கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 6, 2026

சின்னி சினிமா கடிதம்

அன்புள்ள அம்மா,

எப்படி இருக்கிறாய்? ஊருக்கு போய் செட்டிலாகி விட்டாயா? இந்த முறை ஜெட் லாக் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொன்னாய். அப்பா எப்படி இருக்கிறார்? நீங்கள் இருவரும் ஊருக்குச் சென்றதும்தான் நீங்கள் இங்கே எனக்கு எத்தனை வேலை செய்து கொடுத்திருக்கிறீகள் என்பது புரிகிறது. குழந்தைகளும் உங்கள் இருவரையும் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள். U NO, Carrom விளையாட தாத்தாவும், கதை சொல்ல பாட்டியும் இல்லாதது அவர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. குளிர் முடிந்தவுடன் மீண்டும் இங்கே வந்து விடுங்கள்.


ஓ.டி.டி.யில் என்ன படம் பார்த்தீர்கள்? நான் இரண்டு நல்ல படங்கள் பார்த்தேன். ஒன்று துரந்தர். ரண்வீர் சிங், அக்ஷை கன்னா, சஞ்சை தத், மாதவன், சாரா(தெய்வத் திருமகள், சைவம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்) நடித்தது. உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 

காந்தகார் விமான கடத்தலில் படம் துவங்குகிறது. பாகிஸ்தான் எப்படி நம் நாட்டில் வன்முறையை கட்டவிழ்கிறது? அதை முறியடிக்க இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பதைத்தான் இந்தப் படம் டீல் செய்கிறது.

கட்டுப் கோப்பான திரைக்கதை, சிறப்பான நடிகர்கள் தேர்வு, திறமையான இயக்கம் எல்லாம் படத்தின் நீளத்தை மறக்கச் செய்கின்றன. வன்முறை கொஞ்சம் அதிகம்தான்.

ரண்வீர்சிங் ஆரவாரமாக நடிக்கக் கூடியவர். அவரிடமிருந்து நடிப்பு பிரவாகமாய் வரும். அப்படிப்பட்டவரைஅடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சும்மா சொல்லக் கூடாது மனிதர் பிரமாதப் படுத்தியிருக்கிறார். வசனம் மிகவும் குறைவு. முக பாவங்களும், உடல் மொழியும் அட்டகாசம்! இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை எதிர்பார்க்கலாம். 

அக்ஷை கன்னா மட்டும் இளைத்தவரா என்ன? தோற்றத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், நடிப்பு கணம். முதல் காட்சியில் டைட் க்ளோசப்பில் வருவது மாதவனா? முன் வழுக்கையில் இரண்டு முடிக்கற்றையோடு அடையாளம் தெரியவேயில்லை, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு முழு ஜஸ்டிஸ் செய்திருக்கிறார். 

வாட்டசாட்ட ரண்வீருக்கு, குட்டிப்பெண் சாரா அத்தனை பொருத்தமாக தோன்றவில்லை, மேலும் என் மனதில் இன்னும் அந்த சிறுமியாகத்தான் தோன்றுகிறார். நீ பார்த்துவிட்டு உனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல். ஆனால் அசல் பாகிஸ்தானி பெண்ணைப் போலவே இருக்கிறார். நமக்கு நன்கு அறிமுகமான இவரை அறிமுகம் சாரா அர்ஜுன் என்று டைட்டிலில் போடுகிறார்கள்.ஹிந்தியில் இதுதான் முதல் படம் போல.

கண்டிப்பாக நீயும், அப்பாவும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தனை பேர்கள், எவ்வளவு ஆபத்துகளை எதிர் கொள்கிறார்கள்? நாம் ஜாலியாக இருக்கிறோம் என்று தோன்றியது. 

ஒரு முக்கிய விஷயம், இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரண்வீர் சிங்கை ரண்பீர் கபூரோடு குழப்பிக் கொள்ளாதே. தீபிகா படுகோனின் கணவர் இவர். 

சீரியஸ் படத்தை பற்றி சொல்லி விட்டேன், அடுத்தது ஒரு ஜாலியான, ஃபீல் குட் நகைச்சுவை படம் 'சர்வம் மாயா' என்னும் மலையாள படம். நிவின் பாலி, ரியா ஷிபூ, ஜனார்த்தனன், வினீத் முதலியோர் நடிக்க, அகில் சத்யன் இயக்கியிருக்கும் படம்.  


