வெள்ளி, 18 டிசம்பர், 2015

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும்

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும் 

 
மழை இல்லை மழை இல்லை என்று சென்னை வாசிகள் புலம்பியது போக கிட்ட தட்ட ஒரு மாதமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி சென்னையை ஒரு வழி பண்ணி விட்டது. அக்டோபர் மாத ஆரம்பம் வரை வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டாவது வெள்ளம் இது. 38 வருடங்களுக்கு முன் 1977 நவம்பரில் திருச்சியில் சரியாக சொன்னால் ஸ்ரீரங்கத்தில் சந்தித்த வெள்ளம். கரை புரண்டோடிய காவேரி திருச்சியை வெள்ளக் காடாக்கியதில் ஸ்ரீரங்கம் துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்தாறு குடும்பத்தினர் எங்கள் வீட்டு மாடியில்தான் அடைக்கலம் ஆனர். சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி, கவனியுங்கள் சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி... ஆம் சினிமாக்களில் காண்பிப்பது போல வெள்ளம் சப்தம் போட்டுக் கொண்டு, ஆர்பரித்து, சீறிப் பாய்ந்து வராது. சப்தமே இல்லாமல்தான் வரும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த குடிசைகளை ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளி, எங்கள் தெருவில்(ராகவேந்திரபுரம்) நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.தண்ணீர் ஏறிக் கொண்டிருந்து, பெரும்பான்மையோர் மாடியில், கீழே படுத்த படுக்கையாக இருந்த எங்கள் தாத்தா, சின்ன தாத்தா, அப்பா,அம்மா, மாமா, மற்றும் எங்கள் வீட்டு பசு மாடு. 

நாங்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்த தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். காலையில் எங்கள் மாமா மாட்டிடமிருந்து பால் கறந்து தர, அம்மா எல்லோருக்கும் காபி வழங்கினாள். பின்னர் தீபாவளி பட்சணங்கள் விநியோகிக்கப்பட்டன. எட்டு மணிக்குப் பிறகு எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு சரோஜா மாமியும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் தயாரித்து எல்லோருக்கும் போட்டார்கள். ஏதோ பிக்னிக் சென்றது போல கொஞ்சம் ஜாலியாக அனுபவித்த வெள்ளம் அது. மதியம் நீர் மட்டம் நன்றாக குறைந்து விட அவரவர் வீடுகளுக்குச் சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். தொன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வெள்ளம் என்றார்கள். ஆஹா! வாழ்க்கையில் ஒரு முறை வெள்ளம் பார்த்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன். 

இந்த வருட கதையை பார்ப்போமா: நவம்பர் 25ம் தேதி மதியம் வெளியே சென்ற என் கணவரும் மருமகளும் மாலை ஆறு மணிக்கு அமிஞ்சி கரையிலிருந்து கிளம்பி  விட்டதாகவும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் வண்டிகள் வேறு பாதையில் திருப்பி விடப் பட்டிருப்பதாகவும் அவர்கள் தேனாம்பேட்டை வழியாக வந்து கொண்டிருப்பதாகவும் கை பேசியில் கூறினார்கள். ஒன்பது மணி ஆகியும் வீடு வந்து சேராததால் தொடர்பு கொண்ட போது, டிராப்பிக் ஜாம் காரணமாக  சைதாபேட்டை பாலத்தில்  நிற்பதாக கூறினார்கள். மணி பத்து, பதினொன்று என்று ஓடிக் கொண்டே இருந்தது அவர்கள் வீடு திரும்பவில்லை,மழையும் நிற்கவில்லை. பல முறை கை பேசியில் அழைத்த பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை.. பன்னிரண்டு மணிக்கு என் கணவர், "இப்போதுதான் ஒவ்வொரு வண்டியாக விட ஆரம்பித்திருக்கிறார்கள், கிண்டியில் இருக்கிறோம் வந்து விடுவோம்" என்றார். அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று முப்பது. அதன் பிறகு சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  ஆட்டோ ஓட்டுனரையும் எங்கள் வீட்டிலேயே உறங்கச் சொல்லி விட்டோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஓட்டுனருக்கு இருட்டி விட்டால் கண் சரியாக தெரியாது. அதனால் அவர் ஏழு மணிக்கு மணிக்கு மேல் சவாரிக்குச் செல்ல மாட்டார். அன்று இருட்டோடு மழையும் சேர்ந்து கொண்டு விட்டது..!இந்த கூத்தில் அவர்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தது கடவுள் அருள்தான்.

அன்று பெய்த மழையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாய் நிரம்பி எங்கள் குடியிருப்பின் பின் வாசல் வழியாக தண்ணீர் உள்ளே புகுந்து குழைந்தைகள் விளையாடும் இடத்திர்க்கருகே உள்ள கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை லேசாக சேதம் செய்தது.


அதன் பிறகு 29ம் தேதி வரை மழை இல்லை. ஆனால் பளிச்சென்று வானம் கண் திறக்கவில்லை. 29ம் தேதி மீண்டும் மழை துவங்கியது. 30ம் தேதி விடியல் காலை நல்ல மழை.வழக்கம் போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை விட்டு கொஞ்சம் வெய்யல் கூட வந்தது!!! 

அன்று மதியம் தொடங்கிய மழை மறு நாளும் விடாமல் கொட்டித் தீர்க்க, காலை ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்பிய என் மாப்பிள்ளை தாம்பரம் சென்று சேர பத்து மணி ஆகி இருக்கிறது. வண்டலூர் வரை சென்றவரை ஊரப்பாக்கம் ஏரி உடைந்து விட்டதால் இப்படியே திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி விட்டு விட்டார்களாம். அப்போது மணி இரண்டு, அவர் வடபழனியில் இருக்கும் தன் வீட்டை அடையும் போது மாலை ஆறு மணி ஆகி இருக்கிறது என்றால் போக்கு வரத்து நெரிசலை யூகித்துக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு பிற்பகல் பதினோரு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டது. பன்னிரண்டு மணி சுமாருக்கு என் மகள் தொலை பேசியில் அழைத்து, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 30000 கண அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்களாம், அங்கு தண்ணீர் வந்து விட்டதா?" என்றாள்.நான், "இல்லை கார் பார்கிங்கில் மணல் மூட்டைகள் போட்டிருக்கிறார்கள், எனவே தண்ணீர் வராது" என்று மிகவும் நம்பிக்கையோடு கூறினேன். மேலும் குழந்தைக்கு பால் பவுடர் டப்பா வாங்கி கை வசம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தி விட்டு, அவர்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்த அவள் மாமியாருக்கு நன்றி கூறி அப்படி அவசியம் வந்தால் வருகிறோம் என்றேன்.

