கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 22, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


பார்த்தசாரதி பெருமாளை தரிசித்தப் பிறகு நாங்கள் மம்மியூர் மஹாதேவன் கோவிலுக்குச் சென்றோம். குருவாயூர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு நினைவுக்கு வரலாம்... அங்கு பகவதியை தரிசித்து விட்டு ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது, ஒரு மூலையில் ஒரு மரத்தடியில் இங்கு நின்றபடி மம்மியூர் மகாதேவன் இருக்கும் திசை நோக்கி வணங்கவும் என்ற அறிவிப்பை காணலாம். அப்படி என்ன விசேஷம் மம்மியூர் மஹாதேவன் கோவிலில் என்று கேட்கலாம்.

குரு பகவானும், வாயு பகவானும் தங்களுக்கு கிடைத்த கிருஷ்ண விக்கிரஹத்தை எங்கே பிரதிஷ்டை செய்வது என்று பொருத்தமான இடத்தை தேடி அலைகிறார்கள். அவர்கள் குருவாயூரை அடைந்த பொழுது, அந்த குளக்கரையில் அமர்ந்து நெடு நாட்களாக தவம் செய்து கொண்டிருந்த சிவ பெருமான் இங்கே குருவாயூரப்பனுக்கு கோவில் கட்ட இடத்தை விட்டு கொடுத்து விட்டு பார்வதி தேவியோடு தான் பக்கத்துக்கு ஊருக்கு நகர்ந்து சென்றாராம், அவருடைய அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே மம்மியூர் மகாதேவனை வழிபட வேண்டும் என்கிறார்கள். மம்மியூர் மகாதேவனை தொழுதால்தான் குருவாயூர் யாத்திரை முழுமை பெரும் என்பதும் ஒரு நம்பிக்கை. சிவபெருமானின் மஹிமை பெற்ற ஊர், 'மஹிமையூர் ' என்பதே மருவி மம்மியூர் ஆகி விட்டதாம். 

நாங்கள் அங்கு சென்ற நேரம் உச்சிகால பூஜை நேரம். தீபாராதனை முடிந்தவுடன் உள்ளே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள், சிவன் சந்நிதியில் வணங்கி, பிரகாரம் சுற்றிக் கொண்டு மஹாவிஷ்ணு சந்நிதியில் வணங்கி அங்கிருந்த ஒரு வாசல் வழியே வெளியே வந்து விட்டோம். உடனே நடை அடைத்து விட்டார்கள். சிவன் சந்நிதிக்கு, மஹாவிஷ்ணு சந்நிதிக்கும் இடையே இருந்த பார்வதி தேவியின் சந்நிதியை தரிசனம் செய்ய முடியவில்லை. வெளியில் இருந்தபடியே வணங்கினோம்.

மம்மியூரைத் தொடர்ந்து குருவாயூர் தேவஸ்தானம்(அங்கு தேவோஷம் என்கிறார்கள்) பராமரிக்கும் 'ஆன கூட்டா'  சென்றோம். நுழைவு கட்டணம் தலைக்கு ரூ.20/- வசூலிக்கிறார்கள். காமிரா உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் செல் போன் அனுமதிக்கிறார்கள். 

இருக்கும் யானைகளில் பெரும்பான்மை ஆண் யானைகள்தான். இந்த யானைகளெல்லாம் ஏன் சோனியாகவும் கொஞ்சம் சோகமாகவும் இருக்கின்றன? என்ற அனுவின் கேள்வி நியாயமாகத்தான் பட்டது.

அங்கிருந்து குருவாயூர் சென்று தேவஸ்தான கெஸ்ட் ஹவுசில் வசதியான சூட் ஒன்று கிடைத்தது. பள்ளிகள் திறந்து விட்டன, மழை வேறு, எனவே கும்பல் அதிகம் இருக்காது என்ற கணக்கெல்லாம் பொய்த்து கும்பல் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் சீக்கிரம் பார்த்து விட  முடிந்தது. மாலை தரிசனம் முடித்து,  மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்திற்க்காக இரவு 2:00 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்த பொழுது, மிக நீண்ட வரிசையைப் பார்த்து பயந்து விட்டோம். காலை 3:00 மணி முதல், 3:20 வரைதான் நிர்மால்ய தரிசன நேரம் என்றார்கள். 20 நிமிடத்திற்குள் இத்தனை பெரும் பார்த்து விட முடியுமா? என்று பயம் வந்தது. ஆனால் கிடு கிடுவென்று வரிசை நகர்ந்ததால் எல்லோராலும் பார்க்க முடிந்தது.

வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது சுற்றுப் புறத்தை நோட்டம் விட்ட அனு, குருவாயூர் எப்படி மாறிப் போய் விட்டது? என்றாள். 
ஆமாம், எல்லா இடங்களும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன..?
பக்தர்கள் அதிகமாக வராத தொடங்கும் பொழுது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டாமா?
வசதிகள் செய்து தரட்டும், அதற்காக அடைப்படை மாறிவிடக் கூடாது..
ஆரம்பித்து விட்டாயா? இங்கே என்ன அடிப்படை மாறி விட்டதாம்? 
உனக்கு நினைவில்லையா? முன்பெல்லாம் கிழக்கு நடையில் நின்று பார்த்தால் கோவிலை முழுமையாக தரிசிக்க முடியும். இப்போது டின் ஷீட்டில் பெரிதாக கொட்டகை போல போட்டிருக்கிறார்கள், அது வாசல் தோற்றத்தை மறைத்து விடுகிறது. கொடிமரம் பாதிதான் தெரிகிறது. 
நீ சொல்வதும் சில சமயம் சரியாகத்தான் இருக்கிறது.
இன்னொன்றும் கவனித்தாயா? முன்பெல்லாம் எல்லா கேரள கோவில்களை போலவே குருவாயூரும் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது யாத்ரீகர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ சளசளவென்று பேச்சு..
சரி சரி, நீ பேச்சை நிறுத்து, நடை திறக்கப் போகிறார்கள்....

ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வரும் பொழுது, இத்தனை ப்ராசீனமான கோவில்.. ஏன் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யவில்லை? அனுவிற்கு சந்தேகம்.  

எனக்கும் தெரியவில்லை.. தெரிந்தவர்கள் யாராவது பதில் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.

அங்கிருந்து பாலக்காடு செல்வதற்கு காலை 6:30க்கு கிளம்பி விட   வேண்டும் என்று தீர்மானித்ததால் அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மற்றவர்கள் தூங்கி விட நான் மட்டும் மீணடும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழலோடு கட்சி அளித்த அந்த குழந்தை கண்ணனை ஆசை தீர தப்பு தப்பு ஆசை தீருமா என்ன? மீண்டும் ஒரு முறை தரிசித்தேன்.  

அங்கிருந்து 7:30க்கு கிளம்பினோம். பாலக்காட்டை அடையும் பொழுது மணி 11 ஆகி விட்டது. என் கணவரின் சொந்த ஊரான கோவிந்தராஜபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலிலும் 10:30க்கு நடை அடைத்து விடுவார்களாம். ஆகவே அங்கும் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. என் கணவரின் பூர்வீக வீட்டில் இப்போது வசிப்பவர்கள் ஊரில் இல்லாததால் அங்கும் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

தொடர்ந்து செல்லலாம்.... 


Thursday, July 21, 2016

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு 


விடுமுறையில் வந்திருக்கும் மகன், மருமகளோடு குருவாயூர் மற்றும் என் கணவரின் சொந்த ஊரான  கோவிந்தராஜபுரம் (பாலக்காடு) மற்றும் எமூர் ஹேமாம்பிகா கோவிலுக்கும் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஆலப்புழா விரைவு வண்டியில் திருச்சூரை அடைந்த நாங்கள் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே ஒரு விடுதியில் குளியலை முடித்துக் கொண்டு, காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம். 

"அதென்னவோ நமக்கும் வருண தேவனுக்கும் ஒரு ராசி இருக்கிறது.. நாம் எங்காவது கிளம்பினால் அவர் நமக்கு முன் அங்கு வந்து விடுவார்.  இப்பொழுதும் அப்படித்தான்!"
 நான் இப்படி சொன்னதும், எப்பொழுதும் என்னை விட்டு பிரியாத என் தோழி அனு, நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.  
"என்ன சிரிப்பு? என்றேன், 
"மழை சீசனில் கேரளாவிற்கு போக முடிவெடுத்து விட்டு இப்படி ஒரு பேச்சு!"  என்றாள், 
என்ன பதில் சொல்ல முடியும்? மணி ஆகிறது, கிளம்பு என்றா? அவள்தான் எனக்கு முன்னாள் கிளம்பி நிற்கிறாளே!

எப்படியோ நாங்கள் கோவில்களுக்கு செல்லும் விதமாக மழை அவ்வப்பொழுது ஒதுங்கி வழி விட்டது. கேரள கோவில்களில் சூடிதார் அணிந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், எனவே புடவை கட்டிக்கொள் என்று என் மருமகளிடம் கூறினேன். ஆனால், சூடிதாரை அனுமதிக்கிறார்கள். 



பிரமாண்டமான திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் திருமேனி மீது நெய் சாற்றுகிறார்கள். அதற்காக கோவில் வளாகத்துக்குளேயே சிறிய அகல் விளக்கில் நெய் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி கருவறைக்கு அருகில் வைத்து விட்டால், அவர்கள் ஸ்வாமி மீது அதையே அபிஷேகம் செய்வது போல ஊற்றி விடுவார்கள். ஆனால் கர்பகிரஹத்தில் சிவ லிங்கம் எதுவும் காண கிடைக்காது.

