வாகன
விசேஷங்கள்
இந்து மதத்தில்
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் உண்டு. கோவில்களில் அந்தந்த கடவுளுக்கான வாகனமும்
ஒவ்வொரு சன்னிதியிலும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். அவை பெரும்பாலும் ஸ்வாமியை
நோக்கியே நிறுவப் பட்டிருக்கும். மேலும் அந்த சன்னிதியில் இருக்கும் கடவுளர் எந்த திருக்கோலத்தில்
இருக்கிறார்களோ, அதற்கேற்றார் போலத்தான் வாகனங்கள் இருக்கும்.
ஸ்ரீரெங்கத்தில் பெருமாள் அரிதுயில் கொண்டிருக்கிறார். அவர் எப்போது கூப்பிட்டாலும் புறப்பட தயாராக கருடன் காத்திருப்பதால் மற்ற கோவில்களைப் போல நின்ற கோலத்திலோ, வீராசனத்திலோ இல்லாமல் வித்தியாசமாக அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் கீதா அக்கா அவர்கள் ‘கருடா சௌக்கியமா?’ என்னும் பதிவில் இதை குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி அந்தந்த
கோவிலின் தல வரலாற்றுக்கேற்றபடி வாகனங்கள் இருக்கும் நிலை மாறுகிறது. அப்படி வித்தியாசமாக
வாகனங்கள் அமைந்திருக்கும் சில கோவில்களை பார்க்கலாமா?
சாதாரணமாக முருகனுக்கு
வாகனமாக மயில்தான் எல்லா கோவில்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் எங்கெல்லாம் தேவயானை
தனி சன்னிதியில் இருக்கிறாளோ அங்கெல்லாம் யானைதான் வாகனமாக முருகன் சன்னிதியின் முன்
ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காரணம், இந்திரன் தன் மகளான தேவயானையை முருகனுக்கு
மணம் முடித்து கொடுத்த பொழுது, தன்னுடைய யானையான ஐராவதத்தையும் அனுப்பி வைத்தாராம்(காரோடு
பெண்ணை அனுப்பி வைப்பதை போல). திருத்தணியில் அந்த யானை முருகனை நோக்கி இராமல், தன்
எஜமான் தேவேந்திரன் எப்பொழுது வருவார்? என்று எதிர்பார்த்தபடி வாயிலை நோக்கி இருக்கும்.
எங்கள் சம்பந்தியின் குல தெய்வமான, மாயவரத்திற்கு அருகில் இருக்கும் பெரம்பூர் என்னும் ஊரில் இருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தேவயானைக்கு தனி சன்னிதி உண்டு. எனவே,அங்கு கோவில் உள்ளே யானை வாகனமும், பிரதான வாயிலில் மயில் வாகனமும் காணப்படும்.
சென்னையில் இருக்கும்
திருமுல்லைவாயிலில் உறையும் மாசிலாமணீஸ்வரர் குறும்பர்களை போரில் வெல்ல தொண்டைமானுக்கு
உதவுவதற்காக நந்தியம்பெருமானை அனுப்பி வைத்தாராம். அதனால் அங்கு சிவனுக்கு எதிரே இருக்கும்
நந்தியும் வாயிலை நோக்கிதான் இருக்கும்.
திருப்புங்கூரில்
நந்தனாருக்காக நந்தியை விலகியிருக்கச் சொன்ன சிவ பெருமான், பட்டீஸ்வரத்தில், ஞானசம்பந்தர்,
பக்தர்கள் புடை சூழ தாளமிட்டு பாடிக்கொண்டே வரும் அழகை கண்டு ரசிக்க விரும்பி, அந்த
காட்சியை மறைக்காமல் நந்தியை கொஞ்சம் விலகச் சொன்னாராம். அதனால் அங்கும் நந்தி சிவனுக்கு
நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும்.
சாதாரணமாக எல்லா
சிவாலயங்களிலும் சிவ லிங்கம், நந்தி, பலி பீடம், கொடி மரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில்
அமைந்திருக்கும். ஆனால் வக்ர காளியம்மன் கோவில் என்று பிரபலமாக அறியப்படும் திருவக்கரை
சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெயருக்கு ஏற்றார் போல் எல்லாமே வக்கிரமாக, ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசையில் இருக்கும்.
காசிக்கு இணையான
தலமான ஸ்ரீவாஞ்சியதில் இரண்டு நந்திகள் உண்டு.
ஒரு முறை மஹாவிஷ்ணுவிற்கும்,
ஸ்ரீதேவிக்கும் சிறு ஊடல். கணவனிடம் கோபித்துக் கொண்ட மஹாலக்ஷ்மி தன் சகோதரனாகிய சிவபெருமானைத்
தேடி வந்து விடுகிறாள். பிரிவாற்றாமையில் வாடிய மஹாவிஷ்ணு, தன் மனைவியோடு தன்னை சேர்த்து
வைக்க வேண்டி *ஸ்ரீவாஞ்சியம் வந்து சிவனைக் குறித்து தவம் இயற்றுகிறார். அதுவும் சிவனுக்கு
நேரே அமராமல், அவருக்கு பின்புறம் அமர்ந்து தவம் செய்கிறார்(attention seeking?). மஹவிஷ்ணுவிற்கு
அருளும் பொருட்டு பின்புறம் சென்று விடுகிறார் சிவ பெருமான். அதனால், ப்ரகாரத்தின்
பின்புறம் இன்னொரு நந்தி உண்டு. முன்புறம் இருக்கும் நந்தி, பின்புறம் சென்றிருக்கும்
சிவபெருமான் வருகிறாரா என்று எதிர்பார்த்தபடி முகத்தை பின்னால் திருப்பிக்கொண்டிருக்கும்.