மாலை அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரியிடம் பேசிய பொழுது,செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப் பட்டால் எங்கள் தெருவிற்கு தண்ணீர் வரும், ஆனால் சீக்கிரம் வடிந்து விடும் என்றாள். நான் தமாஷாக அழகன் படத்தில் வரும்,
"என் வீட்டில் இரவு, அங்கே இரவா? இல்ல பகலா? 
எனக்கும் மயக்கம்.." 
என்னும் பாடலை ரீ மிக்ஸ் செய்து, 
என் வீட்டில் வெள்ளம் அங்கே வந்துச்சா, இன்னும் வல்லையா? எத்தனை அடி? " 
என்று பாடி சிரித்தோம். அப்போது கூட நான் வெள்ளம் வரும் என்று நம்பவில்லை.

இரவு பதினோரு என் கணவர் என்னை எழுப்பி நம் காலனியில் தண்ணீர் புகுந்து விட்டது, "உன் வண்டி சாவி கொடு வண்டியை வேறு இடத்தில் வைக்கலாம்" என்றார். கீழே சள சளவென்று  மக்களின் பேச்சுக் குரல். அர்த்த ராத்திரியில் வெள்ளம் வந்ததால் செய்வதறியாது தவித்த மக்கள்!!. இரண்டு மணிக்கு தரை தளத்தில் புகுந்தது தண்ணீர். அங்கிருந்தோர் மாடி வீடுகளுக்கு வந்தனர். காலை ஆறு மணிக்கு மாடிப் படியின் கடைசி படியில் இருந்த தண்ணீர் பத்து மணிக்குள் விறு விறுவென்று பத்து படிகளுக்கு மேல் ஏறி விட்டது.  நாங்கள் முக்கியமான பொருள்களையும், ஆவணங்களையும்(documents) லாப்டில்(loft) வைத்தோம். ஓவர் ஹெட் டாங்கில் இருந்த தண்ணீரை குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்த்து தேவையான பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது இவைகளுக்கு மட்டும் பயன் படுத்தினோம்.
மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்தில் இருக்கும் செல்லம்மாள் நகர் மக்களுக்கு  ஒரு ஏணிக்கு அடியில் இரண்டு தெர்மோ கோல்அட்டைகளை வைத்து கட்டி  படகு போல செய்து அதில் வந்து உணவும் நீரும் தன்னார்வ தொண்டர்கள் வழங்குவதை வேடிக்கை பார்த்தோம். மறு நாள் இதே படகில்தான் செல்லம்மாள் நகரில் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றினார்கள். 
எங்கள் காலனியை சூழும் வெள்ளம் 

வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடியிருப்பின் கார்கள்

மேலே ரோந்து வரும் ஹெலிகாப்டர்

அசோக் நகரிலிருந்து வட பழனி செல்லும் என் சகோதரி குடும்பம்
எங்கள் குடியிருப்பில் இருந்த ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் ராணுவ வீரர்களால் ஹெலிகாப்டர் மூலம் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இரட்டை குழந்தைகளை ஈன்றதை செய்தி தாள்களில் படித்திருப்பீர்களே.

புதன் கிழமை இரவு சீக்கிரம் எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள் என்றுதான் தோன்றியது. முதல் நாள் ஏறிய நீர் மட்டம் உயரவும் இல்லை தாழவும் இல்லை. என்னதான் செய்ய முடியும்? ஆனால் அந்த அமைதி கொஞ்சம் அச்சம் ஊட்டியது. 

மறு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது குறைந்திருந்த நீர் மட்டம் சற்று தைரியம் அளித்தது. மொட்டை மாடியில் சென்று பார்த்த என் மருமகள்,"ரோடு தெரிகிறது" என்று சந்தோஷப் பட்டாள். மதியம் சாப்பிட்டு விட்டு கை அலம்பினோம், தண்ணீர் தீர்ந்தது. நான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை வைத்து ஒரு நாள் ஓட்டி விடலாம்.. நாளை என்ன செய்வோம் என்று கவலை வந்தது.

அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தெரிய,"அப்பாடா! நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன இனிமேல் மழை வராது" என்று சந்தோஷப் பட்டேன். என் மகிழ்ச்சியில் தண்ணீர் ஊற்றி அணைத்தது  மீண்டும் கொட்டிய மழை. நல்ல வேளை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பெய்யவில்லை.

வெள்ளி அன்று காலை சுத்தமாக தண்ணீர் வடிந்து விட்டிருந்தது. ஆனால் பாதிப்பு அதிகம்! குறிப்பாக தரை தள வீட்டில் இருந்தவர்களுக்கு மிக மிக அதிகம். வீடிற்கு வெளியே போடப் பட்டிருந்த விலை உயர்ந்த சோபக்களையும், தொலை காட்சி பெட்டிகளையும், வீட்டு  உபயோக பொருள்களையும் பார்க்க, பார்க்க மனது நொந்தது. எங்கள் குடியிருப்பில் மட்டும் ஏறத்தாழ இருநூறு கார்களும், முன்னூறுக்கும் மேல் இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. இது ஒரு புறம் என்றால் உடுத்த மாற்றுத்  துணி கூட இல்லாமல் வாழ்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபம். 

நகரின் பல இடங்களில் வெள்ளம் வடிந்து பதினைந்து நாட்கள் ஆன பிறகும் கூட தண்ணீர் வடியவில்லை. சாலைகள் கிழித்து போடப் பட்டிருக்கின்றன. என்றாலும் சாலையில் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கி விட்டது. சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டார்கள். "எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ப நல்லவன்டா" என்னும் வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.    

ஒரு பின்னூட்டம்:

1977ல் ஒரு வெள்ளம் 2015ல் ஒரு வெள்ளம் என இரு வெள்ளங்களை பார்த்திருக்கிறேன். இந்த 38 கால இடைவெளியில் நம் வாழ்க்கை எத்தனை மாறி விட்டது? 

அப்போது திருச்சியில் தொலை காட்சி பெட்டி,வாஷிங் மிஷின்  யாரிடமும் கிடையாது. பிரிஜ், மிக்சி, கிரைண்டர், போன்றவை ஆடம்பர பொருள்கள். விலை உயர்ந்த புடவைகளும் மிகக் குறைவு. ஆனால் இன்றோ அரசாங்கமே விலை இல்லா மிக்சி, கிரைண்டர் என்று கொடுத்து மக்களை ஆடம்பரத்திற்கு பழக்கி விட்டு விட்டது. அப்போது தனி மனித இழப்பு குறைவு. இப்போதோ தனி மனித இழப்பே அதிகம்.

முற்றிலும் கணினி மயமாக்கப் பட்டு விட்டதால் வங்கியில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்., ஆன் லைன் செயல்பாடு என்று இருப்பதால் வாடிக்கையாளர்கள் யார் என்றே வங்கி மேலாளர்களுக்கு தெரியாத நிலையில் அவர் எப்படி உதவுவார்? யோசிக்க வேண்டிய விஷயம் இது.  

சனி, 10 அக்டோபர், 2015

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம்

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம் 


அகல்யா திரௌபதி குந்தி மண்டோதரி தாரா 
ததா பஞ்சகன்யா ஸமரேன்  நித்யம் 
மஹா பாதக நாசனம்!

தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. அகலிகை, திரௌபதி, குந்தி(குந்திக்கு பதிலாக சீதா என்றும் சிலர் கூறுவார்கள்),மண்டோதரி, தாரா என்னும் ஐந்து பெண்களை தினமும் நினைக்க அல்லது ஸ்மரிக்க மஹா பாதகங்களும் நசித்துப் போகும் என்பது இதன் மேலெழுந்த பொருள். உட்கிடை என்ன என்று சற்று ஆராயலாமா?

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் ஐந்து பெண்களும் பெரிய தபச்வினிகள் கிடையாது. பெரும்பாலும் சோகத்தில் தன் வாழ் நாளை கழித்தவர்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கற்பு நிலையில் கூட விஞ்சி நிற்பவர்கள் இல்லை. 
இந்திரனால் வஞ்சகமாக தன கற்பை இழந்தவள் அகலிகை,அதனால் கல்லாய் சமைந்தவள்.  கல்லாய் சமைவது என்றால் நாம் எல்லோரும் நினைப்பது போல அவள் வெறும் பாறையாகி விடவில்லை.கல் போல சமைந்தாள். அதாவது பசிக்கும் ஆனால் சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும் நீர் அருந்த முடியாது. இந்திரன் அவளை ஆட்கொண்ட பொழுது அது தன் கணவன் இல்லை வேறு ஒருவன் என்று அவளுக்கு தெரிகிறது இருந்தாலும் உடல் இச்சையை கட்டுப் படுத்த முடியாமல் கல் போல் கிடந்ததால், "கல் போல கிட" என்று கௌதமர் இட்ட  மிகக் கடுமையான சாபம்.  

திரௌபதி இந்த காலத்தில் கூட ஒப்பு கொள்ள முடியாதபடி ஒரே சமயத்தில் ஐந்து கணவர்களோடு வாழ்ந்தவள்.அவள் அனுபவிக்காத சோகங்களா? அரசியல் காரணங்களுக்காக ஐந்து ஆண்களை மணக்க வேண்டிய நிர்பந்தம். மாவீரர் களாகிய ஐந்து கணவர்கள் இருந்த போதும் சபையில் துகிலுரிக்கப் பட்டாள். 


 

குந்தியோ திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியோடு வாழ் நாளை கழித்தவள்.  குந்திக்கு பதிலாக சீதை என்று கொண்டாலும் ஜனக ராஜன் மகள், தசரதன் மருமகள், பேராண்மை கொண்ட ராமனின் மனைவி என்று இத்தனை பெருமைகள் இருந்தாலும் ராவணனால் சிறையெடுக்கப் பட்டாள். அதற்குப் பிறகும் மிகக் கடுமையான சுடு சொற்களை ராமன் பேசி அவள் தீக்குளித்து
 தான் பரிசுத்தமானவள் என்று நிரூபித்த பிறகே அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் ராமன். அதன் பிறகும் நிறை மாத கர்பிணி என்ற இரக்கம் இல்லாமல் காட்டிற்கு விரட்டப் படுகிறாள்.  சுக்ரீவன் மனைவியாகிய தாரா மைத்துனனாகிய வாலியால் கவர்ந்து செல்லப் பட்டவள். ஒவ்வொரு பெண்ணிற்கும் இப்படி ஒரு சோகமான பின்னணி.  அவர்களால் எப்படி நம் மஹா பாதகத்தை நசிக்கச் செய்ய முடியும்? அப்போது இந்த ஸ்லோகம் பொய் சொல்லுகிறதா? இல்லை, இந்தப் பெண்களின் வாழ்கையை சிந்தியுங்கள். ஒவ்வொரு பெண்ணின் சோகத்திற்கும் ஏதோ ஒரு ஆண், அவனுடைய பேராசை, கூடா  ஒழுக்கம் இவைகளே காரணமாக இருந்திருக்கின்றன. இதை சிந்திக்கும் எந்த ஆணும் பெண்ணுக்கு தீங்கிழைக்க விரும்புவானா? 

மண்டோதரியின் கணவனாகிய ராவணன் பிறன் மனை விழைதல் என்னும் பெரும் பாவத்தை செய்ததால் அவள் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவள் தன் புதல்வர்களை இழக்கிறாள், கணவனை இழந்து தானும் மாண்டு போகிறாள்.

மே ற்கண்ட  ஸ்லோகத்தில் இந்த பெண்களை வணங்குகிறேன்
என்றோ, துதிக்கிறேன் என்றோ குறிப்பிடப் படவில்லை. நினையுங்கள், மஹா பாதகம் நசித்துப் போகும் என்றுதான் உள்ளது. அந்த பெண்களை நினைப்போம், அவர்கள் பட்ட துயரங்களை நினைத்துப் பார்ப்போம் அதற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்போம், பாவம் செய்ய மனம் வராது, அதாவது பாவம் நசித்துப் போகும்.  

வியாழன், 8 அக்டோபர், 2015

மாயா - விமர்சனம்

மாயா - விமர்சனம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா, அதற்குள் ஒரு சினிமா, ஒரு கட்டத்தில் நிஜ சினிமா மாந்தர்கள் கதை சினிமா பாத்திரங்களாக மாறி விடும் அமானுஷ்யம்தான் கதையின் ஜீவன். வண்ணத்தில் வருவது நிஜ சினிமா,கருப்பு வெள்ளையில் வருவது சினிமாவுக்குள் வரும் சினிமா என்பது நமக்கு புரியும் பொழுது இடை வேளை வந்து விடுகிறது. நிஜ சினிமா கதா நாயகி நயன்தாரா கதை சினிமாவுக்குள் எப்படி  புகுந்து புறப்பட்டார் என்பதுதான் பின் பாதி.

கணவனைப் பிரிந்து கைக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் அடைக் கலமாகி, கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கும், சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்க முயன்று கொண்டிருக்கும் நயன்தாரா கதை ஒன்று, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் ஆரிக்கு 'மாயாவனம்' என்னும் தொடருக்கு படம் வரைய தொடங்கியவுடன் நேரும் விபரீதங்கள் ஒருகதை, அதில் கிளை கதையாக அவருடைய பாஸின் மனைவிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு,  இருள் என்று ஒரு திகில் படம் எடுத்து விட்டு அது போனி ஆகாததால், இந்த படத்தை தனியாக இரவுக் காட்சி பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வெகுமதி என்று அறிவிக்கும் இயக்குனர் கதை ஒன்று. (உஸ்ஸ்! அப்பாடா?) இப்படி தனித் தனியாக இயங்கும் கதைகளை எப்படியோ ஒன்று சேர்த்து விடுகிறார் இயக்குனர்.  ஒளிப் பதிவும், இசையும் அவருக்கு நல்ல துணை! 

நயன்தாராவை பொறுத்த வரை படம் முழுவதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்து விட்டு, கொஞ்சம் பயந்தால் போதும். அதை சரியாக செய்திருக்கிறார். அவர் தோழியாக வரும் லக்ஷ்மி பிரியா நன்றாக செய்திருக்கிறார்.  மற்ற நடிகர்கள் எல்லோருமே கச்சிதம்! மர்மங்களை யூகிக்க முடிவது ஒரு குறை. படத்தை பார்த்து விட்டு பயப் படுகிறோமோ இல்லையோ குழம்புவது நிச்சயம். குழப்பம் தீர்ந்தால் ரசிக்கலாம்.   

