கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 11, 2025

படங்களாக ஒரு பதிவு

படங்களாக ஒரு பதிவு


அம்மாவின் திவசத்திற்காக திருச்சி சென்றபோது முத்தரசநல்லூர் குருவாயூர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் போன்ற கோவில்களுக்குச் சென்றோம். எப்போதும் செல்லும் மாணிக்க விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கமும் விடவில்லை. இவைகளைப்பற்றி என்ன எழுதுவது? படங்கள் பேசட்டும். நேரம் குறைவாக இருந்ததால் சந்திக்க விரும்பிய தோழிகளையும், பதிவர்களையும் சந்திக்க இயலவில்லை.




பரமபத வசல்



சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில். நாங்கள் திருச்சியில் வசித்த பொழுது இப்படிப்பட்ட அலங்காரங்கள் கிடையாது.











மாணிக்க விநாயகர் கோவில் விதானத்தில் இருந்த விநாயகர் சிற்பங்களை படமெடுக்க முயன்றபொழுது ஒருவர்,"புகைப்படம் எடுக்காதீர்கள்" என்றார். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர் என்று நினைத்தால்,"ஏதாவது சாப்பிடுகிறீர்களா? போளி இருக்கு, வடை இருக்கு" என்கிறார். கர்ர்ர்....


சின்னக்கடை வீதியின் வழியே St.Joseph church




Krishna Readymade Hall:

இந்த கடையோடு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எங்களின் சிறு வயதில் எங்கள் அம்மா எங்களுக்கு உடைகள் (skirt& blose frock) வாங்கியிருக்கிறார். நான் என் மகளுக்கு வாங்கினேன், இப்போது என் பேத்திகளுக்கு, தொடரும் பாரம்பரியம்.

சமயபுரம் கோவிலுக்குச் சென்றபொழுது மயக்கிய அந்திவானம்

மேற்கண்ட படத்தை'தெய்வீகம்' என்ற புகைப்பட போட்டிக்கு அனுப்ப நினைத்தேன்.

திருச்சியில் நான் தவற விட்ட விஷயம் பெரிய கடை வீதியின் சவுக்கில்(செளக் என்னும் ஹிந்தி வார்த்தையை உள்ளூர்வாசிகள் சவுக்கு என்பார்கள்) இருக்கும் பழைய புத்தக கடை :((

வைத்தீஸ்வரன் கோவில் குளக்கரையில்

கங்கை கொண்ட சோழபுரம்


சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இதைக்கட்டிய ராஜேந்திர சோழன் தன் அப்பா கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்று நினைத்ததால் இது 157 அடி உயரமாக கட்டப்பட்டதாம். பெரிய கோவில் 212 அடி. உயரம். மேற்கண்ட படத்தில் பிரமிடு போல தோன்றவில்லை? 

வெங்கட் நாகராஜ், கோமதி அக்கா, தி.கீதா போன்றவர்கள் போடும் படங்களோடு ஒப்பிடாதீர்கள். நான் ஒரு கத்துக்குட்டி.

Wednesday, April 9, 2025

பாடலாத்ரி, திருநின்றவூர்

சிங்கபெருமாள் கோவில்

கேரள விருந்தாளியோடு பாடலாத்திரி எனப்படும் சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோவில் எல்லாம் தரிசனம் செய்தோம். 

சிங்கப் பெருமாள் கோவில் ஒரு குடைவரை கோவில். அந்த சிறு குன்றே நரசிம்மர் என்ற கருதப்படுவதால் அந்த குன்றை வலம் வருவது சிறப்பு என்பது நம்பிக்கை. இங்கே தவம் செய்த ஜாபாலி முனிவர் தனக்கு நரசிம்மராக திருமால் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால் உக்ர நரசிம்மராக அவருக்கு காட்சி அளித்தாராம். இங்கு பெருமாளுக்கு நெற்றிக் கண் உண்டு. தீபாராதனையின் பொழுது நெற்றிக்கண்ணை திறந்து தரிசிக்க வைக்கிறார்கள். அபூர்வ அனுபவம் அது. 



