பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

பழைய சினிமா ஒன்று
"விரும்பிப் போனால் விலகிப் போகும்"
"விலகிப் போனால் விரும்பி வரும்" என்ற வாசகங்களோடு துவங்கும். அந்த வாக்கியங்களை நியாயப்படுத்தும் சம்பவங்கள்தான் கதை.
என் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் அமைந்திருக்கிறது. எந்த விஷயத்திற்காவது அதிகம் ஆசைப்பட்டால் அது கிடைக்கவே கிடைக்காது. அந்த ஆசை அடங்கி அதை விட்டு விலகியதும் மடியில் வந்து விழும்.
பிறந்த நாள் வாழ்த்துக்களும் அப்படித்தான். சின்ன வயதில் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும். எல்லோரும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன். ம்ஹூம்! நடந்ததேயில்லை. பிறந்த நாள் என்று என்பது தெரிந்தால் தானே கொண்டாட? அது வருவதும் தெரியாது போவதும் தெரியாது. தவிர எங்கள் வீட்டில் நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம்முடைய நட்சத்திரம் வரும் நாளைத் தான் பிறந்த நாள் என்பார்கள். அதைக் கூட கொண்டாடும் பழக்கமெல்லாம் கிடையாது. முடிந்தால் கோவிலுக்குச் செல்வோம். பள்ளியில் பிறந்த நாளன்று புத்தாடை அணிந்து சாக்லேட் கொடுக்கும் சில மாணவிகளை பார்க்கும் பொழுது நாமும் இப்படி கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு என் கணவர் சர்ப்ரைஸ் கிஃப்டெல்லாம் கொடுத்ததில்லை. என் பிறந்த நாளன்று உறவினர்கள், நண்பர்கள் யாராவது வாழ்த்தினால் என் கணவர்,"உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா? சொல்லவேயில்ல..?" என்பார். போஸ்டரா அடித்து ஒட்ட முடியும்?
முதிர்ச்சி வர வர, பிறந்த நாளைக் கொண்டாடும்படி நாம் என்ன செய்து விட்டோம்? என்னும் கேள்வி பிறந்தது. ரமண மகரிஷியிடம் ஒரு முறை அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அனுமதி கேட்ட பொழுது,"பிறவி எடுத்ததற்காக வருத்தப்பட வேண்டும், அதில் கொண்டாட என்ன இருக்கிறது?" என்றாராம். அவரே அப்படி கூறியிருக்கும் பொழுது பிறந்த நாள் கொண்டாட நமக்கென்ன அருகதையிருக்கிறது? என்று அந்த ஆசை அற்றுப் போனது.
அதன் பிறகுதான் முகநூலில் சேர்ந்தேன். பிறந்த நாளில் சிலர் வாழ்த்துவார்கள். இந்த வருடம் வாட்ஸாப், முகநூல், மெஸென்ஜர் என்று எல்லா தளங்களிலும் வாழ்த்துக்கள் வந்தன. உறவினர்கள், நண்பர்கள், நன்கு தெரிந்தவர்கள், நேரில் பார்த்து பழகாதவர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பெரியவர்களுக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏. சிறியவர்களுக்கு ஆசிகள்.
என் மரியாதைக்குரிய பலரும் வாழ்த்தியது மகிழ்ச்சியூட்டியது.
என் பேத்தி பேப்பரைக் கொண்டு பூங்கொத்து அவளே செய்து எனக்கு கொடுத்தாள். நிஜமான பூ என்றால் வாடி விடும். இது வாடாமலர் பூங்கொத்து! இது போதாதா?
உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கும் மீண்டும் நன்றி 🙏🙏❤️❤️❤️
எ.பி.வாட்ஸாப் குழுவில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக அறிந்தேன். எல்லோருக்கும் நன்றி 🙏🙏