ஒரு வகையில் இது ஒரு முக்கோண காதல் கதைதான், அதே சமயத்தில் பேய்க்கதை. பேய் என்றால் கோவித்துக் கொள்ளும், திடீரென்று மனிதர்கள் வந்து விட்டால் பயப்படும் பேய். தமாஷாக இருக்கிறதா? அதேதான்.

நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தாலும், பூனூலை அறுத்து எறிந்து விட்டு, ஒரு இசைக் குழுவில் எலெக்ட்ரிக் கிடார் வாசிக்கும் நிவின் பாலியை தவிர்த்து விட்டு வெளிநாடு சென்று விடுகிறது அந்த குழு. தாற்காலிக வேலை தேடும் நிவின் பாலி வேறு வழி புலப்படாமல் அவருடைய அத்தை பையனின் ஆலோசனையின் பேரில் பூஜைகள் நடத்தி வைக்க ஒப்புக் கொள்கிறார்.

ஒரு பையனை பிடித்திருந்த பேயை ஓட்டும் பூஜையை அவர் நடத்தியவுடன் அந்தப் பையனை பிடித்திருந்த பேய் ஓடி விடுகிறாது. ஆனால் அது வேறு எங்கும் போகவில்லை, நவின் பாலியின் வீட்டிற்கு வந்து விடுகிறது. ஆரம்பத்தில் அச்சப்படும் நிவின் பாலி போகப் போக பேய்க்கு நல்ல தோஸ்த் ஆகி விடுகிறார். பேயின் உதவியினால் அவருக்கு மும்பையில் ஒரு பிரபல இசை அமைப்பாளரிடம் வேலை கிடைக்கிறது. அங்கு சந்திக்கும் ஒரு பெண் மீது இவருக்கு காதல் அரும்ப, பேய்க்கு பொறாமை வந்து விடுகிறது. அதன் பின் நடப்பது என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்த மாதிரி ரோலில் நிவின் பாலி நடிப்பதற்கு என்ன? ஜமாய்த்திருக்கிறார். அவருடைய பெரியப்பாவாகவரும் ஜனார்த்தனன் மிகவும் பொருத்தம். பேயாக வரும் ரியா ஷிபு இதற்கு முன் வேறு ஏதாவது படத்தில் நடித்திருக்கிறாரா? என்று தெரியவில்லை. நாம் பார்ப்பது சினிமா என்பதையே மறக்கடித்து விடுகிறது இவரின் இயல்பான நடிப்பு. குழந்தைத்தனமான முகம், சிரிப்பு, எனர்ஜி, ஸோ கியூட்! பூவே பூச்சூடவா நதியாவை நினைவூட்டுகிறார். உனக்குதான் நதியாவை பிடிக்குமே, இந்தப் படமும் உனக்கு நிச்சயம் பிடிக்கும். 

உடம்பை கவனித்துக் கொள். மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடு. என்னதான் ஃபோனில் பேசினாலும் கடிதம் ஒரு சுகம் இல்லையா? அடிக்கடி மெயில் அனுப்பு. 

அன்புடன்

சின்னி


  


மயக்கம் என்ன?

 (இது ஒரு சிம்பிள் ஜாலி  கதை)

மயக்கம் என்ன?

பானுமதி வெங்கடேஸ்வரன்


தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தாத்தா திடீரென மயங்கியதும் வெலவெலத்துப் போனான் ராகுல். அவசரமாக 108 ஆம்புலென்ஸை தொடர்பு கொண்டான்.

"என்னாச்சு?" நன்னாத்தானே இருந்தார்..? பதறினார்கள் அம்மாவும், அப்பாவும்.

"தெரியலை, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா?" என்று கேட்டான் ராகுல்.

"இல்ல.. என்னாச்சுனு தெரியலையே?" தாத்தா மெல்ல கண்விழித்தார்.  அவருடைய கண்களைத் துடைத்து, கொஞ்சமாக தண்ணீர் அருந்த செய்து, மின்விசிறியை சுழல விட்டு, ஜன்னல் கதவை திறந்தான் ராகுல். தாத்தாவின் பார்வை அவன் மீதே நிலைத்தது.

"ராகுல்.." என்று அவர் என்னவோ சொல்லத் தொடங்க ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

"ஆம்புலென்ஸெல்லாம் எதுக்கு? ஐயாம் ஆல்ரைட்" என்றார் பலவீனமாக.

நான் ஆம்புலென்ஸில் போறேன், நீ பின்னால வா" என்ற அப்பா, சட்டையை மாட்டிக் கொண்டார். 

ஆஸ்பத்திரியில் வழக்கமான பரிசோதனைகள் எல்லாவற்றையும் செய்தார்கள். "பி.பி. நார்மல். இஸ் ஹி டயபடீக்?"