இதன் தாத்பரியம் என்ன? தாத்பர்யம் என்ன? என்று அனு நச்சரித்தாள். இவள் ஒரு சள்ளை, ஏதோ கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா? பிரசாதம் சாப்பிட்டோமா என்று இருக்காமல், எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிய வேண்டுமாம்..

அங்கு தமிழ் புரிந்து கொள்ளும் ஒருவர் இருந்தார், அவரிடம் கேட்டதற்கு, அவர்," யாருமே லிங்கத்தை கண்டதில்லை, உறைந்திருக்கும் நெய்க்குள் லிங்கம் இருப்பதாக ஐதீகம்" என்றார். அங்கு ஊற்றப்பட்டிருக்கும் நெய் கடும் கோடையில் கூட உருகாது என்றும், அந்த நெய்யில் எறும்பு மொய்க்காது என்றும் கூறுகிறார்கள். நெய் உறைந்த திரு மேனியை முழுமையாக அலங்கரித்திருந்தார்கள். மிக நன்றக இருந்தது. 



வடக்குநாதர் சந்நிதியிலிருந்து அப்பிரதக்ஷிணமாக சென்று ஸ்வாமி சன்னதிக்கு பின்னால் இருக்கும் பகவதியை தரிசனம் செய்து கொள்ள வேண்டும். ஸ்வாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகியை கங்கை என்கிறார்கள். அங்கு கங்கைக்கு ஒரு சிலையும் இருக்கிறது. கங்கையை கடந்து செல்ல அனுமதி இல்லை என்று போர்டோடு தாண்டிச் செல்ல முடியாமல் கயிறும் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு மட்டுமில்லை வேறு சில சிவன் கோவில்களிலும் இதைப் போன்ற அமைப்பை காண முடிகிறது. 

வடக்குநாதர் சந்நிதிக்கு அருகில் தனி சந்நிதியில் ராமர். வெளி பிரகாரத்தில் அய்யப்பன், கிராதன்(வேடனாக வந்த சிவன்), கோ சாலை கிருஷ்ணன், ஆதி சங்கரர் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி. இதை தவிர ஆதி சங்கரர் சமாதியும் இருக்கிறது. 

ஆதி சங்கரரின் பெற்றோர்களான ஆர்யாம்பாளும், சிவ குருவும் இங்கு வந்து பஜனம் இருந்துதான் அதி சங்கரரைப் பெற்றெடுத்தார்கள். எனவே அதி சங்கரரின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்த என் சிநேகிதி அனு, "இந்த சித்திரங்களில் ஆர்யாம்பாளை கேரள பெண்மணி போல சித்தரித்துள்ளார்கள், என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்றாள். 
உன் ஒப்புதல் யாருக்கு வேண்டும்? வாயை மூடிக்கொண்டு வா என்று விரட்டினேன்.
அவளோ விடாமல், ஆதி சங்கரரின் பெற்றோர்கள் வைதீக பிராமணர்கள், அவர்களை அப்படித்தானே வரைய வேண்டும்? என்று தொணப்பினாள். 
நாம் கும்பகோணத்திற்கு அருகில்  சென்ற போது, ஒரு கோவிலில் கோவிந்த தீக்ஷதருக்கும் அவர் மனைவிக்கும் சிலை இருந்ததை பார்த்தோமே அதில் அவர்கள் வைதீக பிராமணர்கள் போலவா உடை அணிந்திருந்தார்கள்?" என்று கேட்டு அவள் வாயை அடைத்தேன்.   

திருச்சூரிலிருந்து அதே காரில் குருவாயூர் சென்று விட்டோம். குருவாயூரில் உள்ள வெங்கிடாசலபதி கோவிலுக்கு முதலில் சென்றோம். கேரள பாணியில் அமைந்த சிறிய கோவில். நெடியோனாகவே தரிசித்த மாலவனை வாமன மூர்த்தி போல சிறிய உருவில் தரிசிப்பது வித்தியாசமாக இருக்கிறது. உள் பிரகாரத்திலேயே தனி சந்நிதியில் வெங்கிடாதம்மாளாக அருளை அள்ளி வழங்கும் தாயார். கொடி மரத்திற்கருகில் நமஸ்கரித்து வெளியே வருகிறோம்.  ராமானுஜர் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறாராம் ஆகவே அவருக்கும் தனி சந்நிதி. 

கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் தயாராக உள்ளது சாப்பிட்டு  விட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். குறிப்பாக நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொண்டு அந்தக் காலங்களில் கல்யாணங்களில் மாப்பிளை வீட்டாரை உபசரிப்பது போல பேர் பேராக உபசரித்தார்கள். இப்படி ஒரு உபசாரம் எங்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் திருச்சூரில் டிபன் சாப்பிட்டிருக்க மாட்டோம். அவர்கள் உபசரிப்பை நன்றியோடு மறுத்துவிட்டு, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.



