கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 5, 2018

அருவி (திரைப்பட விமர்சனம்)

அருவி 
(திரைப்பட விமர்சனம்)



மீண்டும் ஒரு ஆப் பீட் படம். தவறு எதுவும் செய்யாமல் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி மாறிப் போகிறது என்னும் ஒரு பெரிய விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காக பாராட்டலாம்.

ஆனால் அதையே காட்டிக் கொண்டிருந்தால் ரொம்பவும் அழுவாச்சியாக ஆகி விடுமோ?, அப்புறம் படம் ஓடுமா? என்னும் பயம் வந்து விட்டதோ என்னவோ,  துப்பாக்கி முனையில் ஏழாம் வாய்ப்பாடு சொல்ல சொல்வதும், டம்ப் ஷராட்ஸ் விளையாடுவதுமாக சிறுபிள்ளைத் தனமாக தடம்மாறி, நம்ப முடியாமல் முடிகிறது. நடுவில் தேவை இல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனை வேறு சீண்டுகிறார்கள். 

ஊதினால் பறந்து விடுவது போல இருக்கும் பெண், தாத்தா காலத்து கை துப்பாக்கியை அனாயசமாக கையாளுவதும், அவளும் அவளுடைய திரு நங்கை தோழியும் தனியார் டி.வி. நிலையத்தை  மிகச் சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், மிகப் பெரிய போலீஸ் பட்டாளத்தை திணரச் செய்வதும், நோய் முற்றி ஹெச்.ஐ.வி. நோயாளிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் இருக்கும் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று எங்கேயோ ஒரு மலையில் தனியாக குடிசை கட்டிக்கொண்டு வாழ்வதாக காட்டுவதும்,அங்கிருந்த படியே வாய்ஸ் மெசேஜ் அனுப்பபுகிறாள் என்பதும்., காதில் பூ அல்ல மாலையே சுற்றி இருக்கிறார்கள். 

கதா நாயகி அதிதி பாலன் நன்றாக நடித்திருக்கிறார். திரு நங்கையை நன்றாக காண்பித்திருப்பதற்காக பாராட்டலாம். இசை பிந்து மாலினி, பாடல்கள் குட்டி ரேவதி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திறமை வாய்ந்தவராகத் தெரிகிறார். தன்னுடைய அடுத்த படத்தில் தனி மனித தாக்குதல் என்னும் சின்னத்தனங்களை விட்டு விட்டு நல்ல படங்களை கொடுப்பர் என்று எதிர்பார்ப்போம்.  

Thursday, January 4, 2018

வைகுண்ட ஏகாதசி 2017


வைகுண்ட ஏகாதசி 2017


பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி வைபவம் காணச் சென்றிருந்தோம். வெள்ளி அன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய நாங்கள் மாலை 4:30க்கு ஸ்ரீரெங்கத்தை அடைந்தோம். அங்கு கொஞ்சம் சிரமபரிகாரம் செய்து கொண்டு இரவு உணவையும் முடித்து விட்டு எட்டு மணிக்கு கோவிலுக்கு கிளம்பினோம். வடக்கு வாசலில் எங்களை இறக்கி விட்ட ஆட்டோக்காரர், என் அண்ணாவிடம் "ராத்திரி பதினோரு மணிக்கு வந்து விடலாம் சார் " என்றார். அவர் ஏதோ எங்களை பயமுறுத்துவதாக நினைத்தோம். ஆனால் பரமபத வாசலை நோக்கிச் சென்ற வரிசை கிழக்கு உத்திரவீதியின் ஆரம்பத்தில் தொடங்குவதை பார்த்ததும் அவர் சொன்னது உண்மைதான் என்று புரிந்து கொண்டோம். வந்து விட்டோம், பரமபத வாசலை மிதித்து விடலாம் என்று வரிசையில் சேர்ந்து கொண்டோம். வரிசை ஆங்காங்கு நின்று நகர்ந்தது. ஒலி பெருக்கியில் வேறு ஒன்பது மணிக்கு மூலவர் சந்நிதி அடைக்கப் பட்டு விடும், 10 மணிக்கு பரமபத வாசல் அடைக்கப் பட்டு விடும் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். 