புதன், 20 மே, 2015

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 
அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் .

சனி, 9 மே, 2015

சில முரண்பாடுகள்

சில முரண்பாடுகள்

வாழ்க்கை என்பதே மாறிக் கொண்டே இருப்பதுதான். மாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை, என்றாலும் சில மாறுதல்கள் வியப்பாகத்தான் இருக்கின்றன. 

நாங்கள் குழந்தைகளாக இருந்த பொழுது ஒரு வீட்டில் குறைந்த பட்சம் எட்டு நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு வீட்டிற்கு ஒரு குளியல் அறை ஒரு கழிப்பறைதான் இருக்கும். 

இன்றோ ஒரு வீட்டில் நான்கு பேர் என்பது கூட குறைந்து மூன்றாகி விட்டது.  ஆனாலும் அந்த மூன்று பேருக்கு மூன்று படுக்கை அறைகள், மூன்று அட்டாச்ட் பாத் ரூம்!!!

இப்போது போல 2BHK/3BHK என்றில்லாமல் திண்ணை, கூடம், தாழ்வாரம், முற்றம், ரேழி(இதில் வாசல் ரேழி, கொல்லை  ரேழி என்று இரண்டு உண்டு. எ ழுத்தாளர்  சுஜாதா'"நீளமான, குறுகலான, கோமணம் போன்ற இந்த பகுதியைத்தான் நாங்கள் ரேழி என்போம் என்று ஒரு கதையில் எழுதியிருப்பார்). ரேழி உள்,  என்ற அந்த செட் அப்பில்  ரேழி உள் என்பது தான் படுக்கை அறையாக கருதப் படும். அப்போதைய வீடுகளின் திண்ணை எல்லாவற்றையும் கொள்ளும் மகாராஜன் கப்பல்! வீட்டிற்கு வரும் விருந்தாளிகளில் ஆண்களுக்கு அடைக்கலம் தருவது இந்த திண்ணைதான். 

வளைகாப்பு, சீமந்தம், பூணூல், ஆண்டு நிறைவு போன்ற சிறிய விசேஷங்கள் வீட்டில்தான் நடக்கும். அதற்கே குறைந்தது 100 உறவினர்கள் வருவார்கள். விசேஷங்கள் நடக்கும் வீட்டில் இடமில்லை என்றால் அக்கம் பக்கம் வீடுகளில் படுத்துக் கொள்வார்கள்( என்ன இப்போ? ஒரு ராத்திரிதானே..?.)  

ஏன் திருமணங்கள் கூட இரண்டு வீட்டிர்கிடையே பந்தல் போடப் பட்டு, ஒரு வீட்டில் மாப்பிள்ளை வீட்டு காரர்களை தங்க வைத்து, மற்றொரு வீட்டில் பெண் வீட்டு காரர்கள் தங்கிக் கொண்டு நடத்தி இருக்கிறார்கள்.  இன்றோ எல்லா விசேஷங்களும் மண்டபங்களில்தான் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு திருமண மண்டபமும் அதற்க்கு அருகிலேயே ஒரு மினி ஹாலை குட்டி போட்டு விடுகிறது. உறவினர்கள் எண்ணிக்கை மிகவும் அருகிப் போய் விட்டாலும், வரும் விருந்தாளிகள் தங்க தனியாக ரூம் போட வேண்டி இருக்கிறது. 

அதைப் போல எங்களின் பள்ளி நாட்களில் டியூஷன் வைத்துக் கொள்வது மிகவும் அவமானகரமான விஷயம். மக்கு பிள்ளைகள்தான் டியூஷன் வைத்து கொள்வார்கள் என்று ஒரு அபிப்ராயம் உண்டு.  இன்று மிக நன்றாக படிப்பவர்களும் டியூஷன் வைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமில்லை, எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், யாரிடம் டியூஷன் படிக்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்களின் திறன் மதிப்பிடப் படுகிறது.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை விளையாட்டு, பொழுது போக்கு, போன்ற பல விஷயங்கள் மறுக்கப்பட்டு மிகக் கடுமையாக பிழியப்படுகிறார்கள். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அந்த மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் கூட, ரிசல்ட் வரும் முன்பே நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள். 
நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியும் என்ற எண்ணம்... !

வேலைக்கு சேர்ந்தாகி விட்டால் போதுமா? வெளி நாட்டிற்க்கு சென்றாக வேண்டுமே.. விசா ஆஞ்சநேயருக்கோ, விசா வினாயகருக்கோ வேண்டிக் கொண்டு, தேங்காயோ, மாங்காயோ கட்டி மகனை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறோம். மகளாக இருந்தால் அமெரிக்க மாப்பிள்ளைக்குத்தான் முதலிடம். 

அமெரிக்காவில் குப்பை கொட்டி விட்டவர்களால் இங்கே திரும்பி வர முடியுமா? இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தனியாக இருக்க வேண்டாம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால்,"இவர்களுக்காக நாங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறோம்? எங்களை கொண்டு முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டார்களே.."? என்று புலம்புகிறார்கள். வேடிக்கை மனிதர்கள்.  

வியாழன், 16 ஏப்ரல், 2015

புது வருட குழப்பங்கள்!

புது வருட குழப்பங்கள்!  


  

இந்த புது வருடத்தின் பெயர் மன்மத வருடம். என்ன ஒரு வசீகரமான பெயர்!

எத்தனை புத்தாண்டுகள்? பாரம்பரியமான தமிழ் புத்தாண்டு. ஆங்கிலேயர்களின் உபயம் ஆங்கில புத்தாண்டு. தைப் பொங்கல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று திடீரென்று கலைஞர் விட்ட கரடி!


இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளதோ அத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன், ஒன்றிரண்டு குறையலாம்..! 

