சனி, 21 ஜூலை, 2018

தலை வாழை இலை போட்டு...

தலை வாழை இலை போட்டு...ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். 

எங்கள் தாய் வழி பாட்டி இலையைப் பார்த்து அதாவது ஒருவர் சாப்பிடுவதை கவனித்து பரிமாற வேண்டும் என்பார். சமைப்பதை பரிமாறும் பொழுதுதான் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பு, வெறுப்பு தெரிய வரும். எங்கள் தாத்தாவிற்கு ரசத்தில் தக்காளி போட்டால் பிடிக்காதாம். அதனால் தக்காளி ரசம் வைத்தாலும் அவருக்கு பரிமாறும் பொழுது தக்காளி இலையில் விழாமல் கவனமாக பரிமாறுவாராம். அதே போல தாத்தாவிற்கு மணல் மணலாக உறைந்திருக்கும் நெய்யை விழுதாக இலையின் ஓரத்தில்தான் போட வேண்டுமாம். ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஊறுகாய் பரிமாறிவிட வேண்டும் என்பார்.

ஊறுகாய்கள் கூட சிலருக்கு விழுதாக வேண்டும், சிலருக்கு காய் வேண்டும். குறிப்பாக, மாகாளி கிழங்கில் சிலர் அதன் தண்ணீர் மட்டும் வீட்டுக் கொள்வார்கள். சிலருக்கு கிழக்கு மட்டும் வேண்டும். இதெல்லாம் நாம் பரிமாறினால்தான் தெரியும். 

நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது என் அம்மா ஒரு முறை அங்கு வந்திருந்தார்  அப்பொழுது, என் அண்ணாவின் (அண்ணாவும் மஸ்கட்டில்தான் இருந்தார்) சிநேகிதர் ஒருவர் சாப்பிட வந்திருந்தார். அவருக்கு மாகாளி கிழங்கு பரிமாறும் பொழுது," எனக்கு தண்ணீர் வேண்டாம், கிழங்கு மட்டும் போடுங்கள்" என்று என் அம்மாவிடம் கூறினார். அதன்படி செய்த என் அம்மா, அவர் மீண்டும் ஒரு முறை சாப்பிட வந்த பொழுது, அவர் சொல்லாமலேயே அவருக்கு மாகாளி கிழங்கு மட்டும் பரிமாறியதை மிகவும் வியந்து பாராட்டினார். ஏனென்றால் அவருக்கு சாப்பாட்டு விஷயத்தில் விருப்பு,வெறுப்பு மிகவும் அதிகம். 

பரிமாறுவதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. சாதாரணமாக நுனி இலையில் வலது கை ஓரத்தில் பாயசம் பரிமாறிவிட்டு, அதற்கு நேர் எதிரே பச்சடி, பின்னர் கூட்டு, கறி, என்று வரிசையாக பரிமாறி, இடது ஓரத்தில் ஊறுகாய், பப்படம் போன்றவைகளை பரிமாற வேண்டும். புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற  கலந்த சாதங்களையும் இலையின் மேற்புறத்தில்தான் பரிமாறுவார்கள்.  பருப்பை மேல் புறத்தில் வைக்க வேண்டுமா, கீழ் புறத்தில் வைக்க வேண்டுமா என்பது பலர் குழப்பிக் கொள்ளும் விஷயம். 

விஜயவாடாவில் வசித்து வந்த என் மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷத்திற்காக சென்றிருந்த நான் சாதம் போட்டவுடன் சாம்பாரை ஊற்றப் போனேன், உடனே அங்கிருந்த ஒருவர்,"இது தமிழ் நாடு இல்லை, ஆந்திரா, இங்கு பப்பு சாதம் சாப்பிட பிறகுதான் சாம்பார் சாதம் சாப்பிடுவோம்" என்றார். ஆந்திர ஹோட்டல்களில் கூட பருப்பு பொடி, துவையல் இல்லாமல் இருக்காது. 

தமிழ் நாட்டில் இனிப்போடுதான் விருந்தினை பரிமாற ஆரம்பிக்கிறோம், ஆனால் கர்நாடகாவில் முதலில் உப்பு வைத்து விட்டுதான் மற்ற பண்டங்களை பரிமாறுவார்கள். காரணம், உப்பிட்டவரை மறக்கக்கூடாது என்னும் கோட்பாடு.