"நோ.."

"குட்! தேவையான அளவு தண்ணி குடிக்கறாரா?, டீ ஹைட்ரேஷனால் கூட மயக்கம் வரும்"

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், ராகுலின் அப்பா தன் அப்பாவை பார்த்தார். அவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறேன் என்பது போல தலையசைத்தார்.

"கவலப்படும்படி எதுவும் இருக்கறதாக தெரியவில்லை. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்" என்ற டாக்டர். நர்ஸிடம் "ஐ.வி. குடுங்க" என்று கூறி விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி, "வெயிட் பண்ணுங்க," என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குத் திரும்பினார். 

ராகுலும், அவன் அப்பாவும் வெயிடிங் லவுஞ்சில் போடப்பட்டிருந்த ஜில்லென்றிருந்த மெட்டல் நாற்காலிகளில் அமர்ந்து, தங்கள் செல் ஃபோன்களை எடுத்துக் கொண்டனர். சற்று நேரத்தில் நீரஜா அழைத்தாள். ராகுல் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.

எதிர் முனையில் "என்ன சொல்லிட்டயா?" என்றாள் ஆர்வ நீரஜா. 

"எங்க..? தாத்தாக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ நானும், அப்பாவும் ஹாஸ்பிடலில்தான் இருக்கோம்."

"அடப்பாவமே என்னாச்சு?"

"நான் தாத்தாகிட்ட.." என்று அவன் ஆரம்பிக்க, அவன் அப்பா, அவனை கையசைத்து அழைத்தார். "அப்பா கூப்பிடறார், ஐ வில் கால் யூ லேட்டர்" என்று செல்ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அப்பாவை நோக்கி நடந்தான்.

"ரிசல்ட் எல்லாம் வந்துடுத்தாம், டாக்டர் கூப்பிடறார்" என்றபடியே அப்பா டாக்டரின் கன்சல்டேஷன் அறையை நோக்கி நடக்க, ராகுலும் பின் தொடர்ந்தான்.

உள்ளே நுழைந்தவர்களை உட்காரச் சொல்லி கை காட்டிவிட்டு, மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். மேஜையில் இருந்த ரிப்போர்டுகளை பிரித்துப் பார்த்தவர், நத்திங் அலார்மிங். அவர் வயசுக்கு ஹீ இஸ் குட்! ட்ரிப்ஸ் ஏத்தி முடிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்று மருத்துவ ரிப்போர்ட் ஃபைலை இவர்கள்பால் தள்ளினார். பிறகு நர்ஸை அழைத்து, பேஷண்ட் சுந்தர்ராஜன் டிஸ்சார்ஜுக்கு ரெடி பண்ணுங்க" என்றார்.

இவர்கள் டாக்டருக்கு நன்றி கூறி,  வெளியே வந்து, பணம் கட்ட காத்திருந்த பொழுது, அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது. 

"என்னடா, ரெண்டு பேரும் ஃபோனை எடுக்க மாட்டேங்கறீங்க? தாத்தா எப்படி இருக்கார்?"

"இங்க சிக்னல் பிராப்லம் இருக்குமா, தாத்தாக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஹி இஸ் ஆல்ரைட், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவோம்."

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். மாலை காபி அருந்தும்போது தாத்தா அவனிடம், நீ எங்கிட்ட சொன்ன விஷயத்தை உங்க அப்பா, அம்மாவிடம் சொன்னாயா?" என்றார்.

என்னது என்பது போல அம்மாவும், அப்பாவும் பார்க்க, தாத்தா குறும்பாகச் சிரித்தபடியே, "அவன் சொன்ன விஷயத்தை கேட்டுதான் எனக்கு மயக்கமே வந்தது" என்றார்.

"அப்படி என்னடா சொன்ன?' என்றார் அப்பா.

ராகுல் தர்மசங்கடமாய் நெளிந்தான். "என்னடா அசடு வழியற? லவ் மேட்டரா? தைரியமா சொல்லு, நீ ஜாதி விட்டு ஜாதில கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல" என்று ரொம்ப பரந்த மனதோடு சொல்ல,

"யெஸ், நோ." என்ற ராகுல் தொடர்ந்து, தன் செல்ஃபோனைத் திறந்து, "ஷி இஸ் நீரஜா, நான் இவளதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு "இவளும் நம்ம ஜாதிதாம்பா" என்றான்.