நாங்கள் கருடாழ்வார் சந்நிதியை அடைந்த பொழுது மணி 9:50. எங்களை அனுமதித்து விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் அதுவரை நகர்ந்து கொண்டிருந்த வரிசை நின்று விட்டது. விடுவார்களா? மாட்டார்களா? என்று தெரியவில்லை. வெளியே சென்று கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவரை கேட்ட பொழுது, "அங்கு ஒரே கும்பல்,அதனால்தான் இங்கு நிறுத்தி இருக்கிறார்கள் " என்றாரே தவிர வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அனுமதிப்பார்களா என்று சொல்லவில்லை. துப்புரவு பணியாளர் ஒருவர் பரமபத வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்றும், அது மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறினார். உள்ளேயோ மேலும் மேலும் மக்கள் அனுமதிக்கப்பட்டுக் புதுப் புது வரிசைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நல்ல வேளை அதிகம் காக்க வைக்காமல் மக்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்பு வர எல்லோரும் திமுதிமுவென்று ஓடி, தேவை இல்லாமல் பரமபத வாசல் அருகே வரிசை என்பதே இல்லாமல் நெரிசலை உண்டாக்கினார்கள்.  பரமபத வாசலுக்கு அருகில் விதானத்தில் இருக்கும் இரண்டு தங்க பல்லிகளை பார்க்க வேண்டும் என்றார்கள். ஏன் என்று என் மகன் கேட்டதற்கு, "கெட்ட  சொப்பனங்கள் பலிக்காமல் இருக்க"(இது காஞ்சீபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாளின் கோவிலில் இருக்கும் பல்லிகளை பார்ப்பதற்கு சொல்லப்படும் பலன்) என்றேன், உண்மையில் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எப்படியோ பரமபத வாசலை மிதித்து விட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது அந்த ஆட்டோக்காரர் கூறியபடி மணி பதினொன்று ஆகிவிட்டது.

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருவானைக்கோயில் 

ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் முகப்பு 


தூணின் மேற் பகுதியில் உள்ள அழகான யாளி
  




அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள மிக அழகான மகிஷாசுரமர்த்தினி ஓவியம் 
அடுத்த நாள் காலை திருவானைக்கோவில் சென்றோம். அங்கும் கும்பல்தான். இருந்தாலும் சௌகரியமாக தரிசனம் செய்ய முடிந்தது. ஸ்ரீரங்கம் கோவில் பெரிதாக இருக்கலாம், ஆனால் திருவானைக்கோவில்தான் அழகு! அங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் நல்ல தீர்க்கமாகவும் அழகாகவும் இருக்கும். 

மாலை மலைக்கோட்டை செல்ல விரும்பினான் என் மகன். மாணிக்க விநாயகரை தரிசித்துக் கொண்டு மலை ஏறத் தொடங்கினோம். நூற்றுக் கால் மண்டபம் வரை சென்றதும் அங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் மகன் அதுதான் இவ்வளவு படிகள் ஏறி விட்டாயே, மீதியையும் ஏறி விட முடியும் என்று உற்சாகப் படுத்தி மேலே கூட்டிக் கொண்டு சென்று விட்டான். அன்று சனி பிரதோஷமாக இருந்ததால் அங்கும் நல்ல கும்பல்.

தாயுமானவர் ஸ்வாமி சந்நிதியில் உள்ள இந்த சங்கிலியின் வளையங்கள் இரும்பு அல்ல, கருங்கல்!
மறுநாள் ஞாயிறு காலை திருப்பட்டூர் சென்றோம்.அதை தனி பதிவாக எழுத உத்தேசம். மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்றோம். இந்த முறை ஆயிரம் கால் மண்டபத்தில் சேவை சாதிக்கும் உற்சவரை தரிசித்து விட்டு, மூலவரின் முத்தங்கி சேவையையும் தரிசிக்க நினைத்தோம்.

ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் மலர் அலங்காரம்.
உற்சவரை கொட்டாரத்தில் தரிசித்தோம். அன்று பெருமாள் விமான பதக்கம் அணிந்திருந்தார். மூலவரை தரிசிக்க 250 ரூபாய் டிக்கெட் வாங்கலாம் என்றால் இங்கே அங்கே என்று அலைய விட்டார்கள். எப்படியோ தரிசித்துக் கொண்டு வந்தோம். பின்னர் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்த பொழுது மாலை ஆறு மணி ஆகி விட்டது. பெருமாள் தரிசனம் எப்போதும் ஆனந்தம்தான். ஆனால் கூடவே சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. நாங்கள் மூலவர் அருகே சென்ற போது அங்கிருந்த ஒருவர் "மூணு நாள் லீவு சேர்ந்தாற்போல் வந்தாலும் வந்தது" என்று அலுத்துக் கொண்டார். இத்தனை கும்பல் வரும் என்று ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கவில்லையா? போலீஸ்காரர்களை  மட்டும் வைத்துக் கொண்டு கும்பலை சமாளிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான செயல்தான். காவல் துறை திணறியது. திருச்சியில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன அவைகளிலிருந்து  ஸ்கவுட், NSS மாணவர்களை வரவழைத்து வாலன்டியர்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். 
உத்திர வீதியில் தண்ணீர் பாட்டில்கள் விற்றார்கள், கோவிலுக்கு உள்ளே எதுவும் இல்லை. குடி தண்ணீர் விநியோகத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம். இது ஒரு பக்கம் என்றால், வருத்தப் படத்தக்க இன்னொரு நிகழ்வு, முத்தங்கி சேவை தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, ஜி.ஆர்.டி. நிறுவனத்தினர் ஒரு பையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட், மிக்ஸர் பாக்கெட், ஒரு சிறு தண்ணீர் பாட்டில் வைத்து விநியோகம் செய்தனர். அது கிடைத்தவர்கள் எல்லாவற்றையும் வரிசையில் நிற்கும் பொழுதே காலி செய்து விட்டு அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டிலை அங்கேயே போட்டு விட்டு சென்றிருந்தனர். கோவிலுக்குள்ளே குப்பையை போடுகிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூடவா இருக்காது? அந்த GRT பையிலேயே போட்டுக் கொண்டு வழியில் இருக்கும் குப்பை கூடையில் போட்டிருக்கலாமே?!  இத்தனைக்கும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் நாகரீகமாக உடை அணிந்து கொண்டிருந்தனர். எல்லோரும் படித்தவர்களைப் போலத்தான் தென்பட்டனர் என்றாலும் சுற்றுப்புறத்தை குறிப்பாக ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

வெளியே வந்து டீ குடித்தோம். சுவையான இஞ்சி டீயை விற்பனை செய்து கொண்டிருந்தவர் தேநீரை எங்களுக்கு வழங்கி விட்டு," டீ குடித்து விட்டு கப்பை கீழே போட்டு விடாதீர்கள் நான் தனியாக பை வைத்திருக்கிறேன் அதில் போடுங்கள்" என்றார். இப்படியும் ஒருவர். 
பாராட்டலாம்.  





Sunday, December 31, 2017

புத்தாண்டு செய்தி

புத்தாண்டு செய்தி

ராமகிருஷ்ண பரமஹமசர் தன் சீடர்ளுக்கு உபதேசம் வழங்கும்
பொழுது வீட்டு வேலைகளை செய்தபடியே அவைகளை செவி மடுக்கும் அன்னை சாரதா தேவி தன் கருத்தை புன்னகையால் அங்கீகரிப்பாராம்.

ஒரு முறை சாரதா தேவி முறத்தால் புடைத்தும், ஜல்லடையால் சலித்தும் ஏதோ செய்து கொண்டிருந்தாராம். அதைக் கண்ட பரமஹம்சர் தன் சீடர்களிடம், "முறம், ஜல்லடை இந்த இரண்டில் முறம், தூசு, தும்பு போன்ற தேவையில்லாத விஷயங்களை வெளியே தள்ளி விட்டு நல்ல விஷயங்களை மட்டும் தன்னிடம் வைத்துக் கொள்ளும். ஆனால் ஜல்லடையோ நல்ல விஷயங்களை கீழே தள்ளி விட்டு விட்டு கல், மண் போன்ற குப்பைகளை தன்னிடத்தே வைத்துக் கொள்ளும். நாம் இந்த ஜல்லடையைப் போல இருக்கக் கூடாது. முறத்தைப் போல தீய மனிதர்களை புறம் தள்ளி விட்டு நல்ல மனிதர்களோடு மட்டும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்" எனறாராம். அதைக்கேட்ட அவருடைய சீடர்கள் ஆஹா! என்ன ஒரு அற்புதமான கருத்து என்று பெரிதும் ஆமோதித்தனராம். ஆனால் சாரதா தேவி வழக்கம் போல் அதை ஆமோதிக்காமல் இருக்க, பரமஹம்சர் சாரதா தேவியிடம்,"என்ன நான் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?" என்று கேட்டதும் சாரதா தேவி," எதை தள்ளுவது? எதை சேர்த்துக் கொள்வது? எல்லோரும் நம் மக்கள் தானே? மனிதர்கள் அப்படித்தான் நன்மையும், தீமையும் கலந்துதான் இருப்பார்கள், இதில் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்". என்றாராம்.

அன்னை சாரதா தேவியின் இந்த வாக்கையே புத்தாண்டு செய்தியாக்குகிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நட்போடும், உறவோடும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்!💐🎂😊👍