கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 28, 2019

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்


ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த பெண்,மாப்பிள்ளை,பேத்தி ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களோடு நாங்களும் சென்னை, திருப்பதி, பெங்களூர், சென்னை என்று சுற்றினோம். 

பெங்களூர்-சென்னை, சென்னை-பெங்களூர் சதாப்தியில் எக்சிகியூடிவ் கிளாசில் பயணித்தோம். ஈ.சியில் இருக்கை சௌகரியமாகவும், உயரமானவர்கள் கூட காலை நீட்டி வசதியாக அமரும்படி தாராளமாகவும் இருக்கிறது.  காலை சதாப்தியில் வண்டி கிளம்பியதும், வெல்கம் ட்ரிங்க்(காபி அல்லது டீ, மஃபின், வறுத்த பாதாம்) வந்தது. அதை முடித்த சிறிது நேரத்தில் கார்ன் பிளக்ஸ், ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை பிரேக்ஃபாஸ்ட் வந்து விட்டது. இதற்கு நேர்மாறக மாலை சதாப்தியில் வண்டி கிளம்பி சிறிது நேரத்திற்குப் பிறகுதான் காபி, மஃபின், விவகாரங்கள் வந்தன. பிறகு திரும்பியே பார்க்கவில்லை. எட்டு மணியை நெருங்கும் பொழுது ரொம்ப சுமாரான சூப் வந்தது. அதன் பிறகு சற்று நேரம் கழிந்து, சப்பாத்தியும், ரசம் போல ஒரு குருமாவும் தயிருடன் வந்தன. சாதாரணமாக சாப்பாடு முடிந்தவுடனேயே ஐஸ் க்ரீம் வந்து விடும். ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது.  கண்டோன்மென்டில் இறங்க வேண்டிய சிலர் அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு படிக்கு அருகில் சென்று விட்டார்கள். 

பயணத்தின்பொழுது படிப்பதற்காக ஆனந்த விகடன், கல்கி, குங்குமம் மூன்றும் வாங்கினேன். பல வருடங்களுக்குப் பிறகு வாங்கியதாலோ என்னவோ குங்குமம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் போஸ்ட்மார்ட்டம் என்று ஒரு பகுதி. ஆதித்த கரிகாலன் கொலையில் அருண்மொழித் தேவரான ராஜ ராஜ சோழனுக்கும், அவர் சகோதரி குந்தவைக்கும் சம்பந்தம் உண்டோ? என்று கேள்வி எழுப்பி, அதற்கான காரணங்களை அலசியிருந்தது.


உத்தம சோழர் பதவி ஏற்ற பொழுது அவருக்கு ஒரு மகன் இருந்தான். தந்தைக்குப் பின் மகன்தான் பட்டம் ஏற்க வேண்டும், ஆனால், ஏன் அருண்மொழித் தேவர் அரசரானார்?

தன் ஆட்சியில் நடை பெற்ற எல்லா செயல்களையும் கல் வெட்டில் பொறிக்கும் வழக்கமுடைய ராஜராஜன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான காரணத்தை எந்த கல் வெட்டிலும் பொறிக்கவில்லை. எப்படி கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பாக கூட சொல்லப்படவில்லை.

ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் நிர்வாகங்களை கவனித்து வந்த உத்தமசோழரின் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொல்லப்பட்டாராம். தன் மகன் ராஜேந்திரன் பதவி ஏற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று ராஜராஜசோழன் செய்த செயல் இது என்கிறாரகள். 

உத்தம சோழர் பட்டத்திற்கு வந்து மூன்றாண்டுகளில் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் ராஜராஜன் பட்டத்திற்கு வந்ததும் முதல் வேலையாக பன்னிரெண்டாண்டுகள் சிறையில் இருந்த வந்தியத்தேவனை விடுவித்தாராம். அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? அவருக்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்ததா? போன்ற விஷயங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனவாம்.

அதே போல ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர் கடிகையை அழித்தது உள்நோக்கம் கொண்டது என்கிறார். காந்தளூர் கடிகையை நடத்தியவர் ஆதித்த கரிகாலனின் கொலையில் முக்கிய குற்றவாளியான ரவிதாசனின் குருவாம். அவருக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்பதாலேயே அந்த கடிகை அழிக்கப்பட்டது என்கிறார். 

இந்த ரவிதாசன் பிற்கால சோழ பரம்பரையை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்ய கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத்தேவரின் வம்சத்தை சேர்ந்தவனாம். கன்னரத் தேவருக்கு பட்டம் மறுக்கப்பட்டு அவருக்கு இளையவரான பராந்தகர் அரியணை ஏறினாராம். கன்னரத் தேவருக்கு ஏன் அரியணை மறுக்கப்பட்டது? என்பதற்கான காரணம் தெரியவில்லை.  அதே போல குந்தவை, மூத்தவன் ஆதித்த கரிகாலன் இருக்கும் பொழுது, அருண்மொழித் தேவராகிய ராஜராஜன்தான் அரியணை ஏற வேண்டும் என்று விரும்ப காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். 



அரசியலும், அவிழ்க்கப்படாத புதிர்களும் இரட்டைப் பிறவிகள் போலிருக்கிறது.  

ஒரு நல்ல விஷயத்தோடு பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.


சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தை சேர்ந்த 45 வயதாகும் திருஞானம் என்பவர் மதுரை பணிமணியிலிருந்து திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரச பேருந்தில் நடத்துனராக பணி புரிகிறார். 12 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கும் இவர் மதுரை, தஞ்சை வழித்தடத்தில் மூன்றாண்டுகளாக பணியாற்றுகின்றாராம். இவரின் வேலை நேரம் முதல்நாள் மதியம் இரண்டு மணி முதல் மறு நாள் மதியம் இரண்டு மணி வரை. தினசரி இருபதுக்கும் மேற்பட்ட பாட்டில்களில் சுத்தமான குடி நீரை நிரப்பிக் கொள்ளும் இவர், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முடித்ததும் தண்ணீர் விநியோகம் செய்வாராம். தினசரி 60 லிட்டர் தண்ணீர் வரை வழங்குகிறாராம். கோடை நாளில், கடும் கோடை நேரத்தில் இவர் செய்யும் இந்த சேவை நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.