"என்னது? எனக்கே மயக்கம் வரும் போல இருக்கே.." என்றதும், தாத்தா, "எனக்கு மயக்கம் வந்ததில் என்ன ஆச்சர்யம்? என்னோட பேரக் குழந்தைகளில் இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்காத முதல் ஆசாமி இவன்தான். சரி, சீக்கிர்ம் நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.

ராகுல், "சக்ஸஸ்" என்று நீரஜாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவள் முத்த ஸ்மைலி ஒன்றை பதிலாக அனுப்பினாள்.


Monday, February 2, 2026

கனடா டைரி

கனடா டைரி


இந்த வருடம் டிசம்பரில் பனிப்பொழிவு இங்கு குறைவுதான். கிருஸ்துமஸ் சமயத்தில் பனியால் மூடப்படாததால் இங்குள்ளவர்கள் விரும்புவது போல வொயிட் கிருஸ்துமஸ் இல்லை, பச்சை புல்லைப் பார்க்க முடிந்த க்ரீன் கிருஸ்துமஸ். சரி, அவ்வளுவதானா? பனி பொழிவு முடிந்து விட்டதா? என்று  கேட்டதற்கு "வெயிட் அண்ட் சீ, ஜனவரியில்தான் குளிர் அதிகமாக இருக்கும்" என்றாள்.

அதற்கேற்றார்போல் ஜனவரியும் வந்தது, கடுமையான பனிபொழிவும் வந்தது. அதுவும் சென்ற வாரம் மிகக்கடுமையான பனிப்பொழிவு. பனி பொழிந்து கொண்டிருக்கும் பொழுதே ஷவல் செய்வார்கள். எதிர் வீட்டு ஆள் அவர்கள் வீட்டு பனியை வாரிக் கொட்டி விட்டு நிமிர்ந்தால் தெருவில் விழுந்திருக்கும் பனியை சுத்தம் செய்யும் டிரக் வந்து தெருவின் பனியை குவிக்கிறேன் பேர்வழி என்று வீட்டு வாசல்களில் இரைத்து விட, எரிச்சலான எதிர்வீட்டுக்காரர்,"புல் ஷிட்! என்று தன் கையிலிருந்த உழவார படையை விட்டெறிந்தார்:))


24, 25 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். ஞாயிறு அன்று நாங்கள் சாயி பஜனுக்குச் செல்வோம். அதை கூட ரத்து செய்து விட்டு, ஜூமில் வேத பாராயணம் மட்டும் செய்தார்கள். நாள் முழுவதும் பூத்தூவலாய் பனி பொழிந்து கொண்டிருந்தது. ஞாயிறு இரவு குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து திங்கள் கிழமை பள்ளி விடுமுறை என்று மெயில் வந்தது. திங்கள் கிழமை காலையில் எழுந்து வந்தால்... இத்தனை நாட்களாக சூரியனை பார்க்காமல் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த வானம், சூரியனைக் கண்டதும் கோபத்தை விடுத்து பளிச்சென்று பிரகாசித்தது. ந ஊரில் கனமழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்ற அறிவிப்பு வந்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் :)) குழந்தைகள் ஸ்னோ பாண்ட் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பனி மலையில் விளையாட போய் விட்டார்கள். செவ்வாய் அன்று மீண்டும் முகம் தூக்கல்.

குளிர்காலம் தொடங்கி முதல் நாள் பனிப் பொழிவை வீடியோ எடுத்து 'first snow' என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தவர்கள், இந்த பனி புயலுக்குப் பிறகு ஷவல் செய்வதை வீடியோ எடுத்து, நாயகனில் வரும், "நாங்க அப்படி இல்ல, பத்து காசு பாக்கணும்னா ரத்த வேர்வை வேர்க்கணும்..' என்ற டயலாக்கையம், 'தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்..' என்ற மீம்ஸ்களையும் பகிர்ந்தார்கள்.

குளிர் காலம் தொடங்கியதுமே ஆங்காங்கு for snow removal Contat:.... என்று என்ற விளம்பர பலகைகளை பார்த்தேன். அவரவர் வீட்டு வாசலில் விழுந்திருக்கும் பனியை அவரவர்தான் அப்புறப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியாதவர்களுக்கும், தனியாக வசிக்கும் முதியவர்களுக்கும் உதவும்(காசு வாங்கிக் கொண்டுதான்) நிறுவனங்களின் விளம்பரம் அது என்று தெரிந்தது. 