தமிழ் நாட்டு அந்தணர்களில் வைணவர்களில் வடகலை, தென்கலை என்று இரு பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவினர் எல்லோரையும் போல முதலில் வெஞ்சனங்களை பரிமாறி கடைசியில் சாதம் வைப்பார்கள், மற்றொரு பிரிவினர் முதலில் ஒரு வாழைப்பழ துண்டம், சர்க்கரை பரிமாறி விட்டு, சாதத்தை வைத்து விடுவார்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவை வரும். 

பாலக்காட்டில் பிராமணர்கள் திருமணங்களில் முன்பெல்லாம் பாயசம் பரிமாறத் தொடங்கும் பொழுது யாராவது பாட ஆரம்பிப்பார்களாம், பாட்டு முடியும்வரை பாயசம்தான் பரிமாறிக் கொண்டிருப்பார்களாம். அவர் பாடி முடித்ததும் இன்னொருவர் பாட ஆரம்பித்து விட்டால், மீண்டும் பாயசம்தான்...   

பரிமாறும் பொழுது, பாத்திரத்திலிருந்து வழித்து போடக்கூடாது, கொஞ்சமாக இருந்தால் கூட கரண்டி சப்தம் வரக்கூடாது என்பதை எங்கள் வீட்டில் வலியுறுத்தி சொல்வார்கள். ஏனென்றால், அப்படி சப்தம் வந்தால் சாப்பிடுகிறவர்கள் குறைவாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுவார்கள் என்பார்கள். குறிப்பாக திவசம் போன்ற நாட்களில் பித்துருக்களாக வரித்திருக்கும் பிராமணர்களுக்கு பரிமாறும் பொழுது, கொஞ்சம் கூட ஒலி எழும்பக் கூடாது என்பார்கள். ஏனென்றால், பித்ருக்கள் மிகவும் நுண்ணியமானவர்களாம், சிறு சப்தம் எழுப்பினால் கூட அதிர்ந்து, அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவார்களாம்.

இனிப்போடு துவங்குவது நம் நாட்டுப் பழக்கம் என்றால், டெஸெர்ட் என்று இனிப்போடு விருந்தை முடிப்பது மேலை நாட்டு பழக்கம். 

நம் நாட்டில் விருந்து பரிமாறுவதற்கு ஒரு முறை இருப்பது போல, மேல் நாட்டிலும் விருந்து பரிமாறுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அவர்கள் சூப்பில் துவங்கி, ஸ்டார்ட்டர், பிரதான உணவு, என்று தொடர்ந்து, டெஸெர்ட்(ஐஸ் க்ரீம், அல்லது புட்டிங் அல்லது கஸ்ட்டர்ட்) என்று முடிப்பார்கள். நாம் சாப்பாட்டிற்க்கு பிறகு தாம்பூலம் போட்டுக் கொள்வது போல் அவர்கள் ப்ளாக் டீ அல்லது ப்ளாக்காபி அருந்துவார்கள். 

இப்போது நம் ஊரில் திருமணம் போன்ற விருந்துகளில், நம் நாட்டு முறையில் இனிப்போடு ஆரம்பித்து, மேல் நாட்டுப்பாணியில் ஐஸ் க்ரீமோடு முடிக்கிறோம்.  


வியாழன், 19 ஜூலை, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே!

நெஞ்சு பொறுக்குதில்லையே!இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில்லை. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹாசினி என்னும் குழந்தை ஒரு  அரக்கனால் அநியாயமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இப்போது ஒரு பதினோரு  வயது குழந்தை அதுவும் காது கேளாத  வாய் பேச முடியாத குழந்தை, இருபத்திரெண்டு மிருகங்களால் இல்லை அப்படி கூறி மிருகங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை. இருபத்திரெண்டு பேர்களால் ஆறு 
மாதங்களாக போதை மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை கொடுத்தும், மிரட்டியும், வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். அதை காட்டியே மிரட்டியிருக்கிறார்கள். 

என்ன நடக்கிறது  இங்கே? ஒரு பெண்ணுக்கு பிறந்து, பெண்ணோடு வாழ்ந்து, பெண்ணைப்பெற்றும் பெண்களை போகப் பொருளாகத்தான்  நினைக்க முடிகிறது என்றால் எங்கே கோளாறு? 

பழங்காலம் மாதிரி இம்மாதிரி பாதகங்களை செய்தால் இறந்தபிறகு நரகத்தில் எம கிங்கரர்கள் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்கள் என்றால் ஒரு வேளை பயந்து இம்மாதிரி பாதகங்களை செய்யாமல் இருப்பார்களோ?