இதுவும் சிறிய கோவில்தான். நுழையும் முன், வேறு கோவில் பிரசாதம் உட்பட சாப்பிடும் பொருள்கள் ஏதாவது இருந்தால் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, வெளியே வைத்து விடுங்கள் என்றார்கள். பார்த்தசாரதி என்பதாலோ என்னவோ தேர் போன்ற கருவறை அமைப்பு. உள்ளே நின்ற திருக்கோலத்தில் சிறிய மூர்த்தி. 

"மீசை வைத்து கொண்டு ஆஜானபாகுவாக பார்த்தசாரதி பெருமாளை சேவித்த நமக்கு, இப்படி சிறியவராக பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது இல்லையா?" என்றாள் அனு.

இதுதான் உன்னிடம் பிரச்சனை, ஏன் எப்போதும் ஒரு விஷயத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு கொண்டே இருக்கிறாய்?  

உனக்கு ஏன் கோபம் வருகிறது? நம் ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி என்றுதான் சொல்ல வந்தேன்.

அது கலாச்சார வித்தியாசம்.

ஒவ்வொரு இடத்திலும், ஓவ்வொரு பழக்கம், நடிகர் ஜெயராம் சொன்னது போல..

ஜெயராம் என்ன சொன்னார்?

தமிழ் படத்திற்கும் மலையாள படத்திற்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் கேட்டபொழுது, "மலையாள படத்தில் அம்மா என்று அழைக்க வேண்டுமென்றால் வெறுமனே அம்மே என்று அழைத்தால் போதும், ஆனால் தமிழ் படத்தில் அ...ம்ம்ம்ம்.மா... என்று அடி வயிற்றிலிருந்து அழைக்க வேண்டும் என்றார். 

ஓகே.. அதனால.. என்ன சொல்ல வர?

நமக்கு எல்லாமே கொஞ்சம் பிருமாண்டமாக, ஆரவாரமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எல்லாம் சட்டிலாக இருந்தால் போதும் போலிருக்கிறது. கோவில் உட்பட. சிறிய கோவில், சிறிய மூர்த்தங்கள்..

அடடா! என்ன கண்டு பிடிப்பு?

நான் சொல்வதை எதையாவது நீ ஒப்புக் கொண்டிருக்கிறாயா? நீ கோவிலை பார்த்து விட்டு மெல்ல வா, நான் முன்னாள் மம்மியூருக்கு  செல்கிறேன்.. அவள் எனக்கு முன்னாள் மம்மியூருக்குச் சென்று விட்டாள்.  
   
நாம் தொடரலாம்...

Sunday, July 17, 2016

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கவிச் சக்ரவர்த்தி கம்பர் சோழ அரசன் குலோத்துங்கனின் அவையை அலங்கரித்தவர் மட்டுமல்ல,அவனுடைய சிறந்த நண்பரும் கூட. ஆனால் ஒரு முறை சோழ அரசனோடு ஏற்பட்ட ஏதோ மன வருத்தத்தத்தில் சோழ தேசத்தை விட்டு நீங்கி சேர தேசத்தை அடைகிறார். சேர தேச அரசன் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்து அங்கு பராமரித்தாலும் கொஞ்ச நாட்களிலேயே கம்பருக்கு குலோத்துங்கன் மீது கொண்ட பகை உணர்ச்சி நீங்கி விடுகிறது. சோழ அரசனையும் தேசத்தையும் காண வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. அப்போது மருத நிலத்தை (அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும்) புகழ்ந்து அவர் பாடிய பாடல்தான் 

தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக் 
கொண்டல்கள் முழவின் ஏங்கக் 
குவளைகண் விழித்து நோக்கத் 
தெண்திரை எழினி காட்டத் 
தேம்பிழி மகர யாழின் 
வண்டுகள் இனிது பாட 
மருதம்வீற் றிருக்கும் மாதோ 


என்னும் அழகிய பாடல் 
 
கம்பனை போலவே எனக்கும் சேர நாட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், அந்த சற்றே அலுப்பூட்டும் பசுமையைக் காணும் பொழுதெல்லாம் எங்கள் சோழ நாட்டின் அழகு நினைவுக்கு வரும். ஆனால் என் மகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டாள். என்ன இருந்தாலும் அவள் சேர தேசத்து(பாலக்காடு) பெண் அல்லவா?   இதை படிப்பபவர்கள் எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியாது. தஞ்சை மாவட்டத்தில் எங்கே நிலம் இருக்கிறது? எல்லாவற்றையும் பிளாட் போட்டுக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்கலாம்.  

அது கிடக்கட்டும், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கூறுங்கள், சொல்கிறேன்.