ஹிருதயாலீஸ்வரர் கோவில்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் சிவ பெருமான் மீது அதீத பக்தி பூண்டவர். தற்சமயம் திண்ணனூர் என்று அழைக்கப்படும் திருநின்றவூரில் வசித்த அவர், பெரும்பாலும் அங்கிருந்த இலுப்ப மர காட்டில்தான் அமர்ந்து தியானத்தில் எடுபட்டிருப்பார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், கைலாசநாதர் கோவிலை கட்டிக் கொண்டிருந்தார். அதைப்போல தானும் இறைவனுக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று விரும்பிய பூசலார் மானசீகமாக இறைவனுக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார். பல்லவ மன்னன் கோவிலை கட்டி முடித்த அதே சமயத்தில் இவருடைய மனக்கோவிலும் முற்றுப் பெருகிறது. பல்லவ மன்னன் எந்த நாளில் கும்பாபிஷகேத்திற்கு நாள் குறித்திருந்தாரோ அதே நாளில் பூசலாரும் தன் இதயக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய சிவ பெருமான், "நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு,  நான் அங்கு செல்ல இருப்பதால் நீ கட்டியிருக்கும் கோவிலில் எழுதருளுவது இயலாது" என்று கூறி விடுகிறார். மறுநாள் திருநின்றவூருக்குச் சென்ற மன்னன், "இங்கு பூசலார் கட்டியிருக்கும் ஆலயம் எங்கிருக்கிறது?" என்று விசாரிக்க, அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். "எப்போதும் இலுப்ப காட்டில் உட்கார்ந்திருக்கும் ஓரு ஏழை பிராமணர் கோவில் கட்டியிருக்கிறாரா?"  அவர் மன்னன் முன் நிறுத்தப்படுகிறார். "ஐயா! நீங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கேயிருக்கிற்து?" என்று அரசன் கேட்க, அதிர்ச்சி அடைந்த பூசலார், " பிறர் அறியாமல் நான் மானசீகமாக கட்டிய கோவில் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்?" என்று கேட்க, அரசர் தன் கனவைப் பற்றி விவரிக்கிறார். 

"என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா நான் வணங்கும் ஈசன்?" என்று நெகிழ்ந்தார் பூசலார். அரசன் அவரை வணங்கி திரும்பினான் என்று  முடிகிறது பெரிய புராணம். ஆனால் பூசலார் விரும்பியது போல அவருக்கு கோவில் எழுப்பிக் கொடுத்தார் பல்லவ ராஜா என்கிறது கோவில் தல புராணம்.

பூசலார் இதய பூர்வமாக கோவில் எழுப்பியதால், இந்த கோவிலின் கருவறை விமானம் இதய வடிவத்தில் இருக்குமாம். கருவறைக்குள் சிவலிங்கத்திற்கருகில் சிலா வடிவில் பூசலாரையும் தரிசிக்கலாம். தனி சன்னிதியில் தாயார் மரகதாம்பிகை.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்திருந்ததால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த ஏரிகாத்த ராமர் கோவிலுக்குச் சென்றோம். 

அங்கு கோவில் மூடும் நேரமாகி விட்டாலும், அங்கிருந்த வயது முதிர்ந்த பட்டாச்சாரியார் மிக அன்போடு எங்களை வரவேற்று தரிசனம் செய்வித்தார். நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக ராமர். பக்கத்தில் வாத்ஸ்யல்யமே உருவாக ஜானகி மாதாவும், இளவல் லட்சுமணனும். அந்த பட்டாச்சாரியார் எங்களை அந்த கோவிலில் மூன்று விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். கோவிலின் பின் பக்கம் இருக்கும் ஏரி, முன் பக்கம் இருக்கும் நவீன கஜேந்திர மோட்ச சிற்பம்,  கோவிலுக்குள் இருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் இவைதான் அந்த மூன்றும்.


ராம லட்சுமணர்களை சுமந்து செல்லும் ஹனுமான்

ஹனுமனின் பின்புறம், ராம லட்சுமணர்களின் திருவடிகள்

அவர் சொன்னபடி  செய்தோம். அங்கிருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் வேறு எங்கும் காண முடியாதது. தன் இரு தோள்களிலும் ராமனையும், லட்சுமணனையும் ஹனுமன் தூக்கிச் செல்வது போன்ற அபூர்வ சிற்பம். எங்களை அந்த ஹனுமந்தனை வலம் வரச் சொல்லி ஹனுமாரின் முன்னும்,பின்னும்(மார்பிலும், முதுகிலும்)கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் ராம,லட்சுமணர்களின் பாதங்களை தரிசிக்க சொன்னதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நன்றாக தரிசனம் செய்த நிறைவோடு வீடு திரும்பினோம்.