மின்சாரக் கண்ணா!
வெளிநாட்டில் இருக்கும் வசதிகளித்தான் பெரும்பான்மையோர் பகிர்ந்து கொள்வார்கள். நேற்று 30.6.26 கனடாவில் நாங்கள் வசிக்கும் ஏரியாவில் கரெண்ட் கட்டாகிய பொழுது எங்கள் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெதர் ஃபோர்காஸ்ட் பார்த்தபொழுது, 30.6.26 செவ்வாய் அன்று காலை ஒன்பது மணி வரை மழை இருக்கும் என்றும், அதற்கு ப் பிறகு வெய்யில் 35 - 40 C வரை செல்லும் எனவே வெளியே செல்ல வேண்டாம் என்றூ ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். அது பொய்யாகவில்லை, மதியம் வெய்யில் கொளுத்தியது.
துபாயிலிருந்து கனடா வந்திருந்த எங்கள் விருந்தினர்கள் 30.6.26 அன்றுதான் துபாய் திரும்ப டிக்கெட் புக் பண்ணியிருந்தார்கள். காலை 9:30 மணி முதல் 11:30 வரை எமகண்டம் இருந்ததால்(கனடா பஞ்சாகத்தை ஒட்டி), 11:30க்கு கிளம்ப நினைத்தார்கள். முதல் நாளே வெப் செக்இன் செய்து விட்டார்கள்.
செவ்வாய் அன்று காலை ஆறு மணிக்கு எழுந்த நான் காபி கொட்டையை அரைத்து டிகாஷன் போட்டு விட்டு, பாலை காய்ச்ச அடுப்பில் வைத்தேன். ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, கரெண்ட் கட்டானதால் மின்சார அடுப்பு அணைந்து விட்டது. வெளியே நல்ல மழை. மழை பெய்யும் சமயங்களில் எப்போதாவது இப்படி பவர் கட் ஆகும். ஆனால் உடனே பவர் வந்து விடும். ஆனால் நேற்று காலை பதினோரு மணிக்குதான்பவர் திரும்ப வரும் என்று செல்ஃபோனில் மெசேஜ் வந்திருந்தது. இதற்கு முன் இதை விட மோசமான பனிப்புயலடித்த பொழுதும், பயங்கரமான காற்று வீசிய பொழுதும் கூட இப்படி இத்தனை நேரம் பவர் போனதில்லை.
ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள், "பதினோரு மணிக்கு மேல்தான் பவர் வரும் என்றால், அதற்கு மேல் குளித்து, சாப்பிட்டு கிளம்ப அதிக நேரமாகி விடும் என்பதால் நாங்கள் 9:30க்கு முன்னால் கிளம்பி விடுகிறோம்" என்றார்கள். விருந்தினர்களை வழியனுப்புவதற்காக என் மகள் வீட்டிலிருந்து வேலை செய்ய அலுவலகத்தில் அனுமதி பெற்றிருந்தாள். ஆனால் மின்சாரம் இல்லாததால் இணையம், இணையவில்லை. டேட்டா துரிதமாக வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் நிலைமையைச் சொன்ன பொழுது அலுவலகத்திற்கு வரச்சொல்லி விட்டார்கள். நெல்ல வேளை காரை கராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தியிருந்ததால் அவளால் காரை எடுக்க முடிந்தது. இல்லாவிட்டால் மின்சாரத்தால் இயங்கும் கராஜ் கதவை எப்படி திறப்பது?
ஊருக்குச் செல்ல வேண்டியவர்களை விமான நிலையத்தில் விடுவதற்காக என் மாப்பிள்ளை விடுமுறை எடுத்திருந்தார். இப்போது மகள் அலுவலகம் செல்வதற்காக காரை எடுத்துச்சென்று விட்டதால். அதுவும் இயலாது என்ற நிலையில் அவர்கள் ஊபரின் உதவியை நாடினார்கள். டேட்டாவில் சிக்னலே கிடைக்கவில்லை. கிடைத்தபொழுது ஒரு வண்டி புக் பண்ணினார்கள். ஐந்து நிடங்களில் வருவதாக சொன்ன ஊபர் அரை மணி நேரம் கடந்தும் வரவில்லை. அதை கேன்சல் பண்ணிவிட்டு வேறு ஒரு ஊபர் புக் பண்ணி சிறிது நேரத்தில் அந்த கேன்சல் செய்யப்பட்ட வண்டி வந்தது. அந்த டிரைவரிடம் நிலைமையை விளக்கியதும், "இட்ஸ் ஆல்ரைட்" என்று கூறி சென்று விட்டார். அதன் பிறகு வந்த இரண்டாவதாக புக் பண்ணிய ஊபரில் அவர்கள் கிளம்பினார்கள்.