ஒரு இளம் பெண் நகைகளை அணிந்து கொண்டு  நடு இரவில் தனியாக  நடந்து செல்ல முடிகிற பொழுதுதான் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூற முடியும் என்று மஹாத்மா கூறினார். ஆனால் இன்று பெண்களுக்கு தெருவில், பள்ளியில், ரயில் நிலையங்களில், ஏன் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை. 

இந்த சம்பவத்தில் ஒரே ஒரு ஆறுதல் வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளுக்காக ஜாமீன் மனு போட மாட்டோம் என்று அறிவித்திருப்பதுதான். வழக்கு இழுத்துக் கொண்டே போகாமல் சீக்கிரம் விசாரணை முடிந்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மாறிய காலம், மாறாத கோலம்


மாறிய காலம், மாறாத கோலம்


சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. படிப்பில் சிறந்து விளங்கியதால் ஆசிரியர்களுக்கு பிடித்தமான மாணவன். முதல் நாள் தலை வலி, காய்ச்சல் வரும் போலிருகிறது என்றான். ஆனால் மதியதிற்கு மேல் விளையாட சென்று விட்டான். இன்றும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றதும் அவன் அம்மா கமலத்திற்கு கோபம் வந்தது.

“நீ நல்லா படிக்கிறியேனு சந்தோஷப் பட்டது தப்பு.. என்னாச்சு உனக்கு? ஏன் இஸ்கோலு போக மாட்டேங்கற?

“எனக்கு டவுசர், சட்டை, வாங்கி கொடு, நான் ஸ்கூல் போறேன்..”

“டவுசர், சட்டையா? இப்போ என்னடா டவுசரும்? சட்டையும்? நான் எங்க போக?”

“அப்போ நானும் ஸ்கூல் போக முடியாது.”

“தீவாளிக்கு வாங்கித் தரேன்.”

“நானும் தீவாளிக்கு பொறவு ஸ்கூல் போரேன்..”

மகன் பதிலுக்கு பதில் பேசியது கமலத்திற்கு எரிச்சல் ஊட்டியது. எல்லாத்துக்கும் பதில் சொல்றியா? என்று கீழே கிடந்த விசிறியை கையில் எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தாள். 
  
அம்மாவிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்த சுகுமார் வாசல்படியில் தடுக்கி விழுந்தான், கமலம் அவனை விசிறி காம்பால் விளாசத் தொடங்க, எழுந்து ஓடியவன் பக்கத்து குடிசை ஆயா மீது மோதிக் கொண்டான். சுகுமாரை தழுவிக் கொண்ட ஆயா,

“தா, கமலம், இன்னாத்துக்கு புள்ளைய அடிக்கிற?”

“ஆங்.. தெனம் சோறு துங்கரதே பெரும் பாடா இருக்கு, ஏதோ ஒரு வேளை மதிய உணவு பள்ளிகூடத்துல போடராங்களேனு அனுப்புனா தொரை புது டவுசர் இருந்தாதான் இஸ்கோலுக்கு போவாராம்..”

“ஏங்கண்ணு, அப்படியா சொல்ற…? பரிவுடன் ஆயா கேட்டவுடன், சுகுமார், ’’இல்ல ஆயா, என்னோட டவுசர், சட்டை எல்லாம் கிழிஞ்சு கெடக்கு, அதை போட்டுக்கிட்டு போனா பசங்க கேலி பண்றாங்க..” சொல்லும் போதே அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“அழுவாத கண்ணு, அம்மா வாங்கி கொடுக்கும். அதாரு? உன்னைய கேலி பண்றது? நான் உங்க பள்ளிகூடத்துக்கு வந்து வாத்தியாரண்ட சொல்றேன்..”

“ஐயோ ஆயா, அதெல்லாம் வாணாம்..”

சுகுமாரை சமாதானப் படுத்திய ஆயா, அவன் தாயாரிடம், “இந்தா கமலம், கொழந்தைக்கு டவுசர் வாங்கி கொடு, கிழிசலை போட்டுக்கிட்டு அது எப்புடி பள்ளிக்கூடம் போவும்?”

ஆயா சொன்ன பிறகு மகனுடைய ட்ரௌசரை எடுத்துப் பார்த்த கமலத்திற்கு அது அணிந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமாக கிழிந்திருப்பது தெரிந்தது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் மகனை அடித்து விட்டோமே என்று துக்கம் பொங்கியது.