குளிர் காலத்தில் அதிகம் தென்படும் மற்றொரு விளம்பரம் காது குரும்பையை  (ear wax) சுத்தம் செய்யும் விளம்பரங்கள். குளிர் காலத்தில காதில் அதிகமாக மெழுகு சேர்ந்து, அது உடல் சம நிலையை பாதித்து, தலை சுற்றலை உண்டாக்குமாம். நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் தலை சுற்றல் வந்த பொழுது, என் மகள் இதைக் கூறி, தேங்காய் எண்ணெயை லேசாக சூடு படுத்தி காதில் விட்டாள். சரியாயிற்று. இப்போதும் அதே தலை சுற்றல், அதே பாட்டி வைத்தியம்!.. தலை சுற்றல் போயே போயிந்தி. அதற்குப் பிறகு காதில் பஞ்சு வைத்துக் கொள்கிறேன். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் மகள், மருமகன் இருவரும் வெளியே சென்றதால் நான்தான் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. என் மகள்,  " எப்போதும் வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ளும் வின்டர் ஜாக்கெட், குல்லாய், மிட்டன்ஸ் தவிர scarf ஆல் கழுத்தை கவர் பண்ணிக்கொள், மூக்கினையும் மறைத்துக் கொள், மூக்கு வழியாக குளிர் காற்று உள்ளே சென்று விடும்" என்று ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாள். "இன்னிக்கு வெயில் இருக்கிறதே" என்றேன். இந்த வெயில் உரைக்காது, வெளியில் டெம்ப்ரேச்சர் -22 C, தவிர காற்று அதிகம்" என்றாள். வெளியே சென்ற பொழுதுதான் அவள் விடுத்த எச்சரிக்கைகளின் காரணம் புரிந்தது.  பனியில் நடக்கும் பொழுது பென்குயின் போல கால்களை கிட்ட கிட்ட வைத்து, உடலை முன் பக்கம் சற்று குனிந்து நடக்க வேண்டும். கீழே விழுந்தாலும் அதிகம் பாதிப்பு இருக்காது. என்பாள். 

அன்றைக்குப் பார்த்து நான் தவறான வகுப்பு வாசலில் நின்று விட்டேன். இங்கு கே.ஜி. வகுப்புகளுக்கு எதிரே குழந்தைகள் விளையாடதிறந்த வெளி இருக்கும். அதைத் தாண்டி வேலி இருக்கும். அந்த வெளியைத் தாண்டி நாம் நின்று கொள்ள வேண்டும். தங்கள் வகுப்பு கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை அடையாளம் காட்டிய பிறகுதான் ஆசிரியை குழந்தைகளை வெளியே அனுப்புவார்.

சாதாரணமாக சீக்கிரம் வந்துவிடும் குழந்தை இன்று வரவேயில்லையே என்று நான் பார்க்கிறேன். குழந்தைகளை வெளியே அனுப்பும் ஆசிரியை என்னிடம், " யாருக்காக காத்தருக்கிறாய்?" என்றதும் நான் என் பேத்தியின் பெயரை சொன்னேன். குழந்தை வெளியே வரவில்லை. தவறான வகுப்பு வாசலில் நின்றால்  எப்படி வரும்? குளிரில் என் கைகள் விறைக்கத் தொடங்கி விட்டன.மற்றொரு ஆசிரியை வந்து என்னிடம் குழந்தையின் பெயர், வகுப்பு, வகுப்பு ஆசிரியை பெயர் இவைகளை கேட்டுக் கொண்டார், அதற்குள் என் பெரிய பேத்திக்கும் வகுப்பு முடிந்து விட, அவள் வந்து, என்னை சின்ன பேத்தி படிக்கும் வகுப்பிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டிற்கு வந்ததும் அடுப்பை மூட்டி, குளிர் காய்ந்து கொண்டேன். சிலர் குழாயில் வென்னீரை திறந்து விட்டு அதில் கைகளை நீட்டுவார்களாம், ஆனால் அப்படி செய்யக் கூடாதாம். 

இரண்டு நாட்கள் முன்பு எக்கச்சக்க குளிரில் எனக்கு அழுகையே வந்து விட்டது. " சென்ற முறையும் விண்டரில்தான் இங்கு வந்தாய், அப்போது இப்படிப்பட்ட புகார்கள் இல்லையே? இந்த முறை என்னவாயிற்று உனக்கு?? என்றாள் மகள். எனக்கு மூன்று வயது கூடி விட்டதே?' என்றேன். ஒரு வேளை உன் உடம்பில்  B12, கால்ஷியம் போன்றவை குறைவாக இருக்கலாம், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்" என்றாள். அதையும் பார்த்து விடலாம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். பனி தேசத்திற்கு வந்து விட்டால் குளிரை அனுபவிக்க வேண்டும்.