இப்போது நாங்கள் குளிக்க முடியாது(தண்ணீர் ஜி..ல்..) சமைக்க முடியாது. நல்ல வேளையாக முதல் நாள் கொஞ்சம் அதிகமாக வார்த்து வைத்த இட்லி இருந்தது. அதை சாப்பிட்டு, ஜூசைக் குடித்து வயிற்றை ரொப்பிக் கொண்டோம். நான் மட்டும் இரண்டு கோல்ட் காஃபி குடித்தேன். கோல்ட் காஃபி போடும் சூட்சுமம் தெரிந்தது. பாலை காய்ச்சக் கூடாது(pasteurized milk தானே? எனவே பாதகமில்லை) குளிர்சாதன்பெட்டியிலிருந்து எடுத்து, அதில் டிகாஷனைக் கலந்து சர்க்கரைப் போட்டு நுரைக்க ஆற்றி குடித்தால் நன்றாகத்தான் இருக்கிறது.
நோ டி.வி., நோ செல்ஃபோன், என்ன செய்வது? நான் ஒரு தூக்கம் போட்டேன், ஊரிலிருந்து வந்திருந்த தீபாவளி மலர்களில் ஒன்றை முக்கால்வாசி முடித்தேன். குழந்தைகளோடு ஸ்னேக்&லாடர் விளையாடினேன். அவர்களுக்கு கல்லாங்காய் ஆட கற்றுக் கொடுத்தேன்.
கரெண்ட் திரும்ப வரும் நேரம் 11, 3, 5, 8 என்று மாறிக்கொண்டே இருந்தது. இரவு உணவிற்கு வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் ஏரியாவில் எல்லா உணவகங்களும் மூடப்பட்டு விட்டதால் பக்கத்து ஊரில் இருந்த 'ட்ரூலி பெங்களூர்' என்னும் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம். அங்கு நான் மைசூர் மசாலா தோசை, என் மகள் நெய் பொடி மசாலா தோசை, மாப்பிள்ளை சாளுக்கியா தோசை, குழந்தைகள் பேப்பர் ரோஸ்ட் ஆர்டர் செய்தார்கள். அதைக்கொண்டு வந்தவர் மாற்றி மாற்றி கொடுத்து குழப்பினார். ஆக இன்று நாம் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கப்போகும் நாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.
வீட்டிற்கு திரும்பி போகும்பொழுது கரெண்ட் வந்திருக்கலாம் என்ற எங்கள் எதிர்பார்ப்பு பொய்யானது. நம் ஊராக இருந்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி தரையில் கொஞ்சம் சொட்டவிட்டு அதில் நிற்க வைத்து விடலாம். இங்கு தரை மரமாக இருப்பதால் அப்படி செய்ய முடியாது. கிண்ணங்களில் வரும் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தோம். ஆளுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடி குட்டியாக சாயி பஜன் செய்தோம். தரையிலேயே பாயை விரித்து படுத்து விட்டோம்.
அக்கம் பக்கம் வீட்டிலிருந்தவர்கள் எதிர் வீட்டு லானில் ஒன்று மூன் லைட் டின்னர் போல கூடி ஒன்றாக உணவருந்தினார்கள். அவர்கள் குழந்தைகள் வெளியில் விளியாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி 11:45க்கு திடீரென்று "ஹோ." வென்ற ஆனந்தக் கூச்சல் கேட்டது. பவர் வந்து விட்டது. அப்பாடா! முதலில் செல்ஃபோனை சார்ஜில் போட்டேன். மறக்க முடியாத நாளாகி விட்டது 30.6.26! ஐந்து வயதாகும் என் பேத்தி, "திஸ் இஸ் த பெஸ்ட் டே இன் மை லைஃப்" என்றாள் தோடா!
பின் குறிப்பு: இதற்கு கருத்து தெரிவிப்பவர்கள் தங்கள் பெயரை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி