதை அங்கிருந்து வரும் துர்  நாற்றம்  ஒரு கிலோ மீட்டருக்கு முன்னாலேயே தெரிவித்து விடும். கேரளாவில் அந்த கெட்ட  வாடை எங்குமே இல்லை. நம் சேட்டங்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன பாண்டிகளே!