வெள்ளி, 4 மே, 2018

டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடு


டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடு

இப்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். க்ரிகெட் மாட்சுகளை பார்க்கும் பொழுது, அப்போதய டெஸ்ட் மாட்சுகள் நினைவுக்கு வந்தன.

ஐந்து நாட்கள் நடக்கும் மாட்சில் நடுவில் ஒரு நாள் ரெஸ்ட் உண்டு என்று என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான். வார இறுதியான சனி, ஞாயிறில் கடைசி இரண்டு நாட்களை வைத்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலும் வெள்ளி அன்று விடுமுறை விடுவார்கள். சிலர் அந்த கடைசி இரண்டு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்குவார்கள். நாலாவது நாளிலேயே மாட்ச் முடிந்து விட்டால் ஒரு நாள் டிக்கெட் வீணாகும். ஐந்து நாட்கள் விளையாடியும் வெற்றி தோல்வி இன்றி ட்ராவில் முடிவது பிடிக்காத சிலர், க்ரிகெட்டை வெறுக்க பெர்னாட் ஷாவை உதவிக்கு அழைப்பார்கள்.

ஒன் டே மாட்சுகள் வந்து, அதை ஒளி பரப்ப தொலைகாட்சியும் வந்த பிறகு, என்னைப் போன்றவர்கள் கூட மாட்ச் பார்க்க ஆரம்பித்தோம். வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியும் என்பது ஒரு நல்ல விஷயம்தான் என்றாலும், சிலருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அபாயமும் ஏற்பட்டது. இப்போது ட்வென்டி ட்வென்டி சீசன்.

டெஸ்ட் மாட்ச் ஐ.பி.எல். இவ்விரண்டோடும் அந்தக் கால மண வாழ்கையையும், இந்தக் கால மண வாழக்கையையும் ஒப்பிடலாம் என்று தோன்றியது.

டெஸ்ட் மாட்சுகள் மட்டும் கோலோச்சிய காலத்தில் விளையாட்டு வீரர்களை க்ரிகெட் போர்டுதான் தேர்ந்தெடுக்கும். அதைப் போல முன்பெல்லம் மணமகனோ, மணமகளோ, சம்பந்தப்பட்ட வீட்டுப் பெரியவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

இப்போது ஐ.பி.எல் ஏலம் நடப்பதை போலத்தான் திருமண வெப்சைட்டுகள் மூலம், மணமகனும், மணமகளும் தங்களைப் பற்றியும், தங்கள் திறமைகள்  குறித்தும் புகைப்படங்களோடு ப்ரகடனப் படுத்த எதிர் பார்டி தங்களுக்கு தேவையனவர்களை பிடிக்கிரார்கள். க்ரிஸ் கெயிலை தவற விட்டது போல சில நல்ல வரன்கள் மிஸ் ஆகலாம்.

முன்பெல்லாம் டெஸ்ட் மாட்சுகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்படும் பொழுது பந்து வீச்சாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்போது போல வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வது, எகிறி குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கர்ம வீரர்களாய் அடுத்த பந்து வீசப் போய் விடுவார்கள். அது போலத்தான் அப்போது தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்தான், தம்பியை படிக்க வைத்தான் என்று கொண்டாட மாட்டர்கள். பெண்களுக்கும் அப்படித்தான் புகுந்த வீட்டில் உழைத்துக் கொட்டியதற்காக பாராட்டெல்லாம் கிடைக்காது.
டெஸ்ட் மாட்ச் முதல் இரண்டு நாட்கள் அத்தனை விறுவிறுப்பாக இருக்காது. மெதுவாகத்தான் பிக் அப் ஆகும். அது போலத்தான் அந்தக் கால மண வாழ்க்கையும். முன்னேற்றம் மெதுவாகத்தான் இருக்கும். சன்மானமும் குறைவுதான்.

ஐ.பி.எல்.மாட்சுகளில் அப்படி நிதானமாக ஆட முடியாது. போடுகிற பந்தை எல்லாம் அடித்துதான் தீர வேண்டும். அதைப் போன்ற வேகமான வாழ்க்கைதான் இப்போது. பணப்புழக்கம் மிக அதிகம். சின்ன விஷயங்களை கூட கொண்டாடி உற்சாகப்படுத்த  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சியர் லீடர்கள்.

