செவ்வாய், 23 மே, 2017

வெற்றிலையும் எலுமிச்சம்பழமும்

வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் 
இந்துக்களின் வாழ்க்கையில் வெற்றிலைக்கு  சிறப்பான இடம் உண்டு. வெற்றிலை இல்லாத பூஜை,வழிபாடு, பண்டிகை எதுவும் கிடையாது. ஒரு சுப காரியத்திற்க்காக வாங்க வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போடும் பொழுது முதலில் மஞ்சள் குங்குமம் என்று எழுதி விட்டு, அடுத்த இடத்தை பிடிப்பது வெற்றிலை பாக்குதான். திருமண நிச்சயதார்த்தத்தை பாக்கு வெற்றிலை மாற்றிக்  கொள்வது என்றுதான் வழக்கு மொழியில் சொல்லப் படும். இரு வீட்டாரும் ஒருவருக்கு மற்றவர் வெற்றிலை பாக்கு கொடுப்பதோடுத்தான் திருமணம் முடிகிறது. அது மட்டுமல்ல திருமணத்திற்கு வந்து விட்டு வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ளாமல் செல்லக் கூடாது என்பது மரபு. இப்போதெல்லாம் அந்த வேலையை கேட்டரிங் கான்ட்ராக்ட்காரர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த பையில் தேங்காய் போடப் பட்டிருக்கும், தேங்காய் வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டு விட்டால் அதற்கு மேல் அங்கு தேங்காமல் இடத்தை காலி செய்து விட வேண்டும் என்று பொருளாம். 

எது எப்படி இருந்தாலும் நான் சொல்ல வந்ததது வெற்றிலைக்கான பெயர்க்க காரணம். காஞ்சி மஹா பெரியவர் ஒரு முறை அவருக்கு முன் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வெற்றிலையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, "வெற்றிலையை ஏன் வெற்றிலை என்று கூறுகிறோம் தெரியுமா?" என்று சுற்றி இருந்தவர்களை கேட்டாராம். யாருக்கும் பதில் தெரியவில்லை. பிறகு அவரே, "ஒரு செடி என்றிருந்தால் இலை, பூ, காய், கனி என்று எல்லாம் இருக்கும். ஆனால் வெற்றிலைச் செடியில் பூ, காய், கனி என்று எதுவும் கிடையாது, வெறும் இலை மட்டும்தான். வெற்று இலைதான் வெற்றிலை ஆகி விட்டது". என்றாராம். 

ஒரு விருந்து என்றால் வெற்றிலை போட்டுக் கொண்டால்தான் நிறைவு. இப்போதெல்லாம் மிட்டா  பான் என்று வடக்கிந்திய பெரிய வெற்றிலையில் என்னென்னவோ சேர்த்து இனிப்பாக ஒன்று தருகிறார்கள். நல்ல வேளை, அருகிலேயே நம்மூர் வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பும் வைக்கிறார்கள். என் விருப்பம் இரண்டாவதுதான். '

ஆய கலைகள் அறுபத்து நான்கில் வெற்றிலை போடுவது உண்டா என்று தெரியவில்லை. அந்த கலையில் தஞ்சாவூர்காரர்களை மிஞ்ச முடியாது. முதலில் கொஞ்சம் பாக்கு, அல்லது சீவலை வாயில் போட்டுக் கொண்டு விடுவார்கள்.  பிறகு தண்ணீரில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வேட்டியிலோ, துண்டிலோ துடைத்து சுண்ணாம்பை அளவாக தடவுவார்கள், பிறகு அதை சரி பாதியாக குறுக்கு வாட்டில் மடித்து அந்த காம்பை ஆரம்பத்திலிருந்து நுனி வரை சர்ரென்று கிழிக்கும் அழகு..! பிறகு அதை சுருட்டி ஆள் காட்டி விரலுக்கும் நாடு விரலுக்கும் நடுவில் வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு எத்தனை வெற்றிலை வேண்டுமோ அத்தனையையும் ரெடி பண்ணிய பிறகு ஒவ்வொன்றாக வாய்க்குள் தள்ளுவார்கள். சிலர் கள்ளக் குரலில் பாடிக் கொண்டே  இதை செயல் படுத்துவார்கள். 

அவர்கள் குதப்பிக் கொண்டிருக்கட்டும், நாம் எலுமிச்சம் பழத்தின் சிறப்பை பார்க்கலாம். 

நம் நாட்டில் பெரியவர்களை பார்க்கச் செல்லும் பொழுது அவர்கள் கையில் எலுமிச்சம் பழம் கொடுத்து வணங்குவது மரபு(தில்லானா மோகனாம்பாள் படம் ஞாபகம் இருக்கிறதா? அதில் சவடால் வைத்தி பெரிய மனிதர்களை முதலில் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு எலுமிச்சம் பழம் கொடுப்பார்). இதற்கு என்ன காரணம்?

எல்லா பழங்களும் காயாக இருக்கும் பொழுது கசப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும். பழுத்த பிறகுதான் அதற்கு இனிப்பு வரும். ஆனால், எலுமிச்சம் பழமோ காயாக இருக்கும் பொழுதும் புளிப்பாகத்தான் இருக்கும், பழுத்த பிறகும் அதே புளிப்புச் சுவைத்தான். இதை நாம் பெரியவர்களுக்கு கொடுக்கும் பொழுது, நம் இருவருடைய உறவும் இந்த எலுமிச்சம்பழத்தை போல எப்போதும் மாறாமல் இருக்கட்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறோமாம்  

-- ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உபன்யாசத்தில் கேட்டது.