எனக்கு தெரிந்து பஞ்சாப், சண்டிகர், உ.பி., குஜராத் மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். மராட்டியர்கள்  குடி படுவாவையும், கன்னடர்களும், தெலுங்கர்களும் யுகாதியையும்  புது வருடமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்களாகிய நாமும், கேரளர்களும் சித்திரை மாத பிறப்பை புது வருடமாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலத்தவர் சந்திரமானச பஞ்சாங்கத்தையும்(Lunar calendar),தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் சௌரமானச பஞ்சாங்கத்தையும்(solar calendar) பின்பற்றுவதால் இந்த வழக்கம். அதில் கூட நாம் இருவரும் ஒரே நாளில் புது வருடத்தை கொண்டாடுவதில்லை ஒரு நாள் முன்னே பின்னே வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி நாம் விடுமுறை எடுத்துக் கொண்டு, விருந்து சாப்பாடு சாப்பிட்டு,தொலை காட்சியில் சிறப்பு நிகழ்சிகளைப் பார்த்து, கோவில்களில் நெரிபட்டொம். ஆனால் மலையாளிகள் ஏப்ரல் 15 தான் விஷுக் கனி கண்டு, புத்தாடை அணிந்து கொண்டு, சத்யா சாப்பிட்டார்கள். நேற்று மதியம் 12 மணிக்குத்தான் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். சூர்யா உதயத்தின் பொழுது அவர் மீன ராசியில்தானே இருக்கிறார், அப்போது எப்படி புது வருடம் பிறந்து விட்டது என்று சொல்ல முடியும்? என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம்.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கேரள, தமிழக இரு மாநிலத்தவருமே சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அதைக் கொண்டுதான் மாதங்களை அனுசரித்தாலும் அவர்கள் அந்தந்த ராசியின் பெயரைத்தான் மாதங்களுக்கும் வழங்கி மேஷ மாசம், ரிஷப மாசம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் சொதப்புகிறோம். மாதங்களை அனுசரிப்பது சூரியனை வைத்து, ஆனால் அதற்கான பெயர்களோ சந்திரனை வைத்து. அதாவது அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயர்தான் மாதங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சித்திரை மாதத்தில் சித்ரா நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும், வைகாசி மாதத்தில் விசாக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.  கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.. அதைக் கொண்டே தமிழ் மாதத்தின் பெயர்கள்...

மீனமோ,மேஷமோ, பாலக்காட்டில் பிறந்து, தஞ்சாவூர் பெண்ணை மணந்து கொண்டிருக்கும் இனிப்பு விரும்பியான என் கணவரை போன்றவர்களுக்கு முதல் நாள் போளி வடையும், மறு நாள்  பலா பழ பாயசமும், அடை பிரதமனும் கிடைக்கும் பட்சத்தில் எந்த நாளில் சித்திரை பிறந்தால் என்ன? எல்லாவற்றையும் கொண்டாடி விட்டு போகலாம்.     

கூடி களிக்கவும், கொண்டாடி மகிழவும் 
சின்ன திரை முன் சிறை பட்டு கிடக்கவும் 
சித்திரையோ, தையோ,
ஆங்கிலமோ, தமிழோ 
அனைத்தயும் வரவேற்போம். 

செவ்வாய், 17 மார்ச், 2015

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது டும்! டும்! டும்!

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது 
டும்! டும்! டும்! அந்தக் கால சினிமாக்களிலும் கதைகளிலும் பார்த்தால் சாதுவான நல்ல பெண்களை மாமியார்கள் ஆட்டி படைப்பார்கள். கதா நாயகிகளும் அத்தனை கொடுமைகளையும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொள்வார்கள். ஏன் நிஜத்திலும் அது பெருவாரியாக நடந்தது. இதெற்கெல்லாம்  பெண்களுக்கு படிப்பறிவு இல்லாததுதான் காரணம். பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டால் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம் என்ற எண்ணம் வலுப் பெற்று பெண் கல்வி வலியுறுத்தப் பட்டது. என்றாலும் ஆரம்ப காலங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப பெரும்பாலோர் தயங்கினார்கள். அதற்கு அப்போதிருந்த குடும்ப அமைப்பும் ஒரு காரணம். ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணுமாக ஆறேழு குழந்தைகள் இருந்த பொழுது பெண்ணென்றால் எப்படியும் திருமணமாகி அனுப்பி விட வேண்டும், ஆகவே அவளை எதற்கு செலவழித்து படிக்க வைக்க வேண்டும்? அதற்கு பையனை படிக்க வைத்தால் அவன் சம்பாதித்து கொடுப்பான்  என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஆகவே பெண் கல்வி என்பது பள்ளியோடு பெரும்பாலும் முடிந்தது. அதைத் தாண்டி கல்லூரிக்கு அனுப்பியவர்களில் பி.ஏ. படித்தால் போதுமே எதற்கு கஷ்டப்பட்டு பி.எஸ்சி படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் உண்டு.  அதே போல பெண்களுக்கு ஏற்ற வேலை என்றால் அது டீச்சர் வேலைதான் என்று ஒரு கருத்தும் இருந்தது. 

அதற்கு அடுத்த கட்டத்தில் பெண்களுக்கான தகுதியான வேலை என்பதில் வங்கி வேலையும் சேர்ந்து கொண்டது. காலை 9 மணிக்கு போய் விட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்க்கு வந்து விடலாம். அப்பொழுது வங்கிகளில் வேலைக்கு சேர்ந்த பல பெண்கள் உத்தியோக உயர்வு வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு க்ளர்க்காகவே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் தொந்தரவில்லாத அரசு உத்தியோகங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்ற பெண்கள் சொற்பம்தான். 

காலம் மாறியது, குடும்பங்கள் சிறுத்தன. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கு சற்றும் இளைப்பில்லை என்று  படிக்க ஆரம்பித்த பெண்கள் இல்லாத துறை இன்று இல்லை. பக்கத்து தெருவிற்கு செல்வதற்கே துணையோடுதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பெண்கள் இன்று வெளி நாடுகளுக்கே படிக்கவும் உத்தியோக நிமித்தமாகவும் தனியாக செல்கிறார்கள். போன தலைமுறை பெண்களைப் போல இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லவே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டதால் இப்போதெல்லாம் வரதக்ஷணை கொடுமைகளெல்லாம் வெகுவாக குறைந்து விட்டன. 

அப்படியானால் கொடுமையான மாமியார்களெல்லாம் சீரியெல்களில் மட்டும்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். பலர் அலுவலகங்களில் மேலதிகாரிகளாக இருந்து தனக்கு கீழே பணி புரிபவர்களை வதை கொட்டுகிறார்கள். அதே 'மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்' மனப்பான்மை. அந்தக் கால மாமியார்களைப் போலவே ஜாடையாக குத்தல் பேச்சுக்கள், எள்ளல்கள். நாங்கள் எல்லாம் இப்படியா இருந்தோம் என்னும் அசூயை..அப்பப்பா! ஒரு பெண் அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இன்னொரு பெண் படும் துன்பங்கள் இருக்கிறதே...! 

அந்தக் காலத்தில் சொல்வார்கள், மருமகள் தன் மாமியார் செய்யும் கொடுமை எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்வாளாம் காரணம் தானும் ஒரு நாள் மாமியார் ஆவோம், தனக்கு வரும் மருமகளை படுத்தி வைக்கலாம் என்ற எண்ணம். இந்தக் காலத்தில் அந்த உணர்வு அலுவலகத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டது போலிருக்கிறது. 
 
உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்த பணி புரியும் பெண்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் அவர்கள் யார் கீழே பணி புரிய விரும்புகிறார்கள்? என்று பத்துக்கு எட்டு பேர் ஆண்களுக்குத் தான் ஓட்டளிப்பார்கள். பாக்கி இருவரில் ஒருவர் பேப்பர் போட்டிருப்பார், இன்னொருவர் ஜால்ரவாக இருப்பார்.   


