கோலாப்பூர் உலா
![]() |
New Palace @ Kolhapur |
![]() |
கோலாப்பூர் கார்ப்பரேஷன் கட்டிடத்தின் முன்புற, பக்கவாட்டுத் தோற்றம் |
அடுத்த நாள் கோலாப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, மும்பை செல்ல இரவு 8:30 மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரெஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அன்று காலை முதல் ஆடி வெள்ளி என்பது என் நினைவில் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அன்னை மஹாலக்ஷ்மியை தரிசித்து விட விரும்பினேன். என் கணவர் வரவில்லையென்று கூறிவிட்டதால், நான் மட்டும் தனியாக கோவிலுக்குச் சென்றேன். காலை நேரத்திலேயே நல்ல கும்பல். ஆனால் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் சுலபமாக தரிசிக்க முடிந்தது. அம்மனுக்கு அருகில்தன கொஞ்சம் தேக்கம். சிறப்பு பூஜைக்காக பணம் கட்டியவர்களை பின் பக்கம் சென்று அமரச் சொன்னார்கள் போலிருக்கிறது. அதில் இருந்த ஆண்களும் பெண்கள் வரிசையை பிளந்து கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் தள்ளுமுள்ளு, அதனால் சலசலப்பு. பெண்கள் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் தாயாரை நிதானமாக நன்றாக தரிசனம் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!.
அன்று காலை பூ போன்ற இட்டிலியும், நன்றாக வெந்து ஆனாலும் உதிர் உதிராக, சுவையாக இருந்த போகாவும் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்டில் இருந்தன. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் என்ற பெயரில் அடர்ந்த சிவப்பில் ஒரு திரவம். அதை தவிர்த்து விட்டு, சட்னி எடுத்துக் கொண்டேன். ப்ரெட் டோஸ்டும் இருந்தது. அவர்களுக்கு காபி மட்டும் போடத் தெரியவில்லை. அதனால் டீ.
அந்த ஹோட்டல்காரர்களே டூரிஸ்ட் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். முதலில் நியூ பேலஸ் எனப்படும். ஷாஹு மஹாராஜின் இருப்பிடமான அரண்மனையே தற்சமயம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் பொழுது செல்போனை ஆஃப் செய்து விடுங்கள் என்கிறார்கள். ஷாஹு மஹராஜ் என்றதும் மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.
அங்கிருந்து ஓவியங்களில் ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?
அங்கிருந்த ஆவணங்களில் இங்கிலாந்தின் அரசர் ஜார்ஜ், ஷாஹூஜியை, கோலாப்பூரின் அரசராக நியமித்து, மகாராஜா என்று அழைக்கப்பட உரிமை வழங்குவதாகவும் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்ததும் கொஞ்சம் கோபம் கூட வந்தது. யாருடைய மண்ணிற்கு ராஜாவை யார் நியமிப்பது? இது கூட உரைக்காமல் நம் நாட்டு அரசர்கள் இருந்ததால்தான் அன்னியர்க்கு அடிமை ஆனோம்.
அங்கிருந்து, கோட்டை ஒன்றை பார்க்கச் சென்றோம். நிறைய கொண்டை ஊசி வளைவுகளோடு இருக்கும் மலைப்பாங்கான சாலையில் பயணித்தால்
சத்ரபதி சிவாஜி அமைத்த பகல்காட் கோட்டை, தானியங்கள் சேமிப்பதற்காக பன்ஹாலா என்னும் இடத்தில் கட்டப்பட்ட இடம் போன்றவற்றை பார்த்தோம்.
![]() |
காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை |
![]() |
பகல்காட் கோட்டையிலிருந்து கீழே தெரியும் காட்சி |
பனாலா என்னும் இடத்தில் தன்னுடைய படையில் இருந்த வீரர்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் தானியங்களை சேமித்து வைக்க சத்திரபதி சிவாஜி கட்டப்பட்ட கோட்டையில் அவரும் அவ்வப்பொழுது வந்து தங்குவாராம். மிக அழகாக இருக்கிறது. இதுவும் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.
வசதிகள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் இங்கெல்லாம் பயணிப்பது சுலபமாக இருக்கிறது. மலைப்பாங்காகவும், அடர்ந்த வனமாகவும் இருக்கும் இங்கெல்லாம் கோட்டைகள் கட்டுவது என்பது நினைக்கும் பொழுதே பிரமிப்பாக இருக்கிறது. சிவாஜியின் கொரில்லா தாக்குதல்களுக்கு அதுதான் மிகவும் வசதியாக இருந்திருக்கிறது போலும்.
அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். லிங்கமாகவும் இல்லாமல், ஆவுடையார் மீது, சிவபெருமானின் திருமுகம் என்றும் இல்லாமல், அமர்ந்த திருக்கோலத்தில் கருப்பு நிறத்தில், முண்டாசு அணிந்து கொண்டு வித்தியாசமான ரூபம். பிரகாரத்தில் ஒரு பெரிய காமதேனு பிம்பம்.
கோவில் வளாகம் முழுவதும் கத்தரிப்பூ நிற குங்குமம் சிதறிக் கிடக்கிறது. கோவிலுக்குள் நுழையும் பொழுது, நம்மிடம் இருக்கும் தேங்காயை வாங்கிக்கொண்டு, தக்ஷனை போடுங்கள் என்று தட்டை நீட்டி, நம் நெற்றியில் கத்தரிப்பூ நிற குங்குமத்தை இட்டு விடுகிறார்கள்.
கோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொன்று ரங்காலா ஏரி. நல்ல சுத்தமான நீர் நிரம்பி இருக்கும் நீர் நிலை. அதுவும் சமீபத்திய மழையினாலோ என்னவோ நீர் அலையடிக்க ததும்பிக் கொண்டிருந்தது. மாலை நேரங்களை கழிக்க உள்ளூர் வாசிகளுக்கு ஒரு இடம். குழந்தைகளுக்கு விளையாடுமிடங்கள், சாட் ஐட்டங்கள், ஐஸ் க்ரீம்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஏரியின் ஒரு புறத்தில் போட்டிங் போக வசதி இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது அதன் எதிர் புறம், அதனால் ஐஸ் க்ரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.
![]() |
நடுவில் தெரியும் கட்டிடம் நீராழி மண்டபமாக இருக்கலாம் அதிக பட்ச நீரால் பெரும்பான்மை மஇருக்கிறது |
மொத்தத்தில் கோலாப்பூர் பயணம் நன்றாக இருந்தது, கடைசியில்தான் எதிர்பாராத சில விஷயங்களால் வெகு சீக்கிரம் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டாலும் எங்களால் திட்டமிட்டபடி மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்க முடியவில்லை, அதை தவர விட்டோம்.