தொழில் நுட்பம் வளராத அந்த காலத்தில் அம்பயர் சொல்வதுதான் தீர்ப்பு. இதில் சில சமயங்களில் அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டர்கள். அந்த அம்பயர்களைப் போல வீட்டுப் பெரியவர்களின் வார்தைக்கு மறு பேச்சு இல்லாத காலம்.
இன்றோ, தர்ட் அம்பயரின் உதவி இல்லாமல் எதையும் தீர்மானிக்க முடிவதில்லை. தர்ட் அம்பயராக பணியாற்றுவது பெண்களின் பெற்றோர். பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.

ஒன்று கேம் ஃபார் த சேக் ஆஃப் கேம் என்றால், மற்றது சர்வைவல் டு த ஃபிட்டஸ்ட்!

புதன், 2 மே, 2018

கவிதா ஒயின்ஸ் ஸ்டாப்!


கவிதா ஒயின்ஸ் ஸ்டாப்!

அந்தப் பெண் மிகவும் பதட்டமாக இருந்தாள். ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் ஓ.டி.பி. நம்பர் கூட சொல்லமல் “சீக்கிரம், சீக்கிரம்” என்று அவசரப் படுத்தினாள். ஆட்டோ டிரைவர் பாலாஜிக்கு அவள் பதட்டம் கொஞ்சம் கவலை அளித்தது. அவளுக்கு தெரிந்தவர் யாருக்காவது உடல் நலம் சரியில்லையோ என்று தோன்றியது.

“எங்கம்மா போகணும்?” என்றான்

“வளசரவாக்கம் கவிதா ஒயின்ஸ்” கூறிவிட்டு அந்தப் பெண் செல் போனில் யாரையோ அழைத்தாள். இந்தக் கால பெண்கள் குடிக்கிரார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறான், ஆனாலும் அதற்காக ஒரு பெண் ஒயின் ஷாப்பைத் தேடி தனியாக செல்லும் அளவிற்கு முன்னேற்றமா?
“எல்லாம் ரெடியா? நான் வரும் வரை வெயிட் பண்ணுங்க.. என்னை விட்டு விட்டு ஆரம்பித்து விட வேண்டாம், ஹரீஷ் இருக்கானா? அவன் வந்தால் அவ்வளவுதான், எல்லாத்தையும் அவனே ஃபினிஷ் பண்ணிடுவான்”

பசங்களோடு வேறு கூட்டா? சு..த்..த..ம்..

அவர்கள் எதிர் முனையில் என்ன சொன்னர்களோ..? நான் பாதி வழி வந்தாச்சு.. என்றவள், இவனிடம், சீக்கிரம் போப்பா..” என்றதும் பாலாஜிக்கு கோபம் வந்தது.

“சிக்னலில் நிக்காம போக முடியுமா?” என்றதும் “ஸ்..சூ.” என்று நகத்தை கடிக்க தொடங்கினாள்.

“சரிதான், இந்த அளவு முத்திப் போய் விட்டதா?”

“இங்கதான், இங்கதான், நிறுத்துங்க,” ஆட்டோவை நிறுத்தும் முன்பே அதிலிருந்து குதித்து விடுவாள் போலிருந்தது. நாற்பத்து மூன்று ரூபாய் ஆகியிருந்தது. ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு, மிச்சம் வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றாள்.

அவளுக்காக கவிதா ஒயின்ஸ் வாசலில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும்,” ஏன் லேட்டு? இத்தனை நேரம் பாதி முடித்திருக்கலாம், எனிவே, லெட் அஸ் நாட் வேஸ்ட் டைம்” என்று எல்லோரும் கவிதா ஒயின்ஸ் பக்கத்தில் இருந்த வீட்டின் கேட்டை திறக்கும் பொழுது, "உங்க வீட்டுக்கு, லாண்ட் மார்க் சொல்வது ரொம்ப கஷ்டமா இருக்கு, கவிதா ஒயின்ஸ்னு சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றுகிறது, ஆனால் அப்படி சொன்னால்தான் ஈசியா புரிகிறது," என்று ஆட்டோவில் வந்த பெண் கூறியதும், எல்லோரும் சிரித்தார்கள்.

“ம்ம்.. கச்சேரிதான்..” என்று நினைத்துக்கொண்ட பாலாஜி, கிடைத்த அடுத்த சவாரியிடம், “காலம் ரொம்ப கெட்டுப் போச்சு சார், பசங்களும், பொண்ணுங்களும் சேர்ந்து குடிக்கிராங்க..” என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குத் தெரியாது, அவர்கள் எல்லோரும் ஆர்கிடெக்சர் படிக்கும் மாணவர்கள், என்பதும், எல்லோரும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் பண்ணுவதற்காக கூடி இருக்கிரார்கள் என்பதும்.