பரவசம் தந்த நவ திருப்பதியும்,
நவ கைலாசமும் - 8
நவ கைலாச ஷேத்திரங்கள் -3ம் பகுதி
சேரன்மாதேவியில் அம்மநாதரை தரிசனம் செய்த பிறகு குன்னத்தூர் நோக்கிச் சென்றோம். கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் வரை, ஒரு புறம் மலை, அதன் கீழ் பச்சை புல்வெளி என பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
குன்னத்தூர் ராகு தலம்.மூலவர் கோத பரமேஸ்வரர், அம்மன் சிவகாமி அம்மன். குன்னத்தூர் என்னும் இந்த இடம் செங்காணி என்றும் அழைக்கப் படுகிறது. காணி என்றால் நிலம், இந்த ஊரின் நிலம் செம்மண்ணாக இருப்பதால் செங்காணி என்று பெயர்.செங்காணி என்பது பேச்சு வழக்கில் இப்போது சங்காணி என்று அழைக்கப் படுகிறது.
இந்த ஊரில் ஒரு வருடத்திற்கு ஒரு பூ பூத்து, ஒரு காய் மட்டும் காய்க்கும் மரம் ஒன்று இருந்தது. அந்த காய் பழுத்த பிறகு அதை அந்த ஊர் அரசன் சாப்பிடுவான். ஒரு முறை அந்த பழம் மரத்திலிருந்து ஆற்றில் விழுந்து விட்டது. ஆற்றில் நீரெடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தினுள் நீரோடு அந்தப் பழமும் சென்று விட்டது. பழத்தினை காணாத அரசன் அதைத் தேட பணிக்கிறான். அரசனின் காவலர்கள் எல்லா வீடுகளிலும் புகுந்து அதை தேடி, இந்தப் பெண்ணின் வீட்டில் குடத்தினுள் அதைக் காண்கிறார்கள். அரசன் சரியாக விசாரிக்காமல் அவளை கழுவிலேற்ற உத்தரவிடுகிறான். சாகும் தருவாயில் அப்பெண், இந்த ஊரில் பசுக்களையும், பெண்களையும் தவிர மற்ற அனைத்தும் அழியட்டும் என்று சாபமிடுகிறாள். அதனால் இந்த ஊர் வளம் குன்றத்தொடங்கி விட்டது. ஊரில் நாகங்கள் பெருகின. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவபெருமானை வழிபட சிவபெருமான் அந்த நாகங்களை எடுத்து தன் உடல் மேல் போட்டுக் கொண்டு இந்த ஊரின் பாதிப்பை நீக்குகிறார். இன்றும் சிவலிங்கத்தின் நடுவில் பாம்பு இருப்பது போல் அமைப்பு உள்ளது.
அதன் பிறகு பலரும் அறிந்த பாபநாசம் சென்றோம். நவ கைலாச கோவில்களில் முதலாவதான இக்கோவில் சூரிய க்ஷேத்திரமாக கருதப்படுகிறது.
பாபநாசம் கோவில் கதவுகள்
அழகான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் கோவில். கோவிலுக்கு எதிரே தாமிரபரணி ஆரவாரமாக ஓடுகிறது. அங்கிருக்கும் ஸ்னான கட்டத்தில் குளித்து விட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வெகு அழகான கோவில். நாங்கள் சென்றது உச்சிகால பூஜை நேரம். அப்போதுதான்அபிஷேகம், அலங்காரம் எல்லாம் முடிந்து திரை விலக்கினார்கள், மூலவருக்கும், நடராஜருக்கும் காண்பித்த ஆரத்தியை வெகு அருகில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இங்கிருக்கும் நடராஜரின் சபை 'புனுகு சபை' என்றழைக்கப் படுகிறது.
இந்திரன் சுக்கிராச்சாரியாரின் மகனான த்வஷ்டாவை தன் குருவாக ஏற்கிறான். ஒரு முறை அசுரர்களின் நலனுக்காக ஒரு யாகத்தை செய்வதை கண்டு கோபம் கொண்டு, அவனைக் கொன்று விடுகிறான். அதனால் அவனை ப்ரம்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. அதை போக்கிக் கொள்ள அவன் பல சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறான். இருந்தாலும் அவனுடைய தோஷம் நீங்கவில்லை. இறுதியில் குரு பகவான் அறிவுரைப்படி இங்கு வந்து வழிபாடு செய்ய, அவனுடைய பாவம் நீங்குகிறது. அதனால்தான் இவ்விடம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கிருக்கும் நடராஜர் தைப்பூசத்தன்று பதஞ்சலி முனிவருக்கும், வ்யாக்ரபாதருக்கும் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் தரிசனம் தந்ததால் இப்போதும் தைப்பூச நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுமாம்.