மறுநாள் தான் வேலை செய்யும் வீட்டில் அட்வான்ஸ் வாங்கி அம்மா அவனுக்கு சீருடை துணி வாங்கி தைக்கக் கொடுத்தாள். அது கிடைப்-பதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகின. புது சீருடை அணிந்து கொண்டு பள்ளி சென்ற போது வகுப்பாசிரியர், “வாங்க சார்,  எங்க நாலு நாளா ஆள காணோம்..? மாப்பிள்ளை மாதிரி புதுசெல்லாம் பொட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..” என்று கிண்டலாக கேட்டதும், ஒரு பையன், “ஸார், அவனோட டவுசர் ஒரே கிழிசல் சார், அதான் அவன் வரல.. இப்பொ புதுசு தெச்சு போட்டுக்கிட்டு வந்திருக்கான்..” என்று கூற, சிலர் சிரித்தார்கள், சுகுமாருக்கு அவமானமாக இருந்தது.

“டேய்! உங்கிட்டயாடா கேட்டேன்?” என்று அந்த அதிகப்ரசங்கி மாணவனை அதட்டி விட்டு, வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

சுகுமார் மேல் வகுப்புக்குச் சென்ற போது அதுவரை ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருந்த அவன் தந்தை ஆட்டோ ஒட்ட ஆரம்பித்தார். 

வாடிக்கையாளராக இருந்த வங்கி மேலாளர் ஒருவர் கடன் உதவி செய்ய, சொந்தமாக ஆட்டோ வாங்கியதோடு, ஸ்கூல் சவாரிகளும் கிடைக்க, நிரந்தர வருமானம் கிடைத்தது. வறுமை முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை, என்றாலும் கிழிசலை கட்டிக் கொள்ளும் அவலம் இல்லை.
அவன் பி.யூ.சி. படித்த பொழுது அவன் அத்தை வீட்டில் புதுமனை புகு விழா என்று அழைத்தார்கள். அவனிடமிருந்த உடைகளில் சிறந்ததை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

“அடடா! சுகுமாரா? பெரிய பையனாயிட்ட?” வாஞ்சையொடு வரவேற்ற அத்தை, சாப்பிட பலகாரம் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற போது தன் மகனிடம், “ஒன்னோட நல்ல பேண்ட் ஏதாவது சுகுமாருக்கு கொடு” என்று சொல்வது கேட்டது.

“ஏம்மா?”

“அவன் ஏதொ வெளுத்துப்போன பேண்டை மாட்டிக்கிட்டு வந்திருக்கான். நமக்குதான் கௌரவ குரைச்சல்”

சுகுமார், இனிமேல் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

காலம் மாறியது. சுகுமாரின் படிப்பு அவனுக்கு நல்ல வேலையை பெற்றுத் தந்தது. முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, தனக்கும், தம்பிக்கும் டீ ஷர்ட் என்று வாங்கினான். பிறகு ஒவ்வொரு மாதமும் விதம் விதமாக உடைகள், தான் சிறு வயதில் ஆசைப்பட்டு வாங்கிக் கொள்ள முடியாததை எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வாங்கிக் கொண்டான்.

நல்ல இடத்தில் திருமணமும் நடந்தது. பானை பிடித்தவள் பாக்கியமோ என்னவோ வேலையை துறந்து விட்டு வியாபாரம் தொடங்கினான், அது சிகரத்தை தொட, சுகுமார் இன்று நகரில் ஒரு பெரும் புள்ளி. தோட்டம், நீச்சல் குளத்தோடு பங்களா, ஒரு இன்னொவா, ஒரு ஹோண்டா சிட்டி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று நிறைவான வாழ்க்கைதான். ஆனால் அவருடைய குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடைகள்தான் அவருக்கு வியப்பூட்டுகிறது.

மகள் அணிந்து கொள்ளும் சட்டையில் தோள்பட்டையில் கிழிந்தது போல ஒரு அமைப்பு. மகளும் சரி, மகன்களும் சரி எப்போதும் சாயம் போய் வெளுத்துப் போனது போல ஒரு ஜீன்ஸ்தான். அதிலும் அங்கங்கே கிழிசல்.

தான் எதிலிருந்து விடுபட நினைத்தோமோ அதை தன் குழந்தைகள் விரும்பி அணிவது அவருக்கு வியப்பாகத்தான் இருக்கிறது.