மாமியார்: 

நாங்களெல்லாம் கார்த்தால நாலு மணிக்கு எழுந்தா 
ராத்திரி பத்து மணிக்கு படுக்க போற வரை உட்கார முடியாது. 

புள்ள பெத்த பச்ச உடம்புன்னு கூட பாக்காம எங்க மாமியார் 
வேலை வாங்குவா 

என்னது பொறந்த வீட்டுக்கு போறயா? இங்க ரெண்டு நாளுக்கு தேவையான இட்லி,தோசை மாவு அரைச்சு வைச்சுட்டு, புளி காய்ச்சல் செஞ்சு வைச்சுட்டு, குண்டான், தவலை எல்லாத்திலும் தண்ணி ரொப்பி வைச்சுட்டு போ மேலதிகாரி:

உங்களை மாதிரி எடுத்த எடுப்புல ஆபீசர் ஆகிடல, கிளார்க்கா சேர்ந்து, படிப்படியா உயர்ந்து, இன்னிக்கு மேனேஜர் ஆகி இருக்கேன். 18 வருஷ அனுபவம்.

எங்க காலத்தில் மெடெர்னெடி லீவு மூணு மாசம்தான். இப்போ மாதிரி ஆறு மாசம் கிடையாது.

என்னது பர்மீஷனா? பெண்டிங் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு, பைலிங் வொர்க் இருந்தா அதை முடிச்சுட்டு போங்க.


எப்பொழுதுமே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் எதிரி. முன்பு வீடுகளில், இப்போது அலுவலகங்களில்.

படங்கள்: நன்றி: ask.com & google

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் தை தேர்

ஸ்ரீரங்கம் தை தேர் 

ஏறத்தாழ 28 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரெங்கம் நம்பெருமானின் தை தேர் உற்சவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிப்ரவரி 1ம் தேதி ஒரு குடும்ப சுப நிகழ்ச்சிக்காக ஸ்ரீரெங்கம் செல்ல வேண்டி இருந்தது. 2ம் தேதி தை தேர். இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் ஒரு நாள் அதிகம் தங்கி தேர் திருவிழாவை கண்டு களித்து(நிஜமாக) விட்டு வந்தேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் தேருக்கு முதல் நாள் நடக்கும் 'கோண வையாளி' என்னும் சிறப்பு நிகழ்ச்சியையும் பார்க்க விரும்பினேன். முடியவில்லை. அதென்ன 'கோண வையாளி' என்று கேட்பவர்களுக்கு...


வேங்கடவன் வடிவழகு, காஞ்சி குடை அழகு, ஸ்ரீரெங்கம் நடை அழகு என்பது வழக்கு. வைணவ தலங்களில் முக்கியமான திருப்பதியில் சாலிக்ராம பெருமாளின் திருமேனி அழகு. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளுக்கு பிடிக்கப் படும் குடை அழகு. ஸ்ரீரங்கத்திலோ ஸ்ரீ ரங்கநாதரின் நடை அழகு. அந்த நடைக்கு வையாளி என்று பெயர். பெருமாளை எழுந்தருளச் செய்யும் பொழுது, பெருமாளின் விக்ரஹத்தை சுமந்து வரும் ஸ்ரீ பாதாம் தாங்கிகள் தங்கள் கைகளை பிணைத்துக் கொண்டு கால்களை ஒரே போல சற்று அகட்டி வைத்து நடப்பார்கள். தொலைவிலிருந்து பார்க்கும் நமக்கு ரெங்கநாதர் கம்பீரமாக நடந்து வருவது போல மிக அழகாக தோன்றும்.

தேருக்கு முதல் நாள் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வருவார். மறுநாள் அதிகாலையில் தேர் கிளம்ப வேண்டும் என்பதால் முதல் நாள் மாலையே அலங்காரம் செய்யப்பட்டு தயார் ஆகி விடும்.  பிரும்மாண்டமாக நிற்கும் அந்த தேரைக் கண்டு பெருமாள் ஏறி வரும் குதிரை மிரண்டு ஓடுவது போல கற்பனை செய்து ஒரு நிகழ்வு நடக்கும். அதுவரை சாதாரணமான வையாளியில் நடந்து வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் தேருக்கு எதிரே வரும் பொழுது குதிரை மிரண்டு ஓடுவது போல தாறுமாறாக, தறி கெட்டு ஓடுவது போல கோணல் மாணலாக ஓடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தீவட்டி ஏந்தி வருபவர்களும் அப்படியே கோணல்மானலாக ஓடுவார்கள். அது மட்டுமல்லாமல் அப்படி தறி கெட்டு ஓடிய குதிரை ஒரு ஓரமாக நின்று மூச்சு வாங்கும், அப்பொழுது குதிரையின் தலை மேலும் கீழுமாக அசையும், பெருமாள் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த குதிரையின் தும்பும் அதற்கேற்றார் போல் அசையும். ஒரு நாடகம் போன்ற மிக சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சிதான் கோண(ல்) வையாளி எனப்படும்.மறு நாள் காலை நான் சென்ற பொழுது பெருமாள் வடக்கு உத்திர வீதியின் இறுதிக்கு  வந்து கொண்டிருந்தார். அந்த மூலை திரும்பி கிழக்கு உத்திர வீதிக்கு வரும் வரை பார்த்து விட்டு வந்தேன். இதில் எனக்கு ஏமாற்றம் அளித்த ஒரு விஷயம்.. அப்போதெல்லாம் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் அடுக்கு மாடி குடிஇருப்புகள் வராத பொழுது எத்தனை பேர்கள் வந்தார்களோ அதே அளவு மக்கள்தான் ஸ்ரீரங்கத்தின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகி விட்ட இந்த காலத்திலும் வந்தது. இன்னும் அதிக அளவு மக்கள் வந்திருக்க வேண்டாமா?

முன்பெல்லாம் தேருக்கு மர சக்கரங்கள், அவை மூலை திரும்ப வெகு நேரம் எடுக்கும். ஆனால் திருச்சி BHEL நிறுவனம் அந்த சக்கரங்களில் இரும்பு சட்டம் அடித்து தந்த பிறகு சற்று சீக்கிரம் மூலை திரும்பி விடுகிறது. தேர் மூலை திரும்புவதை பார்த்தால் நம் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மூலை திரும்பும் நிகழ்ச்சி வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை உணர்த்துவது போல தோன்றியது.

ஓடிக்கொண்டே இருக்கும் தேர், ஒரு மூலைக்கு வரும் பொழுது அதை திருப்புவது கடினமாக இருக்கும். தேர் சக்கரங்களுக்கு கீழே பின்னால் ஏத்தம் கட்டை என்று ஒன்றை சொருகுவார்கள். இப்பொழுது அது சீசா மரம் போல ஆகி விடுகிறது, அதில் ஆண்கள் உட்கார்ந்து அழுத்த, சக்கரம் கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும், அதே நேரத்தில் முன்னால் வடம் பிடிப்பவர்கள் இழுக்க, சற்று முன்னேறும். இப்படி இம்மி இம்மியாக நகரும் தேர் மூலை திரும்பி விட்டால் பிறகு கட கடவென்று நகர ஆரம்பித்து விடும். ஆனாலும் இந்த நேரத்தில் பின்னாலிருந்து ஏத்தம் கட்டை போடுபவர்களும் சரி, முன்னாலிருந்து வடம் பிடித்து இழுப்பவர்களும் சரி அதை தங்கள் செயலாக சொல்லிக் கொள்வது இல்லை.  மேலே தேரில் உட்கார்ந்திருக்கும் பெருமாளின் விருப்பமாகவே சொல்கிறார்கள்.

எல்லோர் வாழ்க்கையிலும் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நிற்பது போல ஒரு சமயம் வரும். அப்போது ஏத்தம் கட்டை போடுவது போல சிலர் உதவுவார்கள். அதை பயன் படுத்திக் கொண்டு நம்முடைய முயற்சி என்னும் வடத்தை இழுப்பதை விட்டு விடாமல் தொடர்ந்தால் மேலே இருக்கும் இறை அருள் செயல் பட நம் வாழ்வில் திருப்பம் வரும்.

 
         

புதன், 21 ஜனவரி, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


கேரளாவில் நங்கள் சென்ற மற்றொரு முக்கியமான கோவில் சோட்டாணிக்கரை பகவதி கோவில். கோவில் கீழ் காவு, மேல் காவு என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இரண்டு அம்மன்களும் சகோதரிகள், கீழ் காவில் உள்ள பகவதி அக்கா என்றும் மேல் காவில் எழுந்தருளி இருப்பது தங்கை என்றும் ஒரு நம்பிக்கை. முதலில் கீழ் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்து கொண்டு பிறகு தான் மேல் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது முறை. இரண்டு இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள் வடிவாக காட்சி அளிக்கிறாள்.   

மேல் காவு பகவதி கோவில்  

மன நிலை பாதிக்கப் பட்டவர்களும், துர்சக்திகளால் பீடிக்கப் பட்டு துயருபவர்களும் இங்கே வந்து பஜனம் இருந்து, அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு, பிரசாதம் உட்கொண்டு வர, அந்த பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுபடுவது இன்றளவும் நடக்கும் ஒரு விஷயம். இரவு எட்டு மணிக்கு கீழ் காவில் அம்மனுக்கு நடக்கும் குருதி பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.  முன் காலங்களில் இந்த பூஜை இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்குமாம். அப்பொழுது விலங்குகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் அன்னத்தோடு கலந்து அம்மனுக்கு நைவேதியம் செய்யப்படுமாம். தற்போது மிருகங்களை பலியிடுவது தடை செய்யப் பட்டுவிட்டதால் மஞ்சள் பொடியைத் தான் குருதி பிரசாதம் என்று தருகிறார்கள்.    

குருதி பூஜையில் கலந்து கொள்ளும் நோயாளிகள் தங்கள் கைகளாலும், தலையாலும் பெரிய பெரிய ஆணிகளை கீழ் காவில் உள்ள மரத்தில் அறைவார்களாம் அப்பொழுது அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் மூலமாக அவர்கள் உடம்பில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறி விடும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல நிஜமும் கூட. அதற்கு சாட்சியாக கீழ் காவில் உள்ள  மரத்தில் அறையப்பட்டிருக்கும் ஆணிகளை இப்பொழுதும் காண முடிகிறது. அங்கு மட்டுமல்லாமல் மேல் காவில் உள்ள கருங்கல் தூண்களிலும் ஆணிகள் அறையப் பட்டிருக்கின்றன. 

கீழ் காவில் ஆணிகள் அறையப் பட்டிருக்கும் மரம்
  
அதைத் தவிர கேரள கோவில்களுக்கே உரிய வெடி வழிபாடும் இங்கு உண்டு. மேலும் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப கை, கால், கண், மற்றும் ஆண்.பெண் உருவங்களை கோவில் தேவ ஸ்தானம் வைத்திருக்கிறது. அவற்றை நாம் ஏதோ ஒரு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி எடுத்துக் கொண்டு கோடி மரத்திற்கு அருகே வைத்து குறிப்பிட அங்கங்களின் நோய் தீர பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

கீழ் காவில் கோவிலுக்கான பெரிய குளம் உள்ளது(தற்சமயம் அதை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள்). அங்கிருந்து படியேறி வந்தவுடன் இடது பக்கம் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி தனி சன்னதிகள். அங்கு தொழுது விட்டு, கொடிமரத்தை வணங்கி, கேரளாவுக்கே உரிய சிறிய வாயில் வழியே கோவிலின் உள்ளே செல்கிறோம். தக தகவென்று ஜொலிக்கும் கருணை பெருகும் அம்பிகையின் வடிவு நம்மை ஆகர்ஷிக்கிறது.  இங்கிருக்கும் அம்மன் காலையில் வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு ஆடை அணிந்து லக்ஷ்மியாகவும், மாலையில் நீல உடையில் துர்க்கையாகவும் காட்சி அளிக்கிறாள். சாதாரனமாக எல்லா தெய்வ உருவங்களும் வலது கையை அபய ஹஸ்தமாக வைத்திருப்பதுதான் வழக்கம் ஆனால் இங்கே வலது கையால் தீய சக்திகளை அடக்குவதால் இடது கையை அபய ஹஸ்தமாக காட்டியபடி எழுந்தருளி இருக்கிறாள். உள் சுற்றில் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனி சந்நிதி உள்ளது. சற்றே பெரிய வெளி பிரகாரத்தில் இடது புறம் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி இருக்கிறது.  

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோவிலுக்கு சென்ற பொழுது, கொஞ்சம் சிறியதாக, சற்றே அமானுஷ்யமாக இருந்த கோவில் இடைப் பட்ட காலத்தில் நன்கு வளர்ந்து பெரியதாகி விட்டது. 

கேரள யாத்திரை எப்போதுமே மனதிற்கு சந்தோஷம் தரக் கூடியதுதான். காரணம் அழகான இயற்கை காட்சிகள் மட்டுமல்ல(அது கொஞ்சம் மொனாடனஸ் க்ரீன்தான்). அந்த சுத்தம்!ரயில்வே ட்ராக்கை கூட பெருக்குகிறார்கள். கோவில்களில் நெரிசல் இருந்தாலும் கூச்சலும், இரைச்சலும் இல்லை. புதாறு போட் ரெஸ்டாரென்ட் ஐ  பார்த்த பொழுது, இது நம்மூராக இருந்தால் இந்த ரெஸ்டாரென்ட் ஐ சுற்றி பிளாஸ்டிக் குப்பிகளும், தட்டுகளும், மிதக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பிரயாணங்களில் குறைவாக சாப்பிடுகிறார்கள். அதனாலோ என்னவோ மலைப் பாங்கான பிரதேசமாக இருந்தாலும் பேருந்து பயணங்களில் யாரும் வாந்தி எடுப்பது இல்லை. புகை வண்டியில் கழிப்பறைகளில் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது. நம்மூரில் நாம் பேருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பதை அங்கிருந்து வரும் துர்  நாற்றம்  ஒரு கிலோ மீட்டருக்கு முன்னாலேயே தெரிவித்து விடும். கேரளாவில் அந்த கெட்ட  வாடை எங்குமே இல்லை. நம் சேட்டங்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன பாண்டிகளே!