சிவ பார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த பொழுது தேவர்கள் அனைவரும் கைலாயத்தில் குழுமி விட, பூமியின் வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்து விடுகிறது. அப்போது பூமியை சமன் செய்ய அகத்தியரை தென் பகுதிக்கு அனுப்புகிறார் சிவபெருமான். பொதிகை மலைக்கு வரும் அகத்தியருக்கு தன்னால் அந்த மகத்தான திருமண காட்சியை காண முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. சிவபெருமான் தாங்கள் தங்கள் திருமண கோலத்தில் அவருக்கு காட்சி கொடுப்பதாக கூறி, சித்திரை மாதம் ஒன்றாம் தேதியன்று திருமண கோலத்தில் காட்சியளித்து அவருடைய அந்த குறையை போக்குகிறார். அதனால் இப்போதும் சித்திரை மாதத்தில் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.
கருவறையில் ருத்திராக்ஷ வடிவிலும், பிரகாரத்தில் ருக்,யஜுர்,சாம வேதங்கள் கிளா மரத்தின் மூன்று கிளைகளாக லிங்கத்திற்கு நிழல் தர, அதர்வண வேதம் பூஜித்ததால் முக்கிளா லிங்கம் என்று வழங்கப்படுகிறது. மூலவர் பாபநாசர், அம்பாள் லோகநாயகி என்னும் உலகம்மை. அம்மனுக்கு செய்யப்படும் மஞ்சள் பொடியை சிறிதளவு உட்கொள்ள, திருமணத்தடை அகலும், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
கடைசியாக நாங்கள் தரிசித்தது முறப்பநாடு, குரு ஸ்தலம். நாங்கள் மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று விட்டு நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது. முறப்பநாடு கோவிலில் அர்ச்சகர் இருக்க வேண்டுமே, பக்தர்கள் யாரும் இல்லையென்றால் அவர் சீக்கிரமே கிளம்பி விடுவார் என்று கொஞ்சம் அச்சத்தோடு டிரைவர் வண்டி ஓட்டினார். அவர் போல அங்கு பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணியைத் தவிர வேறு யாரும் இல்லை. அவரும் கடையை கட்டி விட்டார்.
தாமிரபரணியின் கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். தாமிரபரணி இங்கு உத்திரவாஹினியாக அதாவது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுவதால் காசிக்கு இணையான க்ஷேத்திரம். இங்கு நீராடி, நீத்தார் கடன் செய்வது சிறப்பு.
இங்கிருக்கும் நந்தியின் முக அமைப்பு கொஞ்சம் குதிரையின் முகத்தைப் போல இருக்கிறதே? என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருக்கும் தல வரலாற்றைப் படித்த பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது.
 |
முறப்பநாடு கோவில் நந்தி - குதிரை முகத்தோடு |
சோழ அரசனின் மகள் ஒருவள் முகத்தோடு பிறந்து விடுகிறாள். மனம் வருந்திய அரசன் தன் மகளின் குதிரை முகம் மாறி அழகிய முகம் கிடைக்க வேண்டும் என்று இங்கிருக்கும் படித்துறையில் நீராடி,சிவ பெருமானை வழிபடுகிறான். சிவபெருமான் வரம் கொடுப்பதற்கு முன்பாக நந்தி பகவான் அந்தப் பெண்ணிற்கு அழகன் தோற்றத்தை கொடுத்து விடுகிறார். இதனால் அந்தப் பெண்ணின் குதிரை முகத்தை நந்தி பகவானை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார் சிவபெருமான். இதனால்தான் இங்கிருக்கும் நந்தி பகவானுக்கு குதிரை முகம்.
மூலவர் கைலாசநாதர், அம்பிகை சிவகாமி அம்மன்.
அவனருளால் அவன் தாள் வணங்கும் பேறு கிடைத்தது. இதை கூட்டிவைத்த குருவருளுக்கும், முன்னோர்களுக்கும் நவ கைலாசம் பற்றி தெரிவித்த கீதா அக்காவுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் நம சிவாய!