சனி, 17 ஜனவரி, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே - II


அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே - II

ஆட்டுக்கால் பகவதி கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு நாங்கள் ரூமிற்கு திரும்பி குளித்து, உடை மாற்றி அனந்த பத்மநாபசுவாமி கோவிலை அடையும் பொழுது மணி ஏழே காலாகி விட்டது. கோவில் வாசலில் என் கணவர் சட்டையை கழற்றி, அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு, செல் போன், செருப்பு போன்ற உடைமைகளை ஆட்டோ ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு, பாதுகாப்பு  பரிசோதனைக்கு உட்பட்டு கோவில் உள்ளே பிரவேசித்த பொழுது பிரகாரத்தில் ஒரு மூதாட்டி, "சீக்கிரம் சீக்கிரம் ஓடுங்கள், நடை அடைத்து விடப் போகிறார்கள்" என்று எங்களை துரிதப் படுத்தினர். நாங்கள் எந்த வாயில் வழியாக உள்ளே செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து நேரம் விரயம் செய்ததில் நடை அடைக்கப் பட்டு விட்டது.அடுத்த தரிசனம் எட்டே காலுக்குத்தான் என்றார்கள். பொது தரிசனமும் இல்லை, சிறப்பு தரிசனமும் இப்போது கிடையாது. ஐம்பது ரூபாய் கட்டண தரிசனம்தான் இருந்தது. ஐம்பது ரூபாய் டிக்கெட் வங்கிக் கொண்டு அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த ஐயப்பமார்களோடு சேர்ந்து கொண்டோம். கிட்டத் தட்ட எட்டு மணிக்கு ஸ்ரீரங்கம் அரையர் போல அலங்கரித்துக் கொண்ட  மூன்று அர்ச்சகர்கள்  உள்ளிருந்து உற்சவ விக்கிரகங்களை தங்கள் தலையில் சுமந்த வண்ணம் வெளிப்பட்டனர். அவர்களும், அவர்களை பின் தொடர்ந்து கையில் விளக்கு ஏந்திய பெண்களும், ஹரே ராம,ஹரே ராம,ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண,கிருஷ்ண ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஜபித்த வண்ணம் ஒரு சில பக்தர்களும் செல்ல, கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள். அவர்கள் உள்ளே சென்றதும் நடை திறக்கப்படுகிறது. 

வரிசையில் நின்று கொண்டிருந்த எல்லோரையும் உள்ளே விட்டார்கள். ஒற்றைக்கால் மண்டபத்திற்கு இந்த பக்கம் நின்று கொண்டுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் முண்டி அடிக்கும் கும்பல், மறு பக்கம் இருட்டுக்கு பழகாத கண்கள்.. பெருமாள் ஒரு சில்ஹௌட் போல தெரிந்தார். திருவடியை தரிசனம் செய்ய முடியவில்லை. காலையில் ஒரு முறை வந்து நன்றாக தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம்.

மறுநாள் அமிர்தபுரி(வள்ளிக்காவு) சென்று அமிர்தானந்தமயியை தரிசனம் செய்து கொண்டோம். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை மீண்டும் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றோம். 180 ரூபாய்க்கு நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டோம். இதற்கு இரண்டு பேர்களை அனுமதிக்கிறார்கள்,இரண்டு டின் அரவணை பாயசமும் ப்ரசாதமாக கிடைக்கும்.

அர்த்த மண்டபத்தில் நுழையும் முன் ருத்ர நரசிம்மரை வணங்கிக் கொள்கிறோம். உள்ளே ஒற்றைக் கால் மண்டபம் தாண்டி,தெற்கே தலை வைத்து,வடக்கே காலை நீட்டி, தொப்பூழிளிருந்து எழும் தாமரையில் பிரம்மா வீற்றிருக்க, இடது கரத்தில் தாமரை பூவை ஏந்தி,வலது கை கீழே சிவலிங்கத்தின் மீது இருக்க, அனந்தன் என்னும் ஐந்து தலை பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் அற்புத கோலத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. 

சுவாதி திருநாள் ம்யூசியம் முன்
உள்  பிரகாரத்தில் சீதா,லக்ஷ்மண  சமேத ஆஞ்சநேய சன்னிதி ஒன்று இருக்கிறது. வெளி பிரகாரத்தில் கோவில் கொண்டுள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னிதி தமிழ் நட்டு கோவில் போல இருக்கும் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குள் முழு முழுக்க கேரளா பாணியிலேயே அமைந்துள்ள சிறு தனி கோவில். இதற்கு முன் இருக்கும் மண்டபத்தின் மரத்தால் ஆன விதானத்தில் மிக அழகான தசாவதார சிற்பங்கள் உள்ளன. 

அனந்த பத்மநாபசுவாமி கோவில் முன்பு 

கோவிலின் மடப்பளியில் இருக்கும் அக்ர சாலை கணபதியையும் தொழுது வெளி வந்து கொடிமரத்தின் முன் வணங்கி வெளி வருகிறோம். கேரள கோவில்களைப்  போல இல்லாமல்  அகன்ற பெரிய பிரகாரம், நாயக்கர், பிற்கால சோழர்கள் கால சிற்பங்களைப் போல பெரிய பெரிய சிற்பங்கள் என்று தமிழக கோவில்களைப் போல இருக்கிறது பத்மநாப சுவாமி கோவில். கோபுரம் கூட நம்மூர் பாணியிலேயே அமைந்துள்ளது. பிரகாரத்தில் இரண்டு புறமும்   ஒவ்வொரு தூணுக்கு முன்பும் இருக்கும் விளக்கு நாச்சியார் சிலைகளின் கைகளில் அந்தக் காலத்தில் நிஜமான விளக்கு ஏற்றி வைத்திருப்பார்கள், இன்றோ..? எல்லாவற்றிலும் மின்சார  விளக்குகள்!!! 

திருவனந்தபுரம் பெருமாளின் திருமேனி ஆரம்ப காலத்தில் இலுப்ப மரத்தால்தான் செய்யப்பட்டிருந்ததாம், பின்னாளில்தான் தற்போதிருக்கும் 12008 சாளிக்ராமங்களால் ஆக்கபட்டிருக்கும் திருமேனியை ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 108 சாளிக்ராமங்களை ஒரு சேர தரிசிப்பதே புண்ணியம் என்னும்போது 12008 சாலிக்ராமங்களை ஒரு சேர தரிசிக்க முடிவது ஒரு சிறப்பு  ன்றால், சயனித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு, அவரது தொப்பூழிலிருந்து பிரம்மா, கீழே கை தொட்டுக் கொண்டிருக்கும் சிவ லிங்கம், என்று மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடிகிற வாய்ப்பையும் தருகிற தரிசனம் இன்னொரு சிறப்பு!

- தொடரும்